விவசாயிகள் போராட்டம் எதற்காக? புதிய விவசாய சட்டம் என்ன சொல்கிறது? Farmer Protest Reason

பட மூலாதாரம், NurPhoto
- எழுதியவர், மயூரேஷ் கொன்னூர்
- பதவி, பிபிசி மராத்தி
பஞ்சாப், ஹரியாணா மற்றும் வேறு சில மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் தேசத்தின் தலைநகர் டெல்லியின் எல்லையில் பல நாட்களாக முகாமிட்டு போராடி வருகின்றனர்.
மூன்று புதிய வேளாண் சட்டங்களையும் ரத்து செய்ய வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அந்தப் போராட்டத்துக்கும், டிசம்பர் 8 ஆம் தேதி விடுத்த `பாரத் பந்த்' போராட்டத்திற்கும் பல்வேறு விவசாயிகள் அமைப்புகளும், எதிர்க்கட்சிகளும் ஆதரவு அளித்துள்ளன.
மத்திய அரசுடன் தொடர்ச்சியாக நடந்த பேச்சுவார்த்தைகள் தோல்வி அடைந்துவிட்டன. தங்கள் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரையில் போராட்டத்தைத் தொடரப் போவதாக விவசாயிகள் கூறியுள்ளனர். நாடாளுமன்றத்தைக் கூட்டி 3 வேளாண் சட்டங்களை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஆனால் அந்த சட்டங்களை முழுமையாக ரத்து செய்வதற்குப் பதிலாக, சர்ச்சைக்குரிய பகுதிகளைத் திருத்தம் செய்வதற்கு மத்திய அரசு தயாராக உள்ளது. இந்தச் சட்டங்களைப் பார்த்து விவசாயிகள் அச்சப்பட எதுவும் இல்லை என்று அரசு கூறுகிறது.
இந்தப் போராட்டம் எதற்காக நடக்கிறது என்ற அடிப்படைக் கேள்வி நிறைய வாசகர்களுக்கு இருக்கிறது. கூகுள் தேடலில் அதிகம் கேட்கப்பட்ட கேள்விகளில் சிலவற்றுக்கு எளிய நடையில் நாங்கள் விளக்கம் அளிக்க முற்பட்டிருக்கிறோம்.
இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
YouTube பதிவின் முடிவு, 1
1. இந்தியாவில் விவசாயிகள் ஏன் போராட்டம் நடத்தி வருகிறார்கள்?
வேளாண் துறை தொடர்பாக கடந்த செப்டம்பர் 20 மற்றும் 22ஆம் தேதிகளில் இந்திய நாடாளுமன்றத்தில் மூன்று வேளாண் மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன. குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் இந்த மசோதாக்களுக்கு செப்டம்பர் 27ஆம் தேதி ஒப்புதல் அளித்ததும் அவை சட்ட வடிவத்தைப் பெற்றன. அந்த சட்டங்களின் பல்வேறு அம்சங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
ஏற்கெனவே செயல்பட்டுக் கொண்டிருக்கும் ஏ.பி.எம்.சி. மண்டிகளுடன், தனியார் துறையினரும் ஒப்பந்த அடிப்படையில் வேளாண் உற்பத்தி, கொள்முதல், சேமிப்பு மற்றும் வர்த்தகத்தில் ஈடுபட இந்தச் சட்டங்கள் வகை செய்கின்றன. வேளாண் உற்பத்திப் பொருள்களை, குறிப்பாக கோதுமை மற்றும் நெல் கொள்முதலை அரசு படிப்படியாகக் குறைத்து, கடைசியில் கொள்முதல் செய்வதையே நிறுத்திவிடும் என்றும், அதனால் மார்க்கெட்டை இயக்கும் சக்தியாக இருக்கப் போகும் தனியாரைச் சார்ந்தே தாங்கள் இருக்க வேண்டியிருக்கும் என்றும் விவசாயிகள் அச்சம் தெரிவிக்கின்றனர்.
எனவே, இந்தச் சட்டங்கள் தனியாருக்கு பயன் தருவதாகத்தான் இருக்குமே தவிர, குறைந்பட்ச ஆதார விலை (எம்.எஸ்.பி.) நடைமுறை கைவிடப்படுவதால் விவசாயிகள் தான் சிரமத்துக்கு ஆளாவார்கள் என்றும் விவசாயிகள் அஞ்சுகின்றனர்.
ஏ.பி.எம்.சி. மண்டிகள் நடைமுறை கைவிடப்படும் அல்லது மூடப்படும் அல்லது எம்.எஸ்.பி. முறை கைவிடப்படும் என்பது குறித்து சட்டங்களில் எதுவும் குறிப்பிடப்படவில்லை என்றாலும், இந்தச் சட்டங்களின் மூலம் களத்தில் இறங்கும் தனியார் துறையினரால் கடைசியில் அந்த சூழ்நிலைதான் உருவாகும் என்று விவசாயிகள் கூறுகின்றனர்.
2019-20 ஆம் ஆண்டில் பஞ்சாப் மற்றும் ஹரியானாவில் கோதுமை மற்றும் உணவு தானியம் கொள்முதல் செய்ததில் விவசாயிகளுக்கு அரசு சுமார் ரூ.80 ஆயிரம் கோடி பணம் பட்டுவாடா செய்தது. அதில் பெரும்பாலானவர்கள் சிறிய மற்றும் விளிம்புநிலை விவசாயிகள். தனியார் இத் துறையில் நுழைவதால் உணவு தானியங்களை அரசு கொள்முதல் செய்வது குறையும் அல்லது கைவிடப்படும் என்ற அச்சத்தில், வேளாண்மை அவசரச் சட்டங்களுக்கு எதிராக பஞ்சாப் விவசாயிகள் ஜூன் - ஜூலை மாதங்களில் போராட்டங்களில் ஈடுபட்டனர். அதே அச்சங்களைக் குறிப்பிட்டு ஹரியாணா விவசாயிகள் செப்டம்பர் மாதம் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பஞ்சாப், ஹரியாணாவில் மாதக் கணக்கில் போராட்டங்கள் நடந்த நிலையில், மாநிலங்களில் இருந்து அரசியல்வாதிகள் குரல் எழுப்பியும், இந்தப் பிரச்சினை குறித்து போராட்டக்காரர்களுக்கும் மத்திய அரசுக்கும் இடையில் முறைப்படியான பேச்சுவார்த்தை எதுவும் நடைபெறவில்லை.
போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் நவம்பர் 26 மற்றும் 27 தேதிகளில் தலைநகர் டெல்லியின் எல்லையை அடைந்த போது, அவர்களை சமாதானப்படுத்துவதற்காக விவசாய அமைப்புகளுடன் அரசு தொடர் பேச்சுவார்த்தை நடத்தியது. வேறு சில மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகளும், பஞ்சாப், ஹரியானா விவசாயிகளுடன் இணைந்து கொண்டுள்ளனர்.
2. அந்த 3 வேளாண் மசோதாக்கள் என்ன? விவசாயிகள் ஏன் அவற்றை எதிர்க்கிறார்கள்?

பட மூலாதாரம், Getty Images
இப்போது விவாதத்துக்கு உள்ளாக்கப்பட்டுள்ள, போராட்டத்துக்குக் காரணமாக இருக்கும் மூன்று வேளாண் மசோதாக்கள்:
- வேளாண் விளைபொருள் வர்த்தகம் மற்றும் வணிகம் (ஊக்குவித்தல் மற்றும் வசதி ஏற்படுத்துதல்) மசோதா, 2020
- விலை உத்தரவாதம் மற்றும் வேளாண் சேவைக்கான விவசாயிகள் (அதிகாரம் அளிப்பு மற்றும் பாதுகாப்பு) ஒப்பந்த மசோதா 2020
- அத்தியாவசியப் பொருட்கள் (திருத்த) மசோதா 2020
வேளாண் ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்கள் அல்லது ஏ.பி.எம்.சி. மண்டிகளிலும், மண்டிகளுக்கு வெளியிலும் வேளாண் விளைபொருள்களை விவசாயிகள் வாங்கவோ, விற்கவோ இந்தச் சட்டங்கள் வகை செய்கின்றன.
இந்த விதிமுறைக்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். ஏ.பி.எம்.சி.களுக்கு வெளியில் தாங்கள் விற்பனை செய்தால், `சந்தை விலையை' தரும்போது அரசுக்கு நட்டம் ஏற்படும் என்று விவசாயிகள் கூறுகின்றனர். ஏ.பி.எம்.சி.கள் இல்லாமல் போய்விட்டால், இடைத்தரகர்கள் மற்றும் கமிஷன் ஏஜென்ட்கள் நிலை என்னவாகும் என்றும் அவர்கள் கேட்கின்றனர். இந்தச் சட்டங்கள் அமலுக்கு வந்தால் குறைந்தபட்ச ஆதார விலை முறை கிடைக்காமல் போய்விடும் என்று விவசாயிகள் அச்சம் தெரிவிக்கின்றனர்.
ஒழுங்கமைக்கப்பட்ட ஒப்பந்த வேளாண்மை முறைக்கு புதிய சட்டங்கள் அனுமதி அளிக்கின்றன. எனவே விவசாயிகள் இப்போது மொத்த விற்பனை வணிகர்கள், பதப்படுத்தல் தொழில் நிறுவனங்கள் மற்றும் தனியார் நிறுவனங்களுடன் சட்டபூர்வ ஒப்பந்தங்கள் செய்து கொள்ளலாம். வேளாண் பொருள் சாகுபடி, உற்பத்தி மற்றும் அவற்றை விற்பதற்கு இந்த ஒப்பந்தங்கள் வகை செய்யும். பேச்சுவார்த்தை மூலம் விலைகளை முடிவு செய்து, ஒப்பந்தத்தில் நிர்ணயம் செய்து கொள்ளலாம். இந்த நடைமுறையில் இடைத்தரகர்கள் இல்லை என்பதால், விவசாயிகள் முழு லாபத்தையும் பெற முடியும் என்று அரசு கூறுகிறது.
ஆனால், ஒப்பந்த வேளாண்மை முறைக்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். விவசாயிகள் எழுப்பும் இரண்டு முக்கிய ஆட்சேபங்கள்: கிராமப்புறங்களைச் சேர்ந்த விவசாயிகள், தனியார் நிறுவனங்களுடன் நியாயமான விலைக்கு பேரம் பேச முடியுமா என்பது முதலாவது விஷயம். அடுத்ததாக, தரம் குறைவாக இருக்கிறது என்று கூறி, விளைச்சலுக்குப் பிறகு தனியார் ஒப்பந்ததாரர்கள் அதை நிராகரிக்க வாய்ப்பு உண்டு என்பதாக உள்ளது.
அத்தியாவசியப் பொருள்கள் சட்டத்தில் திருத்தங்கள் செய்ததன் மூலம் பயறுகள், அவரை வகைகள், எண்ணெய் வித்துகள், வெங்காயம், உருளைக்கிழங்கு ஆகியவற்றை அத்தியாவசியப் பொருள்கல் பட்டியலில் இருந்து அரசு நீக்கிவிட்டது. இந்தப் பொருள்களை பெரிய சேமிப்புக் கிடங்குகளில் சேமித்து வைப்பதற்கு எந்த வரம்பும் இல்லை என்றும், அதனால் தனியார் முதலீடு ஈர்க்கப்பட்டு, விலை ஸ்திரத்தன்மை இருக்கும் என்றும் அரசு கூறுகிறது.
ஆனால், தனியார் துறையினர் பெருமளவில் இவற்றைப் பதுக்கி வைக்கத் தொடங்குவார்கள், செயற்கையாக பற்றாக்குறை அல்லது பஞ்சத்தை ஏற்படுத்தி சந்தையில் ஆதிக்கம் செலுத்தி ஆதாயம் பார்ப்பார்கள் என்றும், இதில் உற்பத்தியாளர் தான் பாதிக்கப்படுவார் என்றும் விவசாயிகள் கூறுகின்றனர். அந்த நிறுவனங்களின் விருப்பத்துக்கு ஏற்ப மட்டுமே தாங்கள் விளைவிக்க முடியும் என்றும், தங்களுக்குக் குறைவான விலைதான் கிடைக்கும் என்றும் விவசாயிகள் அச்சம் தெரிவிக்கின்றனர்.
இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
YouTube பதிவின் முடிவு, 2
3. விவசாயிகள் கோருவது என்ன, அவற்றை ஏற்க அரசு எந்த அளவுக்குத் தயாராக உள்ளது?
மூன்று சட்டங்களையும் முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என்று விவசாயிகள் கோருகின்றனர். சமீபத்தில் நிறைவேற்றப்பட்ட சட்டங்களில் எந்தத் திருத்தங்கல் செய்வதையும் அவர்கள் விரும்பவில்லை. நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தை மத்திய அரசு கூட்டி மூன்றுசட்டங்களையும் ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகின்றனர்.
எம்.எஸ்.பி. விலைக்கும் குறைவாகக் கொள்முதல் செய்வதை கிரிமினல் குற்றமாக அறிவிக்க வேண்டும் என்றும், உணவு தானியங்களை - குறிப்பாக கோதுமை, நெல் ஆகியவற்றை அரசு கொள்முதல் செய்வதை கட்டாயமாக்கும் வகையில் புதிய சட்டம் இருக்க வேண்டும் என்று விவசாய சங்கங்கள் வலியுறுத்துகின்றன.
சமீபத்தில் நிறைவேற்றப்பட்ட சட்டங்களின் பல்வேறு பிரிவுகள் மற்றும் அம்சங்கள் குறித்து விவசாய தலைவர்களுடன் மத்திய அரசு பேச்சு நடத்தியது. தனியார் துறையினரை ஒழுங்குபடுத்தப்பட்ட, வரியுடன் கூடிய கட்டமைப்புக்குள் கொண்டு வரவும், எம்.எஸ்.பி. முறையை தொடர்வது, ஏ.பி.எம்.சி.களை பலப்படுத்துவது குறித்து எழுத்துபூர்வ உறுதி அளிக்கவும் அரசு தயாராக இருப்பதாக, ஊடகங்களில் வெளியாகும் செய்திகளும், மற்ற தகவல்களும் தெரிவிக்கின்றன.
விவசாயிகள் - தனியாருக்கு இடையில் சர்ச்சைகள் எழுந்தால் உதவிக் கோட்ட மாஜிஸ்ட்ரேட் மூலமாக மட்டுமின்றி, நீதிமன்றங்களை விவசாயிகள் நாடுவதற்கான வசதியும் செய்ய அரசு தயாராக உள்ளது. இந்தத் திருத்தங்களால் மட்டும் விவசாயிகள் திருப்தி கொண்டுவிடவில்லை. இதுவரையில் இதை விவசாயிகள் ஏற்கவில்லை.
4. ஏ.பி.எம்.சி. என்பது என்ன, விவசாயிகள் ஏன் அதுபற்றிப் பேசுகிறார்கள்?

பட மூலாதாரம், Getty Images
வேளாண் விளைபொருள் மார்க்கெட் கமிட்டிகள் (ஏ.பி.எம்.சி.) பல்வேறு மாநிலங்களில், அவர்களின் மாநில சட்டங்களின் கீழ் உருவாக்கப்பட்டன. விவசாயிகள் மாநில ஏஜென்சிகள் அல்லது அங்கீகாரம் பெற்ற வியாபாரிகள் மூலம், ஓர் இடத்தில் தங்கள் விளைபொருள்களை வாங்கவும், விற்கவும் வசதி ஏற்படுத்துவதாக இவை உள்ளன. மகாராஷ்டிராவில் இதுபோல 300கமிட்டிகள் உள்ளன. பிகார் போன்ற மாநிலங்கள் தற்போது இதன் செயல்பாட்டை நிறுத்தி வைத்துள்ளன. 2006 ஆம் ஆண்டில் பிகார் மாநிலம் தனது ஏ.பி.எம்.சி. சட்டத்தை ரத்து செய்தது.
நாடு முழுக்க புதிய வேளாண் பொருளாதாரத்தை உருவாக்க இதுபோன்ற ஏ.பி.எம்.சி.கள் உதவிகரமாக இருந்தன. இந்த மார்க்கெட்களில் நடைபெறும் பரிவர்த்தனைகளுக்கு மாநில அரசு வரி வசூலிக்கலாம். இடைத்தரகர்கள் மற்றும் கமிஷன் ஏஜென்ட்கள் தொடர்பும் மண்டிகளில் அதிகரித்தது. கடந்த காலத்தில் இந்த நடைமுறைக்கு பலரும் ஆட்சேபம் தெரிவித்துள்ளனர். வழக்கத்தில் உள்ள ஏ.பி.எம்.சி. மார்க்கெட்களுக்குப் பதிலாக, புதிய தனியார் ஏற்பாடு செய்யப்பட்டால் விவசாயிகள், நுகர்வோர் என இரு தரப்பாரும் பயன்பெறுவார்கள் என்று அரசு கூறுகிறது.
தங்கள் சேவைகளுக்காக ஏ.பி.எம்.சி. சாதாரணமாக சிறிய சதவீதத்தைக் கட்டணமாக வசூலிக்கிறது என்றால், உத்தேசிக்கப்பட்டுள்ள தனியாரும் ஏ.பி.எம்.சி.க்கு வெளியில் இதே போன்ற கட்டணம் அல்லது சேவை கட்டணம் இல்லாமல் செயல்பட முடியும். குறுகிய காலத்துக்கு தனியார் துறையினர் கவர்ச்சிகரமான விலைகளை விவசாயிகளுக்கு அளிப்பார்கள் என்பதால் ஏ.பி.எம்.சி. மண்டிகள் போட்டியில் பின்னடைவை சந்திக்கும் நிலை ஏற்பட்டு, நட்டம் அடைந்து இறுதியில் மூடப்படலாம் என்று விவசாயிகள் அஞ்சுகின்றனர்.
``ஏ.பி.எம்.சி.களை மூடிவிட வேண்டும் என்று தனியார் துறையினர் விரும்புகின்றனர். விவசாயிகளுக்கும் அதே அச்சம் தான் இருக்கிறது. ஏ.பி.எம்.சி. மூடப்பட்டால், எம்.எஸ்.பி. நடைமுறையும் போய்விடும்'' என்று வேளாண் நிபுணர் தேவிந்தர் சர்மா கூறுகிறார். அப்படியொரு நிலைமை ஏற்படும்போது, மார்க்கெட்டில் தனியார் தான் ஆதிக்கம் செலுத்துவார்கள், அவர்களின் தயவில் தான் விவசாயிகள் விவசாயம் செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்படும் என்று விவசாயிகள் அச்சம் தெரிவிக்கின்றனர்.
5. எம்.எஸ்.பி. என்பது என்ன, விவசாயிகள் ஏன் அதுபற்றிப் பேசுகிறார்கள்?

பட மூலாதாரம், Getty Images
குறைந்தபட்ச ஆதார விலை (எம்.எஸ்.பி.) என்ற நடைமுறை, விவசாயிகளைப் பாதுகாப்பதற்காகக் கொண்டு வரப்பட்டது. வெளிச்சந்தையில் விலை சரிவு ஏற்பட்டால், நிர்ணயிக்கப்பட்ட எம்.எஸ்.பி. விலையில் வேளாண் விளைபொருளை அரசு கொள்முதல் செய்து கொள்ளும். இதனால் விவசாயிகள் நிதி இழப்பு ஏற்படாமல் காப்பாற்றப்படுகிறார்கள்.
குறிப்பிட்ட ஒரு வேளாண் விளைபொருளுக்கு நாடு முழுக்க ஒரே எம்.எஸ்.பி. அமலில் இருக்கும். வேளாண் செலவுகள் மற்றும் விலைகள் கமிஷன் அளிக்கும் தகவல்களின் அடிப்படையில் எம்.எஸ்.பி. விலையை வேளாண்மை அமைச்சகம் முடிவு செய்கிறது.
இப்போது 23 வேளாண் விளைபொருள்களை எம்.எஸ்.பி. விலையில் அரசு கொள்முதல் செய்கிறது. இருந்தபோதிலும், அரசு அதிக அளவில் கொள்முதல் செய்யும் கோதுமை, நெல் தவிர, மற்ற பொருள்களை தனியாரிடம் எம்.எஸ்.பி. விலைக்கு விற்க முடிவதில்லை என்று விவசாயிகள் கூறுகின்றனர்.
மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய வேளாண்மைச் சட்டங்கள், ஏ.பி.எம்.சி.க்கு வெளியில் எந்த விலைக்கும் விவசாயிகள் தங்கள் விளைபொருட்களை விற்க அனுமதி அளிக்கிறது. ஆனால், ஏ.பி.எம்.சி.யில் விற்றாலும் அல்லது வெளியில் விற்றாலும் எம்.எஸ்.பி. விலைக்கு உத்தரவாதம் அளிக்க வேண்டும் என்று விவசாயிகள் கேட்கின்றனர். அந்த உத்தரவாதம் இல்லாமல் போனால், விலைகளைக் குறைத்து விவசாயிகளுக்கு நெருக்கடி ஏற்படுத்துவார்கள் என்று அவர்கள் அஞ்சுகின்றனர். அரசு இப்போது மறுத்தாலும், எம்.எஸ்.பி.யை ரத்து செய்வதற்கான முதல்கட்ட நடவடிக்கையாக இது இருக்கும் என்று விவசாயிகள் கூறுகின்றனர்.
எம்.எஸ்.பி. ரத்து செய்யப்படாது என்றும், அரசின் கொள்முதல் தொடரும் என்றும் பல முறை பிரதமர் நரேந்திர மோதி கூறியுள்ளார். இதுவரையில் அதுகுறித்து எழுத்துபூர்வ உறுதியை அளிக்க அரசு தயாராக இல்லை. முந்தைய சட்டங்களில் எம்.எஸ்.பி. பற்றி எதுவும் குறிப்பிடாத காரணத்தால், புதிய சட்டங்களில் ஏன் அதைக் குறிப்பிட வேண்டும் என்று அரசுத் தரப்பில் கேட்கப்படுகிறது. ஆனால் இதுகுறித்து இரு தரப்பினரும் தொடர்ந்து விவாதித்து வருகின்றனர்.
6. பஞ்சாப் மற்றும் ஹரியாணா விவசாயிகள் ஏன் இவ்வளவு பெரிய அளவில் போராட்டம் நடத்துகிறார்கள்?
தேசிய அளவிலான புள்ளிவிவரங்களை பார்த்தால், அரசு 10 சதவீத வேளாண் விளைபொருட்களை மட்டுமே ஏ.பி.எம்.சி. நெட்வொர்க் மூலம் கொள்முதல் செய்கிறது. ஆனால், பஞ்சாப்பில் மட்டும் 90சதவீத வேளாண் விளைபொருட்கள் ஏ.பி.எம்.சி. மூலம் கொள்முதல் செய்யப்படுகின்றன. ஹரியாணா மற்றும் உத்தர பிரதேசத்திலும் இதே அளவுக்கு நடைபெறுகிறது. அதாவது, இந்த மாநிலங்களில் 10 சதவீத விளைபொருட்கள் மட்டுமே வெளிச் சந்தையில் விற்கப் படுகின்றன.

பட மூலாதாரம், Getty Images
இந்தியா உணவுப் பஞ்சத்தை எதிர்கொண்ட 1960களில் இருந்து, பஞ்சாப், ஹரியானா, மேற்கு உத்தரப்பிரதேச மாநில விவசாயிகளுக்கு மானிய விலையில் கலப்பின விதைகளும், உரங்களும், கிணறுகளுக்கு கடன்களும், இதர வசதிகளும் அளிக்கப்பட்டு வருகின்றன. உணவு தானிய உற்பத்தியில் இந்தியா தன்னிறைவு பெறுவதற்காக இவை செய்யப்பட்டன. எனவே, மத்திய தொகுப்பு உணவுப் பாதுகாப்பிற்காக இந்த மாநிலங்களில் இருந்து பெரும்பாலான கோதுமை மற்றும் நெல் கொள்முதலை மத்திய அரசு செய்கிறது.
இருந்தாலும், இப்போது இந்தியாவில் உணவு உற்பத்தி உபரியாக உள்ளது. அரசு பழைய நடைமுறைகளை திருத்தம் செய்ய விரும்புகிறது. நாட்டில் 6 சதவீத விவசாயிகள் மட்டுமே தங்கள் விளை பொருளுக்கு எம்.எஸ்.பி. விலையைப் பெறுகின்றனர் என்றும், அதில் பெரும்பாலானவர்கள் பஞ்சாப், ஹரியானா மாநிலத்தினர் என்றும் சாந்தகுமார் கமிட்டி கூறியுள்ளது.
இந்த மசோதாக்களுக்கு முன்னதாக, ஜூன் மாதம் அவசரச் சட்டமாக இந்த நடைமுறைகள் அமலுக்கு வந்தபோது, பஞ்சாப் அரசு மற்றும் பஞ்சாப் விவசாய சங்கத்தினர் உடனடியாக எதிர்ப்பு தெரிவித்தனர். பஞ்சாப் முதல்வர் கேப்டன் அமரீந்தர் சிங், மத்திய அரசுக்கு எழுதிய கடிதத்தில் ஏ.பி.எம்.சி. மண்டிகள் பஞ்சாப்பில் ஐந்து தசாப்த காலமாக நன்றாக செயல்பட்டு வருவதாகவும், இந்தியாவின் உணவுப் பாதுகாப்பில் முக்கிய பங்காற்றி இருப்பதாகவும் கூறியுள்ளார். ஹரியாணாவிலும் இதே நிலை தான் உள்ளது. பஞ்சாப் மற்றும் அருகில் உள்ள ஹரியாணா மாநிலங்களில் ஒரே சமயத்தில் போராட்டங்கள் தொடங்கின.
தங்கள் கோரிக்கைகளை செவிகொடுத்து கேட்கவில்லை என்பதால் கோபம் அடைந்த விவசாயிகள் செப்டம்பர் 26 மற்றும் 27 தேதிகளில் டெல்லியை முற்றுகையிடப் போவதாக அறிவித்தனர். தலைநகர் செல்லும் நெடுஞ்சாலையில் தடுப்புகள் அமைத்தும், தண்ணீரை பீய்ச்சி அடித்தும் விவசாயிகளை ஹரியானா காவல் துறையினர் தடுத்த வீடியோக்கள் வெளியான பிறகுதான் மத்திய அரசு இதை கவனத்தில் எடுத்துக் கொண்டதாகத் தெரிகிறது.
பல்வேறு மாநிலங்களில் உள்ள பல்வேறு விவசாய அமைப்புகளும் அவர்களுக்கு ஆதரவு தெரிவித்து, தங்கள் மாநிலங்களில் போராட்டங்கள் நடத்தியுள்ளன. மசோதாக்கள் நிறைவேறறப்பட்ட பிறகு பிகார், உத்தரகாண்ட், இமாச்சலப் பிரதேசம், மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், அசாம், சத்தீஸ்கர், ஒடிசா போன்ற மாநிலங்களில் போராட்டங்கள் தொடர்ந்து வருகின்றன. அகில இந்திய கிஷான் சபா மற்றும் அதனுடன் இணைந்த குழுக்களும் மசோதாக்களை எதிர்த்து, போராட்டங்களுக்கு ஆதரவு தெரிவித்துள்ளன. மகாராஷ்டிராவில் ராஜு ஷெட்டி, பாச்சு காடு போன்ற விவசாய தலைவர்கள் இந்தப் போராட்டங்களுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
ஆர்.எஸ்.எஸ். உடன் தொடர்புடைய விவசாய அமைப்புகளும், இந்த மசோதாவில் சில அம்சங்கள் குறித்து சந்தேகங்கள் எழுப்பியுள்ளன. இந்தச் சட்டங்கள் விவசாயிகள் நலனுக்கானது என்று ஆர்.எஸ்.எஸ். ஆதரவு பெற்ற ``சுதேசி ஜாக்ரன் மஞ்ச்' (எஸ்.ஐ.எம்.) கூறியுள்ளது. ஆனால், எல்லா புதிய சட்டங்களிலுமே மேம்படுத்தலுக்கான வாய்ப்புகள் உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது. ஆர்.எஸ்.எஸ். ஆதரவு பெற்ற `பாரதிய கிசான் சங்கம்' என்ற மற்றொரு விவசாய சங்கம் இந்தப் போராட்டங்களில் பங்கேற்கவில்லை. நாடு முழுக்க பிரதிநிதித்துவம் கொண்ட இந்த அமைப்பு, புதிய சட்டங்கள் குறித்து மகிழ்ச்சி தெரிவிக்கவில்லை, மேம்படுத்த வேண்டிய தேவைகள் இருப்பதாகக் கூறியுள்ளது.
7. போராட்டங்களில் இப்போது என்ன நடைபெறுகிறது? அதன் இப்போதைய நிலை என்ன?
போராட்டத்தின் 13வது நாளான டிசம்பர் 8 ஆம் தேதியன்றும், ஆயிரக்கணக்கான விவசாயிகள் டெல்லியின் வெளி எல்லைகளாக உள்ள சிங்கு, திக்ரி, படர்பூர், காஜிபூர் எல்லைகளில் முகாமிட்டிருந்தனர். டிசம்பர் 8 ஆம் தேதி நாடுதழுவிய பந்த் நடத்தப்பட்டது. பஞ்சாப், ஹரியானா, ராஜஸ்தான் மாநிலங்களைச் சேர்ந்த 40 விவசாய அமைப்புகள், உத்தரப் பிரதேசம், உத்தரகாண்ட் மற்றும் நாட்டின் பிற பகுதிகளைச் சேர்ந்த பல விவசாய அமைப்புகள் இதில் பங்கேற்றன. விவசாயிகள் கூடாரங்கள் அமைத்தும், லாரிகள் மற்றும் டிராக்டர்களிலும் சாலையோரங்களில் தங்கியுள்ளனர். தங்களுக்கான உணவை அங்கேயே சமைத்துக் கொள்கின்றனர். குறைந்தபட்சம் 6 மாதங்களுக்குத் தேவையான பொருட்களுடன் வந்திருந்தாலும், உள்ளூர் மக்கள் அவர்களுக்கு உதவிகள் செய்து வருகின்றனர்.
டிசம்பர் 8ஆம் தேதி டெல்லியில் அதிகாரப்பூர்வமற்ற முறையில் விவசாயிகள் குழுவினரை உள்துறை அமைச்சர் அமித்ஷா சந்தித்துப் பேசினார். அதில் உறுதியான முடிவு எதுவும் எட்டப்படவில்லை.
விவசாயிகள் அழைப்பு விடுத்திருந்த `பாரத் பந்த்'திற்கு உத்தரப் பிரதேசம், பிகார், மேற்குவங்கம், மகாராஷ்டிரா, அசாம் மாநிலங்களில் நல்ல வரவேற்பு இருந்தது. கர்நாடகாவில் விவசாயிகளுக்கு ஆதரவாக அமைதிவழி போராட்டங்கள் நடந்தன. பஞ்சாப் மற்றும் ஹரியாணாவில் இயல்பு வாழ்க்கை முடங்கியது. நாடு முழுக்க பல எதிர்க்கட்சிகள், போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளன.
8. விவசாயிகளின் போராட்டம் குறித்து சமூகத்தின் இதர பிரிவினரும், உலக நாடுகளும் என்ன கூறுகின்றனர்?

பட மூலாதாரம், SAMEER SEHGAL / HINDUSTAN TIMES VIA GETTY IMAGES
அரசியல் கட்சிகள், பாலிவுட் நட்சத்திரங்கள், மாநில நட்சத்திரங்கள், விளையாட்டு வீரர்கள் ஆகியோர் இந்தப் போராட்டங்கள் குறித்து கருத்துகள் தெரிவித்துள்ளனர். பாடகர் - நடிகர் தில்ஜித் தோசன் மற்றும் நடிகை கங்கனா ரனாவத் இடையே ட்விட்டரில் கருத்து மோதல் ஏற்பட்டது. பிபிசி பஞ்சாபி விடியோவில் வெளியான மூத்த பெண்மணி குறித்து கங்கானா தெரிவித்த கருத்தைத் தொடர்ந்து மோதல் ஏற்பட்டது.
புதிய வேளாண் சட்டங்கள் `அதானி அம்பானி சட்டங்கள்' என்று கூறியுள்ள காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி இந்தப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.
பஞ்சாப் மற்றும் ஹரியானாவில் பல்வேறு துறைகளைச் சேர்ந்த பிரபலமானவர்கள் விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு அளித்துள்ளனர். பஞ்சாப் மாநில முன்னாள் முதல்வர் பிரகாஷ்சிங் பாதல், `பத்ம விபூஷண்' விருதை திருப்பி அளித்துவிட்டார். முன்னாள் மத்திய அமைச்சர் எஸ்.எ். திண்ட்சா பத்மஸ்ரீ விருதை திருப்பி அளித்து விட்டார். பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த முன்னாள் ஒலிம்பிக் வீரர்கள், தேசிய விளையாட்டு பயிற்சியாளர்களும் தங்கள் விருதுகளை திருப்பி ஒப்படைத்துவிட்டனர். ஒலிம்பிக் வீரர் விஜேந்தர் சிங் `கேல் ரத்னா' விருதை திருப்பித் தரப் போவதாக அறிவித்துள்ளார்.
இந்தியாவில் அமைதிவழியில் விவசாயிகள் நடத்தும் போராட்டத்துக்கு கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ வெளிப்படையாக ஆதரவு தெரிவித்ததை அடுத்து, இந்தியாவுக்கும் கனடாவுக்கும் இடையிலான தூதரக உறவுகளில் விரிசல் ஏற்பட்டது. கனடா தூதரை வரவழைத்து இந்தியா தனது கண்டனத்தைப் பதிவு செய்தது. பிரிட்டனில் பல எம்.பி.க்கள் விவசாயிகள் போராட்டம் குறித்து கருத்து தெரிவித்துள்ளனர். நியூயார்க் டைம்ஸ், தி கார்டியன் போன்ற சர்வதேச பத்திரிகைகள் இந்தப் போராட்டங்கள் குறித்து கட்டுரைகள் எழுதியுள்ளன.
பிற செய்திகள்:
- தமிழ்நாட்டின் உணவுப் பாதுகாப்பு எதிர்காலம் என்னவாகும்? - டாக்டர் ஜெ. ஜெயரஞ்சன் சிறப்பு நேர்காணல்
- ராஜா சாரி: நிலவில் கால் பதிக்க தகுதி பெற்ற இந்திய வம்சாவளி அமெரிக்க அதிகாரி - யார் இவர்?
- டெல்லி துணை முதல்வர் வீட்டுக்குள் புகுந்து பொருட்களை உடைத்த மர்ம நபர்கள்
- இந்த மாதம் உங்கள் வானில் தெரியும் அற்புத நிகழ்வுகள்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:













