அஜிங்க்யா ரஹானே ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் சதம் - India vs Australia

பட மூலாதாரம், Getty Images
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு இடையில் நடந்து கொண்டிருக்கும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில், தன் 12-வது சதத்தைப் பதிவு செய்திருக்கிறார் இந்திய டெஸ்ட் அணியின் பொறுப்பு கேப்டன் அஜிங்க்யா ரஹானே.
1999-ம் ஆண்டுக்குப் பிறகு மெல்பர்ன் மைதானத்தில், டெஸ்ட் போட்டியில் தன் சதத்தைப் பதிவு செய்யும் முதல் இந்திய கேப்டன் அஜிங்க்யா ரஹானே என்பது கூடுதல் தகவல்.
1999-ம் ஆண்டில் சச்சின் டெண்டுல்கர் இந்தியாவின் கேப்டனாக இருந்த போது, மெல்பர்ன் மைதானத்தின் தன் சதத்தைப் பதிவு செய்தார்.
ரஹானே குறித்த 10 சுவாரசிய தகவல்களைத் தொகுத்து வழங்குகிறோம்.
- 32 வயதாகும் இவர் மாகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்தவர். (தற்போது நடந்து வரும் போட்டியைச் சேர்க்காமல்) இதுவரை 66 டெஸ்ட், 90 சர்வதேச ஒருநாள் போட்டி மற்றும் 20 சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடி இருக்கிறார்.
- ரஹானே இந்திய அணிக்காக சர்வதேச அளவில் களமிறங்கியதே டி20 போட்டியில்தான். கடந்த 2011 ஆகஸ்ட் 31-ம் தேதி இங்கிலாந்துக்கு எதிரான டி20 சர்வதேசப் போட்டியில் களமிறங்கினார்.
- அந்த முதல் போட்டியிலேயே 39 பந்துகளை எதிர்கொண்டு 61 ரன்களை எடுத்தார். அந்தப் போட்டியிலேயே அதிக ரன்களைக் குவித்த வீரர் ரஹானேதான்.
- அதன் பிறகு கடந்த 2011 செப்டம்பர் 3-ம் தேதி இங்கிலாந்துக்கு எதிரான சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் களமிறங்கினார்.
- 2013 மார்ச் 22-ம் தேதி ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்திய அணிக்காகத் தேர்வானார் ரஹானே.
- இதுவரை, டெஸ்ட் போட்டிகளில் 111 இன்னிங்ஸ்களில் விளையாடி 4,245 ரன்களைக் குவித்திருக்கிறார். இவர் எடுத்த அதிகபட்ச ஸ்கோர் 188 ரன்கள். இன்றைய போட்டியைச் சேர்க்காமல், டெஸ்டில் 11 சதங்களையும், 22 அரை சதங்களையும் பதிவு செய்திருக்கிறார்.
- 90 சர்வதேச ஒருநாள் போட்டிகளில் விளையாடி 2,962 ரன்களைக் குவித்திருக்கிறார். 111 ரன்கள் இவர் ஒருநாள் போட்டிகளில் அடித்த அதிகபட்ச ஸ்கோர். மூன்று சதங்களையும், 24 அரை சதங்களையும் பதிவு செய்திருக்கிறார் அஜிங்க்யா ரஹானே.
- 20 சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடி 375 ரன்களை எடுத்திருக்கிறார். 61 ரன்கள் இவர் சர்வதேச டி20-களில் எடுத்த அதிகபட்ச ஸ்கோர். டி20 போட்டிகளில் இதுவரை ஓர் அரை சதத்தைப் பதிவு செய்திருக்கிறார் ரஹானே.
- இந்தியா மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியில், விராட் கோலி பங்கேற்காததால், கேப்டனாக களமிறங்கி அசத்தியிருக்கிறார் அஜிங்க்யா ரஹானே.
- டெஸ்ட் போட்டியில் கேப்டனாக விளையாடி, ஆஸ்திரேலியாவில் சதத்தைப் பதிவு செய்த ஐந்தாவது இந்திய கேப்டன் என்கிற பெருமையையும் பதிவு செய்திருக்கிறார் ரஹானே. இவருக்கு முன், அசாருதீன், சச்சின் டெண்டுல்கர், செளரவ் கங்குலி, விராட் கோலி ஆகியோர் இந்திய அணியின் தலைவர்களாக இருந்து ஆஸ்திரேலியாவில் தங்கள் சதத்தைப் பதிவு செய்திருக்கிறார்கள்.
இரண்டாவது நாளின் முடிவில்

பட மூலாதாரம், Getty Images
இந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியாவை முதல் நாளிலேயே 72.3 ஓவர்களில் 195 ரன்களுக்குள் சுருட்டியது ரஹானே தலைமையிலான அணி. முதல் நாளிலேயே இந்திய அணி பேட்டிங் செய்யத் தொடங்கியது.
முதல் நாள் முடிவில் 11 ஓவர் முடிவில் 36 ரன்களுக்கு ஒரு விக்கெட்டை இழந்திருந்தது இந்தியா. சுப்மன் கில் மற்றும் புஜாரா அவுட் ஆகாமல் களத்தில் இருந்தனர்.
இரண்டாவது நாளில் சுப்மன் கில் 45 ரன்களுக்கு தன் விக்கெட்டை கமின்ஸின் பந்தில் பறிகொடுத்தார். அதன் பின் களமிறங்கிய ரஹானே தன் விக்கெட்டை பறிகொடுக்காமல், இரண்டாவது நாள் முடிவில் 104 ரன்களை விளாசி இருக்கிறார். ரஹானேவுக்குப் பிறகு வந்த ஹனும விஹாரி 21 ரன்களோடும், ரிஷப் பந்த் 29 ரன்களோடு தங்கள் விக்கெட்டுகளைப் பறிகொடுத்தனர்.
இரண்டாவது நாளின் முடிவில் இந்தியாவின் அனுபவமிக்க அஜிங்க்யா ரஹானேவும், ரவிந்தர் ஜடேஜாவும் கைகோர்த்திருக்கின்றனர்.
இந்த ஜோடி 195 பந்துகளை எதிர்கொண்டு 104 ரன்களை விளாசி இருக்கிறது. நாளையும் இந்த ஜோடியின் அதிரடி தொடர்ந்தால், இரண்டாவது டெஸ்ட் போட்டியின் வெற்றி இந்தியாவின் கைகளுக்கு வர அதிக வாய்ப்பிருக்கிறது.
பிற செய்திகள்:
- 2020-இன் கடைசி 'மன் கி பாத்' உரையில் நரேந்திர மோதி பேசியது என்ன?
- ரஜினிகாந்த் உடல்நிலை: 'மருத்துவ பரிசோதனை அறிக்கைகள் வந்துவிட்டன' - அப்பல்லோ மருத்துவமனை
- உலக நாடுகளில் பரவத் தொடங்கிய புதிய வகை கொரோனா - எங்கெல்லாம் பாதிப்பு?
- 2,000 ஆண்டுகளுக்கு முந்தைய பழங்கால 'ஃபாஸ்ட் ஃபுட்' கடை கண்டுபிடிப்பு
- இந்தியாவில் ஆக்ஸ்ஃபோர்டு தடுப்பூசிக்கு அவசர கால அனுமதி?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












