ரஜினிகாந்த் உடல்நிலை: ஹைதராபாத் மருத்துவமனையில் இன்று மீண்டும் பரிசோதனை

நடிகர் ரஜினி காந்த்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, நடிகர் ரஜினி காந்த் - கோப்புப் படம்.

படப்பிடிப்புக்காக ஹைதராபாத் சென்ற நடிகர் ரஜினிகாந்த், ரத்த அழுத்தத்தில் ஏற்பட்ட சீரற்ற நிலை காரணமாக அங்குள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். அவரது உடல்நிலையை மிக உன்னிப்பாக கவனித்து வருவதாக மருத்துவர்கள் தெரிவத்துள்ளனர்.

அவரது உடல் நிலை தொடர்பாக வெள்ளிக்கிழமை இரவு மருத்துவர்கள் கூறுகையில், "ரஜினிகாந்தின் உடல்நிலை சீராக உள்ளது. அவரது உடல்நிலை மிகவும் நெருக்கமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. அவரது ரத்த அழுத்தம் கட்டுப்பாட்டில் இருக்க சரியான அளவு மருந்துகள் தரப்படுகின்றன. இன்றிரவு மருத்துவமனையில் அவர் தங்கியிருப்பார். நாளை (சனிக்கிழமை) அவரது உடல்நிலை எப்படி இருக்கிறது என்பதை பொறுத்து அவருக்கு பரிசோதனைகள் செய்யப்படும். தற்போதைக்கு அவர் ஓய்வெடுத்து வருகிறார்" என்று தெரிவித்தனர்.

ரஜினிகாந்த் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டது குறித்து கேள்விப்பட்ட தெலங்கானா ஆளுநர் தமிழிசை செளந்தர்ராஜன், அவர் விரைவில் குணமடைய பிரார்த்திப்பதாக கூறியுள்ளார்.

X பதிவை கடந்து செல்ல
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

X பதிவின் முடிவு

ரஜினிகாந்த் முழு ஓய்வில் இருக்க வேண்டும் என்பதால் அவரைப் பார்க்க யாரும் வர வேண்டாம் என்று அவரது குடும்பத்தினரும், மருத்துவர்களும் கேட்டுக்கொண்டுள்ளனர்.

முன்னதாக, ரஜினிகாந்த் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட தகவலையறிந்து ஹைதராபாதில் உள்ள அவரது ரசிகர்கள் மருத்துவமனை வெளியே திரண்டு வருகிறார்கள்.

நடிகர் ரஜினிகாந்த் ஹைதராபாதில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருக்கும் தகவலை அந்த மருத்துவமனை வெள்ளிக்கிழமை உறுதிப்படுத்தியது. அவரது உடல்நிலை தொடர்பாக அந்த மருத்துவமனை பிற்பகலில் வெளியிட்ட செய்திக்குறிப்பில், "தற்போது ரஜினிக்கு கொரோனா தொற்று அறிகுறி ஏதும் இல்லையென்றாலும் அவருடைய ரத்த அழுத்தத்தில் ஏற்றத் தாழ்வு காணப்படுவதாகவும் அது தொடர்பாக மேலும் பரிசோதனைகளை செய்ய வேண்டியிருப்பதால் அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருக்கிறார்" என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அப்பல்லோ மருத்துவமனை விடுத்த செய்திக் குறிப்பு

பட மூலாதாரம், Apollo hospitals

படக்குறிப்பு, ரஜினி உடல் நிலை குறித்து அப்பல்லோ மருத்துவமனை விடுத்த செய்திக் குறிப்பு.

ரத்த அழுத்த மாறுபாடு மற்றும் சோர்வைத் தவிர, ரஜினிக்கு வேறு பிரச்னைகள் இல்லை என்று அந்த மருத்துவமனை தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், நடிகர் ரஜினிகாந்தின் உடல்நிலை தொடர்பாக திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், அவரது குடும்பத்தினரை தொடர்பு கொண்டு பேசியிருக்கிறார். ஆந்திர நடிகர் பவன் கல்யாணும் ரஜினியின் உடல் நிலை தொடர்பாக அங்குள்ள மருத்துவர்களைத் தொடர்பு கொண்டு விவரங்களை விசாரித்ததாக தெரிவித்துள்ளார். ரஜினி விரைவில் உடல் நலன் பெற பிரார்த்திப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

அண்ணாத்த படப்பிடிப்பில் நடந்த சம்பவம்

ரஜினிகாந்த் தற்போது சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், சிவா இயக்கத்தில் அண்ணாத்தே என்ற படத்தில் நடித்துவருகிறார். கொரோனா பரவல் காரணமாக படப்பிடிப்பு நிறுத்தப்பட்டிருந்தது. சினிமா படப்பிடிப்புகளுக்கு அரசு அனுமதி அளித்த பிறகு, அந்தப் படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாதில் மீண்டும் துவங்கியது. இதற்காக தனி விமானத்தில் அவர் ஹைதராபாத் சென்று, படப்பிடிப்பில் பங்கேற்றார்.

இந்த நிலையில், அந்தப் படப்பிடிப்புக் குழுவைச் சேர்ந்த நான்கு பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து. படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. டிசம்பர் 22ஆம் தேதி நடத்தப்பட்ட சோதனையில் ரஜினிகாந்துக்கு கொரோனா தொற்று இல்லை எனத் தெரியவந்தாலும் அவர் தன்னை தனிமைப்படுத்திக்கொண்டார்.

தற்போது 70 வயதை நிறைவுசெய்திருக்கும் ரஜினிகாந்த், சில ஆண்டுகளுக்கு முன்பாக சிறுநீரக மாற்று அறுவைசிகிச்சை செய்துகொண்டார். அதற்கு சில ஆண்டுகளுக்கு முன்பாக உடல் நலம் மிகவும் பாதிக்கப்பட்டு சிங்கப்பூரில் சிகிச்சை எடுத்துக்கொண்டார்.

வரும் சட்டமன்றத் தேர்தலுக்காக அரசியலில் ஈடுபடப்போவதாக அறிவித்துள்ள ரஜினிகாந்த், தன்னுடைய அரசியல் கட்சி ஜனவரி மாதம் எந்த தேதியில் தொடங்கப்படும் என்று டிசம்பர் 31ம் தேதி அறிவிக்கப்போவதாக கூறியிருந்தார்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :