விவசாயிகள் போராட்டம்: விட்டுக்கொடுக்காத மத்திய அரசு, எதிர்ப்புக்குரலை பலவீனப்படுத்த வியூகம்

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், பரணி தரன்
- பதவி, பிபிசி தமிழ்
இந்திய அரசு கொண்டு வந்துள்ள மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராகவும் கொள்முதல் செய்யப்படும் பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலைக்கு உத்தரவாதம் தர வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் நடத்தி வரும் போராட்டம், புதன்கிழமை 14ஆவது நாளை எட்டியிருக்கிறது.
இந்த நிலையில், மத்திய அரசுடன் ஆறாவது சுற்று பேச்சுவார்த்தையை புதன்கிழமை நடத்த இரு தினங்களுக்கு முன்பு தீர்மானிக்கப்பட்டிருந்த நிலையில், செவ்வாய்க்கிழமை குறிப்பிட்ட சில விவசாயிகள் சங்கங்களின் பிரதிநிதிகளுடன் இந்திய உள்துறை அமைச்சர் ஷா பேச்சுவார்த்தை நடத்தினார்.
இதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அகில இந்திய கிசான் சபா பொதுச்செயலாளர் ஹன்னன் மொல்லா, "அரசுடன் புதன்கிழமை திட்டமிட்ட பேச்சுவார்த்தை நடத்தப்படாது. உள்துறை அமைச்சருடன் நடந்த பேச்சுவார்த்தைக்குப் பிறகு மத்திய அரசு சார்பில் ஒரு திட்டம் தரப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அது தொடர்பாக விவசாயிகள் சங்கங்கள் ஆலோசனை நடத்திய பிறகு அடுத்த பேச்சுவார்த்தை குறித்து தீர்மானிப்போம்," என்று கூறினார்.
விவசாயிகளின் கோரிக்கைகள் தொடர்பாக ஏற்கெனவே நடத்தப்பட்ட ஐந்து சுற்று பேச்சுவார்த்தைகளின்போது விவசாய சட்டங்களை திரும்பப் பெற வேண்டும் என்ற கோரிக்கையில் விவசாயிகளும், அந்த சட்டங்களில் உள்ள குறைபாடுகளை விரிவாக சுட்டிக்காட்டினால், அதில் திருத்தங்கள் செய்வதற்கு தயாராக இருப்பதாக மத்திய அரசு தரப்பிலும் கூறப்பட்டு வருகிறது.
இதுவரை நடந்த பேச்சுவார்த்தைகளை மத்திய அரசு சார்பில் இந்திய வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர், வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயல் ஆகியோர் நடத்தினார்கள். விவசாயிகள் தரப்பில் 42க்கும் அதிகமான சங்கங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். இருந்தபோதும் இரு தரப்புக்கும் இடையே கருத்தொற்றுமையை ஏற்படுத்த மத்திய அரசால் முடியவில்லை.

பட மூலாதாரம், Getty Images
குடியரசு தலைவரை சந்திக்கும் எதிர்கட்சிகள்
இந்த நிலையில், விவசாயிகளின் போராட்டங்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்து வரும் காங்கிரஸ், இடதுசாரி கட்சிகள், தேசியவாத காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்கட்சிகள், டெல்லியில் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தை புதன்கிழமை சந்தித்து பேச திட்டமிட்டுள்ளன.
இந்த சந்திப்பின்போது விவசாயிகளின் கோரிக்கைகள் தொடர்பாகவும் அவர்கள் மீதான மத்திய அரசின் அணுகுமுறை குறித்தும் எதிர் கட்சி தலைவர்கள், குடியரசு தலைவரிடம் முறையிடவிருப்பதாக அவற்றின் தலைவர்கள் கூறுகின்றனர்.
இதேவேளை விவசாயிகளின் கோரிக்கைகள் தொடர்பாகவும் அவர்களிடையே புதிய வேளாண் சட்டங்கள் தொடர்பாக அச்ச உணர்வை ஏற்படுத்தும் வகையிலும் எதிர்கட்சிகள் செயல்படுவதாக இந்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் சமீபத்தில் குற்றம்சாட்டியிருந்தார்.
தொடக்கத்தில் டெல்லிக்கு வெளியே பல்வேறு தடங்கல்களுக்கு பிறகு போராட்டம் நடத்திய விவசாயிகளின் எண்ணிக்கை கட்டுக்கடங்காமல் போன நிலையில், அவர்கள் டெல்லிக்கு உள்ளேயே போராட்டம் நடத்த குறிப்பாக புராரி மைதானத்தில் மட்டும் திரண்டு போராட்டத்தில் ஈடுபட காவல்துறையினர் அனுமதி அளித்தனர். ஆனால், அங்கும் கூட்டம் கட்டுக்கடங்காமல் உள்ளது. அங்கேயே குடும்பங்களுடன் டிராக்டர் சகிதமாக விவசாயிகள் முகாமிட்டுள்ளனர்.
இந்த போராட்டத்துக்கு டெல்லியில் ஆளும் ஆம் ஆத்மி கட்சி தலைமையிலான அரசு முழு ஆதரவை வழங்கியது. மேலும், போராட்டத்தில் ஈடுபடுவோருக்கு தேவையான குடிநீர், நடமாடும் கழிவறை உள்ளிட்ட வசதிகளை ஆம் ஆத்மி அரசு செய்து கொடுத்து வருகிறது.
இதைத்தொடர்ந்து, சம்பந்தப்பட்ட விவசாயிகளின் பிரதிநிதிகளை டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் கடந்த திங்கட்கிழமை போராட்ட களத்துக்கே சென்று சந்தித்து தமது ஆதரவை தெரிவித்தார்.

பட மூலாதாரம், Getty Images
முதல்வருக்கு கட்டுப்பாடு விதித்த காவல்துறை
இந்த நிலையில், டெல்லியில் உள்ள 9 விளையாட்டு அரங்குகளில் விவசாயிகளை வைத்திருக்க அனுமதி கோரி இந்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள டெல்லி காவல்துறை சார்பில் டெல்லி அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால், அதை டெல்லி அரசு ஏற்கவில்லை.
இதைத்தொடர்ந்து, விவசாயிகளை சந்திக்க செவ்வாய்க்கிழமை ஆயத்தமான டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு நகர காவல்துறை அனுமதி மறுத்தது. விவசாயிகளின் போராட்டங்களுக்கு ஆதரவாக இருப்பதால் அவரை வீட்டுக் காவலில் நகர காவல்துறையினர் வைத்துள்ளதாக ஆம் ஆத்மி கட்சியினர் குற்றம்சாட்டினர்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு, 1
அரவிந்த் கேஜ்ரிவாலின் வீட்டுக்கு உள்ளே இருப்பவர்கள் வெளியே வரவும் வெளியே இருப்பவர்கள் உள்ளே செல்லவும் காவல்துறையினர் கட்டுப்பாடுகளை விதித்தனர். இந்த நிலையில், டெல்லி துணை முதல்வர் மணிஷ் சிசோடியா, தமது கட்சி தொண்டர்களுடன் முதல்வர் கேஜ்ரிவாலை சந்திக்க செவ்வாய்க்கிழமை மாலையில் வந்தார். ஆனால், அவர் மட்டும் தனியாக செல்லலாம் என கூறிய டெல்லி காவல்துறையினர் அவரது கட்சித் தொண்டர்கள் உள்ளே செல்ல அனுமதியில்லை என்று கூறினர். இதையடுத்து அவர் காவல்துறையினர் அமைத்திருந்த தடுப்பு அருகே நின்று கொண்டு மத்திய அரசுக்கு எதிராக தர்னாவில் ஈடுபட்டார்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு, 2
இதற்கிடையே, முதல்வர் கேஜ்ரிவால் வீட்டுக் காவலில் இல்லை என்று டெல்லி காவல்துறையின் சிறப்பு ஆணையர் சதீஷ் கோல்ச்சா செய்தியாளர்களை அழைத்து தெளிவுபடுத்த முற்பட்டார்.
ஆனால், அவரது பேட்டி தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பான சில மணி நேரத்தில் முதல்வர் கேஜ்ரிவால் ஓர் அறிக்கை வெளியிட்டார். அதில் "விவசாயிகளுடன் ஒரு முதல்வராக இல்லாமல் ஒரு சேவகராக நேரத்தை செலவிட விரும்பினேன். ஆனால், அதற்கு மத்திய அரசு காவல்துறை மூலம் முட்டுக்கட்டை போட்டது. அதனால், வீட்டிலேயே விவசாயிகளுக்காக பிரார்த்தனை செய்தேன்."
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு, 3
"ஆரம்பம் முதலே விவசாயிகளுக்காக ஆம் ஆத்மி அரசு குரல் கொடுப்பதை மத்திய அரசு விரும்பவில்லை. நகரில் உள்ள 9 விளையாட்டு அரங்குகளை தற்காலிக சிறைகளாக்க மத்திய அரசு அனுமதி கேட்டது. அதற்கு டெல்லி அரசு உடன்படவில்லை. அதுவும் மத்திய அரசின் கோபத்துக்கு காரணம்" என்று செவ்வாய்க்கிழமை நிகழ்ந்தவற்றை கேஜ்ரிவால் விவரித்தார்.

அலைகழிக்கப்பட்ட அய்யாக்கண்ணு
இந்த நிலையில், தமிழகத்தைச் சேர்ந்த விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு, பல்வேறு தடங்கல்களுக்கு பிறகு டெல்லி வந்து சேர்ந்தார். அவர் போராட்ட களத்துக்கு செவ்வாய்க்கிழமை காலையில் செல்ல முற்பட்டார். ஆனால், அவருக்கு அனுமதி மறுத்த காவல்துறையினர் பிறகு அவர் உச்ச நீதிமன்றம் செல்ல டெல்லி வந்ததாகக் கூறியதை அடுத்து, தங்களுடைய வாகனத்திலேயே அவரை ஏற்றி உச்ச நீதிமன்றத்துக்கு அழைத்துச் சென்றனர்.
பிறகு அங்கிருந்து போராட்டம் நடக்கும் சிங்கு பகுதிக்குச்செல்ல அவர் திட்டமிட்டபோது, அதற்கு அனுமதி இல்லை என்று கூறி கரோல் பாக் காவல் நிலையத்திலேயே அய்யாக்கண்ணுவையும் அவருடன் இருந்த சிலரையும் காவல்துறையினர் தடுத்து வைத்தனர்.
காலை 11 மணி முதல் இரவு 8.30 மணிவரை அவரை காவல் நிலையத்திலேயே வைத்திருந்த காவல்துறையினர், பிறகு அய்யாக்கண்ணுவிடம் போராட்ட பகுதிக்கு கூட்டமாக செல்லாமல் தனித்தனியாக செல்லுமாறு அறிவுறுத்தி அனுப்பி வைத்தனர்.
இது தொடர்பாக செவ்வாய்க்கிழமை இரவு அய்யாக்கண்ணுவை பிபிசி தமிழ் தொடர்பு கொண்டு பேசியது.
அப்போது அவர், "'டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவிக்க புறப்பட்டபோது எங்களை தமிழ்நாட்டிலும் காவல்துறை அனுமதிக்கவில்லை. டெல்லிக்கு வந்த பிறகும் எங்களை இங்குள்ள காவல்துறையினர் போராட்ட பகுதிக்கு செல்ல விடாமல் தடுத்தனர். காரணம் கேட்டபோது, மத்திய உள்துறையில் இருந்து உங்களை போராட்ட பகுதிக்கு அனுப்பக் கூடாது என்று உத்தரவு வந்துள்ளது என காவல்துறையினர் கூறினார்கள். பிறகு போராட்ட பகுதிக்கு நாங்கள் செல்வதில் உறுதியாக இருந்ததையடுத்த, கடைசியில் எங்களை அங்கே செல்ல அனுமதித்துள்ளனர். போராட்ட பகுதிக்கு வருவதற்கு முன்பும் எங்களை பல கிலோ மீட்டர் நடக்க வைத்தே இந்த இடத்தை அடையச் செய்துள்ளனர்" என்று அய்யாக்கண்ணு தெரிவித்தார்.
இதற்கிடையே, டெல்லியில் புதன்கிழமை ஆறாவது சுற்று பேச்சுவார்த்தைக்கு தயாராகியிருந்த குழுவினரின் பட்டியலை சேகரித்த மத்திய அரசு, அதில் பாரதிய கிசான் யூனியன் உள்பட குறிப்பிட்ட சில சங்கங்களைச் சேர்ந்தவர்களை மட்டும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடனான திடீர் சந்திப்புக்கு அழைப்பு விடுத்தது.
இந்த சந்திப்பு உள்துறை அமைச்சர் அமித் ஷா வீட்டில் முதலில் திட்டமிடப்பட்டது. ஆனால், பிறகு இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனம் அமைந்துள்ள பூசா மையத்தில் உள்ள விருந்தினர் மாளிகையில் சந்திப்பு நடந்தது. அந்த பகுதி பாதுகாக்கப்பட்ட இடம் மற்றும் ஊடகங்களின் வருகைக்கு கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாகும்.
அங்கு இரவு 7.45 மணிக்குப் பிறகு தொடங்கிய கூட்டம் இரவு 11 மணிவரை நீடித்தது. விவசாயிகள் பாரத் பந்த் நடத்திய நாளின் மாலையிலேயே அமித் ஷாவிடம் இருந்து அழைப்பு வந்ததை அவர்கள் எதிர்பார்க்கவில்லை.

பட மூலாதாரம், Getty Images
கோரிக்கைகளில் உறுதிகாட்டும் விவசாயிகள்
இந்த சந்திப்பு குறித்து அகில இந்திய கிசான் சபா தலைவர் பால்கரன் சிங் பிராரிடம் பேசியபோது, "மத்திய அரசின் சட்டங்கள் தொடர்பாக விவசாயிகள் சங்கங்கள் கவலை கொள்ளத் தேவையில்லை என்றும் இந்த விவகாரத்தில் எதிர்கட்சிகள் விவசாயிகளை குழப்ப இடம் தரக்கூடாது என்றும் அமித் ஷா அறிவுறுத்தினார்" என்று கூறினார்.
வேளாண் சட்டங்கள் தொடர்பாக தாங்கள் தயாரித்த 39 அம்ச கோரிக்கைகளை அமித் ஷாவிடம் அளித்தோம். இதே கோரிக்கையை மத்திய அமைச்சர் நரேந்திர சிங் தோமரிடமும் பேசினோம் என்று அவர் குறிப்பிட்டார்.
அமித் ஷாவுடனான சந்திப்பில் பாரதிய கிசான் யூனியன் செய்தித்தொடர்பாளர் ராகேஷ் தகாய்த், அந்த அமைப்பின் ஹரியாணா தலைவர் குர்னாம் சிங் சதுனி, அகில இந்திய கிசான் சபா பொதுச்செயலாளர் ஹன்னன் மொல்லா, ராஷ்ட்ரிய கிசான் மஸ்தூர் மகாசங்கம் தலைவர் ஷிவ் குமார் கக்கா, அகில இந்திய கிசான் மகா சபா தலைவர் ருல்து சிங் மான்ஸா, மஞ்சித் ராய், பூட்டா சிங் பர்கில் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்த சந்திப்புக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய சில விவசாயிகள் சங்கங்களின் தலைவர்கள், "டெல்லியில் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் இரவு, பகலாக போராட்டம் நடத்தி வரும் வேளையில், போராட்டம் நடத்தப்பட்ட புராரி மைதானத்துக்கு பதிலாக ராம் லீலா மைதானத்தில் போராட அனுமதிக்க வேண்டும்" என்று கேட்டுக் கொண்டார்.

பட மூலாதாரம், Getty Images
சங்கங்களை பிரித்தாள முயற்சி
ஆனால், அமித் ஷாவுடனான சந்திப்பு விவரங்களை முழுமையாக வெளியிட அவர்களில் பலரும் மறுத்து விட்டனர்.
இதற்கிடையே, போராட்டத்தில் பங்கெடுத்த விவசாயிகளிடம் சற்று கடுமையான தொனியிலேயே அமித் ஷா பேசியதாகவும், விவசாயிகள் சட்டங்கள் தொடர்பான மத்திய அரசின் நிலைப்பாட்டில் அவர் உறுதியுடன் காணப்படுவதாகவும் கூட்டத்தில் பங்கேற்ற தலைவர்கள் குறிப்பிட்டனர்.
இந்த நிலையில், அமித் ஷாவுடனான சந்திப்பில் எல்லா விவசாய சங்கங்களின் பிரதிநிதிகளும் கலந்து கொள்ளாதது மற்ற விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது. மேலும், சந்திப்புக்குப் பிறகு புதன்கிழமை திட்டமிட்ட பேச்சுவார்த்தை நடக்காது, அமித் ஷா வழங்கும் திட்டத்தின்படி விவசாயிகள் சங்கங்கள் தங்களுக்காக ஆலோசனை நடத்தி முடிவை தெரிவிக்கும் என குறிப்பிட்ட அந்த 13 சங்கங்களின் விவசாயிகள் பிரதிநிதிகள் ஊடகங்களிடம் நள்ளிரவில் பேட்டி கொடுத்தனர். இதுவும் மற்ற விவசாயிகள் சங்கங்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது.
"இதுபோன்ற செயல்பாடுகள் மூலம் விவசாயிகள் சங்கங்களின் தலைமைகளுக்கு இடையே ஒருவித பிளவை உண்டாக்கி போராட்டத்தை பலவீனப்படுத்த அரசு முயல்கிறது" என்று கூட்டத்துக்கு அழைக்கப்படாத சில தலைவர்கள் கருதுகின்றனர்.
இது ஒருபுறமிருக்க, டெல்லிக்கு உள்ளே அமைந்த விளையாட்டரங்குகளில் விவசாயிகளை வைக்க கேஜ்ரிவால் அரசு மறுத்து விட்டதாக கூறப்பட்ட நிலையில், ஹரியாணா மாநிலத்தில் உள்ள சில இடங்களில் விவசாயிகளை தடுத்து வைக்கும் வாய்ப்புகளை மத்தியில் ஆளும் பாஜக அரசு ஆராய்ந்து வருகிறது.
எது எப்படியிருந்தாலும், நாடாளுமன்றத்தில் அவசர சட்டம் வாயிலாகவும் பிறகு முறையான சட்டங்களாகவும் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களை இனி திரும்பப் பெறக்கூடாது என்ற முனைப்புடனேயே மத்திய அரசு செயல்பட்டு வருவது, அதன் சமீபத்திய நடவடிக்கைகள் மூலம் தெளிவாகியிருக்கிறது. இதனால் அடுத்த வாய்ப்புகளை விவசாயிகள் சங்கங்களின் பிரதிநிதிகள் ஆராய வேண்டும் என அவர்களின் நிர்வாகிகள் பலரும் டெல்லியில் பேசத் தொடங்கியிருக்கிறார்கள்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:












