செயற்கை கோழி இறைச்சி: கத்தியின்றி ரத்தமின்றி தயாராகும் உணவு வகை

பட மூலாதாரம், Getty Images
ஆய்வகத்தில் உருவாக்கப்பட்ட செயற்கை கோழி இறைச்சியை விற்பனை செய்ய சிங்கப்பூர் அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதுபோன்ற உணவுப் பொருள் உலகில் வேறு எங்கும் விற்பனைக்கு வரவில்லை என அதன் உற்பத்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
அமெரிக்காவை முந்திக் கொண்டு இந்த செயற்கை கோழி இறைச்சிக்கு சிங்கப்பூர் அனுமதி அளித்திருப்பது கவனிக்கத்தக்கது.
உலகம் முழுவதும் விலங்குகளைக் கொன்று அவற்றின் இறைச்சியை பயன்படுத்துவதே வழக்கமாக உள்ளது. எனினும் நீண்டகால அடிப்படையில் உடல்நலம், விலங்குகளின் நலம் மற்றும் சுற்றுப்புறச் சூழல் ஆகியவற்றைக் கவனத்தில் கொள்ளும்போது இறைச்சிக்கு மாற்று (உணவுப் பொருள்) என்பது அவசியமாகிறது என்கிறார்கள் நிபுணர்கள்.
தாவரம் சார்ந்த மாற்று இறைச்சியை சில நிறுவனங்கள் உற்பத்தி செய்கின்றன. சைவ உணவுப் பிரியர்களை அவை திருப்திபடுத்துகின்றன.
விலங்குகளின் தசையில் இருந்து எடுக்கப்படும் செல்களை ஆய்வுக்கூடங்களில் வளர்த்து, அதன் மூலம் இறைச்சி தயாரிக்கும் முயற்சியும் ஒருபக்கம் நடந்து வருகிறது. இதற்கான செலவு மிக அதிகமாக உள்ளது.
அந்த வகையில் கோழியின் செல்களைப் பிரித்தெடுத்து, அவற்றுடன் சில சத்துப்பொருள்களைக் கலந்து இந்த செயற்கை கோழி இறைச்சி தயாரிக்கப்பட்டுள்ளது. கோழிகளின் உயிரணுக்கள் பயன்படுத்தப்பட்டாலும், அவை இறைச்சியாக மட்டுமே உருவெடுக்கும். மாறாக ரத்தம் உள்ள உயிருள்ள கோழிகள் உருவாக்கப்படுவதில்லை. இதை வளர்ப்பு இறைச்சி என்றும் குறிப்பிடுகிறார்கள்.
உணவு உற்பத்தியை அதிகரிக்க விரும்பும் சிங்கப்பூர்
சிங்கப்பூரின் மக்கள் தொகை 5.7 மில்லியன் ஆகும். அதன் உணவுத் தேவையில் 10 விழுக்காடு மட்டுமே உள்நாட்டு உற்பத்தியாக இருக்கிறது.
பெரும்பாலான உணவுப் பொருட்கள் இறக்குமதி செய்யப்படுகின்றன. அடுத்த பத்து ஆண்டுகளுக்குள் மாற்று உணவு மற்றும் அதி உயர் வேளாண் தொழில்நுட்பம் மூலம் உணவு உற்பத்தியை அதிகரிக்க சிங்கப்பூர் திட்டமிட்டுள்ளது.
இத்தகைய சூழலில்தான் செயற்கை கோழி இறைச்சி சிங்கப்பூர் சந்தையில் களமிறக்கப்படுகிறது.

பட மூலாதாரம், Getty Images
அனைத்துலக தொழில் கேந்திரமாக விளங்கும் சிங்கப்பூர் சுற்றுலாவையும் சார்ந்துள்ளது. பல்வேறு உலக நாடுகளைச் சேர்ந்த பலதரப்பட்ட மனிதர்கள் வந்து செல்லும் இடம் என்பதால் உள்நாட்டுச் சந்தையில் விற்கப்படும் உணவுப் பொருட்களின் தரம், விலை மற்றும் பாதுகாப்புத் தன்மையில் அந்நாடு எந்தவித சமரசமும் செய்து கொள்வதில்லை.
உணவு உற்பத்தியை பெருக்குவதற்கான மாற்று வழிமுறைகளை ஆராயும் அதே வேளையில் மிக கவனமாகச் செயல்படுகிறது சிங்கப்பூர் அரசு.
உணவு முகமை நிபந்தனைகள்
இந்த செயற்கை கோழி இறைச்சி மனிதர்கள் உட்கொள்ள பாதுகாப்பானது என சிங்கப்பூர் உணவு முகமை (Singapore Food Agency) அங்கீகரித்துள்ளது. இதன் தயாரிப்பு முறை, பாதுகாப்பு சோதனை ஆகியவற்றுக்குப் பிறகே செயற்கை கோழி இறைச்சியை சிங்கப்பூரில் விற்க அனுமதி அளிக்கப்பட்டதாக அந்த முகமை தெரிவித்துள்ளது.
மேலும், மூலப்பொருள் நச்சுத்தன்மை கொண்டதா, உணவுப் பொருள் தரம் தொடர்பான விதிமுறைகளை அந்தப் பொருள் பூர்த்தி செய்கிறதா என்பன போன்றவை ஆராயப்பட்டதாகவும் அம்முகமை கூறியுள்ளது.
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் சிங்கப்பூர் உணவு முகமை புதிதாக அறிமுகமாகும் உணவுப் பொருட்களின் பாதுகாப்புத்தன்மை குறித்து ஆராய்வதற்குத் தேவைப்படும் விவரங்கள் குறித்த அறிக்கை ஒன்றை வெளியிட்டது.
குறிப்பிட்ட பிரிவினரால் 20 ஆண்டுகளுக்கும் மேலாக உட்கொள்ளப்பட்டு, அதனால் உடல்நலத்துக்கு தீங்கு விளைவிக்கும் பக்கவிளைவுகள் எதையும் ஏற்படுத்தாத உணவு வகைகளை அம்முகமை 'பாதுகாப்பான உணவு' என வகைப்படுத்தியுள்ளது.
எனவே செயற்கை இறைச்சி, சில வகையான பூச்சிகள், பாசிகள் மற்றும் பூஞ்சை சார்ந்த புரதங்களை உள்ளடக்கிய உணவுப் பொருட்களின் பாதுகாப்புத் தன்மை குறித்து ஆராய பல்வேறு தகவல்களை சிங்கப்பூர் உணவு முகமை கேட்கிறது. அனைத்து தகவல்களையும் ஆராய்ந்த பிறகே குறிப்பிட்ட உணவுப் பொருள் சந்தையில் விற்பனைக்கு வர அனுமதி வழங்கப்படுகிறது.
புதிய ஒழுங்குமுறை விதி பணிச்சட்டத்தின்கீழ் சிங்கப்பூர் உணவு முகமை பயன்பாட்டுக்கு அனுமதித்துள்ள முதல் உணவுப்பொருள் இந்த கோழி இறைச்சிதான் என சிங்கப்பூர் ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

பட மூலாதாரம், Getty Images
அமெரிக்காவை விஞ்சிய சிங்கப்பூர்
Eat Just எனும் கலிஃபோர்னிய நிறுவனம் தான் புதிய செயற்கை கோழி இறைச்சியை தயாரித்துள்ளது. இது சிறு துண்டுகளாக (Nuggets வடிவில்) விற்கப்படும் என்றும் சிங்கப்பூரிலேயே தயாரிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த செயற்கை கோழி இறைச்சி துண்டுகள் எப்போது விற்பனைக்கு வரும் என்பது இன்னும் அறிவிக்கப்படவில்லை. தொடக்கத்தில் இவற்றின் விலை சற்று அதிகமாக இருந்தாலும் போகப்போக குறையும் என்றும் Eat Just நிறுவனம் தெரிவித்ததாக ஊடகச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
"செயற்கை கோழி இறைச்சியை அங்கீகரிக்கக் கோரி அமெரிக்காவிடம் கேட்டுள்ளோம். ஆனால் அதற்கும் முன்னதாகவே சிங்கப்பூர் அங்கீகரித்துள்ளது. செயற்கை கோழி மட்டுமல்லாமல், முட்டைக்கு மாற்றாக நாங்கள் அறிமுகப்படுத்திய உணவையும் சிங்கப்பூரிலேயே தயாரிக்க திட்டமிட்டுள்ளோம். 'மாற்று முட்டை'க்கு அமெரிக்காவில் வணிக ரீதியில் நல்ல வரவேற்பு உள்ளது," என Eat Just தலைமை செயல் இயக்குநர் ஜோஷ் டெட்ரிக் கூறுகிறார்.
மாற்று இறைச்சி சந்தைக்கு மவுசு
உலகளவில் மாற்று இறைச்சிக்கான சந்தை மிக வேகமாக வளர்ந்து வருகிறது. 2029ஆம் ஆண்டு இச்சந்தையின் மதிப்பு சுமார் 140 பில்லியன் டாலர்களாக இருக்கும் என பார்க்லேஸ் (Barclays) கணித்துள்ளது.
தற்போது ஆய்வகங்களில் உருவாக்கப்படும் செயற்கை மீன், கோழி மற்றும் ஆட்டிறைச்சியை உலகளவில் இரு டஜன்களுக்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பரிசோதித்து வருகின்றன.
மாற்று இறைச்சி சந்தையில் முதலீடு செய்ய பல்வேறு நிறுவனங்கள் ஆர்வமாக உள்ளன. அமெரிக்காவை சேர்ந்த Memphis Meats இந்த ஆண்டு கணிசமான முதலீட்டை ஈர்த்துள்ளது. செயற்கை இராலை விற்கும் முதல் நிறுவனமாக உருவெடுக்க நினைக்கும் சிங்கப்பூரின் Shiok Meatsம் சில நிறுவனங்களின் ஆதரவைப் பெற்றுள்ளது.
எனவே மாற்று இறைச்சி சந்தையின் வளர்ச்சி அடுத்து வரும் ஆண்டுகளில் துரிதமாக இருக்கும் என நிபுணர்கள் கணித்துள்ளனர்.
பிற செய்திகள் :
- விவசாயிகள் போராட்டம்: ஜஸ்டின் ட்ரூடோவின் ஆதரவு இந்திய உள்விவகார தலையீடா?
- 1996ல் இருந்து 2021வரை - ரஜினி எழுச்சிக்கு தேவைப்பட்ட 25 ஆண்டுகள்
- ரஜினியுடன் கைகோர்த்த இரு முக்கிய பிரபலங்கள் - பின்னணி என்ன?
- தேன் சுவையை கூட்ட சீன சர்க்கரை கலந்து கலப்படமா? பரிசோதனையில் திடுக்கிடும் தகவல்கள்
- விவசாயிகள் போராட்டம்: கருத்தொற்றுமை இல்லை - மீண்டும் அரசுடன் டிசம்பர் 5ல் சந்திப்பு
- புரெவி புயல்: வலுவிழந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது
- "என்கிட்ட 20 ரூபாய் தான் இருக்கு, வரலாமா?" ஆட்டோ ஓட்டுநரிடம் கேட்ட முன்னாள் எம்.எல்.ஏ!
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












