'லவ் ஜிகாத்' சட்டம்: மத்தியப் பிரதேசத்தில் 10 ஆண்டு சிறை, ஒரு லட்சம் ரூபாய் அபராதம் - இன்றைய செய்திகள்

மத்தியப் பிரதேச 'லவ் ஜிகாத்' சட்டம்: 10 ஆண்டு சிறை, ஒரு லட்சம் ரூபாய் அபராதம்

பட மூலாதாரம், Getty Images

இந்தியாவின் சில முக்கிய நாளிதழ்கள் மற்றும் அவற்றின் இணையப்பக்கங்களில் வெளியான செய்திகளின் தொகுப்பு.

மத்தியப் பிரதேச மத சுதந்திர சட்டம் - சிவராஜ் சிங் சௌகான் ஆலோசனை

மத்தியப் பிரதேச மாநிலத்தில் இயற்ற திட்டமிடப்பட்டுள்ள 'மத்தியப் பிரதேச மத சுதந்திர' சட்டத்தின்கீழ் திருமணம் அல்லது வேறு முறைகேடான வழிகளில் மதமாற்றம் செய்வோருக்கு 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனையும், ஒரு லட்சம் ரூபாய் வரை அபராதமும் விதிக்கப்படும் என்று அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளதாக தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

ஒருவரை மதம் மாற்றும் நோக்கில் மட்டுமே செய்யப்படும் திருமணம் செல்லாது என்னும் விதியும் அந்தச் சட்டத்தில் இருக்கும் என்று தெரிவிதிக்கப்பட்டுள்ளது.

இந்த சட்டத்தை நிறைவேற்றுவது தொடர்பாக முதல்வர் சிவராஜ் சிங் சௌகான் சனியன்று ஆலோசனைக் கூட்டம் ஒன்றை நடத்தியுள்ளார். இதில் கலந்துகொண்ட அதிகாரியே மேற்கண்ட தகவலைத் தெரிவித்துள்ளார்.

இந்து பெண்களை இஸ்லாமிய ஆண்கள் ஏமாற்றி திருமணம் செய்வதாக தாங்கள் முன்வைக்கும் குற்றச்சாட்டுக்கு 'லவ் ஜிகாத்' என்று பெயரிட்டு வழங்குகின்றனர் இந்து வலதுசாரிகள்.

பாரதிய ஜனதா கட்சி ஆட்சியில் இருக்கும் மாநிலங்களின் முதல்வர்கள் மற்றும் கட்சித் தலைவர்கள் இதைத் தடுக்க சட்டம் கொண்டுவரப்படும் என்று சமீப காலமாகப் பேசி வருகின்றனர்.

உத்தரப் பிரதேசத்தில் இத்தகைய சட்டம் சமீபத்தில் அமலுக்கு வந்துள்ளது.

தமிழகத்தில் இன்று எங்கு மழை பெய்யும்?

தமிழகத்தில் இன்று 13 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது என்கிறது தினத்தந்தி செய்தி.

தமிழகத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) ராமநாதபுரம், மதுரை, விருதுநகர், தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், சிவகங்கை, புதுக்கோட்டை, தேனி, திண்டுக்கல், கோவை, நீலகிரி, கடலூர், தஞ்சாவூர், திருவாரூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழையும் பெய்யக்கூடும்.

ஏனைய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மய்யம் மாதர் படை

மய்யம் மாதர் படை

பட மூலாதாரம், Maiam

மக்கள் நீதி மய்யம் கட்சியில் பெண்களுக்காக 'மய்யம் மாதர் படை' என்ற புதிய பிரிவு தொடங்கப்பட்டுள்ளதாக அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார் என இந்து தமிழ் திசை செய்தி தெரிவிக்கிறது.

கட்சியின் கட்டமைப்பு மற்றும் அணிகளில் பொறுப்பு வகிக்கும் பெண்களும், கட்சியின் உறுப்பினர்கள், அவர்களது குடும்பத்தைச் சேர்ந்த பெண்களும் இதில் பங்குபெறலாம். கட்சி சாராத மக்கள் நலனிலும் தமிழகத்தைச் சீரமைப்பதிலும் ஒரே நோக்கம் கொண்ட பெண்களும் கூட இப்பிரிவில் இணைந்து செயல்படுவார்கள் என்று கமல்ஹாசன் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :