தமிழ்நாட்டில் ராகுல் காந்தியின் பிரசாரம் திமுகவிடம் பலத்தைக் காட்டும் யுத்தியா?

டீக்கடையில் ராகுல்
படக்குறிப்பு, டீக்கடையில் ராகுல்: திருப்பூர் மாவட்டம் அனுப்பர்பாளையம் அருகே காங்கிரஸ் நிர்வாகிகளுடன் பேக்கரியில் தேநீர் அருந்தும் ராகுல் காந்தி.
    • எழுதியவர், பிரமிளா கிருஷ்ணன்
    • பதவி, பிபிசி தமிழ்

தமிழ்நாட்டில் சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கும் நிலையில், 'தமிழ் வணக்கம்' என்ற பெயரில் நேரடிப் பிரசாரத்தை காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தொடங்கியிருக்கிறார்.

சாலையோர கடையில் தேநீர் பருகுவது, தொண்டர்களை உற்சாகப்படுத்துவது என ராகுல் கையாளும் உத்தி திமுகவிடம் பலத்தை கட்டுவதற்குதான் என அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள்.

திமுக தலைவர் ஸ்டாலின், அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் இணையத்தில் பிரசாரம் செய்வது போலவே, ராகுல் காந்தியும் நேரடி பிரசாரத்திற்கு வருவதற்கு முன்னர், சமூகவலைத்தளங்களில் 'ராகுலின் தமிழ் வணக்கம்' என்ற பிரசாரத்தை முன்னெடுத்தார்.

நேரடி பிரசாரத்தை கொங்கு மண்டலத்தில் தொடங்கிய ராகுல், கரூர், மதுரை என மூன்று நாட்களில் தொழிலாளர்கள், தொழில்துறை முதலீட்டாளர்களுக்கு ஏற்பட்டுள்ள பிரச்சனைகளை முன்வைத்து, மத்திய பாஜக அரசை சாடும் பாணியில் முன்னெடுக்கிறார்.

தமிழ்நாடு தொழில்துறையில் முன்னேறியுள்ளது என அதிமுக பிரசாரம் செய்துவரும் நேரத்தில், பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டியால் தமிழகத்தில் வளர்ச்சி குன்றிவிட்டது என பிரசாரத்தை ஆரம்பித்துள்ளார் ராகுல். அதோடு, தமிழர்களின் மொழி மற்றும் இனத்திற்கான தனித்துவத்தை பாஜக அங்கீகரிக்கவில்லை என்பதையும் சொல்லி ஓட்டு கேட்கிறார் அவர்.

ராகுலின் தேர்தல் பிரசாரம் காங்கிரஸ் கட்சியின் வாக்கு வங்கியை உயர்த்துவதைவிட, திமுகவிடம் தங்களது இருப்பை உணர்த்தும் வகையில் அமைந்துள்ளது என்கிறார் பேராசிரியர் ராமு மணிவண்ணன். சென்னைப் பல்கலைக்கழகத்தின் அரசியல் மற்றும் பொது நிர்வாகத் துறையின் தலைவராக உள்ள ராமு மணிவண்ணன், தமிழக அரசியல் நகர்வுகளை உன்னிப்பாக கவனிப்பவர்.

''காங்கிரஸ் கட்சி ஒரு பெருமை வாய்ந்த பழைய கட்டடம் போன்றது. பழைய கட்டடத்தை பயன்படுத்த முடியவில்லை என்றாலும், அதை பழுதுபார்த்து அதன் பெருமையை பாதுகாப்பதைப் போல, தமிழகத்தில் காங்கிரஸ் தனது இருப்பை நீட்டித்துக்கொண்டிருக்கிறது.

ராகுல் காந்தியின் வருகை தமிழக மக்களை பெரிய அளவில் ஈர்க்காது. அவரது கட்சி தொண்டர்களை உற்சாகப்படுத்தும் கூட்டமாகதான் ராகுலின் பிரசாரம் உள்ளது. காலங்காலமாக காங்கிரஸ் கட்சிக்கு ஓட்டு போடுபவர்கள் இருக்கிறார்கள். அவர்களின் வாக்குகளைத்தான் காங்கிரஸ் தற்போதும் பெற்றுவருகிறது,''என்கிறார் ராமு மணிவண்ணன்.

பிரசாரத்தில் ராகுல் காந்தி.
படக்குறிப்பு, பிரசாரத்தில் ராகுல் காந்தி.

காங்கிரஸ் கட்சியில் தற்போது புதிய பதவிகள் வழங்கப்பட்டது குறித்தும், காங்கிரஸ் கட்சி தனித்து நின்று பிரசார கூட்டங்களை அதிக அளவில் முன்னெடுப்பது குறித்தும் கேட்டபோது, ''கட்சியில் புதிய பதவிகள் கொடுத்து தொண்டர்களை ஊக்குவித்துள்ளார்கள்.

ஆனால், காங்கிரஸ் கட்சி தனது தாக்கத்தை தமிழகத்தில் ஏற்படுத்தியுள்ளதா என்றால் இல்லை என்பதுதான் பதில். திமுகவிடம் தேர்தல் நேரத்தில், பலம் பொருந்திய கூட்டணி கட்சியாக தன்னை காட்டிக்கொள்வதற்காகதான் இந்த பிரசார கூட்டங்கள் நடத்தப்படுகின்றன.

இது எல்லா அரசியல் கட்சிகளுக்கும் பொருந்தும். திமுகவுக்கும், காங்கிரசுக்கும் வேறு கட்சிகளுடன் கூட்டணி என்பது ஒத்துவராது என்பதால், இருவரும் தங்களை பற்றிய பிம்பத்தை பிரசாரத்தில் கட்டியமைப்பார்கள். அதன் தொடக்கம்தான் ராகுலின் தமிழ் வணக்கம் என்ற பயணம்,''என்கிறார் ராமு மணிவண்ணன்.

அவர் மேலும், ஏற்கனவே தமிழகத்தில் பாஜகவுக்கு எதிரான மனநிலை உறுதியாக இருப்பதால், காங்கிரஸ் தனது பிரசாரத்தை எடுத்துச்செல்வதில் சிக்கல்கள் இருக்காது என்றும் கூறுகிறார்.

தொண்டர்களைத் தயார்படுத்த...

ராகுலின் பிரசாரம் காங்கிரஸ் தொண்டர்களை தேர்தலுக்கு தயார்படுத்துவதற்கான தொடக்க புள்ளி என்கிறார் மூத்த பத்திரிகையாளர் லட்சுமணன்.

''ராகுலின் பிரசாரத்தில் ஓர்இடத்தில்கூட ஆட்சி மாற்றம் பற்றி பேசவில்லை. திமுக ஆட்சி அமையும் என அவர் பேசவில்லை. சமீபத்தில் புதுவையில் திமுகவுக்கும், காங்கிரஸ் கட்சிக்கும் உரசல் ஏற்பட்டது. அதனால் நேரடியாக எதையும் காட்டிக்கொள்ளாமல் தனியாக பிரசாரத்தை காங்கிரஸ் தொடங்கியுள்ளது.

கொங்கு மண்டலத்தில் காங்கிரஸ் கட்சிக்கு ஒரு வாக்கு வங்கி இருக்கிறது. அதனால் கோவையில் பிரசாரத்தை தொடங்கியிருக்கிறார் ராகுல். தேர்தல் நேர ஸ்டண்ட்தான் இந்த பயணம். அதைதாண்டி காங்கிரஸ் வளரவேண்டும் எனில், நேரடியாக மக்கள் பிரச்னையை காங்கிரஸ் கட்சி கையில் எடுக்கவேண்டும். களத்தில் நின்று மக்களுக்காக போராடவேண்டும்,'' என்கிறார் லட்சுமணன்.

டெல்லி மட்டுமல்ல தமிழ்நாட்டைச் சேர்ந்த காங்கிரஸ் தலைவர்கள் கூட அவர்களின் கட்சியை வளர்ப்பதில் அதிக கவனம் செலுத்தவில்லை என்கிறார் லட்சுமணன். ''காங்கிரஸ் ஆட்சியை திமுக நீக்கிய பின்னர், அந்த கட்சி இதுவரை ஒரு பலம் பொருந்திய தலைவரை உருவாக்கமுடியவில்லை.

தமிழகத்தில் மக்கள் பிரச்னைக்காக பெரிய போராட்டங்களை காங்கிரஸ் முன்னெடுத்து பல தசாப்தங்கள் ஆகிவிட்டன. மக்களுடன் நேரடியாக களத்தில் நிற்காதவரை காங்கிரஸ் கட்சி வாக்குவங்கியை அதிகரிக்கமுடியாது. தேர்தல் நேரத்தில் மட்டும் உற்சாகம் தரும் பிரசார பயணங்களை மேற்கொள்ளலாம்,''என்கிறார் லட்சுமணன்.

ராகுலின் தேர்தல் பிரசாரத்தை திமுகவுக்கு அழுத்தம் தரும் கூட்டமாகத்தான் பார்க்கமுடியும் என்றும் அந்த கட்சியின் செல்வாக்கை மக்களிடம் ஏற்படுத்தும் கூட்டமாக இருக்காது என்றும் கூறுகிறார் லட்சுமணன். ''ராகுலின் பிரசாரம் வழக்கமாக நடக்கும் தேர்தல் நேர நாடக காட்சி என்பதை தாண்டி எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது,''என்கிறார் அவர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :