விவசாயிகள் போராட்டம்: 'யார் போராடினாலும் வேளாண் சட்டங்கள் நீடிக்கும்' - பாஜக அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர்

பட மூலாதாரம், Getty Images
இந்தியாவில் உள்ள சில முக்கிய நாளிதழ்களிலும் அவற்றின் இணையதளங்களிலும் வெளியான முக்கிய செய்திகள் சிலவற்றை இங்கே தொகுத்து வழங்குகிறோம்
'வேளாண் சட்டங்கள் நீடிக்கும்'
திமுக, காங்கிரஸ் கட்சிகள் உள்ளிட்ட யாா் போராடினாலும் வேளாண் திருத்தச் சட்டம் தொடா்ந்து நீடிக்கும் என மத்திய அமைச்சா் பிரகாஷ் ஜவடேகா் கூறியதாக தினமணியில் செய்தி வெளியாகியிருக்கிறது.
செங்கல்பட்டு மாவட்டம், மறைமலை நகரில், விவசாயிகளின் கருத்துகளைக் கேட்பதற்காக நடைபெற்ற கலந்துரையாடல் நிகழ்ச்சியில், மத்திய சுற்றுச்சூழல், வனத் துறை மற்றும் செய்தித் துறை அமைச்சா் பிரகாஷ் ஜவடேகா் வெள்ளிக்கிழமை பங்கேற்று பேசியது:
2004-இல் இருந்து 2014 வரை காங்கிரஸ் தலைமையிலான கூட்டணிக் கட்சிகள் ஆட்சியில் இருந்தபோது, எம்.எஸ்.சுவாமிநாதன் குழு அறிக்கையின் அடிப்படையில், புதிய வேளாண் சட்ட மசோதா கொண்டு வரப்பட்டது. அதை தற்போது பாஜக அரசு நிறைவேற்றியுள்ளது.
பஞ்சாப் மாநிலத்தைத் தவிர பிற மாநிலங்கள் வேளாண் சட்டத்தை ஆதரிக்கின்றன. திமுக, காங்கிரஸ் கட்சிகள் வேளாண் திருத்தச் சட்டத்துக்கு எதிராகப் போராட்டங்கள் நடத்தியபோதும், விவசாயிகள் மத்திய அரசுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனா்என அச்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தற்போது விவசாயிகள் ஒவ்வொருவருக்கும் தலா 2,000 வீதம் ரூ.18 ஆயிரம் கோடி வழங்கப்படுகிறது. காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது விவசாயிகளுக்காக ரூ.43,000 கோடி வங்கிக்கு கொடுத்தது. ஆனால் பாஜக அரசு ரூ.1,20,000 கோடியை விவசாயிகளுக்கு நேரடியாக வழங்கியுள்ளது. திமுக, காங்கிரஸ் கட்சிகள் என யாா் போராடினாலும் இந்த வேளாண் திருத்தச் சட்டம் தொடா்ந்து நீடிக்கும் என, அச்செய்தியில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
முதன்முறையாக தாராவியில் கொரோனா தொற்று கண்டறியப்படவில்லை
மும்பை தாராவியில் முதல் முறையாக நேற்று ஒருவருக்கு கூட கொரோனா தொற்று கண்டறியப்படவில்லை என தினத்தந்தியில் செய்தி வெளியாகி இருக்கிறது.

ஆசியாவின் மிகப்பெரிய குடிசைப் பகுதியான மும்பை தாராவியில், தமிழர்கள் அதிகம் வசித்து வருகின்றனர். கடந்த ஏப்ரல் 1-ம் தேதி முதன்முதலாக இங்குள்ள பாலிகா நகரை சேர்ந்த ஒருவர் கொரோனாவவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். அதையடுத்து மக்கள் நெருக்கம் அதிகம் உள்ள இப்பகுதியில் கொரோனா வேகமாகப் பரவத் தொடங்கியது. மே மாதத்தில் நோய் பரவலின் வேகம் தீவிரமானது. மக்கள் கவலை அடைந்தனர். இதனால் நாடே தாராவியை உன்னிப்பாக கவனிக்க தொடங்கியது.
இதையடுத்து தாராவியில் கொரோனாவை கட்டுப்படுத்த மாநில அரசு தீவிர நடவடிக்கைகளில் ஈடுபட்டது. குறிப்பாக சுகாதாரப்பணியாளர்கள் கோடை வெயிலையும் பொருட்படுத்தாமல், முழு கவச உடையுடன் வீடு வீடாக சென்று ஆய்வு பணியில் ஈடுபட்டனர்.

- கொரோனா சந்தேகங்கள்: முக்கிய கேள்விகளும் அதற்கான பதில்களும்
- கொரோனா வைரஸ்: உங்களை தற்காத்துக் கொள்வது எப்படி?
- கொரோனா தடுப்பூசியால் உடலில் பக்க விளைவுகள் ஏற்படுமா?
- கொரோனா வைரஸ் சிகிச்சைக்கு மருந்து எப்போது கிடைக்கும்?
- கொரோனா வைரஸ் தடுப்பூசி எப்போது கிடைக்கும்?
- கொரோனா வைரஸ்: கோவிட் - 19 பற்றி நமக்கு தெரியாத விஷயங்கள் என்ன?

இதன் காரணமாக ஜூன் மாதத்திற்கு பிறகு அங்கு நோய் பரவல் வேகம் குறைந்தது.
தற்போது தாராவியில் 12 பேர் பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்கள் அனைவரும் குணமடைந்து, தாராவி விரைவில் கொரோனா இல்லாத பகுதியாக மாறும் என அப்பகுதி மக்கள் நம்பிக்கையும், மகிழ்ச்சியும் தெரிவித்து உள்ளனர். தாராவியில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் விவரங்களை மாநகராட்சி தொடர்ந்து வெளியிடாமல் வைத்திருக்கிறது என அச்செய்தியில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
'BARC அமைப்பின் முன்னாள் சி.இ.ஓ போலி டிஆர்பி ஊழலின் சூத்திரதாரி' - மும்பை காவல் துறை

பட மூலாதாரம், Getty Images
இந்தியத் தொலைக்காட்சிகளின் டி.ஆர்.பி கணக்கீட்டை மேற்கொள்ளும் 'பார்க்' அமைப்பில் முன்னாள் முதன்மைச் செயல் அதிகாரி (சி.இ.ஓ) பார்த் தாஸ்குப்தா தான் ரிபப்ளிக் டிவி உட்பட, சில தொலைக்காட்சி சேனல்களின் டிஆர்பி மோசடிக்கு காரணம் என, மும்பை காவல் துறை நேற்று (டிசம்பர் 25, வெள்ளிக்கிழமை) கூறியிருப்பதாக தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸில் செய்தி வெளியாகியிருக்கிறது.
55 வயதான தாஸ்குப்தாவை, மும்பை காவல் துறையினர், கடந்த வியாழக்கிழமை புனேவில் வைத்துக் கைப்பற்றினார்கள். நேற்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். டிசம்பர் 28-ம் தேதி வரை காவல் துறையினரின் பாதுகாப்பில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதியளித்தது.
நேற்று மும்பை காவல்துறை வெளியிட்ட அறிக்கையில், பார்த் தாஸ்குப்தாதான், டிஆர்பி மோசடியின் சூத்திரதாரி எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.
இதற்கு முன், பார்க் அமைப்பின் முன்னாள் முதன்மை இயக்க அதிகாரி (சி.ஓ.ஓ) ரோமில் ராம்காரியாவைக் கைது செய்து விசாரித்ததில், டிவி சேனல்களின் டிஆர்பி மோசடியில் தானும் பங்கெடுத்ததாகவும், சி.இ.ஓ தாஸ்குப்தாவின் ஒத்துழைப்புடன் தான் இந்த மோசடிகள் நடந்தது எனவும் ஒப்புக் கொண்டார்.
தாஸ்குப்தா தான் கடந்த ஜூன் 2013 முதல் நவம்பர் 2019 வரை பார்க் அமைப்பின் சி.இ.ஓவாக பதவியில் இருந்தார்.
தாஸ்குப்தா பதவியில் இருந்து வெளியேறிய பிறகு, பார்க் அமைப்பு ஒரு வெளி நிறுவனத்தில் இருந்து தணிக்கை அறிக்கையைத் தயார் செய்யக் கோரியது. இந்த தணிக்கை அறிக்கை கடந்த ஜூலை 2020-ல் வெளியானது. அதில், கடந்த 2016 - 2019 காலகட்டத்தில் டிஆர்பி மோசடிகள் நடந்தது தெரிய வந்தது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












