மு.க.ஸ்டாலின் நடத்திய திமுக மக்கள் கிராம சபை கூட்டம்: அதிமுக பெண் தகராறு - கோவை நிகழ்வில் என்ன நடந்தது?

திமுக சார்பில் கோவையில் இன்று நடந்த மக்கள் கிராமசபைக் கூட்டத்தில் பங்கேற்ற ஒரு பெண், அமைச்சர் வேலுமணிக்கு எதிராக மு.க.ஸ்டாலின் பேசியபோது தகராறு செய்ததால் கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
அதைத் தொடர்ந்து திமுக - அதிமுக இரு கட்சிகளும் போட்டியாகப் போராட்டங்களும் நடத்தின.
கோவை மாவட்டம், தொண்டாமுத்தூர் சட்டமன்றத்தொகுதியில் உள்ள தேவராயபுரம் பகுதியில் திமுக சார்பில் ஸ்டாலின் தலைமையில் மக்கள் கிராம சபைக் கூட்டம் இன்று நடைபெற்றது.
இக்கூட்டத்தில் பேசிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், "தமிழகத்தின் மற்ற மாவட்டங்களை விட கோவையில் ஊழல் அதிகமாகவுள்ளது. உள்ளாட்சித் துறை அமைச்சர் வேலுமணி மற்றும் அதிமுக அமைச்சர்கள் பல்வேறு ஊழல்களை செய்து வருகின்றனர். அமைச்சர் வேலுமணி மீதான ஊழல் குற்றச்சாட்டுகளை ஆவணங்களோடு நிரூபிக்க நாங்கள் தயாராக உள்ளோம். அடுத்த நான்கு மாதங்களில் திமுக ஆட்சிக்கு வந்ததும், வேலுமணி செய்த ஊழல்களை நிரூபித்து தண்டனை பெற்று தருவோம்" என்றார்.
மேலும், திமுக ஆட்சிக்கு வந்ததும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மர்மமான முறையில் மரணம் அடைந்தது குறித்து உரிய விசாரணை நடத்தப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.
இக்கூட்டத்தில் பங்கேற்ற மதுக்கரைப் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர், அமைச்சர் வேலுமணி குறித்து ஸ்டாலின் பேசிக்கொண்டிருந்தபோது எழுந்து குறுக்கிட்டுப் பேச முயன்று தகராறு செய்தார்.
இதனால், கூட்டத்தில் இருந்த திமுகவினர் அந்தப் பெண்ணுக்கு பெண்ணுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.
உடனடியாக கூட்டத்திலிருந்து பெண்ணை வெளியேற்றிய திமுகவினர் அவரை காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

விசாரணையில் அவரது பெயர் பூங்கொடி என்றும், அவர் அதிமுகவின் மகளிர் பிரிவைச் சேர்ந்தவர் என்பதும் தெரியவந்துள்ளது.
கூட்டத்தில் என்ன நடந்தது?
திமுக கூட்டத்தில் முன்வரிசையில், திமுக தொப்பி அணிந்தவாறு அமர்ந்திருந்த பெண், ஸ்டாலின் பேசிக்கொண்டிருந்தபோது எழுந்துநின்று பேசத் தொடங்கினார்.
'எந்த தொகுதியை சேர்ந்தவர் நீங்கள்' என ஸ்டாலின் அவரிடம் கேட்டார். அதற்கு தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதி என பதிலளித்தவர், அருகில் உள்ள ஊரில் இருந்து வந்ததாக கூறினார்.
அந்த ஊர் எங்கிருக்கிறது என ஸ்டாலின் கேட்டபோது 'எங்கு இருக்கிறது என தெரியாமல், எதற்கு கிராம சபைக் கூட்டம் நடத்துகிறீர்கள்' என கோபமாக கேட்டார் அந்தப் பெண். இதனால் கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது. அப்போது பேசிய ஸ்டாலின், 'இவர் வேலுமணி அனுப்பி வைத்த நபர், அவரை காவல்துறையினரிடம் ஒப்படையுங்கள்' என கூறினார்.பின்னர் கூட்டத்தில் பேசிய ஸ்டாலின், 'திமுகவின் கூட்டத்தில் தகராறு செய்ய அமைச்சர் வேலுமணி இப்படி செய்வார் என்று எனக்கு முன்னரே தெரியும். திமுகவினரும் இப்படி இறங்கினால் அதிமுகவின் எந்த கூட்டமும் நடக்காது.' என பேசினார்.
ஆர்ப்பாட்டம் - மறியல்
திமுக கூட்டத்தில் அதிமுக பெண் உறுப்பினர் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறி தொண்டாமுத்தூர் காவல் நிலையம் அருகே அதிமுகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆனால், அந்தப் பெண் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டதாக கூறுகிறது திமுக தரப்பு.
அதிமுகவினருக்கு எதிராக திமுகவைச் சேர்ந்தவர்களும் அதே பகுதியில் கண்டன கோஷங்களை எழுப்பி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர்.
ஸ்டாலின் கூட்டத்தில் பெண் தகராறு: காணொளி:
இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
YouTube பதிவின் முடிவு
இரு தரப்பையும் தொண்டாமுத்தூர் காவல் நிலைய போலீசார் சமாதானம் செய்து வருகின்றனர். திமுக கூட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்திய பெண்ணையும், அவரோடு இருந்த மற்றொரு நபரையும் போலீசார் விசாரித்து வருகின்றனர். அந்தப் பெண் இதற்கிடையே அரசு மருத்துவமனையில் சேர்ந்துள்ளார்.
மருத்துவமனையில் அந்தப் பெண்ணை சந்தித்த அமைச்சர்
ஸ்டாலின் கூட்டத்தில் தகராறு செய்த பெண் தாக்கப்பட்டதாக குற்றம் சாட்டியுள்ளார் அமைச்சர் வேலுமணி.
அத்துடன், அவர் அந்தப் பெண் பூங்கொடியை மருத்துவமனை சென்று சந்தித்து நலம் விசாரித்தார் அவர்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
"விடுதலை சிறுத்தைகள் கட்சியிலிருந்து அதிமுகவில் இணைந்த பெண் நிர்வாகி பூங்கொடி, திமுகவினர் நடத்திய கூட்டத்தில் கலந்துகொண்டு கேள்வி எழுப்பியுள்ளார். அவரையும், அவரோடு இருந்த மற்ற நபர்களையும் திமுகவினர் கடுமையாக தாக்கியுள்ளனர். அராஜகம் செய்யும் திமுகவினரின் கூட்டத்திற்கு ஏன் சென்றீர்கள் என நானும் அவரிடம் கேட்டேன். அதிமுக மீது ஸ்டாலின் சுமத்திய அவதூறான குற்றச்சாட்டுகளை பொறுக்க முடியாமல் அவர் கேள்விகேட்டுள்ளார். அவரை காப்பாற்ற வேண்டியது எங்கள் கடமை. மேலும், இதுபோன்று தாக்குதல்களை நடத்தும் திமுகவினரை வன்மையாக கண்டிக்கின்றோம்." என கூறினார்.
இது தொடர்பாக சனிக்கிழமை காலை செய்தியாளர்களிடம் கூறும்போது, "திமுக சார்பில் கோவை, தொண்டாமுத்தூரில் இன்று நடைபெற்ற மக்கள் கிராம சபை கூட்டம் அப்பகுதியில் உள்ள பழமையான கோவிலை மறைத்து நடத்தப்பட்டது.
அங்கு வந்த பெண் ஒருவர், நாடாளுமன்ற தேர்தலில் திமுக அளித்த பொய்யான வாக்குறுதிகள் குறித்து கேள்வி எழுப்பியபோது திமுகவினரால் அவர் தாக்கப்பட்டுள்ளார். கேள்வி எழுப்பியதற்காக அந்த தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த பெண்ணை தாக்கியது கண்டித்தக்கது" என்று அவர் கூறினார். "எதிர்க்கட்சித் தலைவர் மு க ஸ்டாலின் தமிழக முதல்வர் மீதும் என்னைப்போன்ற அதிமுக அமைச்சர்கள் மீதும் ஆதாரமில்லாத அவதூறுகளையும், அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக பொய்யான குற்றச்சாட்டுகளையும் சுமத்தி வருகிறார்.
அவர் என் மீது அளித்துள்ள புகார்களை நிரூபிக்கும் பட்சத்தில் கட்சி பதவியையும், சட்டமன்ற உறுப்பினர் மற்றும் அமைச்சர் பதவியையும் ராஜினாமா செய்து, அரசியலை விட்டு விலக நான் தயாராக உள்ளேன். அதேபோல், குற்றச்சாட்டுகளை நிரூபிக்கத் தவறினால் ஸ்டாலினும் அவருடைய பதவிகளை விட்டு விலகத் தயாராக இருக்கிறாரா?' என்று கேட்டார் வேலுமணி.
முதல்வர் கூட்டத்தில் திமுகவினர் கேள்வி கேட்பார்கள்: ஆர்.எஸ்.பாரதி
இந்த சம்பவம் தொடர்பாக திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி சென்னை டிஜிபி அலுவலகத்தில் புகார் செய்துள்ளார்.
டிஜிபி அலுவலகம் வந்த பாரதி செய்தியாளர்களிடம் பேசும்போது, "கோவையில் திமுக ஏற்பாடு செய்த மக்கள் கிராமசபை கூட்டத்தில் அதிமுக அமைச்சர் வேலுமணி தரப்பில் ஒரு பெண்ணை அனுப்பி வைத்து நியாயமற்ற கேள்விகளை எழுப்பி தகராறு செய்துள்ளனர்.
இதற்கு உடந்தையாக அப்பகுதியை சேர்ந்த காவல்துறை அதிகாரிகளும் செயல்பட்டு வருகின்றனர். எனவே, அதிமுகவினரின் இதுபோன்ற நடவடிக்கைகளை தடுக்குமாறு டிஜிபியிடம் புகார் அளித்துள்ளோம். நடவடிக்கை எடுக்கப்படாத பட்சத்தில் தமிழக முதல்வர் பங்கு பெறும் அனைத்து கூட்டங்களிலும் திமுகவினர் சார்பாக கேள்விகள் எழுப்பப்படும்.
இதனால் சமூக அமைதி பாதிக்க வாய்ப்புள்ளது. எனவே இதுபோன்ற சம்பவம் மீண்டும் நிகழாதவாறு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என மனு அளித்துள்ளோம்" என தெரிவித்தார்.
திருமாவளவன் கூறியது என்ன?
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு
இச்சம்பவம் குறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், திமுக இளைஞரணித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் ட்விட்டரில் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
திமுக தலைவர் பங்கேற்ற மக்கள் கிராமசபை கூட்டத்தில் அதிமுகவினர் குழப்பம் ஏற்படுத்த முயன்றனர் என்றும் இது ஜனநாயக மாண்புகளுக்கு எதிரானது என்றும் திருமாவளவன் தம் டிவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.
பிற செய்திகள்:
- இந்திய கிரிக்கெட் முன்னாள் கேப்டன் சௌரவ் கங்குலி மருத்துவமனையில் சேர்ப்பு
- சிவப்பு எறும்பு சட்னி: கொரோனாவிலிருந்து பாதுகாக்குமா? - ஆய்வு செய்ய நீதிமன்றம் உத்தரவு
- கோவிஷீல்டு தடுப்பூசியை அவசர தேவைக்கு பயன்படுத்த பரிந்துரை - அடுத்த நடைமுறை என்ன?
- "பாஜக அதிமுகவிற்கு நண்பேன்டா" - மதுரையில் அமைச்சர் செல்லூர் ராஜூ புதிய விளக்கம்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












