எல்ஐசி அலுவலகத்தில் 'தீ வைத்து கொல்லப்பட்ட' மேலாளர் - கடைசி ஃபோன் கால் மூலம் சிக்கிய ஊழியர்

எல்.ஐ.சி பெண் மேலாளர் கொலையை கண்டறிய உதவிய கடைசி ஃபோன் கால் – சக ஊழியர் சிக்கியது எப்படி?

பட மூலாதாரம், FACEBOOK

படக்குறிப்பு, கல்யாணி நம்பி

"எல்ஐசி-யில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக என் அம்மா வேலை பார்த்தார். எந்த வேலை கொடுத்தாலும் அர்ப்பணிப்புடன் செய்து முடிப்பார். குடும்பத்தின் வேராக அவர் இருந்தார். அவருக்கு இப்படியொரு கொடூரம் நேரும் என எதிர்பார்க்கவில்லை" என்கிறார், லட்சுமி நாராயணன்.

மதுரையில் எல்.ஐ.சி கிளை மேலாளராகப் பணியாற்றி வந்த இவரது தாய் கல்யாணி நம்பி, கடந்த டிசம்பர் 17-ஆம் தேதியன்று கொல்லப்பட்டார்.

இந்த வழக்கில் உதவி நிர்வாக அலுவலர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த விவகாரத்தில் நடந்தது என்ன?

பெண் ஊழியரின் கடைசி அழைப்பு

மதுரை எல்.ஐ.சி கிளை அலுவலகத்தில் கடந்த டிசம்பர் 17ஆம் தேதியன்று இரவு தீ ஏற்பட்டது. இதில் கிளை மேலாளர் கல்யாணி நம்பி உயிரிழந்தார். அதே அலுவலகத்தில் பணியாற்றும் உதவி நிர்வாக அலுவலர் ராம் என்பவரும் படுகாயமடைந்தார்.

விபத்து என்ற கோணத்தில் காவல்துறை தீவிர விசாரணை நடத்தி வந்தது.

காயமடைந்த ராமுக்கு மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சை வழங்கப்பட்டு வந்தது. சுமார் 30 நாட்கள் கடந்த பிறகு பெண் மேலாளரை தீ வைத்துக் கொன்றதாக எல்.ஐ.சி அலுவலரான ராம் காவல்துறையால் கைது செய்யப்பட்டார்.

எல்.ஐ.சி பெண் மேலாளர் கொலையை கண்டறிய உதவிய கடைசி ஃபோன் கால் – சக ஊழியர் சிக்கியது எப்படி?

பட மூலாதாரம், FACEBOOK

"அன்றிரவு 8.27 மணியளவில் என் அம்மாவிடம் இருந்து போன் வந்தது. 'போலீசை கூப்பிடு... போலீசை கூப்பிடு' எனப் பதற்றத்துடன் பேசினார்" என்கிறார் அவரது மகன் லட்சுமி நாராயணன்.

பிபிசி தமிழிடம் பேசிய அவர், "தற்போது போலீஸ் கைது செய்துள்ள நபரால் என் அம்மாவுக்குத் தொடர்ந்து பிரச்னைகள் ஏற்பட்டன. அந்த நபர் மீது பல்வேறு புகார்களும் உள்ளன. ஆனால், என் அம்மா உயிரைப் பறிக்கும் அளவுக்குப் போகும் என்று நினைக்கவில்லை" எனக் குறிப்பிட்டார்.

அதோடு, "விசாரணையில் குளிர்சாதனப் பெட்டியிலோ, மின் வயர்களிலோ பிரச்னை இல்லை என்பது உறுதியாகிவிட்டது" எனவும் அவர் தெரிவித்தார்.

டிசம்பர் 17 அன்று என்ன நடந்தது?

கல்யாணி நம்பியின் மகன் அளித்த புகாரின் அடிப்படையில் திலகர் திடல் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்தனர்.

"போலீசை கூப்பிடுமாறு கல்யாணி நம்பி சத்தம் போட்டுள்ளார். தீ விபத்து நடந்திருந்தால் இவ்வாறு கூப்பிடுவதற்கு வாய்ப்பில்லை. அதை வைத்துத்தான் வழக்கைப் பின்தொடர்ந்தோம்" என்கிறார், திலகர் திடல் காவல் நிலைய ஆய்வாளர் அழகர்.

எல்.ஐ.சி பெண் மேலாளர் கொலையை கண்டறிய உதவிய கடைசி ஃபோன் கால் – சக ஊழியர் சிக்கியது எப்படி?

பட மூலாதாரம், FACEBOOK

வழக்கின் விசாரணையில் கிடைத்த மேலதிக தகவல்களை பிபிசி தமிழிடம் அவர் பகிர்ந்து கொண்டார்.

"அலுவலகத்தில் இருந்த சிசிடிவி காட்சிகள், அங்கு கிடைத்த பொருட்கள், ஊழியர்களின் வாக்குமூலங்கள் ஆகியவை முக்கியமானவையாக இருந்தன. குறிப்பாக சம்பவம் நடந்த நாளில் மூன்று பேர் மட்டுமே அந்த அலுவலகத்தில் இருந்துள்ளனர்" என்கிறார் அழகர்.

அந்த நேரத்தில் கல்யாணி நம்பி, சங்கர், ராம் என மூன்று பேர் மட்டும் இருந்துள்ளதாகவும் அவர் கூறுகிறார்.

"சுமார் எட்டு மணியளவில் தனக்கு வேலை முடிந்துவிட்டதாகக் கூறி சங்கர் கிளம்பிவிட்டார். அதன் பிறகு கல்யாணி, ராம் ஆகியோர் மட்டுமே இருந்துள்ளனர்."

இதை காவல்துறை விசாரணையில் சங்கர் உறுதி செய்ததாக அழகர் தெரிவித்தார்.

மதுரை எல்.ஐ.சி கட்டடத்திற்கு இரவுநேர பாதுகாவலர்கள் உள்ளனர். "அவர்களை மீறி யாரும் கல்யாணி நம்பியின் மேல் மாடி அறைக்குச் செல்ல முடியாது. பின்புறம் வழியாக அவசரப் பாதை ஒன்று உள்ளது. அது வழியாகவும் யாரும் உள்ளே நுழைய முடியாது" எனவும் அவர் குறிப்பிட்டார்.

சம்பவம் நடந்த நாளில் முன்புற கேட்டை ராம் பூட்டிவிட்டு பின்புற வாசல் வழியாக வெளியில் வந்ததை பாதுகாவலர்கள் கவனித்ததாகவும் அவர் தெரிவித்தார்.

"ராமுக்கு காலில் காயம் ஏற்பட்டுள்ளது. தீயணைப்புத் துறை வந்தபோது அவரைத் தவிர அங்கு வேறு யாரும் இல்லை. அவருக்குக் காயம் ஏற்பட்டிருந்ததால் மருத்துவமனையில் சிகிச்சைகள் வழங்கப்பட்டன" என்கிறார் அழகர்.

எல்.ஐ.சி பெண் மேலாளர் கொலையை கண்டறிய உதவிய கடைசி ஃபோன் கால் – சக ஊழியர் சிக்கியது எப்படி?

பட மூலாதாரம், FACEBOOK

இந்தச் சம்பவத்தின் பின்னணி என்ன?

"பணியில் மிகவும் கண்டிப்புடன் கல்யாணி நம்பி இருந்துள்ளார். காப்பீடு எடுத்து இறந்து போனவர்களின் குடும்பத்தினரில் சுமார் 40 பேர் உரிமை கோரல் விண்ணப்பத்தை ராமிடம் சமர்ப்பித்துள்ளனர்," என்கிறார் அழகர்.

இந்த விண்ணப்பங்களைக் கணினியில் பதிவேற்றி ஆவணங்களைச் சரிபார்த்து இறுதியாக கல்யாணி நம்பியிடம் கையெழுத்து பெறும் பணியை ராம் கவனித்து வந்ததாக அவர் குறிப்பிட்டார்.

காவல் ஆய்வாளர் அழகரின் கூற்றுப்படி, "இந்த உரிமை கோரல் விண்ணப்பங்களை அடுத்த கட்டத்திற்கு நகர்த்துவதற்கு ராம் எந்த முயற்சியும் எடுக்கவில்லை. இதனால் காப்பீடுதாரர்களின் உறவினர்கள் கல்யாணி நம்பியிடம் வாக்குவாதம் செய்துள்ளனர்."

கல்யாணி நம்பி ராமிடம் பலமுறை கேள்வி எழுப்பியதாகக் கூறும் அழகர், ''இதனால் கூடுதல் நேரம் வேலை பார்க்கவேண்டிய சூழல் ராமுக்கு ஏற்பட்டுள்ளது" என்கிறார்.

எல்.ஐ.சி பெண் மேலாளர் கொலையை கண்டறிய உதவிய கடைசி ஃபோன் கால் – சக ஊழியர் சிக்கியது எப்படி?

பட மூலாதாரம், FACEBOOK

படக்குறிப்பு, அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் துணைத் தலைவர் ஜி.ஆனந்த்

''கடந்த ஆண்டு மே மாதம் கல்யாணி நம்பி இங்கு பணிக்கு வருவதற்கு முன்னதாக மாலை 7 மணிக்கு முன்பாக வீட்டுக்குக் கிளம்பிவிடுவதை ராம் வாடிக்கையாக வைத்திருந்துள்ளார்.''

கல்யாணி நம்பி வந்த பிறகு இரவு 9 மணி வரை வேலை பார்க்க வேண்டிய நிலை ஏற்பட்டதாக காவல்துறையில் ராம் வாக்குமூலம் அளித்துள்ளதாகவும் அழகர் குறிப்பிட்டார்.

"உரிமை கோரல் விண்ணப்பங்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் கிடப்பில் போட்டுவிட்டது குறித்து கல்யாணி நம்பி கேள்வி எழுப்பியுள்ளார். இதனால் ஏற்பட்ட மன உளைச்சலில் அவர் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்துவிட்டதாக விசாரணையில் அவர் கூறியுள்ளார்" எனவும் கூறினார்.

"தீ சம்பவம் நடந்தபோதே சில பொருட்களை காவல்துறை கைப்பற்றியது. இந்த விவகாரத்தில் உறுதியான ஆதாரங்களுக்காக அவர்கள் காத்திருந்தனர். விசாரணை அடிப்படையில் ராம் கைது செய்யப்பட்டுள்ளார்" என்கிறார், அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் துணைத் தலைவர் ஜி.ஆனந்த்.

'நிதி மோசடி என எதுவும் இல்லை'

"ராமின் ஒரு கண்ணில் பார்வைக் குறைபாடு உள்ளது. அதனால் வேலை பார்ப்பதில் பல்வேறு சிரமங்களை அவர் எதிர்கொண்டு வந்துள்ளார்" என்கிறார் காவல் ஆய்வாளர் அழகர்.

"சம்பவ நாளன்று அவர் கொண்டு வந்த பெட்ரோல் கேன் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அவர் பெட்ரோல் வாங்கிய இடம் உள்பட அனைத்து ஆதாரங்களும் சேகரிக்கப்பட்டுள்ளன" எனவும் அவர் தெரிவித்தார்.

"டிசம்பர் 17 அன்று கல்யாணி நம்பியின் அறைக்குள் தீ வைக்கப்பட்ட சிசிடிவி காட்சிகள் எதுவும் சிக்கவில்லை" எனக் கூறும் அவர், "அவை தீயில் எரிந்துவிட்டன. இந்த விவகாரத்தில் நிதி மோசடி என எதுவும் இல்லை" எனக் கூறினார்.

இந்த வழக்கில் ராம் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு