குத்துச்சண்டையில் மின்னும் சென்னையை சேர்ந்த கலைவாணி - ஒலிம்பிக் கனவை சுமந்து ஒரு பயணம்

2019ஆம் ஆண்டு விஜய்நகரில் நடைபெற்ற சீனியர் அளவிலான தேசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் 18 வயது எஸ். கலைவாணி வெற்றி பெற்று இந்திய குத்துச் சண்டை பிரிவில் அதிர்வை ஏற்படுத்தினார். மேலும் அந்த போட்டியின் மிகச் சிறந்த குத்துச் சண்டை வீராங்கனை என்ற பெயரையும் பெற்றார்.
கடினமான தேர்வுகள்
கலைவாணி 1999ஆம் ஆண்டு நவம்பர் 25ஆம் தேதி சென்னையில் பிறந்தார். இவரின் தந்தை எம். ஸ்ரீநிவாசன் இளமைக் காலங்களில் குத்துச் சண்டை வீரராக இருந்தவர். அவரின் சகோதரரும் தேசிய அளவிலான குத்துச் சண்டை வீரர்.
தனது சகோதரருக்கு தனது தந்தை பயிற்சி அளிப்பதை வீட்டில் பார்த்த கலைவாணிக்கு குத்துச் சண்டை மீது ஆர்வம் எழுந்தது. அவரின் தந்தையும் அவருக்கு பயிற்சி வழங்க தொடங்கினார்.
கலைவாணிக்கு குடும்பம் ஆதரவளித்தாலும், ஆசிரியர்கள் மற்றும் உறவினர்கள் மூலம் இடையூறு வந்தது. குத்துச் சண்டையில் கவனம் செலுத்துவதை விடுத்து படிப்பில் கவனம் செலுத்துமாறு அவரின் ஆசிரியர்கள் வலியுறுத்தினர். அதேபோல அவரின் உறவினர்கள் சிலர், கலைவாணியின் தந்தையிடம் கலைவாணிக்கு குத்துச் சண்டை பயிற்சி அளிப்பதைக் கைவிடுமாறு வலியுறுத்தினர். அவருக்கு திருமணம் ஆவதும் இதனால் கடினமாக அமைந்துவிடும் என அவர்கள் தெரிவித்தனர்.
இந்த சமூக அழுத்தத்துடன், வேறுசில பிரச்சனைகளும் கலைவாணிக்கு இருந்தது. ஆம் ஒரு விளையாட்டு வீராங்கனைக்குத் தேவையான நவீன ஜிம் வசதி, கட்டமைப்பு, நவீன பயிற்சி, மற்றும் முறையான உணவு இவை எல்லாம் இருந்திருக்கவில்லை.
இது எல்லாவற்றையும் தாண்டி அவரின் தந்தை, தனது மகனுக்கு வழங்குவதை போலவே கலைவாணிக்கும் தொடர்ந்து பயிற்சி அளித்து வந்தார். தான் ஒரு குத்துச் சண்டை வீராங்கனையாக உருவானதற்கு தனது தந்தையும், சகோதரருமே காரணம் என்கிறார் கலைவாணி.
கலைவாணியின் கடின உழைப்புக்கு பரிசாக அமைந்தன சப் - ஜூனியர் (16 வயதுக்குட்பட்ட)அளவில் அவர் வென்ற பதக்கங்கள். இது அவரின் ஆசிரியர்கள் மற்றும் உறவினர்களின் எண்ணத்தையும் மாற்றியது.
பதக்கத்தால் கிடைத்த வாய்ப்புகள்
கலைவாணியின் குத்துச் சண்டை பயணத்துக்கு திருப்புமுனை தந்தது 2019ஆம் ஆண்டு நடந்த சீனியர் அளவிலான தேசிய சாம்பியன்ஷிப்பின் இறுதி போட்டி. இறுதிப் போட்டியில் பஞ்சாபின் மஞ்சு ராணியிடம் தோல்வியுற்றார் கலைவாணி. இருப்பினும் இந்தியாவின் புகழ்பெற்ற, ஆறுமுறை உலக சாம்பியன் பட்டம் பெற்ற குத்துச் சண்டை வீராங்கனை மேரி கோமிடமிருந்து வெள்ளிப் பதக்கம் பெற்றார் கலைவாணி.
அந்த வெற்றி கலைவாணியின் தன்னம்பிக்கையை மட்டும் உயர்த்தவில்லை. பல வாய்ப்புகளுக்கான கதவையும் அது திறந்துவிட்டது. இத்தாலியை சேர்ந்த ரஃபேலே பெர்காமாஸ்கோ கலைவாணிக்கு பயிற்சியளிக்க தொடங்கினார். மேலும் கர்நாடகாவில் உள்ள ஜே.எஸ்.எடபள்யு இன்ஸ்பையர் இன்ஸ்ட்டியூட் ஆஃப் ஸ்போர்ட்ஸில் நவீன பயிற்சி வசதிகளும் கிடைத்தன. அது அவரை மேலும் வலுவாக்கியது.

2019ஆம் ஆண்டு காத்மாண்டுவில் நடைபெற்ற தெற்காசிய போட்டியில் நேபாளத்தின் மஹார்ஜன் லலிதாவை 48 கிலோ எடைப் பிரிவில் வீழ்த்தி இந்தியாவுக்கு தங்கப் பதக்கத்தை பெற்றுத் தந்ததுதான் தொழில்முறையில் கலைவாணியின் மிகப் பெரிய தருணம்.
எதிர்கால கனவுகள்
இந்த இளம் வீராங்கனை தெளிவாக பல இலக்குகளை கொண்டுள்ளார். காமன்வெல்த் போட்டிகளில் தங்கப் பதக்கம் வெல்ல வேண்டும், பின் 2024ஆம் ஆண்டில் ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வெல்ல வேண்டும் என்பதுதான் இவரின் கனவு. கலைவாணி தற்போது 48 கிலோ எடைப் பிரிவில் போட்டியிடுகிறார். இது ஒலிம்பிக் போட்டியில் இல்லை. எனவே அடுத்த இரண்டு வருடங்களுக்கு இந்த பிரிவில் குத்துச் சண்டையிடவும் அதன்பின் அதிக எடைப் பிரிவுக்கு மாறவும் கலைவாணி முடிவு செய்துள்ளார்.
தனது விளையாட்டு பயணத்துக்கு பிறகு, இந்தியாவின் எதிர்கால குத்துச் சண்டை வீராங்கனைகளுக்குப் பயிற்சி அளிக்க விரும்புகிறார் கலைவாணி. விளையாட்டுத்துறையில் பெண்கள் சாதிக்க சமூகத்தின் மனநிலை மாற வேண்டும் என்கிறார் கலைவாணி. இந்த சமூகம் பெண்களை விளையாட்டுத்துறையில் மேலும் ஊக்கப்படுத்த வேண்டும் என்கிறார் அவர்.
பிற செய்திகள்:
- தனிச் சின்னத்தில் போட்டியிடுமா வி.சி.க.?: திருமாவளவன் பிரத்யேகப் பேட்டி
- நிஜமாகும் திரைப்பட கதை: ஒருநாள் முதல்வராக இன்று பதவியேற்கிறார் 19 வயது மாணவி
- பால் தினகரன் வீட்டில் கணக்கில் வராத 118 கோடி பணம், 4.7 கிலோ தங்கம் மீட்பு
- டீ கடையில் ராகுல் காந்தி: புது பாணி பிரசாரம் காங்கிரசுக்கு தேர்தலில் பலன் தருமா?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












