நேரலை, காமனெயி கொல்லப்பட்டது குறித்து பாகிஸ்தான் கூறியது என்ன?

தமிழ்நாடு, இந்தியா, இலங்கை, உலகம் மற்றும் விளையாட்டு தொடர்பான சமீபத்திய நிகழ்வுகள் பற்றிய தகவல்களை இந்த பக்கத்தில் பார்க்கலாம்.

முக்கிய சாராம்சம்

நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு

  1. காமனெயி கொல்லப்பட்டது குறித்து பாகிஸ்தான் கூறியது என்ன?

    சர்தார் அயாஸ் சாதிக்

    பட மூலாதாரம், Getty Images

    படக்குறிப்பு, சர்தார் அயாஸ் சாதிக் (கோப்புப்படம்)

    இரானின் அதிஉயர் தலைவர் ஆயதுல்லா அலி காமனெயி மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் கொல்லப்பட்டதற்கு பாகிஸ்தான் சபாநாயகர் சர்தார் அயாஸ் சாதிக் 'ஆழ்ந்த இரங்கலை' தெரிவித்துள்ளார்.

    இரானிய மக்களுடன் துணைநிற்பதாக தெரிவித்துள்ள அவர், மத்திய கிழக்கின் தற்போதைய நிலைமையை 'தீவிரமானது மற்றும் கவலைக்குரியது' என்று விவரித்தார்.

    இது "சர்வதேச சட்டத்தை மீறிய செயல்" கூறிய அவர், நாட்டுத் தலைவர்களை நேரடியாக குறிவைக்கக்கூடாது என்றும் தெரிவித்தார்.

    பிராந்தியத்தில் நடந்து வரும் மோதல்கள் உலகம் முழுவதும் உறுதியற்ற தன்மை, பதற்றம் மற்றும் பெரும் மோதல்களின் அபாயத்தை அதிகரிக்கக் கூடும் என்று அவர் கூறினார்.

    "இந்த கடினமான நேரத்தில் நாடாளுமன்றம், அரசாங்கம் மற்றும் பாகிஸ்தான் மக்கள் இரான் மக்களுடன் துணை நிற்கின்றனர்” என்று அவர் தெரிவித்தார்.

  2. 'மக்கள் தூதரகத்துக்கு வர வேண்டாம்' - குவைத்தில் அமெரிக்க தூதரகம் அறிவுறுத்தல்

    குவைத் தூதரகம்

    பட மூலாதாரம், AFP via Getty Images

    குவைத்தில் உள்ள அமெரிக்க தூதரகம், மக்கள் தூதரகத்துக்கு வர வேண்டாம் என்றும், தங்கள் வீடுகளில் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளது.

    ஏ.எஃப்.பி மற்றும் ராய்ட்டர்ஸ் செய்தி முகமைகளின் படி, குவைத்தில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் இருந்து அல்லது அதற்கு அருகே புகை எழுவதைக் காணக்கூடிய நேரத்தில் இந்த அறிவிப்பு வந்துள்ளது.

    "தூதரகத்துக்கு வராதீர்கள். உங்கள் வீட்டின் கீழ் தளத்தில், ஜன்னல்களிலிருந்து விலகி இருங்கள், வெளியே செல்ல வேண்டாம்" என்று தூதரகத்தின் வலைத்தளத்தில் வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

    இது தவிர, அமெரிக்க குடிமக்கள் சாத்தியமான தாக்குதல்களுக்கு தயாராக இருக்கவும், விழிப்புடன் இருக்கவும், பாதுகாப்பு நடவடிக்கைகளைத் திட்டமிடவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

    அமெரிக்க தூதரக ஊழியர்கள் 'அந்தந்த இடங்களில் பாதுகாப்பாக' உள்ளனர் என்றும் கூறப்பட்டுள்ளது.

  3. "திமுகவுடன் பேரம் பேசும் கட்சி நாங்கள் அல்ல" - திருமாவளவன்

    தொல் திருமாவளவன்

    பட மூலாதாரம், THIRUMA OFFICIAL FACEBOOK page

    திமுகவுடன் பேரம் பேசும் கட்சி நாங்கள் அல்ல என, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

    திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் டி.ஆர். பாலு தலைமையிலான தொகுதிப் பங்கீட்டு பேச்சுவார்த்தைக் குழுவுடன் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் தனது கட்சி நிர்வாகிகளுடன் சென்று பேச்சுவார்த்தை நடத்தினார்.

    அதன்பின், திருமாவளவன் செய்தியாளர்களிடம் பேசியதாவது:

    “இதுவொரு வழக்கமான தேர்தல் அல்ல. தமிழ்நாட்டில் வலதுசாரி சக்திகளை காலூன்ற விடாமல் தடுக்க வேண்டும் என்ற பொறுப்புணர்வுடன் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வெற்றியை 100% உறுதி செய்ய வேண்டும் என்ற இலக்குடன் கூட்டணியில் விசிகவும் ஒரு அங்கம் என்ற உரிமையுடன் கருத்துகளை பகிர்ந்துகொண்டோம்.

    திமுகவுடன் பேரம் பேசும் கட்சியாக நாங்கள் இல்லை. கூட்டணியை வெற்றி பெற செய்ய வேண்டும் என்ற புரிதலுடன் எங்களுக்கான அதிகாரப் பகிர்வு குறித்து எங்களின் கருத்துகளை கூறியிருக்கிறோம். எங்கள் கருத்துகளை திமுக கேட்டுக்கொண்டது. தலைவருடன் விவாதித்த பின்னர் அழைப்பு விடுப்பதாக கூறியிருக்கின்றனர். பேச்சுவார்த்தை சுமூகமாக, சிறப்பாக நடைபெற்றது.” என்றார்.

    பேச்சுவார்த்தையில் எந்தெந்த தொகுதிகள் என்பதை தாங்கள் பேசவில்லை என்றும் அதிகாரப் பகிர்வு என்பது தங்களின் வலிமைக்கு ஏற்ப, பங்களிப்புக்கு ஏற்ப அமைய வேண்டும் என்பதை தெளிவுப்படுத்தியிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

    “அதிகாரப் பகிர்வு என்பது தொகுதிகளைத்தான் குறிப்பிடுகிறோம். 2000களின் தொடக்கத்தில் இருந்து ஆட்சி அதிகார பகிர்வை கோரினோம். ஆனால், தமிழக அரசியல் சூழல் அதற்கேற்ப கனியவில்லை. அதனால் நாங்கள் இப்போது அதை கேட்கவில்லை. எத்தனை தொகுதிகள் எங்களுக்கு வேண்டும் என்பதை தெளிவுபடுத்தியிருக்கிறோம். முடிவானவுடன் தெரிவிப்போம். மாநிலங்களவை பற்றி நாங்கள் பேசவில்லை. புதுச்சேரியில் ஒரு பொதுத்தொகுதி உட்பட இரண்டு தனித்தொகுதிகள் என 3 தொகுதிகளை கேட்டிருக்கிறோம்.” என்றார்.

    இழுபறி நடந்தாலும் காங்கிரஸ் திமுக கூட்டணியில் தான் இருக்கும் என்றும் கட்டுக்கோப்பாக தேர்தலை சந்திக்கும் என்ற நம்பிக்கை தனக்கு இருப்பதாகவும் திருமாவளவன் கூறினார்.

  4. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை 'கிடுகிடு' உயர்வு

    எண்ணெய் விலை

    பட மூலாதாரம், Getty Images

    இரான் மீதான அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் தாக்குதல்களைத் தொடர்ந்து, உலகளவில் எண்ணெய் விலை உயர்வு கண்டுள்ளன.

    திங்கட்கிழமை காலை ஆசியாவில் சந்தைகள் திறந்தபோது, ​​பிரெண்ட் (Brent) கச்சா எண்ணெய் மற்றும் நிமெக்ஸ் லைட் ஸ்வீட் எண்ணெய் (Nymex light sweet oil) இரண்டும் 10 சதவிகிதத்துக்கும் மேலாக உயர்ந்தன, இருப்பினும் அவை பின்னர் சற்று மீண்டன.

    காலை 5 மணியளவில், பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை கிட்டத்தட்ட 9 சதவிகிதம் உயர்ந்து ஒரு பீப்பாய்க்கு 79.30 டாலராக இருந்தது, அதே நேரத்தில், நிமெக்ஸ் கிட்டத்தட்ட 8.5 சதவிகிதம் உயர்ந்து ஒரு பீப்பாய்க்கு 72.70 டாலராக இருந்தது.

    இஸ்ரேலும் அமெரிக்காவும் முதலில் சனிக்கிழமை காலை இரானைத் தாக்கின. இரானின் அதிஉயர் தலைவர் ஆயதுல்லா அலி காமனெயி உட்பட இரானிய ராணுவத் தளபதி அப்துல் ரஹீம் மௌசவி மற்றும் பாதுகாப்பு அமைச்சர் மேஜர் ஜெனரல் அஜீஸ் நசிர்ஸாதே ஆகியோரும் அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய தாக்குதல்களில் கொல்லப்பட்டனர். பதிலடியாக, அண்டை நாடுகளில் உள்ள அமெரிக்காவின் ராணுவ தளங்களை இரான் தாக்கி வருகிறது.

  5. இரானுக்கு வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சில் எச்சரிக்கை

    இரானை எச்சரிக்கும் நாடுகளில் சௌதி அரேபியாவும் ஒன்று.

    பட மூலாதாரம், Getty Images

    படக்குறிப்பு, இரானை எச்சரிக்கும் நாடுகளில் சௌதி அரேபியாவும் ஒன்று.

    இரானிய தாக்குதல்களால் ஏற்பட்ட சேதங்கள் குறித்து விவாதிக்க வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சில் (GCC) உறுப்பு நாடுகள் ஞாயிற்றுக்கிழமை கூடின.

    இரானின் தாக்குதலில் பொதுச் சொத்துகள் மற்றும் மக்களின் குடியிருப்புப் பகுதிகளும் குறிவைக்கப்பட்டதாக அந்த அமைப்பு கூறுகிறது.

    ஐக்கிய அரபு அமீரகம் (UAE), பஹ்ரைன், சௌதி அரேபியா, ஓமன், கத்தார் மற்றும் குவைத் ஆகியவை ஜிசிசியில் உள்ளன.

    இந்த நாடுகள் அனைத்தும் இரானின் தாக்குதல்களைக் கண்டித்துள்ளன. இரான் தங்கள் இறையாண்மை மற்றும் சர்வதேச சட்டத்தை மீறுவதாக அவை குற்றம் சாட்டின.

    ஜிசிசி வெளியிட்ட அறிக்கையில், தாக்குதலை நிறுத்துமாறு இரானை கேட்டுக்கொண்டது.

    தங்களை பாதுகாக்க 'தேவையான அனைத்து நடவடிக்கைகளும்' எடுக்கப்படும் என்று அந்த குழு எச்சரித்தது.

  6. வணக்கம் நேயர்களே!

    பிபிசி தமிழின் நேரலை பக்கத்திற்கு வரவேற்கிறோம். தமிழ்நாடு, இந்தியா, இலங்கை மற்றும் உலகளாவிய சமீபத்திய செய்திகள்முக்கிய நிகழ்வுகள்மற்றும் நேரடித் தகவல்களை உடனுக்குடன் இங்கே பெறலாம். இன்று மதியம் வரை செய்திகளை தொகுத்து வழங்குவது நந்தினி வெள்ளைச்சாமி