IND vs AUS 2வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி: அபார வெற்றிபெற்ற இந்தியா; சாதனை படைத்த அஸ்வின்

IND vs AUS 2வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி

பட மூலாதாரம், Quinn Rooney

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மெல்பர்னில் நடைபெற்று வந்த இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி எட்டு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றுள்ளது.

இரண்டாவது இன்னிங்சில் ஆஸ்திரேலிய அணியை வெல்லத் தேவையான 70 ரன்கள் என்னும் இலக்கை இரண்டு விக்கெட்டுகளை மட்டுமே இழந்து இந்திய அணி வெற்றியை தனதாக்கியுள்ளது.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் தோல்வியடைந்திருந்த இந்திய அணி, இந்த முறை தொடக்கம் முதலே பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என இரண்டிலுமே ஆதிக்கம் செலுத்தி வந்தது.

இரண்டாவது போட்டியில் இந்தியா வென்றுள்ளதால், நான்கு போட்டிகள் கொண்ட இந்த தொடர் தற்போது 1-1 என்று சமநிலையை எட்டியுள்ளது.

வெற்றி சாத்தியமானது எப்படி?

IND vs AUS 2வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி

பட மூலாதாரம், Quinn Rooney

இரண்டாம் டெஸ்ட் போட்டியின் நான்காம் நாள் ஆட்டம் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை தொடங்கியது. இந்திய அணிக்கு எதிரான இரண்டாவது இன்னிங்ஸில் ஆஸ்திரேலிய அணி 200 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆட்டமிழந்தது. இந்திய அணியின் சார்பில் முகமது சிராஜ் 3 விக்கெட்டுகளையும் அஸ்வின், ஜடேஜா, பும்ரா ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

இதையடுத்து 70 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் மயங்க் அகர்வால் ஐந்து ரன்களே அடித்த நிலையில், மிட்சல் ஸ்டார்க் பந்துவீச்சில் டிம் பைனிடம் கேட்சானார்.

புஜாராவும் மூன்று ரன்களில் அவுட்டாக, மறுமுனையில் நிதானமான ஆட்டத்தை ஷூப்மன் கில்லும், அடுத்து களமிறங்கிய கேப்டன் ரஹானேவும் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்த இந்திய அணி 15.5 ஓவர்களில் இரண்டு விக்கெட்டுகளை இழந்து 70 ரன்கள் என்ற இலக்கை எட்டி வெற்றிபெற்றது.

ஷூப்மன் 36 ரன்களுடனும், ரஹானே 27 ரன்களுடனும் கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். முதல் இன்னிங்சில் இந்திய அணியின் வலுவான ரன் குவிப்புக்கு தனது சதத்தின் மூலம் பங்களித்ததோடு இரண்டாவது இன்னிங்சிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரஹானே ஆட்டநாயகன் விருதை தட்டிச்சென்றார்.

ஜடேஜா

பட மூலாதாரம், Quinn Rooney/Getty Images

வரலாறு படைத்த அஸ்வின்

முந்தைய போட்டியில் அடைந்த தோல்வியிலிருந்து இந்திய அணி மீண்டுள்ளது ஒருபுறமிருக்க, தமிழகத்தை சேர்ந்த இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின், இன்றைய தினம் வரலாற்று சாதனை ஒன்றை படைத்தார்.

டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிகபட்ச இடக்கை பேட்ஸ்மேன்களை ஆட்டமிழக்க செய்த பந்துவீச்சாளர் என்ற சாதனையை அஸ்வின் படைத்துள்ளார். ஆஸ்திரேலிய அணி வீரர் ஜோஷ் ஹேசில்வுட்டின் விக்கெட்டை வீழ்த்தியதன் மூலம் இலங்கை அணியின் முன்னாள் சுழற்பந்துவீச்சாளர் முத்தையா முரளிதரனின் சாதனையை அஸ்வின் விஞ்சினார்.

டெஸ்ட் போட்டிகளில் 191 இடக்கை பேட்ஸ்மேன்களை முரளிதரன் ஆட்டமிழக்க செய்திருந்த நிலையில், அஸ்வின் இன்று தனது 192 விக்கெட்டை வீழ்த்தினார்.

சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணி

இந்த போட்டியில் முதல் நாளில் ஆஸ்திரேலியா 72.3 ஓவர்களில் 195 ரன்களை எடுத்து 10 விக்கெட்டுகளையும் இழந்தது. முதல் நாளிலேயே களமிறங்கிய இந்திய அணி 36 ரன்களுக்கு ஒரு விக்கெட்டை இழந்தது.

இரண்டாம் நாளில் களமிறங்கிய இந்திய பேட்ஸ்மேன்கள் நிதானமாக விளையாடினர். இரண்டாம் நாள் முடிவில், 91.3 ஓவர்களுக்கு, இந்தியா ஐந்து விக்கெட்டு இழந்து 277 ரன்களைக் குவித்திருந்தாது. இந்த டெஸ்ட் போட்டியில் இந்திய அணித் தலைவராக களமிறங்கிய அஜிங்க்யா ரஹானே தன் 12-வது சதத்தைப் பதிவு செய்தார்.

மூன்றாம் நாளான நேற்று களமிறங்கிய ரஹானே, ஜடேஜா இணை வெகு சில ரன்களிலேயே பிரிந்தது. 100-வது ஓவரில் ரஹானே ரன் அவுட் ஆனார். ரஹானே 223 பந்துகளை எதிர்கொண்டு 112 ரன்களைப் பதிவு செய்திருந்தார். இவர் தன் விக்கெட்டை பறிகொடுத்த போது இந்தியா 294 ரன்களுக்கு ஆறு விக்கெட்டுகளை இழந்திருந்தது.

ரஹானேவைத் தொடர்ந்து ஸ்டார்க் வீசிய 107-வது ஓவரில் தன் விக்கெட்டைப் பறிகொடுத்தார். ராஹானேவுக்கு பக்கபலமாக இருந்த ஜடேஜா 159 பந்துகளை எதிர்கொண்டு 57 ரன்களைக் குவித்திருந்தார்.

Ind Vs Aus

பட மூலாதாரம், Getty Images

இவர்களுக்குப் பிறகு பேட்டிங் செய்ய வந்த இந்திய பந்துவீச்சாளர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். அஸ்வின் 14 ரன்களிலும், உமேஷ் யாதவ் 9 ரன்களிலும், பும்ரா மற்றும் மொஹம்மத் சிராஜ் ரன் ஏதும் எடுக்காமலும், என விரைவாக பெவிவிலியன் திரும்பினார்கள்.

ஆக இந்தியா மூன்றாம் நாளில், 326 ரன்களுக்கு 10 விக்கெட்டுகளை இழந்தது. ஆஸ்திரேலியாவை விட 131 ரன்கள் கூடுதலாக அடித்து முன்னிலை பெற்றது.

இரண்டாவது இன்னிங்ஸில் களமிறங்கிய ஆஸ்திரேலியா மூன்றாம் நாளின் முடிவில், 66 ஓவர்களுக்கு 133 ரன்களை எடுத்து, ஆறு விக்கெட்டுகளை இழந்தது.

மூன்றாவது நாளின் முடிவில் ஆஸ்திரேலியா, இந்தியாவை விட இரண்டு ரன்கள் கூடுதலாக எடுத்திருந்தது.

நான்காம் நாளான இன்று ஆஸ்திரேலியா 200 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

ஆஸ்திரேலியா சார்பில் களமிறங்கிய பேட்ஸ்மேன்களில் மேத்யூ வேட் 40 ரன்களும், மார்னஸ் 28 ரன்களையும் எடுத்தனர். கிரீன் 45 ரன்கள் எடுத்ததே ஆஸ்திரேலியாவுக்கு இரண்டாவது இன்னிங்சில் அதிகபட்சம் ஆகும். க்யூமின்ஸ் 22 ரன்களும் எடுத்தனர். மற்ற எந்த ஆஸ்திரேலிய பேட்ஸ்மென்களும் 20 ரன்களைத் தாண்டவில்லை.

இரண்டாம் இன்னிங்சில் இந்திய தரப்பில் சிராஜ் 3 விக்கெட்டுகளையும், பும்ரா, அஷ்வின், ஜடேஜா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் எடுத்தனர்.

விராட் கோலி தனது மனைவியின் பிரசவத்திற்காக இந்தியா திரும்பி உள்ளதால் இந்த போட்டியில் விளையாடவில்லை.

இதன் காரணமாக அஜிங்க்யா ரஹானே இந்த போட்டியில் இந்தியாவின் கேப்டனாக செயல்பட்டார்.

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சிட்னியில் வரும் ஜனவரி ஏழாம் தேதி தொடங்குகிறது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :