தமிழகத்தில் அமித் ஷா: அரசு விழா அரசியல் விழாவானது ஏன்? - அதிமுக - பாஜக கூட்டணி மீது விமர்சனம்

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், பிரமிளா கிருஷ்ணன்
- பதவி, பிபிசி தமிழ்
இந்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தமிழகத்தில் மெட்ரோ ரயில் உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டுவதற்கு அழைக்கப்பட்டாலும், அரசு விழாவை அரசியல் நிகழ்வாக அதிமுக மாற்றிவிட்டதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.
அமித் ஷா சென்னை விமான நிலையம் வந்ததும், அவரை வரவேற்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நேரடியாக சென்றது தொடங்கி, வளர்ச்சி பணிகள் பற்றிய புள்ளிவிவரங்களோடு நிறுத்தாமல், சட்டமன்ற தேர்தல் கூட்டணி பற்றி அறிவித்து அரசியல் கூட்டமாக அரசு விழாவை மாற்றிவிட்டார்கள் என அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.
மூத்த பத்திரிகையாளர்கள் மாலன் மற்றும் ஆர். கே. ராதாகிருஷ்ணன் ஆகியோரிடம் இதுகுறித்து பேசினோம்.
விமான நிலையத்தில் மத்திய அமைச்சர் ஒருவரை முதல்வர் மற்றும் துணை முதல்வர் நேரில் சென்று வரவேற்கவேண்டும் என்ற நிர்ப்பந்தம் இல்லை. பிரதமர் வந்தால், இருவரும் நேரில் வந்து வரவேற்பது மரபு. ஆனால் அமித் ஷாவுக்கு கொடுக்கப்பட்ட வரவேற்பு, அவர்களின் தனிப்பட்ட விவகாரம் என்று மக்கள் எடுத்துக்கொள்ளமாட்டார்கள் என்கிறார் மாலன்.
''அமித் ஷா விமானத்தில் இருந்து வந்ததும் காரில் செல்லாமல் சென்னை நகரத்தின் விமான நிலையத்தின் முக்கிய சாலையில் நடந்து வந்து, பாஜக தொண்டர்களை உற்சாகப்படுத்தியது திட்டமிட்டு நடத்தப்பட்ட காட்சியாகதான் பார்க்கமுடியும். பாஜகவுக்கு தற்போது கிராம அளவில் தொண்டர்கள் இருக்கிறார்கள். அவர்களை உற்சாகப்படுத்த அமித் ஷா இந்த முடிவை எடுத்திருக்கலாம். ஆனால் தேர்தலுக்கு தயாராகிவிட்டோம் என்பதை உணர்த்த இந்த நாடகம் நடந்துள்ளது,'' என்கிறார் அவர்.
அமித் ஷா தொடங்கிவைத்த திட்டங்கள் எதுவும் நேரடியாக அவரது அமைச்சகத்தின் கீழ் வரவில்லை என்று சுட்டிக்காட்டிய மாலன், ''மெட்ரோ ரயில் திட்டம் ரயில்வே அமைச்சர் வந்து தொடங்கிவைக்கலாம், நீர்தேக்கம் திட்டத்திற்கு நீர்வள மேம்பாட்டுக்கான தனி அமைச்சர் இருக்கிறார், அவர் வந்திருக்கலாம். அமித் ஷாவின் நேரடி கட்டுப்பாட்டில் இருக்கும் காவல்துறை அல்லது சட்டம் ஒழுங்கு தொடர்பான எந்த திட்டமும் இடம்பெறாமல், வளர்ச்சி பணிகளை இவர் வந்து அடிக்கல் நாட்டியது ஏன் என்ற கேள்வி எழுகிறது. தமிழக அரசு இவரை ஏன் அழைத்தது என்பதையும் மக்கள் யோசிப்பார்கள்,'' என்கிறார்.

பட மூலாதாரம், Getty Images
அரசு விழாவில் துணை முதல்வர், முதல்வர், உள்துறை அமைச்சர் என மூவருமே ஒரு சில புள்ளிவிவரங்களை சொல்லிவிட்டு, அரசியல் பேசியிருக்கிறார்கள். இந்த கூட்டத்தை தனிப்பட்ட கூட்டமாக நடத்தியிருக்கலாம் என்கிறார் மாலன். ''அரசு விழாவில் சட்டமன்ற தேர்தல் கூட்டணி பற்றி உறுதியாக மூவரும் சொல்லிவிட்டார்கள். அதாவது, தேர்தல் பிரசாரத்தை தொடங்குவதற்கு இந்த மேடை பயன்படுத்தப்பட்டுவிட்டது. அதோடு, தமிழக பாஜகவுடன் பேசுவதற்கு பதிலாக அமித் ஷா இருக்கும்போது கூட்டணி பற்றி அறிவிக்கப்பட்டுள்ளதால், அதிமுகவினர் தங்களுக்கு டெல்லியில் உள்ளவர்களுடன் நேரடியாக பேசமுடியும் என்பதை உணர்த்தும் விதமாக நடந்துகொண்டர்கள் என்றே சொல்லலாம்,'' என்கிறார் மாலன்.
அதிமுக-பாஜக என இரண்டு கட்சிகளும் மக்களின் வரிப்பணத்தில் அரசியல் நாடகத்தை நடத்திவிட்டார்கள் என விமர்சிக்கிறார் ஆர். கே. ராதாகிருஷ்ணன். ''அதிமுகவும் பாஜகவும் கூட்டணி கட்சி. ஆனால் அரசு விழாவாக ஒரு விழாவை நடத்தும்போது, எதிர்க் கட்சிகளை விமர்சிப்பது, தேர்தல் கூட்டணி பற்றி அறிவிப்பது என அரசியல் கூட்டமாக அடிக்கல்நாட்டு விழாவை மாற்றிவிட்டார்கள். இவர்கள் அரசியல் நாடகத்திற்கு மக்களின் வரிப்பணத்தை ஏன் பயன்படுத்தினார்கள். அவர்களின் அரசியல் அலுவலகத்தில் இந்த விழாவை நடத்தியிருக்கலாம். அதிலும் குறிப்பாக, எதிர்க் கட்சியை விமர்சிப்பதற்கும், இரு கட்சிகளின் பலம் குறித்தும் பேசுவதற்கும் இவர்கள் கட்சி சார்பாக கூட்டணி மாநாடு நடத்தியிருக்கலாம். வளர்ச்சி பணிகள் பற்றிய விளக்கங்களை முன்வைப்பதை விட, அரசியல் பேசினார்கள் என்பது வெளிப்படையாக தெரிந்துவிட்டது. இந்த கூட்டமே இரண்டு கட்சிகள் மீதும் அதிருப்தி ஏற்படுத்துவதற்கு முதல்படியாக அமைந்துவிட்டது,''என்கிறார் ராதாகிருஷ்ணன்.

பட மூலாதாரம், @AmitShah
திமுகவின் சாதனை பட்டியலை கேட்ட அமித் ஷா, திமுக வாரிசு அரசியல் செய்வது பற்றி விமர்சித்தது தமிழகத்தில் எடுபடாது என்கிறார் ராதாகிருஷ்ணன். ''வாரிசு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைப்பது பற்றி அமித் ஷா பேசுகிறார். அமித் ஷாவின் மகன் ஜேய் ஷா அரசியல் வாரிசு இல்லையா என தமிழக மக்கள் கேள்விகேட்பார்கள். அதைவிட,ஜேய் ஷா கோலோச்சிய கிரிக்கெட் வீரர் இல்லை, நிர்வாக நிபுணரும் இல்லை. அவர் எப்படி இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் செயலாளர் ஆனார் என்பது அனைவரும் அறிந்த கதை. தமிழர்கள் கிரிக்கெட் விரும்பிகள் என்பதால், வாரிசு அரசியல் பற்றி இவர் பேசுவது எடுபடாது,''என்கிறார் ராதாகிருஷ்ணன்.
பாஜக அரசாங்கம் இலங்கை தமிழர்களுக்கு 50 லட்சம் வீடுகள் கட்டும் திட்டத்தில் முனைப்புடன் இருப்பதாக அமித் ஷா தெரிவித்த கருத்து முற்றிலும் தவறானது என்று கூறிய ராதாகிருஷ்ணன், அமித் ஷா தெரியாமல் சொன்னாரா அல்லது வேண்டுமென்றே சொன்னாரா என்று மக்கள் யோசிப்பார்கள் என்கிறார்.
''50,000 வீடுகள் கட்டிக்கொடுப்பதாக இந்திய அரசாங்கம் ஒப்புக்கொண்டது. அந்த 50,000 வீடுகள் இன்னும் கட்டிமுடிக்கப்படவில்லை. ஆனால் 50 லட்சம் வீடுகள் கட்டும் திட்டம் செயல்பாட்டில் உள்ளது என்கிறார் அமித் ஷா. பொதுவாக பாஜக தலைவர்கள் அளிக்கும் புள்ளிவிவரங்கள் பல நேரத்தில் பொய்யானவை என இதற்கு முந்தைய காலத்தில் தெரியவந்துள்ளது. அதனால், இந்த 50 லட்சம் வீடுகள் என்பதை தெரியாமல் சொன்னாரா? அல்லது வேண்டுமென்றே சொன்னாரா என விளங்கவில்லை,'' என்கிறார் ராதாகிருஷ்ணன்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :












