கோவிஷீல்டு கொரோனா வைரஸ் தடுப்பூசி: இந்தியாவில் ஆக்ஸ்ஃபோர்டு தடுப்பூசிக்கு அவசர ஒப்புதல் கிடைக்குமா?

இந்தியாவில் ஆக்ஸ்ஃபோர்டு தடுப்பூசிக்கு அவசர ஒப்புதல் கிடைக்குமா?

பட மூலாதாரம், Getty Images

இந்தியாவின் சில முக்கிய நாளிதழ்களிலும் அவற்றின் இணையதளங்களிலும் வெளியான முக்கிய செய்திகள் சிலவற்றை இங்கே தொகுத்து வழங்குகிறோம்.

ஆக்ஸ்ஃபோர்டு தடுப்பூசிக்கு அடுத்த வாரம் ஒப்புதல் கிடைக்குமா?

இந்தியாவில் அவசர கால பயன்பாட்டுக்கு முதன்முதலாக ஆக்ஸ்ஃபோர்டு தடுப்பூசிக்கு அனுமதி வழங்கப்படும் என தகவல்கள் வெளியாகி உள்ளன என்கிறது தினத்தந்தி செய்தி.

இந்தியாவில் பாரத் பயோடெக் (கோவேக்சின் தடுப்பூசி), சீரம் இன்ஸ்டிட்யூட் ஆஃப் இந்தியா (ஆக்ஸ்ஃபோர்டின் கோவிஷீல்டு தடுப்பூசி), ஃபைசர் மற்றும் பயோஎன்டெக் (எம்ஆர்என்ஏ தடுப்பூசி) ஆகிய 3 நிறுவனங்களும் அவசர கால பயன்பாட்டு அனு மதியை கோரி இந்திய தலைமை மருந்து கட்டுப்பாட்டு அதிகாரிக்கு இந்த மாத தொடக்கத்தில் விண்ணப்பித்துள்ளன.

கடந்த 9-ந்தேதி மத்திய மருந்து தர கட்டுப்பாட்டு அமைப் பின் (சிடிஎஸ்சிஓ) வல்லுனர் குழு, இந்திய சீரம் நிறுவனம் மற்றும் பாரத் பயோடெக் நிறுவனங்களிடம் இருந்து கூடுதல் பாதுகாப்பு மற்றும் செயல்திறனுக்கான தரவுகளை கேட்டது.

ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகமும், ஆஸ்ட்ராசெனிகா நிறுவனமும் இணைந்து உருவாக்கி, இந்தியாவில் தான் தயாரித்து வழங்கும் கோவிஷீல்டு தடுப்பூசி தொடர்பான கூடுதல் தரவுகளை சீரம் நிறுவனம் கடந்த வாரம் வழங்கி விட்டதாக தகவல்கள் கூறுகின்றன.இங்கிலாந்தின் அனுமதியை இந்தியா எதிர்பார்த்து காத்திருக்கிறது.

அப்படி இங்கிலாந்தில் இந்தத் தடுப்பூசிக்கு அனுமதி அளிக்கப்பட்ட உடனேயே, மத்திய மருந்து தர கட்டுப்பாட்டு அமைப்பின் (சிடிஎஸ்சிஓ) வல்லுனர் குழு கூடி, அந்த தடுப்பூசி மீது இந்தியா மற்றும் வெளிநாடுகளில் நடத்தப்பட்ட மருத்துவ பரிசோதனைகளின் பாதுகாப்பு மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி தரவுகளை ஆய்வு செய்யும்.

அதைத்தொடர்ந்து இந்த தடுப்பூசியின் அவசர கால பயன்பாட்டு அனுமதி வழங்கப்படும் என தகவல் அறிந்த வட்டாரங்கள் கூறுகின்றன. அனேகமாக அடுத்த வாரம் இந்த அனுமதி கிடைத்து விடும் என அந்த வட்டாரங்கள் மேலும் தெரிவிக்கின்றன என்கிறது தினத்தந்தி செய்தி.

இந்தியாவில் முதல் முறையாக ஓட்டுநா் இல்லா மெட்ரோ ரயில்

இந்தியாவின் முதல் ஓட்டுநர் இல்லா மெட்ரோ ரயில் சேவை தில்லியில் வரும் டிசம்பர் 28-ஆம் தேதி தொடங்க உள்ளது. இந்த ரயில் சேவையை பிரதமர் நரேந்திர மோதி தொடங்கிவைக்க உள்ளார் என தினமணி செய்தி தெரிவிக்கிறது.

இந்தியாவில் முதல் முறையாக ஓட்டுநா் இல்லா மெட்ரோ ரயில்

பட மூலாதாரம், Getty Images

மெட்ரோ வழித்தடத்தில் பல்வேறு தொழில்நுட்பங்களைப் படிப்படியாக புகுத்த தில்லி மெட்ரோ நிறுவனம் நடவடிக்கை எடுத்தது. அதன் நீட்சியாக தற்போது நாட்டிலேயே முதல் முறையாக ஓட்டுநர் இல்லாமல் இயங்கும் மெட்ரோ ரயில் சேவை மெட்ரோவின் எட்டாவது மெஜந்தா வழித்தடத்தில் 38 கிலோ மீட்டர் தொலைவுக்கு இயக்கப்பட உள்ளது.

ஓட்டுநர் இல்லாமல் இயக்கப்படும் ரயில் சேவையானது முற்றிலும் தானியங்கி முறையை அடிப்படையாகக் கொண்டதாகும். ஓட்டுநர் இல்லாமல் ரயில் இயக்கப்படுவதற்கு முந்தைய விதிகள் அனுமதி அளிக்காததால் மத்திய அரசு மெட்ரோ ரயில்வே பொது விதிகளில் மாற்றம் செய்து அறிவிக்கையாக வெளியிட்டது என அந்தச் செய்தி கூறுகிறது.

விவசாயிகள் போராட்டம் - மீண்டும் பேச்சுவார்த்தை

டெல்லியில் போராட்டம் நடத்திவரும் விவசாய சங்கங்கள் இந்திய அரசுடன் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த ஒப்புக்கொண்டுள்ளனர் என்று தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தித்தாள் கூறுகிறது.

செவ்வாய்க்கிழமை காலை 11 மணிக்கு இந்தப் பேச்சுவார்த்தை நடக்கும் என்று சனிக்கிழமை மாலை சன்யுக்தி கிசான் மோர்ச்சா எனும் விவசாய கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

புதிய வேளாண் சட்டங்கள் மட்டுமல்லாது மின்சார சட்டத்தின் திருத்த மசோதா 2020-இல் மேற்கொள்ளப்பட வேண்டிய மாற்றங்கள் உள்ளிட்டவையும் இந்தப் பேச்சுவார்த்தையில் விவாதிக்கப்படும்.

டெல்லி மாநில எல்லையில் நடக்கும் விவசாயிகள் போராட்டம் ஒரு மாதத்தைக் கடந்துள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :