கமலா ஹாரிஸ் இந்திய விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தாரா?

பட மூலாதாரம், Getty Images
இந்திய அரசின் புதிய விவசாயச் சட்டங்கள் தங்கள் வாழ்வாதாரத்தை கேள்விக்குறியாக்கிவிடும் என, விவசாயிகள் அச்சட்டங்களை எதிர்த்து டெல்லியில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இணையத்தில், விவசாயிகள் போராட்டத்தின் பெயரில் பல தவறான தகவல்கள் வந்து கொண்டு இருக்கின்றன. இந்த தவறான தகவல்களை அரசியல் கட்சிகளும், தனி நபர்களும், விவசாயிகள் போராட்டத்தை ஆதரித்தும், எதிர்த்தும் பகிர்ந்து வருகிறார்கள்.
அப்படிப்பட்ட, சில தவறான செய்திகளைப் பார்த்தோம்.
கமலா ஹாரிஸ் இந்திய விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவா?
அமெரிக்க துணை அதிபராக தேர்வாகி இருக்கும் கமலா ஹாரிஸ், இந்திய விவசாயிகள் போராட்டத்தை வெளிப்படையாக ஆதரித்து ட்விட் செய்திருப்பது போல ஒரு படம், ஃபேஸ்புக்கில் பகிரப்பட்டு வருகிறது.

"விவசாய சட்டங்களை எதிர்த்துப் போராடும் விவசாயிகளை, இந்திய அரசு ஒடுக்குவதைப் பார்க்கும் போது அதிர்ச்சியாக இருக்கிறது. நீரை பீச்சி அடிக்கும் கருவி மற்றும் கண்ணீர் புகை குண்டுகளைப் பயன்படுத்துவதற்கு பதிலாக, இந்திய அரசு விவசாயிகளுடன் வெளிப்படையாக பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்" என கமலா ஹாரிஸ் ட்விட் செய்தது போல இருக்கிறது அந்தப் படம்.
இப்படி ஃபேஸ்புக்கில் பகிரப்பட்டிருக்கும் பதிவில், இது போலியாக உருவாக்கப்பட்டு இருக்கிறது என ஃபேஸ்புக் நிறுவனமே எச்சரிக்கை செய்து இருக்கிறது.
உண்மையில், கமலா ஹாரிஸ் விவசாயிகள் போராட்டம் குறித்து தனிப்பட்ட முறையிலோ அல்லது அதிகாரபூர்வமாகவோ ட்விட்டரில் எந்த கருத்தையும் பதிவிடவில்லை.
இந்த ட்விட்டர் பதிவு குறித்து, கமலா ஹாரிஸின் ஊடக அணியிடம் கேட்ட போது "ஆம் இது போலியானது" என பதிலளித்து இருக்கிறார்கள்.
கடந்த 27 நவம்பர் 2020 அன்று, கனடா நாட்டைச் சேர்ந்த ஜாக் ஹாரிஸ் என்கிற நாடாளுமன்ற உறுப்பினர், விவசாயிகள் போராட்டத்தை ஆதரித்து ட்விட் செய்து இருந்தார். கமலா ஹாரிஸ் ட்விட் செய்ததாக சமூக வலைதளங்களில் உலா வரும் படங்களில் சொல்லப்பட்டிருக்கும் கருத்து, ஜாக் ஹாரிஸின் ட்விட்டுடன் பொருந்திப் போகிறது. ஜாக் ஹாரிஸுக்கும், கமலா ஹாரிஸுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
காஷ்மீர் - பழைய படம்
விவசாயிகள் போராட்டத்தின் ஒரு பகுதியாக, இந்திய நிர்வாகத்துக்கு உட்பட்ட காஷ்மீர் பகுதியில், சட்டப் பிரிவு 370 மற்றும் 35A ரத்து செய்யப்பட்டதை, சில சீக்கியர்கள் எதிர்ப்பதாகச் ஒரு ட்விட்டர் பதிவு பரவலாக பகிரப்பட்டு வருகிறது.

இதன் முதல் ட்விட் (Original Tweet) 3,000 ரீ-ட்விட்களையும், 11,000 லைக்குகளையும் பெற்று இருக்கிறது.
இந்த பதிவை, பாஜக பெண்கள் பிரிவின் சமூக வலைதளத் தலைவரான ப்ரிதி காந்தியும் ரீ-ட்விட் செய்து இருக்கிறார்.
விவசாயிகள் போராட்டம், வேறு நோக்கங்களைக் (காஷ்மீர் விவகாரம் மற்றும் பஞ்சாப் மாநிலத்தின் சீக்கியர்களுக்கான சுதந்திரம்) கொண்ட சில குழுக்களால் சுரண்டப்படுகிறது என, இந்த ட்விட் பதிவுக்குக் கீழ், சிலர் தங்கள் கருத்துக்களைத் தெரிவித்து இருக்கின்றனர்.
ஆனால் உண்மையில் இந்த படம் கடந்த ஆகஸ்ட் 2019-ல், பஞ்சாபின் முக்கிய மாநில கட்சிகளில் ஒன்றான, சிரோமணி அகாலி தளம், தங்கள் ஃபேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்து இருந்தார்கள்.
சிரோமணி அகாலி தளம் மற்றும் சில குழுக்கள், கடந்த 2019-ல், காஷ்மீரில் சட்டப் பிரிவு 370 ரத்து செய்யப்பட்டதை எதிர்த்தார்கள். அப்போது எடுக்கப்பட்டு, தங்கள் ஃபேஸ்புக்கில் பகிரப்பட்ட படம் இது.
எனவே, இந்த படத்துக்கும் தற்போதைய விவசாயிகள் போராட்டத்துக்கும் எந்த ஒரு தொடர்பும் இல்லை.
"அரசு விவசாயிகளை தீவிரவாதிகளைப் போல் நடத்துகிறது"
பாஜக அரசியல்வாதிகள் மட்டும் தவறான திசைதிருப்பக் கூடிய படங்களைப் பகிரவில்லை. காங்கிரஸும் பகிர்ந்து இருக்கிறது.

கடந்த அக்டோபர் 2018 காலத்தில் எடுக்கப்பட்ட பழைய படங்களை இந்திய இளைஞர் காங்கிரஸ் மற்றும் பல காங்கிரஸ் தலைவர்கள் பகிர்ந்து இருக்கிறார்கள். அவர்கள் பகிர்ந்த படத்தில், காவலர்கள், தடுப்பு அரண்களையும், நீர் துப்பாக்கிகளையும் பயன்படுத்துவதாக இருக்கிறது. இந்த படங்கள், தற்போதைய போராட்டத்தை பிரதிபலிப்பதாக இருக்கிறது எனக் குறிப்பிட்டு இருக்கிறார்கள் காங்கிரஸ் தலைவர்கள்.
அப்படிப்பட்ட ஒரு சமூக வலைதளப் பதிவில் "அரசு விவசாயிகளை தீவிரவாதிகளைப் போல் நடத்துகிறது" எனவும் குறிப்பிட்டு இருக்கிறார்கள்.
சமீபத்தில், விவசாயிகள் போராட்டத்தில் நீர் துப்பாக்கிகளும், கண்ணீர் புகை குண்டுகளும் காவல் துறையினரால் பயன்படுத்தப்பட்டது.
இருப்பினும், இந்த படங்கள், இரண்டு ஆண்டுகளுக்கு முன், வேறு இடத்தில், வேறு போராட்டங்களில் எடுக்கப்பட்டவைகள்.
Reverse Image Search என்கிற முறையில், இந்த படத்தைத் தேடிய போது, இந்த படம் உத்தரப் பிரதேச விவசாயிகளால் நடத்தப்பட்ட போராட்டம் என்பதைக் காட்டுகிறது. கடந்த 2018-ம் ஆண்டு, விவசாயக் கடன்கள் தள்ளுபடி மற்றும் விவசாயிகள் கடனைத் திருப்பிச் செலுத்துவது தொடர்பாக, உத்தரப் பிரதேச விவசாயிகள் டெல்லியை நோக்கி வந்த போது எடுக்கப்பட்டவை.
அப்போது, உத்தரப் பிரதேச விவசாயிகள், உத்தரப் பிரதேசம் - டெல்லி எல்லைப் பகுதியிலேயே தடுத்து நிறுத்தப்பட்டார்கள். இது நடந்தது, டெல்லியின் கிழக்கு எல்லைப் பகுதி. ஆனால் தற்போது நடந்து கொண்டிருக்கும் போராட்டங்கள், பஞ்சாப் & ஹரியானா - டெல்லி எல்லைப் பகுதியில் நடந்து கொண்டு இருக்கிறது. இது டெல்லியின் வடக்கு எல்லைப் பகுதி என்பது குறிப்பிடத்தக்கது.
பிற செய்திகள்:
- சோசலிசம் குறித்து அம்பேத்கரின் கருத்து என்ன? - வெளிச்சத்துக்கு வராத பக்கங்கள்
- அயோத்தி பாபர் மசூதி இடிப்பும், ராமர் கோயில் அரசியலும் - 165 ஆண்டு வரலாறு
- மத்தியப் பிரதேச 'லவ் ஜிகாத்' சட்டம்: 10 ஆண்டு சிறை, ஒரு லட்சம் ரூபாய் அபராதம்
- பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி ரஷ்யாவில் தொடங்கியது
- ரஜினி அரசியலுக்கு வந்துவிட்டார் - அடுத்தது என்ன?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












