அதிமுக - பாஜக தமிழக சட்டமன்றத் தேர்தல் கூட்டணி கருத்தொற்றுமையுடன் தொடருகிறதா கட்டாயத்தால் நீடிக்கிறதா? - தமிழ்நாடு அரசியல்

பட மூலாதாரம், Pmo india twitter page
- எழுதியவர், பிரமிளா கிருஷ்ணன்
- பதவி, பிபிசி தமிழ்
அதிமுக-பாஜக கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் பற்றியும், அதிமுக கூட்டணி சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெறும்பட்சத்தில், ஆட்சி அமைப்பது பற்றியும் இரு தரப்பில் இருந்தும் கடந்த இரண்டு வாரங்களாக கட்சியின் மூத்த தலைவர்கள் வார்த்தைப் போரை நடத்தி வருகின்றனர்.
கடந்த அக்டோபர் மாதம் அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் பற்றிய சர்ச்சை எழுந்தபோது, ஒரு சில தினங்களில் உறுதியான முடிவு வெளியானது. தற்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமிதான் முதல்வர் வேட்பாளர் என்ற அறிவிப்பு வந்ததும், அதிமுகவில் சலசலப்பு ஏற்பட்டது.
அப்போது அந்த கட்சியில் துணை முதல்வராக உள்ள ஓ. பன்னீர்செல்வத்துக்கும் எடப்பாடி பழனிசாமிக்கும் இடையே யார் பெரியவர் என்பது குறித்த போட்டி நிலவுவதாக இருவரது ஆதரவாளர்களும் கருதினார்கள்.
அதற்கு உதாரணமாக, ஓ.பன்னீர்செல்வத்தை முதல்வராக சித்தரிக்கும் சுவரொட்டிகள் தேனி மாவட்டத்திலும், முதல்வர் இல்லம் அமைந்த சென்னை நகர பகுதியிலும் காணப்பட்டு சர்ச்சையானது. இரு தரப்பிலும் போட்டி கூட்டங்கள், அமைச்சர்களுடன் பேச்சுவார்த்தைகள் என விறுவிறுப்பாக நடந்தன.
இதன் பிறகு இருவருமே பொது மேடையில் தோன்றி, எடப்பாடி பழனிசாமியே முதல்வர் வேட்பாளர் என்பதை பன்னீர்செல்வம் வார்த்தைகளிலேயே வெளிப்படுத்திய காட்சிகள் அரங்கேறின.
அடுத்ததாக, நவம்பர் மாதத்தில் இந்திய உள்துறை அமைச்சரும், பாஜகவின் செல்வாக்கு மிகுந்த தலைவருமான அமித் ஷாவின் சென்னை வருகையின்போது, அதிமுக-பாஜக கூட்டணி பற்றிய அறிவிப்பும் வெளியானது.
ஆனால், ஒரு கட்டத்தில், அதிமுக - பாஜக கூட்டணி உறுதியானது என்ற பிம்பம் ஏற்பட்ட நேரத்தில், இரு தரப்பின் மூத்த தலைவர்கள் பலரும் முதல்வர் வேட்பாளர் பற்றியும் ஆட்சியில் கூட்டணி கட்சிகளின் பங்கு பற்றியும் விமர்சிக்கும் பாணியில் பேச தொடங்கினர்.

பட மூலாதாரம், Edappadi palaniswami facebook page
அதன் ஒரு பகுதியாக பாஜகவின் மாநில தலைவர் எல்.முருகன் சமீபத்தில் கட்சி கூட்டத்தில் பேசியபோது, வருகிற சட்டமன்றத் தேர்தலில் பாஜக சகோதரன், சகோதரிகள் சட்டமன்றத்தில் அமர்ந்தே தீருவார்கள், பாஜகவின் காலம், வருகிற ஆட்சி தேசிய ஜனநாயகக் கூட்டணியின் ஆட்சி என்பதை நிர்ணயம் செய்வோம் என்று பேசினார்.
இதேவேளை, 2021ஆம் ஆண்டில் நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலையொட்டி நடந்த கட்சியின் பிரசாரத்தை தொடங்கிய முதல் நாளில் பேசிய அதிமுகவின் துணை ஒருங்கிணைப்பாளர் கே பி முனுசாமி, "தேசிய கட்சிகளானாலும் சரி மாநில கட்சிகளாக இருந்தாலும் சரி அதிமுக தலைமையில்தான் ஆட்சி. கூட்டணி ஆட்சி என்கிற பேச்சுக்கே இடமில்லை. கூட்டணி ஆட்சி என்கிற எண்ணத்துடன் யாரும் வரத் தேவையில்லை. கடந்த 50 ஆண்டுகளாக திராவிட இயக்கங்கள்தான் தேசிய கட்சிகளை தமிழகத்திற்குள் நுழையவிடவில்லை. சிலர் சூழ்ச்சி செய்து உள்ளே வர பார்க்கின்றனர். இதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்," என்றார்.
இந்த கருத்து பாஜகவை தாக்குவது போல அமைந்துள்ளது என்ற கருத்து சமூக வலைதளங்களில் பரவியது. இதையடுத்து, முதல்வர் பழனிசாமியை அரசு தலைமை செயலகத்தில் முருகன் திங்கட்கிழமை சந்தித்தார் . ஆனால், எப்போதும் சந்திப்பு முடிந்ததும் செய்தியாளர்களிடம் பேசுவது போல அல்லாமல், கட்சி அலுவலகத்தில் செய்தியாளர் சந்திப்பை நடத்தினார் முருகன்.

சென்னை கமலாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்த முருகனிடம் ஆரம்பம் முதலே கூட்டணி தொடர்பான கேள்விகள் எழுப்பட்டன. ஆனால், தேசிய கல்வி கொள்கை பற்றியே முதல்வரிடம் பேசியதாகவும், அந்த ஆதரிக்கும் கையெழுத்து இயக்கத்தில் பெறப்பட்ட ஆதரவு கடிதங்களை முதல்வரிடம் சமர்ப்பித்ததாகவும் முருகன் தெரிவித்தார்.
கூட்டணி பற்றி செய்தியாளர்கள் மீண்டும் கேள்வி எழுப்பியபோது, விரைவில் கூட்டணி பற்றிய அறிவிப்பு வரும் என முடித்துக்கொண்டு, பிற கேள்விகளுக்கு தற்போதைக்கு பதில் தர முடியாது என்று பதிலளித்தார்.
இதனால் அதிமுக-பாஜக இடையே பனிப்போர் நிலவுகிறதா என்ற கேள்வியுடன் இரு தரப்பினரிடமும் பிபிசி தமிழ் பேசியது.
கூட்டணி பற்றி புதிய அறிவிப்புகள் வருவதற்கு வாய்ப்புள்ளதா என பாஜகவின் செய்தி தொடர்பாளர் நாராயணனிடம் பேசியபோது, ''முதல்வர் வேட்பாளர் பற்றிய சர்ச்சை என்ற ஒன்று ஏற்படவில்லை. பல இடங்களில் ஊடகத்தின் கேள்விகளுக்கு சொல்லப்படும் பதில்களை ஒரு சிலர் மிகைப்படுத்துகிறார்கள். அதிமுக எப்படி அதிகாரப்பூர்வ கூட்டங்களை நடத்தி, முதல்வர் வேட்பாளரை அறிவித்ததோ, அதேபோல, பாஜகவும் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட நேரம் தேவை. இதில் எங்களுக்கு எந்த குழப்பமும் இல்லை,''என்றார்.
இரண்டு கட்சியிலும் மூத்த தலைவர்கள் விமர்சன பார்வையுடன் பேசுவது குறித்து கேட்டபோது, ''அதிமுகவைச் சேர்ந்த தலைவர்களான முனுசாமி, ஜெயகுமார் போன்றவர்கள் பேசுவதை அவர்களின் சொந்த கருத்தாகவே பார்க்கிறோம். எங்கள் கட்சி தலைவர்கள், அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும்வரை யாருடைய பெயரையும் சொல்ல மாட்டார்கள். இதனை சர்ச்சையாக ஏன் பார்க்கிறீர்கள்,''என்கிறார்.
மேலும் அவர்,''அக்டோபர் மாதம் அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் அறிவிப்பு வந்ததும், பாஜக தலைவர் முருகன் வாழ்த்து தெரிவித்தார். இரண்டு கட்சிகளுக்கும் இடையில் நல்ல உறவு உள்ளது. கூட்டணி பலமாக உள்ளது,''என்றும் கூறினார்.
முதல்வர் வேட்பாளர் பற்றி பாஜகவினர் முன்வைக்கும் கருத்துகள் பற்றி அதிமுக அமைச்சர் ஜெயகுமாரிடம் கேட்டபோது, ''எங்கள் கட்சியின் வேட்பாளரை நாங்கள் அறிவித்துவிட்டோம். எங்கள் வேட்பாளரை ஏற்றுக்கொள்பவர்கள்தான் எங்கள் கூட்டணியில் இருப்பார்கள். கூட்டணி ஆட்சி என்பதற்கு வாய்ப்பில்லை. எங்களுடன் கூட்டணி வைக்கும் கட்சிகள், எங்கள் கட்சி தலைமை எடுக்கும் முடிவுகளை ஏற்க வேண்டும். அப்படிப்பட்டவர்கள் தான் கூட்டணியில் நிலைக்க முடியும்,'' என்றார்.
மேலும், அதிமுக முன்னதாகவே முதல்வர் வேட்பாளர் பற்றிய அறிவிப்பை வெளியிட்டுள்ளதால், அது குறித்து மீண்டும் பேசுவதற்கும், ஆலோசனை செய்வதற்கும் அவசியம் இல்லை என்றார்.
''இந்த விஷயத்தில் எங்களின் நிலைப்பாடு தெளிவாக உள்ளது. இதில் மீண்டும் ஆலோசனை செய்வதில் பயன் இல்லை,'' என்றும் தெளிவாகப் பேசினார் அமைச்சர் ஜெயகுமார்.

பட மூலாதாரம், Getty Images
இரண்டு கட்சிகளும் வெளியிடும் கருத்துகள் தேர்தல் நேரத்தில் கூட்டணியை பாதிக்குமா என மூத்த பத்திரிகையாளர் ப்ரியனிடம் கேட்டோம்.
''முதல்வர் பழனிசாமியை, பாஜக தலைவர் முருகன் சந்தித்தபோது, அதிமுக தலைவர்கள் ஏன் விமர்சிக்கும் வகையில் பேசுகிறார்கள் என கேள்வி எழுப்ப வாய்ப்பில்லை. ஏனெனில், முருகன் மற்றும் அவரது கட்சியை சேர்ந்த தலைவர்கள் இதற்கு முன்னதாக வெளியிட்ட கருத்துகள் பற்றி பழனிசாமி கேள்வி எழுப்புவதற்கு அது ஒரு வாய்ப்பாக அமைந்திருக்கும். அதனால் தார்மீகமாக, விமர்சன கருத்துகள் வேண்டாம் என பேசியிருக்கலாம். அதிமுக அல்லது பாஜகவின் தேசிய தலைவர்கள் என இரண்டு கட்சிகளிலும் தலைமை பொறுப்பில் இருப்பவர்கள் விமர்சனம் செய்யவில்லை. அந்தந்த கட்சியில், மூத்த தலைவர்கள் பேசுவதால், இரண்டு கட்சியினரும், தங்களது கட்சி பலம் பொருந்தியது என காட்டிக்கொளவதற்காக இந்த சொற்போரை நடக்கலாம். இரண்டு கட்சிக்கும் கூட்டணியாக இருப்பதைத் தவிர வேறு வழி இல்லை,''என்கிறார் அவர்.
அதிமுக-பாஜக கூட்டணி தேர்தலில் நீடிப்பதில் எந்த சந்தேகமும் இல்லை என கூறிய ப்ரியன், ''மத்தியில் உள்ள பலத்தை தமிழக பாஜக பயன்படுத்துகிறது. அதேபோல, மாநிலத்தில் உள்ள பலத்தை அதிமுக வெளிப்படுத்துகிறது என்றுதான் இந்த சர்ச்சையை பார்க்கமுடியும். கூட்டணியில் அதிக சீட் ஒதுக்க வேண்டும் என பாஜக எதிர்பார்க்கிறது. தாங்கள் முடிவு செய்த எண்ணிக்கையை, பாஜக ஏற்கவேண்டும் என அதிமுக எண்ணுகிறது,''என்கிறார் ப்ரியன்.
பிற செய்திகள்:
- கொரோனா வைரஸ்: தடுப்பூசி, பக்க விளைவுகள் குறித்த முக்கிய தகவல்கள்
- 'அர்னாப் கோஸ்வாமி கொடுத்த லஞ்சத்தில் வாங்கிய 3 கிலோ வெள்ளி' - மும்பை காவல்துறை
- கொரோனா புதிய திரிபு: மாநில அரசுகளுக்கு இந்திய உள்துறை புதிய உத்தரவு
- இந்தியாவில் 16 லட்சம் உயிர்களை பலி வாங்கிய காற்று மாசு - நம்மை தற்காத்துக் கொள்வது எப்படி?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












