கொரோனா வைரஸ் சிகிச்சைக்கு மருந்து எப்போது கிடைக்கும்? கோவிட்-19 சிகிச்சையில் என்ன முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன?

பட மூலாதாரம், Pedro Vilela / Getty
- எழுதியவர், ஜேம்ஸ் கலாகெர்
- பதவி, சுகாதார மற்றும் அறிவியல் செய்தியாளர்
கொரோனா நோயாளிக்கு சிகிச்சை அளிக்க, பயனுள்ள மருந்துகளைத் தேடுவதில் சில முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் தொற்றுக்கு சிகிச்சை அளிக்க, உலகம் முழுக்க 150-க்கும் மேற்பட்ட மருந்துகள் குறித்து ஆராய்ச்சிகள் நடந்து வருகின்றன. ஏற்கெனவே இருக்கும் சில மருந்துகள், இந்த வைரஸ் நோய் சிகிச்சைக்கு பயன்படுமா என்றும் பல பரிசோதனைகள் நடைபெறுகின்றன.
ரெக்கவரி ட்ரையல்: கொரோனா வைரஸ் மருந்து தொடர்பாக உலகின் மிகப்பெரிய ஆய்வு பிரிட்டனில் நடக்கிறது. ரெக்கவரி (Recovery) என்று பெயரிடப்பட்டுள்ள இந்த பரிசோதனையில் 12 ஆயிரத்துக்கும் அதிகமான தொற்றாளர்கள் பங்கேற்கின்றனர்.
உடலில் செலுத்தப்பட்டபின், எந்த மருந்து வேலை செய்கிறது எந்த மருந்து வேலை செய்வதில்லை என்பது குறித்த தெளிவான தகவல்களை அளிக்கும் உலகின் மிகச் சில மருத்துவ பரிசோதனைகளில் ஒன்றாக இருக்கிறது.
சாலிடாரிட்டி ட்ரையல்: உலக சுகாதார நிறுவனம் சாலிடாரிட்டி (Solidarity) எனும் பெயரில் ஒரு பரிசோதனை திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இதில் பங்கேற்றுள்ள உலகின் பல்வேறு நாடுகளை சேர்ந்த மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் தங்களது மருந்துகளை இந்தத் திட்டத்தின் கீழ் மனிதர்களுக்கு செலுத்தி ஆய்வு மேற்கொண்டு வருகின்றன.
இந்த உயிர் காக்கும் மருந்துகளைத் தயாரிப்பதில் நாம் இன்னும் எவ்வளவு தொலைவில் இருக்கிறோம்? சிகிச்சை முறைகளைக் கண்டறிய என்ன பணிகள் நடக்கின்றன?

பட மூலாதாரம், Getty Images
எந்த மாதிரியான மருந்துகள் பயன்தரலாம்?
மூன்று பரந்த அணுகுமுறைகளில் முயற்சிகள் நடைபெறுகின்றன:
- வைரஸ் எதிர்ப்பு மருந்துகள் - இவை உடலில் நேரடியாக கொரோனா வைரஸ்களை தாக்கும் திறன் கொண்டவை.
- நோய் எதிர்ப்பு மண்டலத்தை ஆற்றுப்படுத்துபவை - நோய் எதிர்ப்பு மண்டலம் தீவிரமாக வேலை செய்யும்போது, உடலுக்கு பெரிய பாதிப்புகளை ஏற்படுத்துகிறது.
- கோவிட்-19 தொற்றில் இருந்து குணம் அடைந்தவர்களின் ரத்தத்தின் ஊநீரில் (பிளாஸ்மா) இருந்து எடுத்த அல்லது ஆய்வகங்களில் உருவாக்கிய நோய் எதிர்ப்பு அணுக்கள் கொரோனா வைரஸை தாக்கக் கூடியவை.


அதிக நம்பிக்கை தரும் கொரோனா வைரஸ் மருந்து எது?
ரெம்டிசிவிர் என்னும் ஆன்டி வைரல் மருந்தை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தியதில் நம்பிக்கையளிக்கும் முடிவுகள் வந்துள்ளன.
இந்த ரெம்டிசிவிர் என்னும் மருந்து எபோலாவிற்கான சிகிச்சைக்காக உருவாக்கப்பட்டது.
ரெம்டிசிவிர் மருந்து, நோய் அறிகுறியின் கால அவகாசத்தை 15 நாட்களிலிருந்து 11 நாட்களாக குறைக்கிறது என அமெரிக்க தேசிய ஒவ்வாமை மற்றும் தொற்று நோய் நிறுவனம் கூறுகிறது. இதற்கான பரிசோதனை உலகமுழுவதும் உள்ள மருத்துவமனைகளில் 1,063 நோயாளிகளுக்கு வழங்கப்பட்டது. அதில் சிலருக்கு மருந்துகளும், சிலருக்கு அதன் மாதிரி சிகிச்சைகளும் வழங்கப்பட்டன.
அந்நிறுவனத்தின் மருத்துவர் ஆண்டனி ஃபாசி, "கோவிட் - 19ஆல் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டவர்கள் குணமாவதற்கான நேரத்தை ரெம்டிசிவிர் குறைக்கிறது என்பதற்கான வலுவான தரவுகள் இப்போது எங்களிடம் உள்ளன." என்கிறார்.
இருப்பினும் கோவிட் 19ல் இருந்து மீள்வதற்கு ரெம்டிசிவிர் உதவுகிறது, நோயாளிகள் தீவிர சிகிச்சை பிரிவுக்கு செல்ல வேண்டிய அவசியத்தை குறைக்கிறது என்றபோதிலும், கோவிட் 19ஆல் இறப்பு ஏற்படுவதை இந்த மருந்து தடுக்குமா என்ற தகவல்கள் சோதனையில் தெளிவாக கிடைக்கவில்லை.
நோயின் ஆரம்பக்காலத்தில் அன்டி வைரல் மருந்துகள் பலனிக்கும் என்றும், அதன்பின்னான காலத்தில் நோய் எதிர்ப்பு மருந்துகளே பலனளிக்கும் என நம்பப்படுகிறது.
உலக சுகாதார நிறுவனம் 'சாலிடாரிட்டி' (WHO Solidarity) திட்டத்தின்கீழ் நடத்தி வரும் பரிசோதனையில் இடம் பெற்றுள்ள 4 மருந்துகளில் இதுவும் ஒன்று. அதைத் தயாரிக்கும் Gilead நிறுவனம், இந்தப் பரிசோதனைகளை நடத்தி வருகிறது.
உயிர் காக்கும் முக்கிய கண்டுபிடிப்பு
டெக்ஸாமெத்தாசோன் என்ற ஏற்கெனவே பயன்பாட்டில் உள்ள மருந்து ஒன்று கொரோனா வைரஸ் தொற்றி தீவிர பாதிப்புக்கு உள்ளான நோயாளிகளின் உயிர் காக்கப் பயன்படுவது நிரூபிக்கப்பட்டுள்ளது.
மிக குறைந்த விலையில் பரவலாக கிடைக்க வாய்ப்புள்ள இந்த மருந்து கொரோனா வைரஸ் உயிரிழப்புகளின் எண்ணிக்கையைக் குறைக்கவல்லது என்பது தற்போது தெரியவந்துள்ளது.
மிக குறைந்த அளவு தரக்கூடிய ஸ்டீராய்ட் மருந்தான டெக்ஸாமெத்தாசோன், கொரோனா வைரசுக்கு எதிரான போராட்டத்தில் மிகப்பெரிய முன்னேற்றம் என்று பிரிட்டன் வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.
ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆய்வுக் குழு ஒன்று இந்த கண்டுபிடிப்பை நிகழ்த்தியிருக்கிறது.

கொரோனாவை கட்டுப்படுத்த WHO அமைப்பு ஏன் அவசியம்?
இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
YouTube பதிவின் முடிவு, 1

எச்.ஐ.வி.க்கான மருந்துகள் கொரோனா வைரஸ் தாக்குதலை குணமாக்குமா?
எச்.ஐ.வி. சிகிச்சைக்குப் பயன்படுத்தப்படும் lopinavir மற்றும் ritonavir ஆகிய மருந்துகள் கொரோனா வைரஸ் சிகிச்சைக்கு பயன்தரும் என்று நிறைய பேசப்படுகிறது என்றாலும் அதற்கான ஆதாரங்கள் குறைவாகவே உள்ளன.
சில மருந்துகள் ஆய்வகப் பரிசோதனையின்போது நல்ல பலன் தரும். ஆனால் மனிதர்களுக்குப் பயன்படுத்தும் போது முடிவுகள் ஏமாற்றமாகிவிடுவது உண்டு.
கோவிட்-19 தீவிர பாதிப்பு உள்ளவர்கள் குணமாவதற்கு, மரணங்களைக் குறைப்பதற்கு அல்லது வைரஸ் அளவைக் குறைப்பதில் இந்த மருந்துகள் பயன் தரவில்லை.
இருந்தபோதிலும், அதிக ஆபத்தில் உள்ள நோயாளிகளிடம் (25 சதவீதம் மரணம் அடைந்தவர்கள்) நடத்திய மருத்துவப் பரிசோதனையில், நோய்த் தொற்றுக்கு எதிராக இந்த மருந்து செயல்படுவதற்கான காலம் கடந்துவிட்டது தெரியவந்துள்ளது.
மலேரியா மருந்துகள் கொரோனா வைரஸ் தாக்குதலை நிறுத்துமா?
உலக சுகாதார நிறுவனத்தின் 'சாலிடாரிட்டி' மற்றும் இங்கிலாந்தில் நடக்கும் 'ரெக்கவரி' ஆகிய திட்டங்களின்கீழ் செய்யப்பட்ட பரிசோதனைகள் இரண்டிலுமே மலேரியா மருந்துகள் இடம் பெற்றுள்ளன.

பட மூலாதாரம், SOPA Images / Getty
குளோரோகுயின், அதன் தொடர்ச்சியாக உருவாக்கப்பட்ட ஹைட்ராக்சி குளோரோகுயின் ஆகியவை வைரஸ் எதிர்ப்பு மற்றும் நோய் எதிர்ப்புத் திறனை ஆற்றுப்படுத்தும் குணங்களைக் கொண்டதாக இருக்கலாம்.
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கூறிய காரணத்தால், இது கொரோனா வைரஸ் சிகிச்சைக்கு உகந்ததாக இருக்கும் என்ற எண்ணம் பெரிதாக ஏற்பட்டுள்ளது. ஆனால் அது எந்த அளவுக்குப் பயன் தரும் என்பது குறித்து குறைவான ஆதாரங்களே உள்ளன.
ஹைட்ராக்சி குளோரோகுயின் மருந்து மூட்டுவலி சிகிச்சைக்கும் பயன்படுத்தப்படுகிறது. நோய் எதிர்ப்பு மண்டலத்தை இது சீர் செய்வதால் மூட்டுவலிக்கு பயன்படுத்தப்படுகிறது.
இந்த மருந்து கொரோனா வைரஸ் கிருமியின் செயல்பாட்டைக் கட்டுப்படுத்தும் என்று ஆய்வகப் பரிசோதனைகளில் தெரிய வந்துள்ளது. நோயாளிகளுக்கு இது உதவிகரமாக இருப்பதாக மருத்துவர்கள் கூறியதாகவும் தகவல்கள் உள்ளன.
இருந்தபோதிலும், இந்த மருந்து பயனுள்ளதாக இருக்கும் என்பதற்கு உறுதியான ஆதாரங்கள் எதுவும் இல்லை என்று உலக சுகாதார நிறுவனம் கூறியுள்ளது.
நோய் எதிர்ப்பு அமைப்பு
வைரஸ் தாக்குதலுக்கு எதிராக நோய் எதிர்ப்பு அமைப்பு அதிகமாக செயலாற்றும்போது, நோய்த் தொற்றுக்கு எதிரான போரை தீவிரப்படுத்த இது உதவிகரமாக இருக்கும். ஆனால் அது அதிகமாகும்போது, உடலில் பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தி, மரணத்தையும் ஏற்படுத்தக்கூடும்.
'சாலிடாரிட்டி' பரிசோதனையில் இன்டெர்ஃபெரான் பீட்டா (Interferon beta) மருந்து பற்றியும் ஆய்வு செய்யப்படுகிறது. இது தண்டுவட மரப்பு நோய் உள்ளிட்ட சிகிச்சைகளில் பயன்படுத்தப் படுகிறது. வைரஸ் தாக்குதல் நடைபெறும்போது உடலில் உருவாக்கப்படும் ரசாயனங்களின் தொகுப்பாக இருக்கும் நச்சுயிரிப் பெருக்கத் தடுப்புப் பொருட்கள் இன்டெர்ஃபெரான் எனப்படும்.
பிரிட்டனின் 'ரெக்கவரி' திட்டத்தின்கீழ் நடக்கும் மருத்துவப் பரிசோதனையில், அழற்சியைக் குறைப்பதற்கான டெக்சாமெதாஸோன் (dexamethasone )என்ற ஸ்டீராய்டு வகை மருந்தை பயன்படுத்துவது குறித்து ஆய்வு நடைபெறுகிறது.

கொரோனா வைரஸ் உடலுக்குள் சென்று என்ன செய்கிறது?
இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
YouTube பதிவின் முடிவு, 2

குணம் அடைந்தவர்களின் ரத்தம் கொரோனா சிகிச்சைக்கு உதவுமா?
ஒரு நோய்த் தொற்றில் இருந்து குணமானவர்களின் ரத்தத்தில், அந்த வைரஸை எதிர்த்துப் போராடும் அணுக்கள் இருக்கும்.
ரத்தத்தில் இருந்து பிளாஸ்மாவை (நோய் எதிர்ப்பு அணுக்கள் கொண்ட பகுதி) பிரித்து, அந்த வைரஸ் பாதிப்பு உள்ளவருக்கு செலுத்துவது (பிளாஸ்மா தெரப்பி) என்பதுதான் இதன் அணுகுமுறை.
''கன்வாலெசென்ட் பிளாஸ்மா'' என்படும் இந்த முறை மூலம் ஏற்கெனவே 500 நோயாளிகளுக்கு அமெரிக்காவில் சிகிச்சை தரப்பட்டுல்ளது. மற்ற நாடுகளும் இந்த முயற்சியில் ஈடுபட்டுள்ளன.
மருந்து கிடைப்பதற்கு எவ்வளவு காலம் ஆகும்?
கொரோனா வைரஸ் பாதிப்புக்கு சிகிச்சை தருவதற்கான மருந்து எப்போது கிடைக்கும் என்பதை இவ்வளவு சீக்கிரத்தில் கூறிவிட முடியாது. (சிகிச்சை தருவதைக் காட்டிலும் இந்த பாதிப்பு வராமல் தடுக்கக் கூடிய) தடுப்பூசி பயன்தருமா என சொல்ல முடியாது.
ஏற்கெனவே தயாரிக்கப்பட்டுள்ள மருந்துகளை இதற்கும் பயன்படுத்துவது பாதுகாப்பானதாக இருக்குமா என்று மருத்துவர்கள் பரிசோதனை செய்து வரும் நிலையில், புதியாக தடுப்பூசிகளை உருவாக்கும் முயற்சியை ஆராய்ச்சியாளர்கள் அடிப்படை நிலையில் இருந்து தொடங்கியுள்ளனர்.
பரிசோதனை அடிப்படையில், புதிய கொரோனா வைரஸ் மருந்துகளும் பரிசோதனை நிலைய சோதனையில் இருக்கின்றன. ஆனால் மனிதர்களுக்கு செலுத்தி சோதனை செய்யும் அளவுக்கு அதில் முன்னேற்றம் ஏற்படவில்லை.

பட மூலாதாரம், Rahman Roslan / Getty
சிகிச்சை ஏன் தேவைப்படுகிறது?
உயிர்களைக் காப்பாற்றுவதற்கான தேவைதான் சிகிச்சைகான தேவை என்பது மட்டுமின்றி, முடக்கநிலை அமலாகியுள்ளதை விலக்க வேண்டும் என்பதும் முக்கியமானதாக உள்ளது.
சரியான சிகிச்சை முறையை உருவாக்கிவிட்டால், கொரோனா வைரஸ், சாதாரண நோயாக மாறிவிடும்.
வென்டிலேட்டர் தேவைப்படும் நிலையை ஏற்படுத்தி, நோயாளிகள் மருத்துவமனைக்கு வரும் சூழ்நிலை நின்றுவிட்டால், தீவிர சிகிச்சைப் பிரிவுகளில் கூட்டம் சேரும் நிலை குறையும். மக்களைக் கட்டுப்படுத்துவதில் அதிக கடுமை காட்ட வேண்டியிருக்காது.
இப்போது நோயாளிகளுக்கு மருத்துவர்கள்எப்படி சிகிச்சை தருகிறார்கள்?
கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டால், பெரும்பாலானவர்களுக்கு லேசான பாதிப்பாக இருக்கும் நிலையில் வீட்டிலேயே ஓய்வெடுத்துக் கொண்டு, பாரசிட்டமால் மருந்து மற்றும் பழச்சாறுகள் குடிப்பதன் மூலம் சிகிச்சை தரப்படுகிறது.
ஆனால் சிலருக்கு மருத்துவமனையில் வைத்து தீவிர சிகிச்சை தரும் அவசியம் ஏற்படும்போது, வென்டிலேட்டர் போன்ற செயற்கை சுவாசக் கருவிகளின் உதவி தேவைப்படுகிறது.
கொரோனா வைரஸ் தொற்றுக்கு தமிழ்நாட்டில் அளிக்கப்படும் சிகிச்சை என்ன?
கோவிட் - 19 நோயாளிகளில் இறப்பு விகிதம் மற்ற மாநிலங்களோடு ஒப்பிடும்போது தமிழ்நாட்டில் குறைவாக உள்ளது. இதற்கிடையில் கடந்த சில வாரங்களில் தமிழ்நாட்டில் கோவிட் - 19 நோய்க்கான சிகிச்சையில் பல முன்னேற்றங்கள் எட்டப்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
தொற்று ஏற்பட்ட மாநிலங்களில் உள்ள இறப்பு விகிதத்தைவிட தமிழ்நாட்டில் மிகக் குறைவு.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:












