கொரோனா வைரஸ்: இந்தியாவில் கோவிட்-19 தடுப்பூசி எப்போது கிடைக்கும்? கோவேக்சின், ஃபைசர்,ஸ்பூட்னிக் - 5, மாடர்னா, கோவிஷீல்டு - 25 முக்கிய தகவல்கள்

கோவேக்சின், ஃபைசர்,ஸ்புட்னிக் - 5, மாடர்னா, கோவிஷீல்டு

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, இந்தியாவில் 30 கோடி பேருக்கு, 6-7 மாதங்களில் கோவிட்-19 தடுப்பு மருந்து வழங்க முடியும் என இந்திய சுகாதார அமைச்சர் கூறியுள்ளார்.

2021ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் இந்தியாவில் கொரோனா வைரஸ் தடுப்பூசி வழங்கப்படும் பணி ஒருவேளை தொடங்கலாம் என்று இந்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷ்வர்தன் ஏ.என்.ஐ செய்தி முகமையிடம் தெரிவித்துள்ளார்.

கோவிட்-19 தடுப்பு மருந்துகள் தயாரிப்பு பரிசோதனை பணிகள், இந்தியாவில் மூன்றாம் கட்டத்தில் உள்ளன.

இந்த பரிசோதனையின்போது தடுப்பு மருந்துகள் மனிதர்களின் உடலுக்குள் செலுத்தப்பட்டு அவற்றின் செயல்திறன் மற்றும் தொற்றிலிருந்து பாதுகாப்பு அளிக்கும் தன்மை பரிசோதிக்கப்படும்.

பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்துள்ள கோவேக்சின், ரஷ்யாவின் ஸ்பூட்னிக் - 5, மாடர்னா தடுப்பு மருந்து, ஃபைசர் - பயோஎன்டெக் இணைந்து தயாரித்துள்ள கோவிட்-19 தடுப்பூசி, பிரிட்டனின் ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகம் - அஸ்ட்ராசெனிகா நிறுவனம் இணைந்து தயாரித்துள்ள கோவிட்-19 தடுப்பூசி ஆகியவை இப்போது என்ன நிலையில் உள்ளன என்று தெரிந்துகொள்ளுங்கள்.

ஃபைசர் / பயோஎன்டெக் தடுப்பூசி

1.ஃபைசர் / பயோஎன்டெக் தடுப்பூசியின் இரு டோஸ்களுக்கு இடையே 21 நாள் இடைவெளி இருக்க வேண்டும்.

2.ஃபைசர் / பயோஎன்டெக் தடுப்பூசி 90% பேருக்கு பலனளித்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

3.ஃபைசர் / பயோஎன்டெக் தடுப்பூசி -75 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலையில் சேமிக்கப்பட வேண்டும்.

4.ஃபைசர் / பயோஎன்டெக் தடுப்பூசி மருந்து, அமெரிக்கா மட்டுமல்லாது ஜெர்மனி, பெல்ஜியம் என உலகின் பல நாடுகளிலும் உற்பத்தி செய்யப்படுகிறது.

மாடர்னா தடுப்பூசி

5.மாடர்னாவின் இரு டோஸ்கள் இடையே நான்கு வார கால (28 நாட்கள்) இடைவெளி இருக்க வேண்டும்.

6.மாடர்னா தடுப்பு மருந்து உடலில் செலுத்தபட்ட 94.5% பேருக்கு பலனளித்துள்ளது.

7. மாடர்னா மருந்தை -20 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலையில் ஆறு மாதங்கள் வரை சேமித்து வைக்க முடியும்.

8.மாடர்னா தயாரிப்பு நிறுவனம், அமெரிக்காவின் மாசச்சூசெட்ஸ் மாகாணத்தில் இருந்து இயங்குகிறது. அரசுத்துறைகளின் ஒப்புதல் பெற்ற பின் பெரும்பாலான தடுப்பு மருந்து இங்குதான் உற்பத்தி செய்யப்படும்.

கொரோனா வைரஸ் அறிகுறிகள் கொரோனா வைரஸ் கட்டுரை தமிழ்

ஆக்ஸ்ஃபோர்ட் - அஸ்ட்ராசெனிகா தடுப்பூசி

9.ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகம் அஸ்ட்ராசெனிகா நிறுவனம் ஆகியவை இணைந்து தயாரிக்கும் கொரோனா வைரஸ் தடுப்பு மருந்து, அந்த வைரஸ் அறிகுறி மேம்பட்டவர்களில் 70 சதவீதம் பேருக்கு தொற்றை தடுக்கவல்லது என்று ஆய்வில் தெரிய வந்துள்ளது.

10.நோயாளிகளுக்கு கொடுக்கும் மருந்தின் அளவை இன்னும் சரியாகக் கணித்துக் கொடுத்தால், இந்த மருந்து 90% வரை பாதுகாப்பளிக்கும் என்கிறது இந்த மருந்து சார்ந்த தரவுகள்.

11.மிகவும் அதீத குளிரில் இந்த கொரோனா வைரஸ் தடுப்பூசியை சேமித்து வைக்க வேண்டியதில்லை என்பதால், இது ஃபைசர் ,மாடர்னா நிறுவனங்களின் மருந்துகளை விடவும் விநியோகிக்க எளிமையானதாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது.

12.சிம்பன்ஸீ குரங்குகளில் காணப்படும் சளியை உண்டாக்கும் வைரஸ் (common cold virus) கிருமியின் பலவீனமாக்கப்பட்ட தொற்றைப் பயன்படுத்தி இது தயாரிக்கப்பட்டுள்ளது. இந்தக் கிருமி மனித உடலில் பெருக்கம் ஆகாத வகையில் இதன் தன்மை மாற்றப்பட்டுள்ளது.

13.இந்தியாவில் இந்த மருந்து 'கோவிஷீல்டு' என்ற பெயரில் அழைக்கப்படுகிறது. புணேயில் உள்ள சீரம் இன்ஸ்டிட்டியூட் ஆஃப் இந்தியா மருந்து தயாரிப்பு நிறுவனம், இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் (ஐ.சி.எம்.ஆர்) ஆகியவை இணைந்து 'கோவிஷீல்டு' தடுப்பு மருந்தின் மூன்றாம் கட்ட பரிசோதனைகளை மேற்கொண்டு வருகின்றன.

கொரோனா வைரஸ் அறிகுறிகள் கொரோனா வைரஸ் கட்டுரை தமிழ்

ரஷ்ய ஆய்வாளர்கள் உருவாக்கிய ஸ்பூட்னிக்-5 தடுப்பூசி

14.ஸ்பூட்னிக்-5 தடுப்பூசி பயன்பாட்டுக்கு ஆக்ஸ்ட் மாதம் அனுமதி வழங்கியது ரஷ்யா. உலகிலேயே கொரோனா தடுப்பூசி பயன்பாட்டுக்கு அனுமதி அளித்த முதல் நாடு ரஷ்யாதான்.

15.ரஷ்யாவின் தேசிய நோய் தொற்றியல் மற்றும் நுண்ணுயிரியல் ஆய்வு மையத்தால் உருவாக்கப்பட்டது.

16.இன்னும் பரிசோதனை நிலையிலேயே இருந்தாலும் மருத்துவர்கள், சுகாதார பணியாளர்கள், சமூக ஊழியர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்டவர்களுக்கு இது வழங்கப்பட்டு வருகிறது. ரஷ்யா, இந்தியா, வெனிசுவேலா, பெலாரூஸ் ஆகிய நாடுகளில் மூன்றாம் கட்ட பரிசோதனையில் உள்ளது.

17.ஸ்பூட்னிக்-5 தடுப்பூசி உடலில் செலுத்தப்பட்ட 92% பேருக்கு இந்த கோவிட்-19 தொற்றில் இருந்து பாதுகாப்பு அளிக்கிறது என்று தரவுகள் கூறுகின்றன.

18.திரவ நிலையில் மைனஸ் 18 டிகிரி குளிர் வெப்பத்தில் இதை சேமித்து வைக்க வேண்டும்.

கொரோனா வைரஸ் அறிகுறிகள் கொரோனா வைரஸ் கட்டுரை தமிழ்

பாரத் பயோடெக் உருவாக்கிய 'கோவேக்சின்'

19.இந்தியாவில் உருவாக்கப்பட்ட கொரோனா தடுப்பு மருந்துகளில், பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்த கோவேக்சின் மட்டுமே மூன்றாம் கட்ட பரிசோதனையில் இருக்கிறது.

20.கோவேக்சின் கொரோனா தடுப்பூசியின் மூன்றாம் கட்ட ஆய்வில், 26,000 பேரின் உடலில் செலுத்தி பரிசோதனை செய்ய இலக்கு வைக்கப்பட்டுள்ளது.

21.பாரத் பயோடெக் தன் கோவேக்சின் மருந்தை, அவசர பயன்பாட்டுக்கு அனுமதிக்குமாறு விண்ணப்பித்திருந்தது. ஆனால் அதற்கு இதுவரை இந்தியாவின் மருந்துகள் தலைமை கட்டுப்பாட்டாளர் (டி.சி.ஜி.ஐ)அலுவலகம் அனுமதி வழங்கவில்லை.

22.கோவேக்சின் மருந்தின் பாதுகாப்பு மற்றும் செயல் திறன் தொடர்பான தரவுகள் வேண்டும் என அந்த அலுவலகம் கேட்டிருக்கிறது.

கொரோனா வைரஸ்

பட மூலாதாரம், Kado/getty Images

புதிய கொரோனா வைரஸ் திரிபு

23.முந்தைய கொரோனா வைரஸ் திரிபைவிட, 70% சுலபமாகப் பரவக்கூடிய புதிய திரிபு பிரிட்டனில் கண்டறியப்பட்டுள்ளது. ஆனால், அது தடுப்பூசி ஆராய்ச்சியில் பெரிய பாதிப்பை உண்டாக்காது.

24.வேகமாகப் பரவும் தன்மைதான் இந்த திரிபு உண்டாக்கும் கவலை. ஆனால், வழக்கமான சமூக விலகல் மூலம் இதைத் தவிர்க்கலாம்; தற்போது பயன்பாட்டுக்கு வந்துள்ள தடுப்பூசிகள் மூலமே இதை எதிர்கொள்ளலாம்.

25.ஏற்கனவே உருவாக்கப்பட்டுள்ள தடுப்பூசி மூலமே இந்த புதிய திரிபுக்கும் எதிரான நோய் எதிர்ப்புத் திறனைப் பெற முடியும் என்று மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :