2020இல் கொரோனாவால் இந்தியாவிலேயே அதிகம் உயிரிழந்த தமிழக மருத்துவர்கள்

2020ஆம் ஆண்டில் கொரோனா வைரஸ் உலக அளவில் பரவி வரும் வேளையில், இதுவரை இந்தியாவில் மட்டும் அந்த பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டு 1,45,000க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். இந்த பட்டியலில் கொரோனா பெருந்தொற்றுக்கு எதிராக முன்களத்தில் பணியாற்றி உயிரை பறிகொடுத்த எண்ணற்ற மருத்துவர்களும், செவிலியர்களும் அடக்கம். இதில் இந்தியாவிலேயே அதிக அளவில் தமிழகத்தில் தான் 40க்கும் அதிகமான மருத்துவர்கள் உயிரிழந்துள்ளனர்.
கொரோனா பணிக்காலத்தில் குடும்பத்தையும் உறவுகளையும் வாரக்கணக்கில் பிரியும் நிலை, சிக்கலான சூழலில் ஆற்றும் சவாலான பணிகள், பிபிஇ ஆடையுடன் ஒவ்வொரு முறையும் கொரோனா வார்டுகளுக்கு சென்று வரும் அழுத்தம் என பல சவால்களை இந்த மருத்துவர்களும் மருத்துவ ஊழியர்களும் அன்றாடம் எதிர்கொள்கிறார்கள்.
இதன் காரணமாகவே கொரோனா வைரஸ் பரவலுக்கு எதிரான களப்பணியில் ஈடுபடும் மருத்துவம் மற்றும் சுகாதார ஊழியர்களுக்கு வைரஸ் தடுப்பூசி போடுவதில் உலக நாடுகள் முன்னுரிமை கொடுத்து வருகின்றன. ஆனால், இதிலும் மருத்துவர்களும் மருத்துவ ஊழியர்களும் பல்வேறு சவால்களை எதிர்கொள்கிறார்கள். தடுப்பூசி போட்டுக் கொண்ட பிறகும் அவர்கள் மீண்டும் கொரோனா பணியை ஆற்ற வேண்டும்.
இத்தகைய சூழலில்தான் கொரோனா வைரஸ் புதிய திரிபு பிரிட்டனில் வேகமாக பரவத் தொடங்கியதால், இந்தியா, சிங்கப்பூர், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உள்பட உலகின் பல நாடுகள் மீண்டும் கட்டுப்பாடுகளை கடுமையாக்கத் தொடங்கியிருக்கின்றன. இந்த புதிய திரிபு அதிக வீரியத்துடன் தாக்கும் வல்லமை கொண்டுள்ளதால், அதை அழிப்பதற்கான ஆய்வுப் பணிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளன.
கொரோனா அறிகுறி இருப்பவர்கள் வீட்டுத் தனிமையில் மருத்துவ உதவியை பெறலாம் அல்லது அந்த அறிகுறியுடன் மருத்துவமனைகளில் சேர்ந்து சிகிச்சை பெறலாம். எதிர்ப்புத்திறன் கூடியவர்கள் இரு வாரங்களில் வைரஸில் இருந்து மீண்டு வருகிறார்கள். ஆனால், வைரஸ் எதிர்ப்பு முன்களப் பணியாளர்களான மருத்துவர்களும் மருத்துவ ஊழியர்களும் மீண்டும், மீண்டும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நோயாளிகளை அணுகி சிகிச்சை தர வேண்டிய நிலையில் இருக்கிறார்கள். இவர்கள், கண்ணுக்குத்தெரிந்தே கொரோனா தொற்றும் அபாயத்தை எதிர்கொள்கிறார்கள்.
கொரோனா தொற்றால் நாடு முழுவதும் 155 சுகாதார ஊழியர்கள் இறந்துள்ளதாக மத்திய அரசு கடந்த நாடாளுமன்ற கூட்டத்தொடரின்போது தெரிவித்திருந்தது. அந்த 155 பேரில் 64 பேர் மருத்துவர்கள் என்று அரசு தரப்பு தெரிவித்தாலும், பல மதிப்பீடுகள் அந்த எண்ணிக்கையை விட அதிகமாக உள்ளதாகவே கூறுகின்றன.
நாடாளுமன்றத்தில் ஒரு கேள்விக்கு பதிலளித்த இந்திய சுகாதாரத் துறை இணை அமைச்சர் அஷ்வினி செளபே, உடல்நலம் ஒரு மாநில விவகாரம் என்றும், கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட சுகாதார ஊழியர்களின் பதிவுகளை மத்திய அரசு வைத்திருக்கவில்லை என்றும் கூறினார்.
இந்த ஆண்டு முழுவதும், கிட்டத்தட்ட முழு வசதிகள் இல்லாத நிலையில் , மருத்துவ ஊழியர்கள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சையளித்து வருவதாக தொடர்ச்சியான செய்திகள் வந்தன.
மேலும், இந்த தொற்றை தடுக்க தேவையான பொருட்கள், ஆரம்ப கட்டத்தில் மருத்துவ ஊழியர்களிடம் கிடைக்கவில்லை, பல இடங்களில் அவர்கள் எந்த விடுப்பும் இல்லாமல் நீண்ட காலம் தொடர்ந்து பணியாற்றினர்.
ஆனால் இத்தனைக்கும் நடுவே, நாட்டின் ஒவ்வொரு பகுதியிலிருந்தும் அவர்களின் துணிச்சலான சேவை பற்றிய கதைகள் வெளிவந்தன.
இத்தகைய சூழ்நிலையில், இந்த தொற்றை எதிர்கொண்டு உயிர் துறந்த மருத்துவ ஊழியர்களின் படங்களையும் பிபிசி சேகரித்துள்ளது. கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கும் பணியில் இருந்தபோது அவர்கள் உயிரை இழந்ததாக தெரிய வந்துள்ளது.
அந்த வகையில் புதிய வைரஸ் திரிபு, இந்த களப்பணியாளர்களுக்கு மிகுந்த சவால் நிறைந்ததாக மாறியிருக்கிறது.
2020ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் வரை இந்தியாவில் மட்டும் 500க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்துள்ளதாக இந்திய மருத்துவ சங்கத்தின் தரவு கூறுகிறது.
அதிலும் குறிப்பாக, இந்தியாவிலேயே அதிகபட்சமாக தமிழகத்தில் 40க்கும் அதிகமான மருத்துவர்கள் கோவிட்-19 நோய்த்தொற்று பாதிப்பால் உயிரிழந்துள்ளதாகவும், அதற்கடுத்தடுத்த இடங்களில் மகாராஷ்டிரா, குஜராத் ஆகிய மாநிலங்கள் உள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்தபோது, அதே வைரஸ் பாதிப்பால் உயிரிழந்த மருத்துவர்களுக்கு இந்த படத்தொகுப்பு அஞ்சலி செலுத்துகிறது.
இந்த பட்டியலில், இந்திய மருத்துவ சங்கத்தால் இதுவரை வெளியிடப்பட்ட கொரோனா வைரஸ் நோய்த்தொற்று பாதிப்பால் உயிரிழந்த 382 மருத்துவர்களின் பெயர்கள் மற்றும் புகைப்படங்கள் உள்ளன. மருத்துவர்களின் முழுமையான விவரங்கள் பதிவு செய்யப்பட்டவுடன் இவை புதுப்பிக்கப்படும்.
பிற செய்திகள்:
- யேமென் போர்: விமான நிலையத்தில் வெடிகுண்டு தாக்குதல் - 22 பேர் பலி
- "ரஜினி அரசியலை கைவிட்டதால் தப்பித்து பிழைத்தது தமிழ்நாடு"
- குரேஷியா நிலநடுக்கம்: 7 பேர் பலி, ஒரு நகரில் பாதி அழிந்தது
- 'சாகும் வரை அரசியலில் ஈடுபட மாட்டேன்': தமிழருவி மணியன்
- ரஜினி ரசிகர்கள்: "இதயத்தில் இடி இறங்கியுள்ளது"
- கொரோனா வைரஸ் இல்லை என மறுத்துவந்த ரஷ்ய சாமியார் கைது
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்



















































































































































































































