இந்திய சிறைகளில் அடிப்படை வசதிகள் மறுக்கப்படுவது ஏன்?

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், கீதா பாண்டே
- பதவி, பிபிசி செய்தியாளர்
சிறைச்சாலை வாழ்க்கை என்பது கடினமான ஒன்றுதான். ஆனால் சமீப வாரங்களில் இந்தியாவில் உள்ள சிறை அதிகாரிகள் சிறைவாசிகளிடம் கொடூரமாக நடந்து கொள்வதாக கூறப்படுகிறது.
சர்வதேச மனித உரிமைக் குழுக்களால் “மனித உரிமை காவலர்கள்” என்று அழைக்கப்படுபவர்கள், இது குறித்து கடுமையான விமர்சனங்களை முன்வைக்கின்றனர்.
முன்னதாக, இந்த மாத தொடக்கத்தில் மும்பை உயர் நீதிமன்றம், டலோஜா சிறையில் உள்ள சிறைவாசிகளின் தேவைகள் குறித்து பேசும்போது அதிகாரிகள் சற்று “மனிதத்தன்மையுடன்” நடந்து கொள்ளுமாறு கோரியது.
”சிறை அதிகாரிகளுக்கு நாம் பயிற்சி வழங்க வேண்டும். இம்மாதிரியான அடிப்படை தேவை உள்ள பொருட்களுக்கு எவ்வாறு அனுமதி மறுக்கப்படுகிறது? இதெல்லாம் மனிதத்தன்மை அடிப்படையில் பார்க்க வேண்டிய விஷயம்.,” என நீதிபதிகள் எஸ் எஸ் ஷிண்டே மற்றும் எம்.எஸ்.கார்னிக் தெரிவித்தனர்.
அந்த ”சிறிய பொருட்கள்” சிறையில் அடைக்கப்பட்ட ஆர்வலர் கெளதம் நவ்லாகாவின் கண்ணாடிகள். அவற்றுக்குதான் அனுமதி மறுக்கப்பட்டன.
நவ்லாகாவின் குடும்பத்தினர் ஊடகங்களிடம் அவரின் கண்ணாடி திருப்பட்டு விட்டது எனவும் புதிய கண்ணாடியை அனுப்பினால் அதை பெற அதிகாரிகள் மறுப்பதாகவும் தெரிவித்தனர். அதன் பிறகே நீதிபதிகள் இந்த கருத்தை வெளியிட்டனர்.
”அவரின் கண்ணாடி தொலைந்த மூன்று நாட்களுக்கு பின் நவம்பர் 30ஆம் தேதி அவர் என்னை தொடர்பு கொள்ள அனுமதி வழங்கப்பட்டது. அவருக்கு வயது 68. அவருக்கு அதிக பவர் லென்ஸ் கொண்ட கண்ணாடி தேவை. இல்லையேல் அவரால் சரியாக எதையும் பார்க்க முடியாது,” என்கிறார் கெளதம் நவ்லாகாவின் மனைவி சஹ்பா ஹுசைன்.
இந்தியாவில் மார்ச் மாதத்தில் பெருந்தொற்று தொடங்கியதிலிருந்து, சிறைக்கு குடும்பத்தினர் மற்றும் வழக்குரைஞர்கள் வர தடை செய்யப்பட்டது. சிறைவாசிகள் உறவினர்களின் பார்சல்களைப் பெறவும் அனுமதி இல்லை.
சிறை கண்காணிப்பு அதிகாரியிடம் தான் பேசியதாகவும், கண்ணாடி கிடைக்கும்படி அவர் உறுதியளித்ததாகவும் நவ்லாகா தன்னிடம் தெரிவித்தார் என்கிறார் ஹுசைன்.
டெல்லியில் வசிக்கும் இவர் புதிய கண்ணாடியை வாங்கி கடந்த டிசம்பர் மூன்றாம் தேதியன்று அனுப்பி வைத்தார்.
“மூன்று நாட்களுக்கு பிறகு நான் சோதனை செய்து பார்த்ததில் அந்த பார்சல் சிறையை சென்றடைந்து, அது மறுக்கப்பட்டு திரும்ப அனுப்பப்பட்டுள்ளது தெரிந்தது,” என்கிறார் ஹுசைன்.
நீதிபதிகள் ”மனிதநேயம்” குறித்து பேசிய பிறகும், சமூக ஊடகங்களில் பெரிதாக இது குறித்து கருத்துகள் பகிரப்பட்ட பிறகும்தான் நவ்லாகாவிற்கு புதிய கண்ணாடிகள் கிடைத்தது.
அரசு சாரா அமைப்பான ஜனநாயக உரிமைகளுக்கான மக்கள் யூனியனின் முன்னாள் செயலர் நவ்லாகா. அவர் தனது வாழ்நாள் முழுவதும் அடிப்படை உரிமைகளுக்காக போராடியவர். அவர் சர்வதேச அளவில் மதிக்கப்படுபவர்.
பீமா கோரேகான் வழக்கில் அவர் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் இருந்து சிறையில் உள்ளார்.
2018ஆம் ஆண்டு ஜனவரி ஒன்றாம் தேதி மகாராஷ்டிரா மாநிலத்தில் நடைபெற்ற பீமா கோரேகான் கிராமத்தில் நடைபெற்ற தலித் பேரணியில் சாதி வன்முறையை தூண்டிவிட்டதாக கடந்த இரண்டு வருடங்களில் சுமார் 16 ஆர்வலர்கள், கவிஞர்கள், வழக்குரைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவரும் தங்கள் மீது வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டை மறுக்கின்றனர்.
சிறையில் அடிப்படை வசதிகள் கொடுக்க மறுக்கப்படுவது நவ்லாகாவிற்கு மட்டுமல்ல.
சில தினங்களுக்கு முன், பீமா கோரேகான் வழக்கில் தொடர்புடையதாக கூறி கைது செய்யப்பட்ட ஆர்வலர் ஸ்டான் ஸ்வாமிக்கு ஸ்ட்ரா அல்லது உறிந்து குடிக்கும்படியான டம்பளரை அனுமதிக்க முடியாது என்று கூறப்பட்டது, இது குறித்தும் சமூக ஊடகத்தில் பெரிதாக பேசப்பட்டது.
83 வயதாகவும் ஸ்டான் ஸ்வாமிக்கு பார்கின்ஸ் நோய் உள்ளது. மேலும் அவருக்கு கை நடுக்கம் இருப்பதால் வழக்கமான கோப்பையில் தண்ணீரை சிந்தாமல் குடிக்க முடியாது என்று அவரின் வழக்குரைஞர்கள் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.

பட மூலாதாரம், PTI
இதுகுறித்து பலர் சமூக ஊடகத்தில் தங்களின் கோபத்தை வெளிப்படுத்தினர். டலோஜா ஜெயிலுக்கு சிப்பர் கப்பை அனுப்பி வைக்கும்படி சமூக வலைதளத்தில் பேசப்பட்டது.
#SippersForStan என்ற ஹாஷ்டேக் ட்விட்டரில் டிரண்டாகி, பலர் ஆன்லைனில் தாங்கள் வாங்கிய சிப்பர் பாட்டிலின் படத்தை பகிர்ந்து அதை சிறைக்கு அனுப்பி வைக்கப் போவதாக தெரிவித்தனர்.
ஆர்வலர் ஸ்வாமியின் வழக்குரைஞர்கள் நீதிமன்றத்திற்கு சென்ற மூன்று வாரங்களுக்கு பிறகு, சிறை அதிகாரிகள் அவருக்கு சிப்பர் பாட்டில் வழங்கியதாக தெரிவித்தனர்.
கடந்த மாதம் 80 வயது ஆர்வலர் வரவர ராவ், நீதிமன்றத்தின் தலையீட்டிற்கு பிறகு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார்.

பட மூலாதாரம், AFP
வரவர ராவுக்கு உடல்நிலை சரியில்லை என்றும், அவருக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப் பெறவில்லை என்றும், அவருக்கு செயற்கையாக சிறுநீரை வெளியேற்றும் ’கேத்தீடெர்’ மாற்றப்படவில்லை என்றும் அவரின் வழக்குரைஞர் இந்திரா ஜெய்சிங் பாம்பே உயர் நீதி மன்றத்தில் தெரிவித்தார். மேலும் போலீஸாரின் பிடியில் அவர் உயிரிழந்து விடுவார் என தான் அஞ்சுவதாகவும்,” அவர் தெரிவித்தார்.
ஜூலை மாதம் வரவர ராவிற்கு கோவிட் 19 தொற்று ஏற்பட்டது. அவரின் குடும்பம் அதுகுறித்த அவசர செய்தியாளர் சந்திப்பு ஒன்றை வைத்து, அதுகுறித்த அறிக்கை ஒன்றை கொடுத்தபின் தான் அவர் மருத்துவமனைக்கு அழைத்து சென்றார்.
”கடந்த ஐந்து ஆறு வருடங்களில், அரசுக்கு எதிரானவர்களை ஒடுக்கும் விதமாக, அரசியல் ஆர்வலர்கள் சட்டவிரோத செயல்பாடுகள் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவது அதிகரித்துள்ளது,“ என்கிறார் இந்திய குற்றவியல் சட்ட நிபுணரும், லிவ் லா வலைத்தளத்தின் நிறுவனருமான எம்ஏ. ரஷித்.
”பலர் மீது தேசத் துரோக குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. மேலும் ’தேசத்திற்கு எதிரானவர்கள்’ என்றும் கூறப்படுகிறார்கள். அவர்கள் விசாரிக்கப்பட்டு வந்தாலும், சிறையில் மோசமான நிலையில் பல வருடங்களாக தள்ளப்படும் கட்டாயத்திற்கு ஆளாகின்றனர், ” என்கிறார் ரஷித்.
சிறைவாசிகளுக்கு அரசமைப்பின்படி அடிப்படை உரிமைகள் வழங்கப்பட வேண்டும். மருத்துவ சிகிச்சை மறுக்கப்பட கூடாது. மேலும் அடிப்படை வசதிகளும் மறுக்கப்படக் கூடாது என்கிறார் ரஷித்.
”1979 ஒரு முக்கியத்துவமான தீர்ப்பு ஒன்றில் உயர் நீதிமன்ற நீதிபதி விஆர். கிருஷ்ணய்யர், சிறைவாசிகளுக்கும் மரியாதையுடன் வாழ்வதற்கான அனைத்து உரிமையும் உண்டு. அவர்களின் அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட கூடாது,” என்று அவர் தெரிவித்தார்.
”அப்போதிலிருந்து சிறைவாசிகளின் உரிமைகளை நிலைநாட்டும் பல தீர்ப்புகளை உச்ச நீதிமன்றமும், பிற நீதி மன்றங்களும் வழங்கியுள்ளன.”
ஆனால் சிறையில் நாட்களை கழித்தவர்கள் அங்கு மனித உரிமைகளுக்கு இடமில்லை என்று தெரிவித்துள்ளனர்.

சஃபூரா சர்கர் என்ற மாணவர் ஆர்வலர் கர்ப்பமாக இருந்தார். அவர் 74 நாட்களை டெல்லி திகார் சிறையில் கழித்தார், அங்கு சிறைவாசிகளுக்கு அடிப்படை வசதிகள் மறுப்படுவதாக என்னிடம் தெரிவித்தார்.
ஏப்ரல் மாதம் டெல்லியில் கலவரத்தை தூண்டியதாக அவர் கைது செய்யப்பட்டார். அவரின் கைது குறித்து சர்வதேச அளவில் கண்டனங்கள் எழுந்தன. அதன்பின் ஜூன் மாதம் அவர் பிணையில் விடுவிக்கப்பட்டார்.
“வெறும் இரண்டே மாற்று ஆடைகளை வைத்துக் கொண்டு வெறும் கால்களில் நான் சிறைக்குள் சென்றேன். ஷாம்பூ, சோப்பு, பற்பசை, பிரஷ் ஆகியவை கொண்ட பையை என்னுடன் எடுத்து வந்தேன். ஆனால் அதை கொண்டு செல்ல எனக்கு அனுமதி வழங்கவில்லை, மேலும் எனது ஷூவில் சிறிது ஹீல் இருந்ததால் அதற்கு அனுமதியில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது,” என்கிறார் சஃபூரா.
கோவிட் தொற்றை தடுக்க இந்தியாவில் கடுமையான கட்டுப்பாடுகள் வந்த சமயத்தில் அவர் கைது செய்யப்பட்டார்.
“என்னை யாரும் சந்திக்க அனுமதிக்கவில்லை. பார்சல் மற்றும் பணம் ஆகியவையும் மறுக்கப்பட்டன. 40 நாட்களாக வீட்டிற்கு அழைத்து பேசவும் அனுமதிக்கவில்லை. எனவே ஒவ்வொரு சிறிய விஷயங்களுக்கும் நான் பிற சிறைவாசிகளின் கருணையை நம்பிதான் இருந்தேன்,” என்கிறார் சஃபூரா.
சஃபூரா ஏப்ரல் மாதம் கைது செய்யப்படும்போது மூன்று மாதம் கர்ப்பமாக இருந்தார். அதன்பின் அவருக்கு சக சிறைவாசிகள் செருப்பு, உள்ளாடைகள், மற்றும் போர்வைகளை வழங்கினர்.
சஃபூராவின் வழக்குரைஞர் நீதிமன்றத்தில் மனு தொடுத்த பிறகு, அவருக்கு ஐந்து மாற்று ஆடைகள் அனுமதிக்கப்பட்டன.
பிப்ரவரி மாதம் டெல்லியில் நடந்த கலவரத்தில் 53 பேர் உயிரிழந்தனர். அதன்பின் பல மாணவ ஆர்வலர்கள் பெரும்பாலும் முஸ்லிம்கள் கைது செய்யப்பட்டனர். குற்றம் சாட்டப்பட்டவர்கள் தாங்கள் சிஏஏவுக்கு எதிராக மட்டுமே போராடியதாகவும், கலவரத்தில் தங்களுக்கு எந்த பங்கும் இல்லை என்றும் தெரிவித்தனர்.
இந்த கைதுகளுக்கு வழக்குரைஞர்கள், ஆர்வலர்கள், மற்றும் சர்வதே மனித உரிமை குழுக்கள் கண்டனம் தெரிவித்தனர்.
ஆனால் கைது செய்யப்பட்டவர்களின் ஜாமீன் மனுக்கள் மீண்டும் மீண்டும் மறுக்கப்பட்டன. அதேபோல அவர்களின் அடிப்படை தேவைகளுக்கும் நீதிமன்றங்களுக்கு செல்லும் நிலை ஏற்பட்டது.
கடந்த மாதம், குற்றம் சுமத்தப்பட்ட 15 ஆர்வலர்கள் தங்களுக்கு ஆடைகள், செருப்புகள் மறுக்கப்படுவதாக புகார் தெரிவித்தனர். அதன்பின் தானே சிறையை பார்வையிட நேரும் என சிறை அதிகாரிகளிடம் தெிரிவித்தார் நீதிபதி.
”நாங்கள் பிரச்னைகளுக்கு குரல் கொடுத்ததால் சிறை அதிகாரிகளுக்கு எங்களை பிடிக்கவில்லை.” என்கிறார் சஃபூரா.
ஒவ்வொரு வாரமும் புதிய விதிமுறைகளை கொண்டு வந்து எங்களை துன்புறுத்தினர் என்கிறார் சஃபூரா.
கோவிட் 19 கட்டுப்பாடுகள் நடைமுறையில் இருப்பதால் குடும்ப உறுப்பினர்களாலும் பெரிதாக எதுவும் செய்ய இயலவில்லை.. அவசரமாக நீதிமன்றத்தை நாடுவதுதான் அவர்களுக்கான ஒரே வழி. நவ்லாகா கண்ணாடி பெற அவரின் மனைவி நீதி மன்றத்தை நாடியது போல.
பிற செய்திகள்:
- நரகத்துக்கு வழி காட்டும் "கடன் செயலிகள்": பின்னணியில் இருப்பது சீனாவா?
- கிரிப்டோ கரன்சிக்கு இந்தியாவில் பெருகி வரும் திடீர் வரவேற்பு - ஏன் தெரியுமா?
- கொரோனா தடுப்பூசி போட நாளை ஒத்திகை - களப்பயிற்சிக்கு தயாராகும் மாநிலங்கள்
- டெல்லி குளிர் 1 டிகிரிக்கு சென்றது: 15 ஆண்டுகளில் இல்லாத நடுக்கம்
- உள் உறுப்புகள் சிதையாமல் கிடைத்தது 20 ஆயிரம் ஆண்டுகள் முன்பு இறந்த விலங்கின் உடல்
- பூர்வகுடிகள் வரலாற்றை பிரதிபலிக்கும் வகையில் தேசிய கீதத்தை மாற்றிய ஆஸ்திரேலியா
- மாதவிடாய் கால சானிட்டரி பேட்களின் 100 கோடி கழிவுகள் எங்கு செல்கின்றன?
- 2020இல் கொரோனாவால் இந்தியாவிலேயே அதிகம் உயிரிழந்த தமிழக மருத்துவர்கள்
- "ரஜினி அரசியலை கைவிட்டதால் தப்பித்தது தமிழ்நாடு" - இலங்கை தமிழர் தலைவர்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












