விவசாயிகள் போராட்டம்: மோதி அரசு வளைந்து கொடுக்குமா, சமாதானப்படுத்துமா?

விவசாயிகள் போராட்டம்

பட மூலாதாரம், Reuters

    • எழுதியவர், ஜுபைர் அகமது
    • பதவி, பிபிசி செய்தியாளர்

டெல்லி மற்றும் அதன் அண்டை மாநில எல்லைகளில் விவசாயிகள் நடத்தி வரும் போராட்டம் செவ்வாய்க்கிழமை 13ஆம் நாளை எட்டியிருக்கிறது. இந்த போராட்டத்தை நடத்தி வரும் விவசாயிகளுக்கும் மத்திய அரசுக்கும் இடையே நடந்த ஐந்தாவது சுற்று பேச்சுவார்த்தைகளில் இதுவரை எந்த தீர்வும் எட்டப்படவில்லை.

மூன்று புதிய விவசாய சட்டங்களை திரும்பப் பெற வேண்டும் என்ற கோரிக்கையிலிருந்து தாங்கள் பின் வாங்க மாட்டோம் என்று விவசாயிகள் உறுதிபட தெரிவித்துள்ளனர்.

மோதி அரசு என்ன நினைக்கிறது?

அரசு மற்றும் ஆளும் பாரதிய ஜனதா கட்சி வட்டாரங்களின்படி, இந்த சட்டங்களை திரும்பப் பெறும் எண்ணம் மோதி அரசுக்கு இல்லை.

"விவசாயிகள் மீது அரசு அக்கறை கொண்டுள்ளது. அவர்களின் கோரிக்கைகள் தீவிரமாக பரிசீலிக்கப்பட்டு வருகின்றன. அமைச்சகங்களுக்கு இடையே பல உத்திகள் விவாதிக்கப்பட்டு வருகின்றன. டிசம்பர் 9 புதன்கிழமை நடைபெற உள்ள அடுத்த சுற்றுப்பேச்சுவார்த்தையில் விவசாயிகள் முன் ஒரு உறுதியான யோசனை வைக்கப்பட வாய்ப்புள்ளது, "என்று விஷயமறிந்த வட்டாரங்களில் ஒருவர் தெரிவித்தார்.

விவசாயிகளின் நலனை முன்வைத்தே புதிய யோசனை இருக்கும் என்று அவர் மேலும் கூறுகிறார்.

டெல்லியில் அரசுக்கும் விவசாய தலைவர்களுக்கும் இடையே சனிக்கிழமை நடந்த பேச்சுவார்த்தையின் போது, ​​மேலதிக பேச்சுவார்த்தைகளுக்கு உறுதியான முன்மொழிவைத் தயாரிக்க மேலும் கால அவகாசத்தை ,விவசாய சங்கங்களிடமிருந்து அரசு கோரியது.

அரசு புதிய சட்டங்களில் விவசாயிகளின் சில கோரிக்கைகளை இணைக்கக்கூடும். அதற்காக இந்த சட்டங்கள் திருத்தப்பட வேண்டியிருக்கும். இது அடுத்த நாடாளுமன்ற கூட்டத்தொடரில் மட்டுமே சாத்தியமாகும் என்று இந்த வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன.

முக்கிய ஊடகங்கள் விவசாயிகள் போராட்டத்திற்கு சரியான கவனம் தருவதில்லை என்ற குற்றச்சாட்டு நிலவுகிறது. ஆனால் இது சமூக ஊடகங்களில் நன்கு காட்டப்பட்டு வருகிறது. இதன் காரணமாக இந்தப்போராட்டம் மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. ஆகவே மத்திய அரசு இதை கண்டும்காணாமல் இருக்கமுடியாது.

விவசாயிகள் போராட்டம்

பட மூலாதாரம், Reuters

அரசுடனான பேச்சுவார்த்தையின் போது விவசாய தலைவர்களுக்கு என்ன அறிகுறிகள் கிடைத்தன ? புதிய சட்டங்களை மோதி அரசு திரும்பப் பெறும் என்று அவர்களுக்கு தோன்றியதா என்று கேட்டபோது ​​ விவசாயிகள் தங்கள் கோரிக்கைகளிலிருந்து பின்வாங்க மாட்டார்கள் என்பதை அரசு உணர்ந்துள்ளது என்று சில விவசாயி தலைவர்கள் தெரிவித்தனர்.

'மோதி அரசு நெருக்குதலின் கீழ் உள்ளது' என்று இந்திய விவசாயிகள் சங்கத்தின் செய்தித் தொடர்பாளர் தர்மேந்திர மல்லிக் தெரிவித்தார்.

செப்டம்பரில் புதிய சட்டங்கள் நிறைவேற்றப்படுவதற்கு முன்பிருந்தே விவசாயிகள் இதை எதிர்த்து வருகின்றனர். இது கடந்த 10 நாட்களில் வேகம் பெற்றுள்ளது. ஆயிரக்கணக்கான விவசாயிகள் தற்போது போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தங்கள் கோரிக்கைகள் முழுமையாக நிறைவேறிய பிறகே திரும்பிச்செல்வோம் என்று அவர்கள் கூறுகிறார்கள்.

அவர்களைப் பிரிக்கும் முயற்சியும் மேற்கொள்ளப்பட்டது. அவர்களை தடுக்க பலப்பிரயோகமும் மேற்கொள்ளப்பட்டது. ஆனால் இப்போது வரை விவசாயிகளின் ஒற்றுமை தொடர்கிறது.

மோதி அரசு சிறிது வளைந்து கொடுக்க வேண்டியிருக்கும், விவசாயிகளுக்கு ஏதாவது கொடுக்கத்தான் வேண்டும் என்று பொருளாதார நிபுணரும் எழுத்தாளருமான குர்சரண் தாஸ் சென்ற வாரம் பிபிசியுடனான சிறப்பு உரையாடலில் தெரிவித்தார்.

குர்சரண் தாஸ் புதிய சட்டங்களை ஆதரிக்கிறார். ஆனால் பிரதமர் அவை குறித்து விளக்கமாக எடுத்துக்கூறவில்லை என்று அவர் கருதுகிறார்.

விவசாயிகள் போராட்டம்

பட மூலாதாரம், Reuters

"பிரதமர் மோதி, உலகின் மிகச்சிறந்த தகவல் தொடர்பாளராக உள்ளபோதிலும் மசோதாவை கொண்டு வருவதற்கு முன்பு அதைப் பற்றி விவாதிக்கவில்லை, மக்களின் கருத்தையும் அவர் கேட்கவில்லை," என்று அவர் கூறுகிறார்.

ஆனால் புதிய சட்டங்களை திரும்பப்பெறுவதை குர்சரண் தாஸ் எதிர்க்கிறார். சட்டத்தை அரசு திரும்பப்பெற்றால், 30 ஆண்டுகளுக்கு முன்பு நாம் எங்கு இருந்தோமோ, அங்கேயே சென்று விடுவோம் என்று அவர் குறிப்பிடுகிறார்.

விவசாயிகளின் அச்சம்

புதிய அமைப்பு முறைபில் சந்தை மற்றும் எம்.எஸ்.பி (குறைந்தபட்ச ஆதரவு விலை) முறை ஒழிக்கப்படும் என்றும் அவர்களிடமிருந்து கோதுமை மற்றும் அரிசி வாங்குவதை அரசு நிறுத்திவிடும் என்றும் விவசாயிகள் அஞ்சுகின்றனர்.

அந்த சூழலில் அவர்கள் தங்கள் விளை பொருட்களை தனியார் நிறுவனங்கள் மற்றும் பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு விற்க வேண்டியிருக்கும். அவைகள் தங்களை சுரண்டக்கூடும் என்று விவசாயிகள் நினைக்கின்றனர். ஆனால் பழைய நடைமுறை தொடரும் , விவசாயிகள் கவலைப்படத் தேவையில்லை என்று மத்திய அரசு அவர்களுக்கு தொடர்ந்து உறுதியளித்து வருகிறது.

தனியார் வர்த்தகர்கள் மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்களின் கொள்முதலிலும் அரசு எம்.எஸ்.பியை கொண்டுவந்தால், அது விவசாயிகள் சுரண்டப்படும் வாய்ப்பை சட்டரீதியாக தடுத்துவிடும். ஆகவே அரசு இதை அமல்செய்யும்பட்சத்தில் டெல்லிக்கு வெளியே தர்ணாவில் அமர்ந்திருக்கும் விவசாயிகள் தங்கள் வீடுகளுக்குத் திரும்பி விடுவார்கள் என்று மேற்கு உத்தரப்பிரதேசத்தின் கிசான் சக்தி சங்கத்தின் தலைவர் சவுத்ரி புஷ்பேந்திர சிங், பிபிசியிடம் தெரிவித்தார்.

"தனியார் துறையிலும் எம்.எஸ்.பி பிணைப்பை ஏற்படுத்த வேண்டும் என்ற விவசாயிகளின் முக்கிய கோரிக்கையை அரசு உடனடியாக ஏற்றுக் கொள்ள வேண்டும். இதன் மூலம் போராட்டம் நடத்தும் விவசாயிகள் தங்கள் வீடுகளுக்கு திரும்ப முடியும்," என்று அவர் கூறினார்.

" அரசு வாக்குறுதிகளை அளித்தாலும்கூட விவசாயிகளின் அச்சங்களை நிவர்த்தி செய்ய இதுவரை தவறிவிட்டது. தற்போதுள்ள சந்தை மற்றும் எம்எஸ்பி முறைமையின் கீழ் அரசுகள் பயிர்களை கொள்முதல் செய்யும் நடவடிக்கையானது இந்த சீர்திருத்தங்களால் எந்த வகையிலும் பலவீனமாகக்கூடாது என்று நாங்கள் கூறுகிறோம். இப்போதே சந்தையில் பயிர்கள் வாங்குவதற்கு 8.5 சதவிகிதம் வரை வரி விதிக்கப்படுகிறது. ஆனால் புதிய முறையில் சந்தைகளுக்கு வெளியே வரி இருக்காது, "என்று சவுத்ரி புஷ்பேந்திர சிங் மேலும் தெரிவித்தார்.

எம்.எஸ்.பி வழியாக மிக அதிகபட்சமாக அரசு கொள்முதல் செய்கிறது. குறைந்தபட்ச ஆதரவு விலையில் அரசு கொள்முதல் செய்யும் நடவடிக்கையே, விவசாயிகளுக்கு கேள்விக்குறியாக உள்ளது என்று அவர் கூறுகிறார்.

"2019-20ஆம் ஆண்டில் எம்எஸ்பியில் வாங்கப்பட்ட பயிர்களில், கோதுமை மற்றும் அரிசி இரண்டும் சேர்த்து சுமார் 2.15 லட்சம் கோடி ரூபாய் மதிப்புக்கு அரசு கொள்முதல் செய்தது. 11.84 கோடி டன் மொத்த அரிசி உற்பத்தியில் 5.14 கோடி டன் அதாவது 43 சதவிகிதம் எம்.எஸ்.பி மூலம் அரசால் கொள்முதல் செய்யப்பட்டது. இதேபோல், 10.76 கோடி டன் கோதுமை உற்பத்தியில், 3.90 கோடி டன் அதாவது 36 சதவிகிதத்தை அரசு கொள்முதல் செய்தது, "என்கிறார் அவர்.

வேறு சில விவசாயிகள் புதிய சட்டங்களில் மாற்றங்களுக்கு பதிலாக அவை திரும்பப் பெறப்படவேண்டும் என்று கோருகின்றனர். புதன்கிழமை பேச்சுவார்த்தைக்காக விவசாயிகள் காத்திருக்கிறார்கள், அப்போது அரசு புதிய யோசனை ஒன்றை முன்வைக்க உள்ளது. அவர்கள் அதை ஒரே நாளில் படித்து, அரசின் யோசனையை ஏற்றுக்கொள்கிறார்களா இல்லையா என்பதை அன்றைய தினமே தெரிவிப்பார்கள்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: