ரஜினி ரசிகர்கள்: "இதயத்தில் இடி இறங்கியுள்ளது" - கலங்கும் ரசிகர்கள்

ரஜினி

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், மு. ஹரிஹரன்
    • பதவி, பிபிசி தமிழுக்காக

தனது அரசியல் பிரவேசம் குறித்து நடிகர் ரஜினிகாந்த் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையால் அவரது ரசிகர்களும், ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளும் பரவலாக அதிருப்தியில் உள்ளனர். பெரும்பாலான நிர்வாகிகள் அதிருப்தியை வெளிக்காட்டாத நிலையில், ஒரு சிலர் ரஜினியின் அறிவிப்பு குறித்து வெளிப்படையாகவே தங்களது ஆதங்கத்தை பதிவு செய்து வருகின்றனர்.

ரஜினிகாந்த் வெளியிட்டுள்ள அறிவிப்பு, தனது இதயத்தில் இடியாய் இறங்கியுள்ளதாக தெரிவிக்கிறார் மதுரை மாநகர் மாவட்ட ரஜினி மக்கள் மன்ற துணை செயலாளர் அழகர்சாமி.

"1987 முதலே நான் ரஜினியின் தீவிர ரசிகராக இருந்து வருகிறேன். ஒவ்வொரு ஆண்டும் அவரது பிறந்தநாளில் ஆதரவற்றோருக்கு அன்னதானம் வழங்குவது, மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் செய்வது, ஏழை மாணவர்களுக்கு இலவசமாக நோட்டு புத்தகங்கள் மற்றும் பைகள் வழங்குவது என எனது சொந்த பணத்தை செலவு செய்து உதவிகள் செய்து வந்திருக்கிறேன். அதுமட்டுமல்ல, 2018இல் ரஜினி மக்கள் மன்றங்கள் உருவாக்கப்பட்டது முதல், தேர்தலை சந்திப்பதற்கான களப்பணிகளையும் செய்து வருகிறோம்."

"கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மன்ற நிர்வாகிகளும், ரசிகர்களும் நிதி திரட்டி நிவாரண உதவிகளை செய்தோம். கொரோனா பொதுமுடக்க காலத்தில் தினமும் இலவசமாக உணவு வழங்கினோம். இவ்வாறு குடும்பத்தினர் மற்றும் நண்பர்களின் விமர்சனங்களையும், தொழிலையும், சொந்த பணத்தையும் மறந்து அவருக்காக உழைத்திருக்கிறோம். இப்படி அவரின் தலைமையை மட்டுமே மனதில் வைத்துக்கொண்டு உழைத்த என்னைப் போன்றோருக்கு இந்த அறிவிப்பு விவரிக்க முடியாத வலியை ஏற்படுத்தியுள்ளது" என்கிறார் அழகர்சாமி.

"2017இல் தலைவரோடு சேர்ந்து புகைப்படம் எடுத்துக்கொண்டு தேர்தல் பணிகளை தொடங்கினோம். மன்றத்தில் நான் செய்த உதவிகளை கருத்தில்கொண்டு 2018இல் மன்றத்தில் பொறுப்பு வழங்கப்பட்டது. அன்று முதல் இப்போதுவரை மக்களை சந்தித்து, உதவிகளை செய்து வந்துள்ளோம். நவம்பர் மாதத்தில் அரசியல் வருகையை ரஜினி உறுதி செய்தததும், தேர்தல் பணிகளை மேலும் தீவிரமாக்கி சுமார் 80 சதவிகித பணிகளை முடித்து விட்டோம். இந்த சூழலில் அரசியலுக்கு வரவில்லை என அவர் கூறியிருப்பது, இதயத்தில் இடியாய் இறங்கியுள்ளது. அறிவிப்பு வந்ததும் வீட்டிற்குள் வந்து முடங்கிவிட்டேன். கடந்த 30 ஆண்டுகளாக இதே வலியைத்தான் அனுபவித்து வந்தோம். நவீன தொழில்நுட்பங்களின் மூலம், இருக்கும் இடத்திலிருந்தே கட்சி கூட்டங்களை பல அரசியல் தலைவர்கள் நடத்துகின்றனர். எனவே, ரஜினிகாந்த் இந்த முடிவை கண்டிப்பாக மறுபரிசீலனை செய்ய வேண்டும்" என கூறுகிறார் அழகர்சாமி.

இனிமேலாவது வேலையை பார்க்கணும்

அரசியல் கட்சி தொடங்கப்போவதில்லை என நடிகர் ரஜினிகாந்த் வெளியிட்டுள்ள அறிவிப்பால் விரக்தியடைந்துள்ளதாக தெரிவிக்கிறார் கோவை மாவட்ட ரஜினி மக்கள் மன்றத்தின் தெற்கு மண்டல செயற்குழு உறுப்பினர் சத்தியமூர்த்தி.

ரஜினி

"கடந்த 25 ஆண்டுகளாக ரஜினிகாந்தின் ரசிகனாக இருந்துள்ளேன். 2016 ஆம் ஆண்டு மன்றத்தில் பொறுப்பு வழங்கப்பட்டது. அன்று முதல் இன்று வரை மிகத்தீவிரமாக தேர்தல் பணிகளை மேற்கொண்டு வந்தேன். ரத்த தான முகாம், கொரோனா காலத்தில் நலத்திட்ட உதவிகள், குழந்தைகளுக்கான பள்ளிபடிப்பு ஆகியவற்றை நாங்களே நிதி திரட்டி உதவி செய்து வந்தோம். நாங்கள் செய்யும் பணிகளுக்காக அவரிடமிருந்து எந்த நிதி உதவியும் பெற்றதில்லை. மாற்று கட்சிகளின் எதிர்ப்புகளையும் தாண்டி, எந்தவித பதவி ஆசையும் இல்லாமல் ரஜினியை தமிழக முதல்வராக்க வேண்டும் என்ற குறிக்கோளோடு வேலை செய்து வந்த எங்களை ஏமாற்றும் வகையில் அவர் அறிவிப்பு வெளியிட்டுக்கிறார். இதை முன்னரே சொல்லியிருந்தால் எங்களின் உழைப்பும், நேரமும் வீணாகியிருக்காது."

"கடந்த 3 ஆண்டுகளாக அவரின் உத்தரவை மதித்து, எத்தனையோ பேர் எவ்வளவோ செலவு செய்து மக்களுக்காக உழைத்திருக்கிறோம். அத்தனை பேரையும் இன்று ஏமாற்றிவிட்டார். இதற்கு ஆரம்பமும், முடிவும் ரஜினி தான். ரசிகர்களை ஏமாற்றிவிட்டோம் என்ற எண்ணம் அவர் மனதில் என்றென்றும் உறுத்திக்கொண்டே இருக்கும்" என்கிறார் இவர்.

"இரண்டு ஆண்டுகளாக நான் செய்து வந்த வேலையை மறந்து மன்றத்திற்காக உழைத்திருக்கிறேன். சுமார் இருபது வார்டுகளில் ரஜினிக்காக பிரசாரங்களை செய்துள்ளேன். ஊழல் இல்லாத, நியாயமான ஆட்சி இப்போதாவது அமையும் என எதிர்பார்த்திருந்தேன். எதுவும் இல்லை என உறுதியாகிவிட்டது. ரஜினியின் ரசிகர்கள் பலருக்கு வயதாகிவிட்டது, அவரது முடிவை மறுபரிசீலனை செய்து அரசியலுக்கு வருவேன் என மீண்டும் அறிவித்தாலும் யாரும் இனிமேல் அவரின் பின்னால் போக மாட்டார்கள். என்னைப்போன்று பலரும் விரக்தியில் உள்ளனர். நான் வெளிப்படையாக பேசியதால் தொடர்ந்து மிரட்டல்கள் வருகின்றன. இது குறித்து காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ளேன். உடல்நலம் தான் ரஜினிக்கு முக்கியம். அதை நாங்களும் ஏற்றுக்கொள்கிறோம். இனிமேலாவது குடும்பத்தினரின் அறிவுரையை கேட்டு, மீண்டும் ஒழுங்காக வேலைக்கு செல்லவேண்டும் என முடிவு செய்துள்ளேன்." என தெரிவிக்கிறார் சத்தியமூர்த்தி.

ரஜினி

பட மூலாதாரம், Getty Images

எதிர்பார்க்காதவர்களுக்கு அதிருப்தியில்லை

ரஜினிகாந்திடம் இருந்து எதையும் எதிர்பார்க்காத ரசிகர்களுக்கு, இந்த அறிவிப்பால் அதிருப்தியில்லை என்கிறார் பொள்ளாச்சி பகுதி ரஜினி ரசிகர் மன்றத்தைச் சேர்ந்த பிரபு.

"அரசியல் கட்சியை தொடங்கலாம் என ரஜினிகாந்த் முடிவு செய்தபோதே, 'எதையுமே எதிர்பார்க்காதவர்கள் தான் எனக்கு தேவை' என அவர் உத்தரவிட்டார்.

நாங்கள் அவரிடமிருந்து எதையும் எதிர்பார்க்கவில்லை. அதனால், இந்த அறிவிப்பு எங்களை பாதிக்கவில்லை. பதவியா, உயிரா என கேட்டால் அவரின் உயிர்தான் முக்கியம் என நாங்கள் கூறுவோம். அந்த வகையில் அவர் எடுத்துள்ள முடிவு சரியானதாக தான் இருக்கும். வரும் நாட்களில் அவர் வழிகாட்டிய பாதையில் மக்களுக்கான எங்களது சேவைகளை, இன்னும் தீவிரமாக முன்னெடுத்து செல்வோம். அவர் உடல் ஆரோக்கியத்தோடு இருக்க வேண்டும் என்பதே எங்களின் ஆசை." என்கிறார் இவர்.

ரஜினிகாந்த் தனது அரசியல் வருகையை உறுதி செய்தபோது கோவையில் உள்ள ராகவேந்திரர் கோயிலில் இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் தலைமையில் ரஜினி ரசிகர்கள் சிறப்பு பூஜைகள் நடத்தினர். அப்போது பேசியவர் ரஜினி மக்கள் மன்றம் சார்பாக 234 தொகுதிகளிலும் இந்து மக்கள் கட்சியினர் பிரசாரம் செய்வார்கள் என தெரிவித்திருந்தார். இன்றைய அறிவிப்பு குறித்து கருத்து தெரிவித்த அவர், "ரஜினி முன்மொழிந்த ஆன்மிக அரசியலை நாங்கள் முன்னெடுப்போம்" என கூறுகிறார்.

ரஜினி

"ரஜினிகாந்தின் இந்த அறிவிப்பு உடல் நலனை கருத்தில் கொண்டு மட்டுமே முடிவு செய்யப்பட்டுள்ளது. அவர் மீது அன்பும் பாசமும் கொண்ட எங்களைப் போன்றோர், அவரது உடல்நலத்தை முக்கியமாக கருதுகிறோம். அந்த வகையில் அவரது முடிவை வரவேற்கிறோம். திராவிட அரசியலுக்கு எதிராக தமிழகம் முழுவதும் ஆன்மிக ஆரசியலை கொண்டு செல்வதில் ரஜினிகாந்தோடு சேர்ந்து பயணிப்போம் என ஆதரவு கூறியிருந்தோம். இப்போது அவர் அரசியலுக்கு தான் வரவில்லை என கூறியிருக்கிறார், அவரது கொள்கையில் எந்த மாற்றமுமில்லை. ஆன்மிக அரசியலுக்கான அவரது பணிகள் கண்டிப்பாக தொடரும். அவர் அரசியலுக்கு வரவில்லை என்றாலும் திராவிட அரசியலுக்கு மாற்றாக ஆன்மீக அரசியலை நாங்கள் முன்னெடுப்போம். அந்த வகையில் ரஜினியின் ஆசையை நிறைவேற்ற, ஆன்மிக அரசியலை முன்னெடுக்கும் கட்சியோடு நாங்களும் பயணிப்போம்" என தெரிவிக்கிறார் அர்ஜுன் சம்பத்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :