பிரசவித்த உடன் கொலை செய்யப்பட்ட திருமணமாகாத பெண் - குழந்தை எங்கே? காதலன், தந்தை கைது

பட மூலாதாரம், Subir HalderThe India Today Group via Getty Images
- எழுதியவர், சிட்டு திவாரி
- பதவி, பிபிசி செய்தியாளர்
- வாசிக்கும் நேரம்: 2 நிமிடங்கள்
பிகாரின் மாதேபுராவில் உதாகிஷுன்கஞ்ச் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், திருமணமாகாத தாய் ஒருவர் கொல்லப்பட்ட சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
உயிரிழந்த இளம்பெண்ணின் தந்தை அம்பேத் பாரதி மற்றும் மாமா தபேஷ் குமார் யாதவ் ஆகியோர் மீது இந்தக் கொலைக்கான குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.
இந்த விவகாரத்தில், திருமணமாகாத அந்த இளம்பெண் பெற்றெடுத்த பெண் குழந்தை, சாலையில் உள்ள ஒரு பாலத்திலிருந்து பையில் கட்டி வீசப்பட்டதாகக் கூறப்படுகிறது.
குழந்தையை வீசியதாக அந்த இளம்பெண்ணின் காதலர் ரிஷு ராஜ் மீது குற்றச்சாட்டு உள்ளது. மருத்துவமனை பதிவேடுகளில் அந்த இளம்பெண்ணின் கணவராகவும், பச்சிளம் குழந்தையின் தந்தையாகவும் இவருடைய பெயரே பதிவு செய்யப்பட்டுள்ளது.
உதாகிஷுன்கஞ்ச் உட்கோட்ட காவல் அதிகாரி அவினாஷ் குமார் பிபிசி இந்தி சேவையிடம், "இந்த வழக்கில் உயிரிழந்த பெண்ணின் தந்தை அம்பேத் பாரதி, மாமா தபேஷ் குமார் யாதவ் மற்றும் அவரது காதலர் ரிஷு ராஜ் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்" என்றார்.
"ரிஷு ராஜ் அடையாளம் காட்டிய இடத்திலிருந்து, குழந்தையை பாலத்திற்கு அடியில் வீசுவதற்குப் பயன்படுத்தப்பட்ட அந்தப் பை மீட்கப்பட்டுள்ளது. ஆனால் பச்சிளம் குழந்தையோ அல்லது அதன் உடலோ இதுவரை மீட்கப்படவில்லை."
விவகாரம் என்ன?
மாதேபுரா மாவட்டத்தில் பிப்ரா கரௌதி என்ற கிராமம் உள்ளது. இந்தக் கிராமத்தின் 2-வது வார்டில் அல்கா குமாரி மற்றும் ரிஷு ராஜின் குடும்பங்கள் வசிக்கின்றன. 20 வயது அல்கா குமாரி, ரிஷு ராஜை காதலித்து வந்தார்.
அல்கா குமாரியின் தந்தை அம்பேத்கர் பாரதி, தனது குடும்பத்தின் பெயரில் இயங்கும் அரசுப் பள்ளியான குமார் பிரகாஷ் நித்யானந்த் பள்ளியின் பொறுப்புத் தலைமையாசிரியராக உள்ளார்.
இவருக்கு ஐந்து குழந்தைகள் உள்ளனர். அதே நேரத்தில் ரிஷு ராஜின் தந்தை ராஜேஷ் குமாரும் அரசு நடுநிலைப் பள்ளியில் ஆசிரியராகப் பணிபுரிகிறார்.
இரண்டு குடும்பங்களும் பொருளாதார ரீதியாக வசதியானவை.
உள்ளூர் பத்திரிகையாளர் ரஜினிகாந்த், "இந்த இரண்டு குடும்பங்களும் ஒருவருக்கொருவர் உறவினர்கள். இந்தக் காதல் விவகாரம் தெரிந்ததும், குடும்பத்தினர் இருவருக்கும் அறிவுரை கூறினர், ஆனால் அவர்கள் தொடர்ந்து சந்தித்து வந்தனர். பின்னர் அல்கா கர்ப்பமானார். தகவலின்படி, ரிஷுவுக்கும் இந்தக் குழந்தை பிறப்பதில் விருப்பமில்லை. அவர் அல்காவை கருக்கலைப்பு செய்ய வற்புறுத்தினார், ஆனால் அல்கா அதற்கு மறுத்துவிட்டார்." என்கிறார்
கடந்த பிப்ரவரி 12-ஆம் தேதி இரவு சுமார் 3 மணியளவில், பிரசவத்திற்காக அல்கா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
உதாகிஷுன்கஞ்ச் உட்கோட்ட மருத்துவமனையின் துணை கண்காணிப்பாளர் ரூபேஷ் குமார், " அல்கா இரண்டரை கிலோ எடையுள்ள பெண் குழந்தையைப் பெற்றெடுத்தார். அவர் தனது கணவராக ரிஷு குமாரின் பெயரைப் பதிவு செய்திருந்தார். ஆனால் அவருக்கு ரத்தப்போக்கு அதிகமாக இருந்ததால், நாங்கள் அவரை மாதேபுரா மாவட்ட மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல பரிந்துரை செய்தோம்.'' என்கிறார்
"ஆம்புலன்ஸைப் பயன்படுத்துமாறு நாங்கள் உறவினர்களிடம் கூறினோம், ஆனால் எங்களிடம் சொந்தமாக இரண்டு வாகனங்கள் உள்ளன, எங்களுக்கு ஆம்புலன்ஸ் தேவையில்லை என்று அவர்கள் கூறிவிட்டனர்."
உதாகிஷுன்கஞ்ச் காவல் அதிகாரி அவினாஷ் குமார், "உயிரிழந்த பெண்ணை பிரசவத்திற்காக ரிஷுதான் மருத்துவமனைக்கு அழைத்து வந்தார். விசாரணையின் போது அல்காவின் குடும்பத்தினர் தங்களுக்கு அவர் கர்ப்பமாக இருந்தது தெரியாது என்று கூறினர், ஆனால் விசாரணையில் அது பொய் எனத் தெரிந்தது. பெண்ணின் உறவினர்களுக்கு இது தெரிந்திருந்தது, அவமானத்திற்கு அஞ்சியே தங்கள் மகளைக் கொன்றதாக அவர்கள் ஒப்புக்கொண்டனர்."என்கிறார்

பட மூலாதாரம், Abhisek SahaMajority WorldUniversal Images Group via Getty Images
வெளிவந்தது எப்படி?
காவல்துறையின் கூற்றுப்படி, உயிரிழந்த அல்காவின் குடும்பத்தினர் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லாமல், கழுத்தை நெரித்துக் கொலை செய்தனர்.
பிப்ரவரி 13-ஆம் தேதி, உயிரிழந்த பெண்ணின் உடலைத் தகனம் செய்யப் பாகல்பூருக்கு கொண்டு செல்ல குடும்பத்தினர் முயன்றனர். ஆனால் யாரோ ஒருவர் இது குறித்து ரகசியத் தகவலைக் காவல்துறைக்குத் தெரிவிக்க, காவல்துறையினர் உடலை மீட்டுப் பிரேதப் பரிசோதனை செய்தனர்.
" அவர் கழுத்தை நெரித்துக் கொல்லப்பட்டதாகப் பிரேதப் பரிசோதனை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் மனித சாட்சியங்கள் சேகரிக்கப்பட்டன. இந்த மூன்று கைதுகளைத் தவிர, மேலதிக விசாரணை நடைபெற்று வருகிறது, சம்பவத்தில் தொடர்புடைய மற்றவர்களும் கைது செய்யப்படுவார்கள். சம்பவத்திற்குப் பிறகு ரிஷு ராஜின் தந்தையும் தலைமறைவாக உள்ளார்," என்கிறார் அவினாஷ் குமார்.
இந்த விவகாரத்தில் இரண்டு குடும்பங்களிடமும் பேச பிபிசி முயற்சி செய்தது, ஆனால் அவர்களைத் தொடர்புகொள்ள முடியவில்லை.
தனது பெயர் வெளியிடப்படக் கூடாது என்ற நிபந்தனையுடன் பிபிசி இந்தி சேவையிடம் பேசிய ஒரு கிராமவாசி, "இரண்டு குடும்பங்களிலும் இப்போது பெண்கள் மட்டுமே வீட்டில் எஞ்சியுள்ளனர்" என்றார்.
பிகாரில் பஞ்சாயத்து மட்டத்தில் நீண்டகாலமாகப் பணியாற்றி வரும் சமூக ஆர்வலர் ஷாஹினா பர்வீன், "இந்தச் சம்பவம் பாலியல் அறிவு, பாதுகாப்பான உடலுறவு, சமூகம், இளைஞர்கள் தங்கள் உடலைப் பற்றி எவ்வளவு அறிந்திருக்கிறார்கள் போன்ற கேள்விகளை எழுப்பியுள்ளது. குடும்பத்தினர் செய்தது ஆணாதிக்கச் சிந்தனை, ஆனால் அரசு மட்டத்தில் இந்தக் கேள்விகள் எவ்வாறு கையாளப்படுகின்றன என்பதும் கவனிக்கப்பட வேண்டும்." என்கிறார்
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு












