கொரோனா வைரஸிலிருந்து சிவப்பு எறும்பு சட்னி பாதுகாக்குமா? - ஆய்வு செய்ய நீதிமன்றம் உத்தரவு

சிவப்பு எறும்பு

பட மூலாதாரம், Getty Images

முக்கிய இந்திய நாளிதழ்களில், இன்று வெளியான பிரதான செய்திகள், தலையங்க கட்டுரைகள் ஆகியவற்றில் சிலவற்றைத் தொகுத்து வழங்கியுள்ளோம்.

கொரோனா வைரஸ் தொற்றை தடுக்க சிவப்பு எறும்பு சட்னி பயன்படுமா என்று ஆய்வு செய்ய மத்திய அரசுக்கு ஒடிஷா உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக இந்து தமிழ்த்திசை நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

சிவப்பு எறும்பு சட்னி: கொரோனாவிலிருந்து பாதுகாக்குமா?

"ஒடிஷா, சத்தீஸ்கர் உள்ளிட்ட மாநிலங்களில் வசிக்கும் பழங்குடியின மக்கள், சிவப்பு எறும்புசட்னியை விரும்பி சாப்பிடுகின்றனர். சிவப்பு எறும்புகளுடன் பச்சை மிளகாயை வைத்து அரைத்து இந்த சட்னி தயாரிக்கப்படுகிறது. இந்நிலையில், ஒடிஷாவில் பரிபடா நகரைச் சேர்ந்த பொறியாளர் நயதர் பதியால் என்பவர் அம்மாநில உயர் நீதிமன்றத்தில் ஒரு பொதுநல மனுத் தாக்கல் செய்தார்.

அந்த மனுவில், ''சிவப்பு எறும்பு சட்னி மருத்துவ குணம் கொண்டது. இந்த சட்னியில் புரோட்டீன், கால்சியம் மற்றும் துத்தநாகம் ஆகியவை இருப்பதால் நோய் எதிர்ப்பு தன்மையை கொண்டுள்ளது. செரிமாணக் கோளாறுகளை நீக்குவதுடன் கிருமிகளை எதிர்க்கும் திறன் கொண்டது. கொரோனா தொற்றுக்கு சிவப்பு எறும்பு சட்னியை மருந்தாக அறிவிக்க உத்தரவிட வேண்டும்'' என்று நயதர் பதியால் கூறியிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த ஒடிஷா உயர்நீதிமன்ற நீதிபதிகள், ''கொரோனா தொற்றை குணப்படுத்த சிவப்பு எறும்பு சட்னியை பொதுமக்கள் பயன்படுத்துவது குறித்து ஆயுஷ் அமைச்சகத்தின் இயக்குநர் ஜெனரல், அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சிலின் இயக்குநர் ஜெனரல் ஆகியோர் 3 மாதங்களுக்குள் முடிவெடுக்க வேண்டும்'' என்று உத்தரவிட்டுள்ளதாக அந்த செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தார் ஜே.பி.நட்டா

ஜே.பி.நட்டா

பட மூலாதாரம், Getty Images

கொரோனா பாதிப்பில் இருந்து பாஜக தலைவர் ஜே.பி.நட்டா குணமடைந்துள்ளதாக தினத்தந்தி செய்தி வெளியிட்டுள்ளது.

"கடந்த மாதம் 13ம் தேதி பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா கொரோனாவால் பாதிக்கப்பட்டார். இதனையடுத்து அவர் வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்டார். அவரது குடும்பத்தினருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அனைவருக்கும் தொடர்ந்து மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டது.

இந்நிலையில், கொரோனா பாதிப்பில் இருந்து நட்டா குணமடைந்துள்ளார். இத்தகவலை அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

"கொரோனாவில் இருந்து குணமடைய வேண்டி எனக்காக பிரார்த்தனை செய்து ஆதரவு அளித்த அனைவருக்கும் நன்றி. நானும் எனது குடும்ப உறுப்பினர்களும் இப்போது கொரோனாவில் இருந்து முழுமையாக மீண்டுள்ளோம்" என்று அவரது பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளதாக தினத்தந்தி கூறுகிறது.

ஜிஎஸ்டி வசூலில் வரலாற்று சாதனை

ஜிஎஸ்டி

பட மூலாதாரம், Getty Images

சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) வசூல் கடந்த டிசம்பா் மாதத்தில் ரூ.1.15 லட்சம் கோடியாக அதிகரித்து புதிய உச்சத்தை தொட்டுள்ளதாக தினமணி நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

இதுதொடர்பாக வெள்ளிக்கிழமை அறிக்கை வெளியிட்ட மத்திய நிதி அமைச்சகம், "கடுமையான பொது முடக்கத்துக்குப் பிறகு நாட்டின் பொருளாதாரம் வேகமாக வளா்ச்சி கண்டு வருவதை கோடிட்டுக் காட்டும் வகையில் சென்ற டிசம்பா் மாதத்தில் ஜிஎஸ்டி வசூல் ரூ.1.15 லட்சம் கோடியாக அதிகரித்து புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது. நடப்பு நிதியாண்டில் தொடா்ச்சியாக மூன்றாவது மாதமாக சரக்கு மற்றும் சேவை வரி வசூல் ரூ.1 லட்சம் கோடிக்கும் மேல் அதிகரித்தது வளா்ச்சிக்கான நம்பிக்கையை அதிகப்படுத்தியுள்ளது.

2020 டிசம்பரின் ரூ.1,15,174 கோடி ஜிஎஸ்டி வசூலை சென்ற 2019 டிசம்பரின் ஜிஎஸ்டி வசூலான ரூ.1.03 லட்சம் கோடியுடன் ஒப்பிடும்போது 12 சதவீதம் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 2017 ஜூலை 1-இல் ஜிஎஸ்டி அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு 2019 ஏப்ரலில் வசூலான ரூ.1,13,866 கோடிதான் இதுவரையில் அதிகபட்ச ஜிஎஸ்டி அளவாகக் கருதப்பட்டு வந்தது. இந்த நிலையில், 2020 டிசம்பரில் ஜிஎஸ்டி வசூல் அதனை விஞ்சி சாதனை படைத்துள்ளது" என்று அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :