சேலம் 8 வழி சாலை வழக்கு: உச்ச நீதிமன்றம் தீர்ப்பில் என்ன சொல்கிறது? விவசாயிகள் தரப்புக்கு வெற்றியா?

சேலம் - சென்னை 8 வழிச்சாலை திட்ட அறிவிக்கையில் குறிப்பிடப்பட்ட நிலங்களை கையகப்படுத்தும் பணியை இந்திய நெடுஞ்சாலைத்துறை ஆணையம் தொடரலாம் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
இது தொடர்பாக இந்திய நெடுஞ்சாலைத்துறை, தமிழக அரசு ஆகியவை கடந்த ஆண்டு தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஏ.எம். கான்வில்கர், பி.ஆர். கவாய், கிருஷ்ண முராரி ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 8) தீர்ப்பளித்தது.
அதில், "இந்த விவகாரத்தில் திட்டம் தொடர்பாக இந்திய நெடுஞ்சாலைத்துறை ஆணையமும் தமிழக அரசும் வெளியிட்டுள்ள அறிவிக்கை அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட நிலம் - வகை மாற்றல் நடவடிக்கை தவறானது என்று சென்னை உயர் நீதிமன்றம் குறிப்பிட்டதை உச்ச நீதிமன்றம் ஏற்றுக் கொண்டிருக்கிறது," என்று நீதிபதிகள் கூறியுள்ளனர்.
"தங்களுக்கு சொந்தமில்லாத நிலத்தை தங்களுக்கு சாதகமாக கையகப்படுத்திய நடவடிக்கைக்காக மேற்கொள்ளப்பட்ட நடைமுறைகளை பழைய நிலைக்கே மாற்ற உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை உச்ச நீதிமன்றம் ஏற்றுக் கொண்டுள்ளது. அதில் தங்களின் தலையீடு தேவையில்லை," என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பில் தெரிவித்துள்ளது.
"அதே சமயம், சுற்றுச்சூழல் மற்றும் வனப்பாதுகாப்பு சட்டங்களின்கீழ் சம்பந்தப்பட்ட துறைகள் வழங்கிய அனுமதியின் சரிபார்ப்புத்தன்மை, அவை செல்லுபடியாகுமா என்பது குறித்து உயர் நீதிமன்ற விசாரணையிலேயே பாதிக்கப்படுவதாகக் கருதப்படும் மனுதாரர்கள் முறையிடவில்லை. எனவே, அந்த விவகாரத்தை உயர் நீதிமன்றத்திலோ சரியான அமைப்பிடமோ முறையிட அவர்களுக்கு உரிமை உள்ளது," என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.
"மத்திய, மாநில அரசுகள் வெளியிட்ட அறிவிக்கைக்கு எதிரான உயர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிரான முறையீடு மட்டுமே உச்ச நீதிமன்றத்தில் செய்யப்பட்டுள்ளது. அந்த தீர்ப்பை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று மட்டுமே இந்திய நெடுஞ்சாலைத்துறை சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. எனவே, இந்த திட்டத்தால் சுற்றுச்சூழல் தாக்கமோ அதை முன்னெடுப்பது தொடர்பாக எடுக்கப்படும் முடிவுக்குள்ளோ தலையிட நாங்கள் விரும்பவில்லை. ஒருவேளை, வனத்துறை அல்லது சுற்றுச்சூழல் சட்டங்களின்படி சம்பந்தப்பட்ட துறைகளால் முடிவுகள் வழங்கப்பட்டிருந்தால், முந்தைய வழக்குகளில் கடைப்பிடித்த நடைமுறைப்படி அந்த விவகாரத்தை உச்ச நீதிமன்றம் கவனித்திருக்கும்," என்று நீதிபதிகள் தீர்ப்பில் குறிப்பிட்டனர்.
அந்த வகையில், உச்ச நீதிமன்றத்தில் நில உரிமையாளர்கள், பாதிக்கப்பட்டவர்கள், எதிர் மனுதாரர்கள் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுக்களை தள்ளுபடி செய்வதாக நீதிபதிகள் குறிப்பிட்டனர்.
அதே சமயம், அறிவிக்கையின் பிரிவு 2(2), 3ஏ ஆகியவற்றின் கீழ், நில வகை மாற்றல் செய்த நடவடிக்கை தவறு என்று உயர் நீதிமன்றம் தீர்ப்பில் குறிப்பிட்ட உத்தரவை உச்ச நீதிமன்றம் உறுதிப்படுத்துகிறது என்று நீதிபதிகள் தெளிவுபடுத்தியுள்ளனர்.
இந்த விவகாரத்தில் சட்டத்துக்கு உட்பட்டு தேசிய நெடுஞ்சாலை 179ஏ, 179பி இடையிலான விரிவாக்க பணிகளுக்காக முறைப்படி நிலம் கையக அறிவிக்கையை வெளியிட்டு, மத்திய அரசோ தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையமோ பணிகளைத் தொடரலாம் என்று குறிப்பிட்டு, இந்த விவகாரம் தொடர்பான விசாரணையை உச்ச நீதிமன்றம் முடித்து வைத்துள்ளது.
உச்ச நீதிமன்றம் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ள தேசிய நெடுஞ்சாலை 179ஏ என்பது, சேலம், அயோத்தியாபட்டினம், பாப்பிரெட்டிபட்டி, அரூர், ஊத்தங்கரை, திருப்பத்தூர் மற்றும் வாணியம்பாடியை இணைக்கும் தேசிய நெடுஞ்சாலை 48 வரையிலான சாலையாகும். தேசிய நெடுஞ்சாலை 179பி என்பது, அரூர் அருகே தொடங்கி சென்னையை அடுத்த தாம்பரம் அருகே தேசிய நெடுஞ்சாலை 32இல் முடிவடையும் சாலையும். இந்த பாதைகளில்தான் சேலம் எட்டு வழிச்சாலை திட்டம் உத்தேசிக்கப்பட்டிருக்கிறது.
திட்டம், வழக்கு: பின்னணி என்ன?
1. இந்திய அரசின் பாரத்மாலா பரியோஜ்னா என்ற சாலை போக்குவரத்து திட்டத்தின்கீழ் 34,800 கி.மீ தூரத்துக்கு ரூ. 5.35 லட்சம் கோடி மதிப்பில் சாலை போக்குவரத்து திட்டத்தை தொடங்க மத்திய அரசு உத்தேசித்துள்ளது. இதில் 2,921 கி.மீ தூரத்துக்கான நெடுஞ்சாலை கட்டி முடிக்கப்பட்டுள்ளதாக அரசு கூறியுள்ளது.

பட மூலாதாரம், Getty Images
2. சரக்கு மற்றும் பயணிகள் போக்குவரத்தை எளிமைப்படுத்தவும் பயண நேரத்தில் இரண்டரை மணி நேரம் குறைக்கும் நோக்குடனும் இந்த திட்டம் செயல்படுத்தப்படுவதாக மத்திய அரசு கூறுகிறது.
3. இதன் ஒரு அங்கமாக, சேலம் - சென்னை இடையிலான 277.3 கிலோ மீட்டர் தூரத்துக்கான எட்டு வழிச்சாலையை ரூ.10 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் நிறைவேற்ற இந்திய நெடுஞ்சாலைத்துறையும் தமிழக அரசும் திட்டமிட்டுள்ளன.
4. சேலம், தருமபுரி, திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்கள் வழியாக சாலை அமைப்பது திட்டத்தின் நோக்கம்.
5. இதற்காக 1,900 ஹெக்டேர் நிலத்தை கையகப்படுத்த தமிழக அரசு ஆணை வெளியிட்டது. இந்த திட்டத்தால் பல ஆயிரக்கணக்கான விவசாய நிலங்கள் பறிக்கப்படும், காடுகள், மலைகள் அழிக்கப்படும் என சுற்றுச்சூழல் செயல்பாட்டாளர்கள் அச்சம் தெரிவித்து வருகின்றனர்.
6. இந்த திட்டத்துக்கு தடை விதிக்கக் கோரி பாதிக்கப்பட்ட நில உரிமையாளர்கள், விவசாயிகள், அன்புமணி ராமதாஸ், வழக்குரைஞர் சூர்யபிரகாசம், பி.வி. கிருஷ்ணமூர்த்தி, எஸ்.யுவராஜ், ஆர். செளந்தர்ராஜன் உள்ளிட்டோர் சார்பில் 50-க்கும் மேற்பட்ட வழக்குகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்டிருந்தன.

பட மூலாதாரம், SUPREME COURT OF INDIA
இந்த வழக்குகளை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், கடந்த ஆண்டு ஏப்ரல் 8-ஆம் தேதி தீர்ப்பு அளித்தது. அதில், சென்னை - சேலம் இடையிலான எட்டு வழிச்சாலைத் திட்டம் தொடர்பாக தமிழக அரசு பிறப்பித்த அறிவிப்பாணையை ரத்து செய்து உத்தரவிட்டது. மேலும் இந்த திட்டத்துக்காக கையகப்படுத்தப்பட்ட நிலங்களை 8 வார காலத்துக்குள் திரும்ப ஒப்படைக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டது.
8. திட்டம் தொடர்பான ஆலோசனை அறிக்கை ரத்து செய்யப்பட வேண்டும், உத்தேச திட்டத்தால் வனப்பகுதிகள், நிலப்பகுதிகள், நீர் நிலைகள், கானுயிர்கள் மற்றும் தாவரங்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து ஆழமாக ஆய்வு செய்து அறிக்கை தயாரித்த பிறகே திட்டம் அமல்படுத்தப்பட்டிருக்க வேண்டும் என்று உயர் நீதிமன்றம் உத்தரவில் கருத்து கூறியிருந்தது.
9. இந்த உத்தரவை எதிர்த்து இந்திய நெடுஞ்சாலைத்துறை ஆணையம் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இதையடுத்து உயர் நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்க மத்திய அரசு விடுத்த வேண்டுகோளை உச்ச நீதிமன்றம் கடந்த ஆண்டு ஜூன் மாதம் ஏற்கவில்லை.
10. கடைசியாக கடந்த அக்போடர் மாதம் நடந்த விசாரணையின்போது, தற்போதைய நிலையில் திட்டத்துக்காக சுற்றுச்சூழல் அனுமதி தேவையில்லை என்றும் முதலில் மாநில அரசு நிலத்தை கையகப்படுத்த வேண்டும். அதன் பிறகே சம்பந்தப்பட்ட துறைகளிடம் இருந்து சுற்றுச்சூழலுக்கு அனுமதி கோரப்படும் என சொலிசிட்டர் ஜெனரல் வாதிட்டார். ஆனால் அதற்கு எதிர் மனுதாரர்கள் ஒட்டுமொத்தமாக ஆட்சேபம் தெரிவித்திருந்தனர்.
இந்த வழக்கை தொடக்கத்தில் நீதிபதி அருண் மிஸ்ரா தலைமையிலான மூன்று நீதிபதிகள் அமர்வு காணொளி மூலம் விசாரித்தது. இதில் அருண் மிஸ்ரா கடந்த செப்டம்பர் மாதம் ஓய்வு பெற்றார். அவருக்குப் பிறகு நீதிபதிகள் கான்வில்கர், பி.ஆர். கவாய், கிருஷ்ண முராரி அடங்கிய அமர்வு தேதி குறிப்பிடாமல் கடந்த அக்டோபர் மாதம் தீர்ப்பை ஒத்தி வைத்தது. இப்போது தீர்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.
பிற செய்திகள்:
- இந்தியாவின் புதிய நாடாளுமன்றம்: கட்டுமானத்தை தொடங்க உச்ச நீதிமன்றம் தடை
- கொரோனா தடுப்பூசி: இந்தியாவில் அவசர அனுமதி கோரி விண்ணப்பம்
- தலித் பெண் சடலத்தை பொது வழியில் கொண்டுசெல்வதை தடுத்த சாதி இந்துக்கள்
- கமலா ஹாரிஸ் இந்திய விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தாரா?
- சோசலிசம் குறித்து அம்பேத்கரின் கருத்து என்ன? - வெளிச்சத்துக்கு வராத பக்கங்கள்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:








