வளர்ச்சிக்காகவே எட்டு வழிச் சாலை: முதல்வர் பழனிசாமி

எடப்பாடி பழனிசாமி

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, எடப்பாடி பழனிசாமி

புதிய 8 வழிச்சாலையால் பல மாவட்டங்களில் தொழில் வளர்ச்சி ஏற்படும், இச்சாலைக்கு நில எடுப்புப் பணிக்காக நில அளவை செய்யும் பகுதிகளில் காவல் துறையினர் பாதுகாப்புக்கு மட்டுமே நிறுத்தப்பட்டுள்ளனர் எனவும் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

சேலம் விமான நிலையத்தில் சனிக்கிழமை செய்தியாளர்களிடம் பேசிய அவர், ''பசுமை வழிச்சாலை இந்தியாவில் இரண்டாவதாக அமைய உள்ள எக்ஸ்பிரஸ் சாலையாகும். இச்சாலையால் வாகனங்களின் தேய்மானம் குறையும், எரிபொருள் சிக்கனமாக செலவாகும். மேலும் எதிர்வரும் காலங்களில் வாகன நெரிசலை குறைக்கும் பொருட்டே இப்புதிய சாலை அமைக்கப்படுகிறது. இந்த புதிய சாலை பல மாவட்டங்களும் பயன்பெறும் வகையில் அமைய உள்ளது.'' என்று கூறினார்.

எதற்காக எட்டுவழிச்சாலை? முதல்வர் பழனிசாமி விளக்கம்

காணொளிக் குறிப்பு, ஒருங்கிணைந்த வளர்ச்சி்க்காக சேலம்-சென்னை எட்டு வழிச்சாலை - பழனிசாமி

புதிதாக தொழிற்சாலைகள் அமையவும், வேலை வாய்ப்புகள் பெருகவும் இந்த சாலை பயன்படும் என்றும், அரசு நிறைவேற்றிய பல நல்ல திட்டங்களை விட்டு விட்டு அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக மக்களிடையே இத்திட்டத்தினைப் பற்றிய வெறுப்புணர்ச்சியை ஏற்படுத்துகின்றனர் எனவும் அவர் தெரிவித்தார்.

மேலும் அவர், ''நிலம் அளவை செய்யும் பணியின்போது காவல்துறையினர் பாதுகாப்புக்கு மட்டுமே நிறுத்தப்பட்டனர். அச்சுறுத்துவதற்காக இல்லை என்பதை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும். இதேபோன்று மாநிலத்தில் முதற்கட்டமாக 79 கோடி மதிப்பீட்டில் 19 நெடுஞ்சாலைகள் விரிவாக்கப் பணிகள் நடந்து வருகின்றன. 21 சாலைகளை விரிவாக்கம் செய்ய கோரிக்கை அனுப்பபட்டுள்ளது. கடந்த 2000-2009களில் மத்தியில் காங்கிரஸ் ஆட்சியும் மாநிலத்தில் திமுக ஆட்சி நடந்த போது 3 ஆயிரத்து 23 கிமீ நீளத்திற்கு கிருஷ்ணகிரி முதல் சேலம் வரையிலும், உளுந்தூர் பேட்டை முதல் சேலம் வரையிலும் இரண்டு தேசிய நெடுஞ்சாலைகள் போடப்பட்டன.''

சேலம்

''அப்போது தமிழகத்தில் இருந்த வாகனங்களின் எண்ணிக்கை 1 கோடியே 7 லட்சம். ஆனால் தற்சமயம் இந்த எண்ணிக்கை 2 கோடியே 57 லட்சம் ஆக உயர்ந்துள்ளது. இப்போது திட்டமிடப்பட்டுள்ள பசுமை சாலை வேலை மூடிய இன்னும் 4 முதல் 5 வருடங்கள் ஆகும். அப்போது வாகனங்களின் இன்னும் 70 லட்சம் அதிகரிக்கும். அதற்காக இப்பொழுதே மாநிலத்தில் சாலை உள்ளிட்ட கட்டமைப்புகளை மேம்படுத்தினால்தான் போக்குவரத்து மற்றும் தொழில் வளர்ச்சி மேம்படும் என்பதை அனைவரும் கருத்தில் கொள்ள வேண்டும்.'' என முதல்வர் தெரிவித்தார்.

''அரசால் எடுக்கப்படும் நிலத்தின் உரிமையாளர்களுக்கு அரசு, வழிகாட்டு மதிப்பைப் போல பல மடங்கு இழப்பீடு உயர்த்தி வழங்க உள்ளது. சிறுகுறு விவசாயிகளின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு நிலம் வழங்கவும் அரசு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.'' என்றார்.

பசுமை வழிச்சாலை என்பது பன்னாட்டு நிறுவனங்களுக்கு ஆதரவாக அமைக்கபடுகிறதா என எழுப்பப்பட்ட கேள்விக்கு கற்பனையான கேள்விகளுக்கு பதில் அளிக்க இயலாது என்றார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: