'பள்ளி முதல்வரை கொன்ற 10ஆம் வகுப்பு மாணவர்கள்' - ஒரே ஒரு வார்த்தையால் துப்பு துலங்கியது எப்படி?

பட மூலாதாரம், UGC
(எச்சரிக்கை: அதிர்ச்சியூட்டும் விவரங்கள் உள்ளன)
'பாபு' - இந்த ஒற்றை வார்த்தைதான், ஒரு கொடூரக் கொலை வழக்கில் சந்தேக நபர்களைக் கண்டறியவும், விசாரணையை முன்னெடுத்துச் செல்லவும் உதவியதாக போலீசார் கூறுகின்றனர்.
நல்கொண்டா மாவட்டம், கொண்டமல்லேபள்ளியைச் சேர்ந்த பள்ளி முதல்வர் கல்லு ரூபா ரெட்டி கொலை வழக்கில், இரண்டு மாணவர்களைக் கைது செய்துள்ளதாக நல்கொண்டா போலீசார் அறிவித்துள்ளனர்.
"ஆடம்பர வாழ்க்கைக்குப் பழகிய அவர்கள், பணத்திற்காகவே முதல்வரைக் கொடூரமாகக் கொலை செய்துள்ளனர். திருடுவதற்காகச் சென்றபோது, முதல்வர் அவர்களை அடையாளம் கண்டுகொண்டதால் அவரைக் கொன்றுவிட்டனர்," என்று காவல் கண்காணிப்பாளர் சரத் சந்திர பவார் தெரிவித்தார்.
நடந்தது என்ன?
தெலங்கானாவில் நல்கொண்டா மாவட்டம் கொண்டமல்லேபள்ளியில் உள்ள ஜேபி காலனியில் தனது கணவர் ராஜேந்தர் ரெட்டியுடன் ரூபா ரெட்டி வசித்து வந்தார்.
ராணி ரெட்டி என்பவருடன் இணைந்து 'நாகார்ஜுனா கிராமர் கான்செப்ட் ஸ்கூல்' என்ற பள்ளியை ரூபா ரெட்டி நடத்தி வந்தார். ரூபா ரெட்டி அப்பள்ளியின் முதல்வராக இருந்தார்.
ஆகஸ்ட் 11 அன்று மாலை, பள்ளியிலிருந்து நடந்து வீடு திரும்பிய அவர் கொலை செய்யப்பட்டார். அவரது உடலில் பல இடங்களில் கத்தியால் குத்தப்பட்ட காயங்கள் இருந்ததை போலீசார் கண்டறிந்தனர்.
இந்தக் கொலை தொடர்பாக ஆகஸ்ட் 12 அன்று கொண்டமல்லேபள்ளி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
கொலை நடந்த நேரத்தில் ரூபா ரெட்டி வீட்டில் தனியாக இருந்தார்; அவரது கணவர் ராஜேந்தர் ரெட்டி வேலை விஷயமாக ஹைதராபாத் சென்றிருந்தார்.

பட மூலாதாரம், UGC
பல்வேறு கோணங்களில் விசாரணை
ரூபா ரெட்டி கொலை வழக்கை விசாரிக்கத் தொடங்கிய போலீசாருக்கு, ஆரம்பத்தில் ஆதாரங்கள் சரிவர கிடைக்கவில்லை.
கொலை நடந்த பகுதியில் சிவப்பு நிறச் சட்டை (ஹூடி) அணிந்த இளைஞர் ஒருவர் சந்தேகத்திற்கிடமான முறையில் நடந்து செல்வதை சிசிடிவி கேமராக்களில் கண்ட பிறகு, போலீசார் ஐந்து தனிப்படைகளை அமைத்து விசாரணையைத் தொடங்கினர்.
"நாங்கள் சுமார் 80 சந்தேக நபர்களிடம் விசாரணை நடத்தினோம் மற்றும் 70 சிசிடிவி கேமராக்களின் காட்சிகளை ஆய்வு செய்தோம்," என்று எஸ்பி சரத் சந்திர பவார் கூறினார்.
சொத்துத் தகராறுகள், குடும்பப் பிரச்னைகள் மற்றும் வெளி மாநில குற்றக்கும்பல்களின் செயல்பாடு போன்ற பல்வேறு கோணங்களில் தாங்கள் விசாரணை நடத்தியதாக அவர் தெரிவித்தார்.
ஒரு வார்த்தையால் துப்பு துலங்கியது எப்படி?
கொலை செய்யப்படுவதற்கு முன்பு ரூபா ரெட்டி தனது தங்கையுடன் தொலைபேசியில் பேசிக் கொண்டிருந்ததை போலீசார் கண்டறிந்தனர். தனக்கு முன்னால் யாரையோ பார்த்ததும் அவர் "பாபு" என்று அழைத்ததாகவும், அதன்பின் ரூபா ரெட்டியின் அலைபேசி அணைக்கப்பட்டுவிட்டதாகவும் அவர் காவல்துறையிடம் தெரிவித்தார்.
இருப்பினும், ரூபா ரெட்டி யாரையோ நேரில் பார்த்தது போல "பாபு" என்று அழைத்தது மட்டுமே தங்களிடம் இருந்த ஒரே துப்பு என்று காவல்துறையினர் கூறினர்.
ரூபா ரெட்டி வழக்கமாகப் பள்ளி மாணவர்களை "பாபு" என்றுதான் அழைப்பார் என்று அவரது குடும்பத்தினர் காவல்துறையிடம் தெரிவித்தனர்.
இதன் பின்னரே, இக்கொலையில் மாணவர்களுக்குத் தொடர்பு உள்ளதா என்பது குறித்துக் காவல்துறையினர் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.

பட மூலாதாரம், UGC
துப்பு துலங்கியது எப்படி?
ரூபா ரெட்டியின் மறைவால் துயரத்தில் ஆழ்ந்துள்ள அப்பள்ளிக்கு நான்கு நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
"பள்ளி மீண்டும் திறக்கப்பட்டபோது 13 மாணவர்கள் வரவில்லை. சந்தேகம் எழுந்ததால், பத்தாம் வகுப்பு பயிலும் அவர்களில் ஐந்து பேரிடம் நாங்கள் விசாரணை நடத்தினோம். அவர்களின் பின்னணி குறித்து விசாரித்தபோது, ரூபா ரெட்டியின் இறப்பிற்குப் பிறகு இரண்டு மாணவர்கள் அதிக பணம் செலவழித்து விருந்து அளித்தது தெரியவந்தது. பிடித்து விசாரிக்கப்பட்டபோது, முதலில் தங்கள் பெற்றோர்தான் பணம் கொடுத்ததாக அவர்கள் கூறினர். பின்னர், ரூபா ரெட்டியைக் கொன்றதை அவர்கள் ஒப்புக்கொண்டனர்," என்று காவல் கண்காணிப்பாளர் சரத் சந்திர பவார் விளக்கினார்.
குற்றஞ்சாட்டப்பட்ட முதல் மாணவரிடமிருந்து 1.54 லட்சம் ரூபாய் ரொக்கமும், ஒரு ஐபோனும் கைப்பற்றப்பட்டதாக அவர் கூறினார். அந்த மாணவர், 60,000 ரூபாய்க்கு அந்த ஐபோனை வாங்கியதாகத் தெரிவித்தார்.
மாணவர்கள் சிறார்கள் என்பதால், அவர்களின் விவரங்களை காவல்துறை வெளியிடவில்லை. அவர்களின் சொந்த ஊர் அல்லது குடும்ப விவரங்கள் கூட வெளியிடப்படவில்லை. இதனால் பிபிசி அவர்களது குடும்பத்தினரைத் தொடர்புகொள்ள முடியவில்லை.

'மண் குவியல்கள் வழியாக வீட்டிற்குள் நுழைந்தனர்'
குற்றஞ்சாட்டப்பட்ட இரு மாணவர்களில் ஒருவர் ரூபா ரெட்டியின் வீட்டிற்குள் நுழைந்ததாகவும், மற்றொருவர் வீட்டின் வெளியே காவல் நின்றதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.
கொண்டமல்லேபள்ளியில் உள்ள ஜேபி காலனியில் உள்ள ரூபா ரெட்டியின் வீட்டிற்கு நான் சென்றபோது, வீட்டின் இருபுறமும் காலி மனைகள் இருந்தன. ஒரு பக்கம் சாலையும், மறுபக்கம் வீடும் அமைந்திருந்தன.
வீட்டின் பின்புறம் மண் மற்றும் கற்கள் குவித்து வைக்கப்பட்டுள்ளன. குற்றஞ்சாட்டப்பட்டுள்ள மாணவர், அவற்றின் வழியாகவே வீட்டிற்குள் சென்றதை காவல்துறையினர் கண்டறிந்தனர். வீட்டின் மறுபுறம் உள்ள சமையலறை கதவு வழியாக உள்ளே நுழைந்து அவர் இந்தக் கொலையைச் செய்ததாகக் கூறப்படுகிறது.
அவ்வீட்டில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இருப்பினும், தற்போது பள்ளியின் நிர்வாகத்தைக் கவனித்து வரும் ஜார்ஜ் ரெட்டி, மாணவர் உள்ளே நுழைந்த பகுதியில் இருந்த சிசிடிவி கேமரா சில நாட்களுக்கு முன்பே வேறு திசையில் திருப்பப்பட்டிருந்ததாகத் தெரிவித்தார்.
அங்கு வைக்கப்பட்டிருந்த கட்டுமான உபகரணங்களைக் கண்காணிப்பதற்காகவே அந்தக் கேமரா அந்தத் திசையில் திருப்பப்பட்டிருந்ததாக அவர் கூறினார். இதன் விளைவாக, சமையலறை கதவு உள்ள பகுதியின் காட்சிகள் அதில் பதிவாகவில்லை.
ஆனால், குற்றம் சாட்டப்பட்ட மாணவரின் நடமாட்டம் அருகிலுள்ள வீடுகளில் இருந்த சிசிடிவி கேமராக்களில் பதிவாகியிருந்தது.
பிபிசி குழுவினர் ரூபா ரெட்டி கொல்லப்பட்ட வீட்டிற்குச் சென்றபோது அங்கு யாரும் இல்லை. அவரது இறுதிச் சடங்கு மற்றும் அதைத் தொடர்ந்த நிகழ்வுகளில் குடும்பத்தினர் ஈடுபட்டிருந்ததாக பள்ளி ஆசிரியர்கள் தெரிவித்தனர்.

பட மூலாதாரம், UGC
"கைப்பற்றப்பட்ட ரூபாய் நோட்டுகளில் ரத்தக் கறைகள்"
மாணவரிடமிருந்து கைப்பற்றப்பட்ட மூன்று ரூபாய் நோட்டுகளில் ரத்தக் கறைகள் இருந்ததாகவும், அவற்றை ஆய்வகத்திற்கு அனுப்பியபோது அவை மனித ரத்தம் என்பது உறுதிப்படுத்தப்பட்டதாகவும் காவல் கண்காணிப்பாளர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
சுமார் 15-20 நாட்களுக்கு முன்பு நடந்த ஒரு சம்பவமும் ரூபா ரெட்டியின் கொலைக்கு ஒரு காரணமாக இருக்கலாம் என்று காவல்துறையினர் கருதுகின்றனர்.
"பள்ளி விடுதியில் தங்கியிருந்த குற்றம் சாட்டப்பட்ட மாணவர்களில் ஒருவரின் பையில் செல்போன் மற்றும் பணம் கண்டெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து, அவர் விடுதி தங்குமிடத்திலிருந்து நீக்கப்பட்டு, தினமும் வீட்டிலிருந்து பள்ளிக்கு வந்து செல்லும் மாணவராக (day scholar) மாற்றப்பட்டார். அவர் மதுவுக்கு அடிமையாகி இருந்ததும், ஆடம்பரச் செலவுகளுக்காக எப்படியாவது பணம் சம்பாதிக்க விரும்பியதும் எங்கள் விசாரணையில் தெரியவந்தது. அந்தச் சூழலில், விடுதி வசதி மறுக்கப்பட்டதால் ஏற்பட்ட கோபத்தை மனதில் கொண்டு, அவரும் மற்றொரு மாணவரும் சேர்ந்து பள்ளி முதல்வரின் வீட்டில் கொள்ளையடிக்கத் திட்டமிட்டனர்," என்று காவல் கண்காணிப்பாளர் தெரிவித்தார்.

பட மூலாதாரம், UGC
"நான்கு அல்லது ஐந்து நாட்கள் கண்காணிப்பு"
கொலைக்கு முன்னதாக நான்கு அல்லது ஐந்து நாட்களுக்கு அவர்கள் அப்பகுதியைக் கண்காணித்ததை போலீசார் கண்டறிந்தனர்.
"ஆகஸ்ட் 11-க்குள் பள்ளி கட்டணம் வசூலிக்கப்படும் என்பதை அறிந்த பிறகு அவர்கள் கொள்ளைக்குத் திட்டமிட்டனர். கொலைக்கு முன்னதாக, அவர்கள் கத்தி, கையுறைகள் மற்றும் முகமூடிகளை வாங்கினர். அவர்கள் கொண்டமல்லேப்பள்ளி புறநகர்ப் பகுதியில் சந்தித்துக்கொண்டனர். பள்ளி முடிந்த பிறகு, ரூபா ரெட்டி மாலையில் வீட்டிற்கு வருவதைக் கவனித்த அவர்கள், வீட்டின் பின்பக்க வழியாக உள்ளே நுழைந்தனர். ஒரு மாணவர் வீட்டின் வெளியே நிற்க, மற்றொரு மாணவர் உள்ளே சென்றார்.
"வீட்டிலிருந்து பணத்தை எடுத்துக் கொண்டிருந்த போது ரூபா ரெட்டி அதைக் கவனித்து சத்தம் போட்டதால், அந்த மாணவர் தான் வைத்திருந்த கத்தியால் அவரைக் குத்தினார். அப்போது அவரது செல்போன் கீழே விழுந்தால், அவர் யாரையாவது அழைத்து விவரத்தைச் சொல்லிவிடுவார் என்பதால், அந்த மாணவர் அவரது செல்போனை எடுத்துக்கொண்டு அங்கிருந்து சென்றுவிட்டார்," என்று காவல் கண்காணிப்பாளர் விளக்கினார்.
தாங்கள் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டதை ரூபா ரெட்டி பார்த்துவிட்டதால் பயத்தின் காரணமாகவே அந்த மாணவர் அவரைக் கொன்றதாகக் காவல் கண்காணிப்பாளர் தெரிவித்தார்.
விரைவாகப் பணம் சம்பாதிப்பதற்கான வழிகளை அந்த இரண்டு மாணவர்களும் யூடியூபில் தேடியது விசாரணையில் தெரியவந்ததாக காவல்துறையினர் கூறினர். அவர்கள் ஒரு மாதத்திற்கு முன்பு கோவா சுற்றுலா சென்றிருந்ததையும் போலீசார் கண்டறிந்தனர். குற்றம் சாட்டப்பட்டவர்களிடமிருந்து ரூபா ரெட்டியின் செல்போனையும் பறிமுதல் செய்துள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.

பட மூலாதாரம், UGC
ரூபா ரெட்டி 1999 முதல் பள்ளியை நிர்வகித்து வருகிறார்
நாகார்ஜுனா கிராமர் கான்செப்ட் ஸ்கூல் 1999-ல் கொண்டமல்லேபள்ளியில் ரூபா ரெட்டி மற்றும் ராணி ரெட்டி ஆகியோரால் தொடங்கப்பட்டது. இருவரும் இதற்கு முன் ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியர்களாகப் பணியாற்றியவர்கள். அங்கிருந்து விலகி அவர்கள் இந்தப் பள்ளியை நிறுவினர்.
"நாங்கள் ஒரு பள்ளியைத் தொடங்கும் யோசனையை முன்வைத்த போது, ரூபா ரெட்டியும் முன்வந்து இணைந்துகொண்டார். அப்போதிலிருந்து, நாங்கள் எந்தப் பிரச்சினையும் இல்லாமல் பள்ளியை நடத்தி வருகிறோம்," என்று ராணி ரெட்டி கூறினார்.
அரசுப் பள்ளி ஆசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்ற ராணிரெட்டியின் கணவர் ஜார்ஜ் ரெட்டியிடம் பிபிசி பேசியது.
"ரூபா ரெட்டியை எங்களுக்குச் சிறுவயதிலிருந்தே தெரியும். அதனால்தான் நாங்கள் ஒரு பள்ளியைத் தொடங்க முடிவு செய்தபோது, என் மனைவி ராணிரெட்டியும் நானும் இணைந்து அதைத் தொடங்கினோம். முன்பு நாங்கள் ஒரு விடுதியை நடத்தி வந்தோம். ஆனால் கொரோனாவுக்குப் பிறகு, சில ஆண்டுகள் விடுதி நடத்துவதை நிறுத்திவைத்திருந்தோம். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு மீண்டும் விடுதியைத் தொடங்கி, அதன் பொறுப்புகளை இரண்டு ஆசிரியர்களிடம் ஒப்படைத்தோம்," என்று அவர் கூறினார்.
ரூபா ரெட்டி கடைசியாக ஆகஸ்ட் 6 அல்லது 7-ஆம் தேதிகளில் தன்னிடம் பேசியதாகவும், தனது சகோதரர் இறந்த பிறகு தான் வேலையில் மும்முரமாக இருந்ததாகவும் ஜார்ஜ் ரெட்டி தெரிவித்தார்.
"இப்படி ஒரு துயரச் சம்பவம் நடக்கும் என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை. சம்பவம் நடந்த மறுநாள் காலையில் ரூபா ரெட்டியின் கணவர் ராஜேந்தர் ரெட்டி எங்களை அழைத்தபோது நாங்கள் அதிர்ச்சியடைந்தோம்."
"மாணவர்களே அந்த அராஜகச் செயலில் ஈடுபட்டனர் என்பதை அறிந்து நாங்கள் மிகவும் வருந்துகிறோம். ரூபா ரெட்டி எப்போதும் மாணவர்களிடம் மிகுந்த அன்புடன் நடந்துகொள்வார்," என்று ரூபா ரெட்டியை நினைவுகூர்ந்தபடி ஜார்ஜ் ரெட்டி கூறினார்.

பட மூலாதாரம், UGC
"குழந்தைகளின் நடத்தையை எப்போதும் கண்காணிக்க வேண்டும்."
நடத்தை சார்ந்த கோளாறுகள் சிறு வயதிலேயே குழந்தைகளிடம் விசித்திரமான அல்லது இயல்புக்கு மாறான போக்குகள் உருவாக வழிவகுக்கும் என்று ஹைதராபாத்தைச் சேர்ந்த உளவியல் ஆலோசகர் அனிதா ஆரே பிபிசியிடம் கூறினார்.
"சிறு வயதிலிருந்தே எதையும் (கேட்டவுடன்) கொடுத்துவிடுவது நல்லதல்ல. அப்படி எதையும் எளிதாகப் பெறாத சூழல் ஏற்படும்போது, அவர்கள் தீவிரமான அல்லது தவறான நடத்தையை நோக்கித் திரும்பும் அபாயம் உள்ளது. எது நல்லது, எது கெட்டது என்பதைச் சிறு வயதிலிருந்தே குழந்தைகளுக்குச் சொல்லிக்கொடுக்க வேண்டும். கடின உழைப்பின் மூலமே எதையும் பெற முடியும் என்றும், எதுவும் எளிதாகக் கிடைத்துவிடாது என்றும் நாம் அவர்களுக்கு விளக்க வேண்டும்," என்று அனிதா கூறினார்.
ஒழுக்கத்தைப் பேணுவதில் பெற்றோர்கள் முதல் ஆசிரியர்கள் வரை அனைவரும் பொறுப்புடன் செயல்பட வேண்டும் என்றும், அனைவரும் அதைக் கண்காணிக்க வேண்டும் என்றும் அனிதா ஆரே கூறினார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
































