தமிழ்நாடு காங்கிரஸ் பதவி சர்ச்சை: வாரி வழங்கப்பட்ட பொறுப்புகளால் கட்சிக்கு துணையா தொல்லையா?

கே.எஸ்.அழகிரி

பட மூலாதாரம், K.S.Alagiri/Facebook

    • எழுதியவர், பிரமிளா கிருஷ்ணன்
    • பதவி, பிபிசி தமிழ்

ஏழு ஆண்டுகளுக்கு பிறகு, தமிழ்நாடு காங்கிரசில் நூற்றுக்கும் மேற்பட்ட புதிய பதவிகள் வழங்கப்பட்டுள்ளன. தேர்தல் களத்தில் பணியாற்றுவதற்காக இந்தப் பதவிகள் உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, பல சிக்கல்களுக்கு மத்தியில் மொத்தம் 193 பேருக்கு பதவிகளை அறிவித்துள்ளார்.

மாநில துணைத் தலைவர், பொதுச்செயலாளர், பொருளாளர், செயலாளர் போன்ற பதவிகள் பலருக்கு வழங்கப்பட்டுள்ளன. இந்த புதிய பதவிகளில் நியமிக்கப்பட்டவர்களுக்கு அதிகாரம் இல்லை என்பதால் அவர்களுக்கு எந்த பொறுப்பும் இருக்காது என காங்கிரஸ் கட்சியின் தேர்தல் குழு உறுப்பினரும், சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினரான கார்த்தி சிதம்பரம் டிவிட்டரில் கருத்து தெரிவித்திருந்தார்.

கார்த்தி சிதம்பரத்தின் கருத்துக்கு ஆதரவாகவும், எதிராகவும் ட்விட்டரில் கருத்துக்கள் பதிவாகியுள்ளன. மூத்த காங்கிரஸ் தலைவர்களிடமும், புதிய பதவிகளை பெற்றுள்ளவர்களிடம் புதிய பதவிகள் என்ன விதத்தில் தேர்தல் நேரத்தில் பயனளிக்கும் என பிபிசி தமிழ் கேட்டது.

வாரிசுகளுக்குப் பதவி

57 பொது செயலாளர்கள், 104 மாநில செயலாளர்கள், 32 துணை தலைவர்கள் உள்ளிட்ட புதிய பதவிகளில் மூத்த தலைவர்கள் பலரின் வாரிசுகளுக்கு இடமளிக்கப்பட்டுள்ளது. மறைந்த காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினரான வசந்தகுமாரின் மகன் விஜய் வசந்த், முன்னாள் மாநில தலைவரான தங்கபாலுவின் மகன் கார்த்தி தங்கபாலு உள்ளிட்டவர்களுக்கு பொதுச் செயலாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது.

புதிய பதவிகள் தற்போது அறிவிக்கப்பட்டது ஏன் என துணைத் தலைவரான கோபண்ணாவிடம் கேட்டபோது, தேர்தல் நேரத்தில் கட்சி உறுப்பினர்களுக்கு உற்சாகம் தருவதாக இந்த பதவிகள் அமைந்துள்ளன என்கிறார்.

''கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளது அவரது சொந்த கருத்து. கட்சியில் ஏழு ஆண்டுகளுக்கு பிறகு புதிய பதவிகளை கொடுத்திருக்கிறார்கள். சுமார் 50 ஆண்டுகளாக ஆட்சியில் இல்லாத நிலையில், கட்சியில் உள்ளவர்களுக்கு ஊக்கம் தந்து தேர்தல் நேரத்தில் நல்ல விளைவுகளை ஏற்படுத்த இந்த பதவிகளை கொடுத்துள்ளார்கள்,'' என்கிறார் அவர்.

'சிவகங்கை மாவட்டத்தில் இல்லையா?'

மேலும், கார்த்தி சிதம்பரம் வெளியிட்ட டிவிட்டர் பதிவுக்கு அவர், ''சிவகங்கை மாவட்ட காங்கிரஸ் கமிட்டியில் 12 துணைத் தலைவர்கள், 16 பொதுச் செயலாளர்கள், 30 செயலாளர்கள், 25 இணை செயலாளர்கள் என நியமனம் செய்யப்பட்டிருக்கிறபோது, தமிழ்நாடு காங்கிரஸ் நிர்வாகிகள் எண்ணிக்கை குறித்து பேசுவதற்கு என்ன உரிமை இருக்கிறது? ஊருக்கு உபதேசம், தமக்கில்லையோ?,'' என பதில் பதிவு செய்துள்ளார். கோபன்னாவின் இந்த பதிவை மாநில தலைவர் கே எஸ் அழகிரி ரீட்வீட் செய்துள்ளார்.

கார்த்தி சிதம்பரம்

பட மூலாதாரம், Hindustan Times

''தமிழ்நாடு 75 மாவட்டங்களாக பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு மாவட்டத்துக்கும் இரண்டு பொறுப்பாளர்கள் அனுப்பப்படுவார்கள். ஒரு மாதத்தில் 15 நாட்கள் அந்த பொறுப்பாளர்கள் ஒதுக்கப்பட்ட மாவட்டத்தில் தங்கியிருந்து வாக்கு வங்கியை பலப்படுத்தும் வேலைகளை செய்வார்கள். இளம் தலைமுறையினர் பலருக்கும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளதால், கட்சி பலப்படும்,''என்கிறார் அவர்.

புதிய நிர்வாக குழு உறுப்பினரான சுமதி அன்பரசுவிடம் பேசியபோது, முந்தைய சட்டமன்ற தேர்தலின் போது, தேர்தல் பிரச்சார குழுவில் இருந்ததாகவும் தற்போது புதிய பதவி அளித்துள்ளது மேலும் ஊக்கம் தருவதாகவும் கூறுகிறார்'' இந்த புதிய பதவிகளைத் தந்துள்ளதால், நூற்றுக்கணக்கானவர்கள் களத்தில் இறங்கி வேலை செய்வார்கள் என்கிறார் அவர்.

மேலும் "எங்கள் கட்சி பலப்படும். கட்சி உறுப்பினர்கள் பலரும் இந்த அறிவிப்பை பல மாதங்களாக எதிர்நோக்கியிருந்தார்கள். கொரோனா ஊரடங்கு காலத்திற்கு முன்னதாகவே இந்த பதவிகள் அறிவிக்கப்படும் என்ற நிலை இருந்தது. ஆனால் பல்வேறு காரணங்களால் இது தள்ளிப்போனது. மாநில தலைவர் கேஸ் அழகிரியின் உறுதியான போக்குதான் எங்களை போன்றவர்களுக்கு அங்கீகாரம் அமைந்துள்ளது,''என்கிறார் சுமதி.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :