IND vs AUS பாக்ஸிங் டே டெஸ்ட்: பும்ரா, அஷ்வின் பந்துவீச்சால் முதல் நாளில் 195 ரன்களில் சுருண்ட ஆஸ்திரேலியா

IND vs AUS: 2வது டெஸ்ட்

பட மூலாதாரம், Daniel Pockett - CA via getty images

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நடந்து வரும் பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டி மெல்பர்னில் இன்று நடைபெற்றது.

இந்தப் போட்டியின் முதல் இன்னிங்சில் 195 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது ஆஸ்திரேலிய அணி.

ஆஸ்திரேலிய அணியை தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் மயங்க் அகர்வால் ரன் ஏதும் எடுக்காமல் அவுட் ஆனார். இந்திய தரப்பில் முதல் முறையாக களமிறங்கும் ஷுப்மன் கில் ஆட்டமிழக்காமால் 28 ரன்களையும், புஜாரா 7 ரன்களையும் எடுத்தும் மொத்தம் ஒரு விக்கெட் இழப்பிற்கு 36 ரன்களை சேர்த்துள்ளனர்.

சிறப்பான பந்துவீச்சு

இந்தியப் பந்து வீச்சாளர்களில் ஜஸ்பிரித் பும்ரா நான்கு விக்கெட்டுகளையும், தமிழக வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் மூன்று விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

ஆஸ்திரேலியா விளையாடிய கடைசி 11 ஓவர்களில் ஐந்து விக்கெட்டுகளை இழந்தது. அவற்றில் இரண்டைக் கைப்பற்றினார் பும்ரா.

இந்திய நேரப்படி இன்று (டிசம்பர் 26) காலை 05 மணிக்கு தொடங்கிய இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பேட்டிங்கை தேர்வு செய்தது.

இந்தப்போட்டியில் முதல் 15 ஓவர்களுக்குள்ளேயே ஆஸ்திரேலியா 3 விக்கெட்டுகளை இழந்தது.

இந்திய அணி தொடக்கத்தில் இருந்தே சிறப்பாக பந்து வீசியது. ஜஸ்ப்ரீத் பும்ரா 16 ஓவர்களை வீசி 56 ரன்களை விட்டுக் கொடுத்து நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

ரவிச்சந்திரன் அஷ்வின் 24 ஓவர்களை வீசி 35 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்து மேத்யூ வேட், ஸ்டீவ் ஸ்மித் போன்ற முக்கிய விக்கெட்டுகள் உட்பட மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார். இந்த இன்னிங்ஸில் அதிக ஓவர்களை வீசிய அஸ்வின், தன் எகானமியை 1.46 ஆக வைத்திருந்தார்.

புதிதாக களமிறங்கிய மொஹம்மத் சிராஜ் 15 ஓவர்களை வீசி 40 ரன்களை விட்டுக் கொடுத்து இரு விக்கெட்டுகளையும், ஜடேஜா 5.3 ஓவர்களை வீசி ஒரு விக்கெட்டையும் வீழ்த்தியிருக்கிறார்கள்.

X பதிவை கடந்து செல்ல
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

X பதிவின் முடிவு

ஜோ பர்ன்ஸ் மற்றும் ஸ்டீவென் ஸ்மித் ஆகியோர் தலா 10 மற்றும் 8 பந்துகளை எதிர்கொண்டு ஒரு ரன்னைக் கூட எடுக்காமல் டக் அவுட் ஆயினர்.

மேத்யூ வேட் நிதானமாக ரன்களைக் குவிக்கத் தொடங்கினர். ஆனால் நிதானம் காட்டிய வேடை, தன் 13-வது ஓவரில் வேட்டையாடினார் அஷ்வின்.

15-வது ஓவரில் 38 ரன்களுக்கு மூன்று விக்கெட்டுகளை இழந்திருந்த ஆஸ்திரேலியாவை கரை சேர்க்கும் விதத்தில், ட்ராவிஸ் ஹெட் & மார்னஸ் ஜோடி நங்கூரமிட்டு நின்றது.

இந்த ஜோடி 167 பந்துகளை எதிர்கொண்டு 86 ரன்களைக் குவித்தது. பும்ரா வீசிய 42-வது ஓவரில் ட்ராவிஸ் விக்கெட் பறிபோனது. இந்த வெற்றிகரமான இணையும் பிரிந்தது. ட்ராவிஸ் 92 பந்துகளை எதிர்கொண்டு 38 ரன்களை எடுத்திருந்தார். அப்போது ஆஸ்திரேலியா 124 ரன்களுக்கு நான்கு விக்கெட்டுகளை இழந்திருந்தது.

IND vs AUS கிரிக்கெட்: 2வது டெஸ்ட்

பட மூலாதாரம், QUINN ROONEY/GETTY IMAGES

ட்ராவிஸைத் தொடர்ந்து நிதானமாக ஆடி வந்த மார்னஸின் விக்கெட்டை மொஹம்மத் சிராஜ் 50-வது ஓவரில் வீழ்த்தினார். 132 பந்துகளை எதிர்கொண்டு 48 ரன்களைக் குவித்திருந்தார் மார்னஸ். மார்னஸின் விக்கெட் வீழ்ந்த போது ஆஸ்திரேலியா 134 ரன்களுக்கு ஐந்து விக்கெட்களை இழந்திருந்தது.

ட்ராவிஸ் விக்கெட் வீழ்ந்த பிறகு களமிறங்கிய கேமரூன் க்ரீன் 60 பந்துகளை எதிர்கொண்டு 12 ரன்களை மட்டும் எடுத்து, மொஹம்மத் சிராஜ் வீசிய 62-வது ஓவரில் எல்.பி.டபிள்யூ ஆனார். 155 ரன்களுக்கு ஆறு விக்கெட்டுகளை இழந்த ஆஸ்திரேலியா திணறியது அப்பட்டமாகத் தெரிந்தது.

மார்னஸின் விக்கெட் இழப்புக்குப் பிறகு டிம் பெயின் பேட்டிங் செய்யவந்தார். 38 பந்துகளை எதிர்கொண்டு 13 ரன்களை மட்டும் எடுத்து, தன் விக்கெட்டை அஷ்வின் வீசிய 63-வது ஓவரில் பறிகொடுத்தார்.

66 ஓவர் முடிவில் ஆஸ்திரேலியா 162 ரன்களுக்கு ஏழு விக்கெட்டுகளை இழந்தது. அதன் பின் பேட்டிங் செய்ய வந்த பந்துவீச்சாளர்களை விரைவாக, பெவிலியனுக்கு அனுப்பினர் இந்திய பந்துவீச்சாளர்கள்.

IND vs AUS டெஸ்ட்: முதல் இன்னிங்சில் 195 ரன்களில் சுருண்ட ஆஸ்திரேலியா

பட மூலாதாரம், QUINN ROONEY / getty images

ஒட்டுமொத்தமாக 72.3 ஓவர் முடிவில் 195 ரன்களை எடுத்து 10 விக்கெட்டுகளைப் பறிகொடுத்தது ஆஸ்திரேலியா.

இதற்கு முன்பு அடிலெய்டில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா தோல்வியடைந்ததால் நான்கு போட்டிகள் கொண்ட இந்தத் தொடரில் ஆஸ்திரேலியா 1-0 என முன்னிலை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

முதல் டெஸ்ட் போட்டியின் 2வது இன்னிங்சில் இந்தியா எடுத்த 36 ரன்கள்தான் இந்திய அணி டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றிலேயே மிகவும் குறைந்தபட்ச ரன்கள் ஆகும்.

விராட் கோலி தனது மனைவியின் பிரசவத்திற்காக இந்தியா திரும்பி உள்ளதால் இந்த போட்டியில் விளையாட வில்லை.

இதன் காரணமாக அஜிங்க்யா ரஹானே இந்த போட்டியில் இந்தியாவின் கேப்டனாக செயல்படுகிறார்.

இந்திய அணி சார்பில் நடராஜன், வாசிங்டன் சுந்தர் ஆகிய தமிழக வீரர்கள் களம் இறங்கவில்லை.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :