இலங்கையில் உருவாகியுள்ள காற்று அழுத்த தாழ்வு மண்டலம்: தமிழகத்திற்கு என்ன பாதிப்பு?
(இன்றைய நாளில் உலக அளவிலும், இந்தியா மற்றும் தமிழக அளவிலும் நடந்த முக்கிய நிகழ்வுகளை இங்கே தொகுத்து வழங்குகிறோம்.)

பட மூலாதாரம், Getty Images
இலங்கையில், தென் கிழக்கு வங்காள விரிகுடா பகுதியில் காணப்பட்ட காற்று சுற்றோட்டம், தற்போது காற்று அழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்துள்ளதாக இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவிக்கின்றது.
எதிர்வரும் 24 முதல் 48 மணித்தியாலங்களில் குறித்த காற்று அழுத்த தாழ்வு மண்டலம் மேலும் வலுவடையும் என வளிமண்டலவியல் திணைக்களம் இன்று மாலை வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
இவ்வாறு ஏற்பட்ட காற்று அழுத்த தாழ்வு மண்டலம் மேற்கு மற்றும் வட மேற்கு திசையை நோக்கி நகர்வதுடன், எதிர்வரும் 24ஆம் தேதி வடகிழக்கு கரையோர பகுதியை அண்மிக்கும் எனவும் திணைக்களம் தெரிவிக்கின்றது.
இந்த காற்று அழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக எதிர்வரும் 24 மணித்தியாலங்களில் வடக்கு மற்றும் கிழக்கு ஆழ்கடல் மற்றும் கரையோர பகுதிகளில் கடும் மழையுடனான வானிலை நிலவும் என கூறப்பட்டுள்ளது.
மழையுடனான வானிலை நிலவும் சந்தர்ப்பங்களில் காற்றின் வேகம், 50 முதல் 60 கிலோமீட்டர் வரை அதிகரித்து வீசும் என திணைக்களம் தெரிவிக்கின்றது.
இவ்வாறான சந்தர்ப்பங்களில் கடல் அலையின் வேகம் அதிகரிப்பதுடன், எதிர்வரும் நாட்களில் காற்றின் வேகம் மேலும் அதிகரிக்கும் சாத்தியம் காணப்படுவதாக திணைக்களம் கூறுகின்றது.
எதிர்வரும் 23ஆம் தேதி முதல் 25ஆம் தேதி வரையான காலம் வரை வடக்கு, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் 150 மில்லிமீட்டருக்கும் அதிகமான மழை பொழிவு பதிவாகும் என வளிமண்டலவியல் திணைக்களம் கூறியுள்ளது
இந்த காலப் பகுதியில் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கடலுக்குள் சென்றுள்ள மீனவர்களை மீண்டும் கரைக்கு விரைவில் வருகைத் தருமாறும் அறிவுறுத்தல் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, வடக்கு, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலுள்ள மக்கள் எச்சரிக்கையுடன் செயற்பட வேண்டும் என திணைக்களம் கூறுகின்றது.
குறித்த காற்று அழுத்த தாழ்வு மண்டலம் நிலைமையானது, எதிர்வரும் நாட்களில் தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி கரையோரத்தை அடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இதேவேளை, தென்மேற்கு அரபிக் கடல் பிராந்தியத்திலும், ஒரு காற்று அழுத்த தாழ்வு மண்டலம் உருவாகியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவிக்கின்றது.
`7.5 சதவீத உள் இட ஒதுக்கீடு பெற்ற மாணவர்களின் கட்டணத்தை அரசே ஏற்கும்`

பட மூலாதாரம், Getty Images
தனியார் மருத்துவக் கல்லூரிகளில் 7.5 சதவீத உள் ஒதுக்கீடு மூலம் இடம் பெற்ற அரசுப் பள்ளி மாணவர்களின் கல்வி கட்டணத்தை அரசே செலுத்தும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
முன்னதாக "தனியார் மருத்துவக் கல்லூரிகளில் இடம் ஒதுக்கப்பட்டுள்ள அரசுப்பள்ளி மாணவர்கள் கட்டணம் கண்டு பரிதவிக்கிறார்கள். அவர்களின் மருத்துவக் கனவு அணையாது! இந்தக் கல்வியாண்டில் தனியார் கல்லூரிகளில் சேரும் அரசுப்பள்ளி மாணவர்களின் கல்விக் கட்டணத்தை மாணவர் நலன் காக்கும் திமுக ஏற்கும்," என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் நீட் தேர்வில் 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு பெறும் மாணவர்களின் கல்விக் கட்டணம், விடுதி கட்டணம் ஆகியவற்றை அரசே ஏற்கும் என தமிழக முதல்வர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து முதல்வர் பழனிசாமி வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழக அரசு மாணவர்களுக்குக் கட்டணம் செலுத்துவது தொடர்பாக ஏற்கனவே அறிவிப்பு கொடுத்துவிட்டதாகத் தெரிவித்துள்ளார்.
முதல்வரின் அறிவிப்பின்படி, தமிழக அரசு கொண்டுவந்துள்ள சிறப்புச் சட்டத்தின்கீழ், மருத்துவ இடங்கள் ஒதுக்கீடு செய்யும்போது அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5இட ஒதுக்கீடு தரப்படுவதால், இந்த ஆண்டு 300க்கும் மேற்பட்ட மாணவர்கள் மருத்துவம் பயிலவுள்ளனர்.
அரசுப் பள்ளிகள், மாநகராட்சி பள்ளிகள், நகராட்சி பள்ளிகள், ஆதிதிராவிடர், பழங்குடியினர் நலப் பள்ளிகள், கள்ளர் சீர்மரபினப் பள்ளிகள், வனத் துறை பள்ளிகள் ஆகிய மாணவர்களின் ஏழ்மை நிலை மற்றும் பொருளாதார சூழ்நிலையினை கருத்தில் கொண்டு, அவர்களுக்குக் கல்வி கட்டணம் மற்றும் இதர செலவினங்களால் சுமை ஏதும் ஏற்படாத வண்ணம், இச்செலவினங்களை வழங்குவதற்காக கல்வி உதவித் தொகை மற்றும் இதர கல்வி உதவித் தொகை திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படும் என இரண்டு நாட்களுக்கு முன்னதாக அறிவித்துள்ளதை அறிக்கையில் முதல்வர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அந்த அறிவிப்பினை செயல்படுத்தும் விதமாக, மருத்துவக் கல்லூரிகள் மற்றும் பல்மருத்துவ கல்லூரிகளில் சேர ஆணை பெற்றுள்ள அனைத்து அரசுப்பள்ளி மாணாக்கர்களின் கல்விக் கட்டணத்தை உதவித்தொகை அனுமதி வரும் வரை காத்திராமல், ஊடனடியாக செலுத்தும் விதமாக, தமிழ்நாடு மருத்துவ சேவை கழகத்தில் ஒரு சுழல் நிதி உருவாக்கப்பட உள்ளது என முதல்வர் தெரிவித்துள்ளார்.
அந்நிதியில் இருந்து மாணாக்கர்களுக்கான கல்வி, விடுதி கட்டணங்கள் போன்றவற்றை அரசே நேரடியாக கல்லூரி நிர்வாகத்திற்கு செலுத்தும் என்று தெரிவித்துள்ளார்.
சென்னை வந்தார் அமித் ஷா: தமிழக முதல்வர், துணை முதல்வர் வரவேற்பு

பட மூலாதாரம், Getty Images
மத்திய உள்துறை அமைச்சரும் பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவருமான அமித் ஷா பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்ட சென்னை வந்துள்ளார்.
விமான நிலையத்தில் அவரை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் மற்றும் அமைச்சர்கள் வரவேற்றனர்.
அமித் ஷாவின் தமிழக பயணத்தையொட்டி, அவரின் வருகைக்கு முன்னரே GoBackAmitShah எனும் ஹேஷ்டேக், ட்விட்டரில் இந்திய அளவிலான ட்ரெண்டிங் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளது.
அவருக்கு ஆதரவாக TNWelcomesAmitShah என்ற ஹேஷ்டேகிலும் ட்விட்டரில் பதிவிடப்பட்டன.
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் ஆகியோருடன் அரசு விழாக்களிலும், பாஜகவினருடன் எதிர்வரும் தமிழகச் சட்டமன்றத் தேர்தல் குறித்த ஆலோசனை கூட்டங்களிலும் அமிஷ் ஷா கலந்துகொள்வார் எனக் கூறப்பட்டுள்ளது.
பிஃபிசர், பயோஎன்டெக் அமெரிக்காவின் அனுமதிக்கு விண்ணப்பம்

பட மூலாதாரம், EPA
அமெரிக்காவில், தங்கள் கொரோனா தடுப்பு மருந்தின் அவசர பயன்பாட்டுக்கு அனுமதி கோரி பிஃபிசர் மற்றும் பயோஎன்டெக் நேற்று (20 நவம்பர் 2020, வெள்ளிக்கிழமை), விண்ணப்பித்து இருக்கின்றன.
இந்த மருந்தை பயன்பாட்டுக்கு அனுமதிப்பது பாதுகாப்பானது தானா என்பதை தீர்மானிப்பது, அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து கழகம் (எஃப்.டி.ஏ) என்ற அமைப்பின் பணி.
இந்த எஃப்.டி.ஏ அமைப்பு, இந்த மருந்தைக் குறித்து முழுமையாக படிக்க எவ்வளவு காலம் எடுத்துக் கொள்ளும் என்று தெளிவாகத் தெரியவில்லை. இருப்பினும், இந்த மருந்தை, அமெரிக்க அரசு, வரும் டிசம்பர் மாதத்தின் முதல் பாதிக்குள் அனுமதிக்கலாம்.
இந்த மருந்தின் மேம்பட்ட சோதனையில் இருந்து கிடைத்த தரவுகள், இந்த மருந்து, 65 வயதுக்கு மேற்பட்ட 94% பேரைப் பாதுகாக்கிறது எனக் காட்டுகின்றன.
பிரிட்டன், ஏற்கனவே இந்த மருந்தை 40 மில்லியன் டோஸ் முன் கூட்டி ஆர்டர் செய்து இருக்கிறது. இந்த ஆண்டின் இறுதிக்குள் 10 மில்லியன் டோஸ் மருந்து வந்து சேரும்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:












