பாஜக தென்னிந்தியாவில் வளர்கிறதா? ஹைதராபாத் மாநகராட்சி தேர்தல் முடிவு என்ன சொல்கிறது?

kcr

பட மூலாதாரம், Getty images

படக்குறிப்பு, கே சி ஆர்
    • எழுதியவர், ஜி.எஸ்.ராம்மோகன்
    • பதவி, ஆசிரியர், பிபிசி தெலுங்கு சேவை

தெலங்கானாவை ஆட்சி செய்து வரும் தெலங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சி (டிஆர்எஸ்), ஹைதராபாத் மாநகராட்சித் தேர்தலில் வெற்றி பெற்றுள்ளது.

ஆனால் அது பாஜகவிடம் இருந்து மிகக் கடுமையான சவாலை எதிர்கொண்டது. மாநிலத்தை ஆளும் கட்சி இப்போது தினமும் மத்தியில் ஆளும் கட்சியிடமிருந்து சவால்களை எதிர்கொள்ளப் போகிறது என்பது மட்டும் தெளிவாகத் தெரிகிறது.

துபாகா சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தலில் பாஜக வென்றது இதற்கான சமிக்ஞைகளைக் காட்டியது. ஹைதராபாத் மாநகராட்சித் தேர்தல் அதை வலுவாக உறுதிப்படுத்தி இருக்கிறது.

காங்கிரஸ் கட்சி பின்னோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. ஆளும் டி.ஆர்.எஸ் கட்சியில் இருந்து சில அமைச்சர்கள் மற்றும் முன்னாள் அமைச்சர்கள் கூட பாஜகவில் சேரத் தயாராக இருப்பதாக சமிக்ஞைகளை அனுப்புகிறார்கள் என ஆர்.எஸ்.எஸ் அமைப்பைச் சேர்ந்த ஆர்.சுதாகர்ராவ் கூறுகிறார்.

இந்த தேர்தல் பாஜக தலைவர்களிடையே அதீத உற்சாகத்தை ஏற்படுத்தி இருக்கிறது என்பதை இது காட்டுகிறது. ஹைதராபாத் தேர்தலுக்கான பிரசாரம் ஹைதராபாதைச் சேராதவர்களை மட்டுமல்ல, ஹைதராபாதைச் சேந்தவர்களையும் கூட ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

மாநகராட்சித் தேர்தல்கள் ஒருபோதும் இத்தகைய பிரம்மாண்டமான நிகழ்ச்சிகளையும், பிரச்சாரங்களையும் பார்த்ததில்லை. உள்துறை அமைச்சர் அமித் ஷா, உத்திரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் மற்றும் பிற பாஜகவின் முக்கிய தலைவர்கள் ஹைதராபாத் தேர்தலுக்காக பிரச்சாரம் செய்தது, தேசிய அளவில் பெரிய பேசுபொருளாக மாறியது. இந்தத் தேர்தல் நமக்கு என்ன சொல்ல வருகிறது? ஹைதராபாத்தின் எல்லைகளுக்கு அப்பால் அதன் அரசியல் முக்கியத்துவம் என்ன?

காங்கிரஸின் வீழ்ச்சி மற்றும் பாஜகவின் எழுச்சி

தெலங்கானா மாநிலத்தில், காங்கிரஸ் கட்சிதான் அதிகாரபூர்வமாக சட்டமன்றத்தில் எதிர்க்கட்சியாக இருக்கிறது. இருப்பினும், தெலுங்கானாவில் எதார்த்தத்தில் எதிர்க்கட்சியாக இருப்பது பாஜகதான் என்பதை இந்த தேர்தல் முடிவு காட்டுகிறது.

பாஜக

பட மூலாதாரம், Getty images

காங்கிரசுக்கு வலுவான தலைவர் இல்லை என்பதும், அப்படியே தலைவர்கள் இருந்தாலும் அவர்கள், எந்த ஒருங்கிணைப்பும் இல்லாமல் செயல்படுகிறார்கள் என்பதும் பாஜகவுக்கு உதவியது.

அதிரடி பிரசாரத்துக்குப் பெயர் பெற்ற தெலுங்கானா ராஷ்டிர சமிதி கட்சியினர், இப்போது பாஜகவிடம் இருந்து ஒரு கடும் எதிர்ப்பை சந்தித்துள்ளனர்.

நாடாளுமன்றத் தேர்தல் பாஜகவுக்கு போதிய நம்பிக்கை அளித்தது. துபாகா இடைத்தேர்தல் பாஜகவின் நம்பிக்கையை உயர்த்தியது. வரலாறு காணாத வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்குவதில் டி.ஆர்.எஸ் கட்சியினர் தடுமாறினார்கள். இது பாஜகவுக்கு கைகொடுத்தது.

பாஜக பெற்ற வாக்குகளைக் கவனித்தால், ஆட்சிக்கு எதிரான வாக்குகளை பாஜக சிந்தாமல் சிதறாமல் பெற்றிருப்பது தெரியும். முக்கியமாக முதல்வர் கே.சி.ஆர் குடும்பத்துக்கு மாற்று வேண்டும் என்று நம்பும் மக்கள் கணிசமான எண்ணிக்கையில் உள்ளனர் என்பதையும் புரிந்து கொள்ள முடிகிறது.

பாஜக

பட மூலாதாரம், Getty Images

பாஜகவின் கருத்துகளோடு உடன்பாடு இல்லாதவர்களை ஈர்ப்பதில் கூட பாஜக வெற்றிபெறுகிறது. அதற்கு பல காரணங்கள் இருக்கின்றன, ஆனால் முடிவு ஒன்று தான். சுருக்கமாகச் சொல்ல வேண்டுமானால், ஆளும் டி.ஆர்.எஸ் கட்சிக்கு மாற்றாக பாஜக தன்னை நிலைநிறுத்திக் கொள்கிறது.

இதை, முந்தைய ஹைதராபாத் தேர்தலுடன் ஒப்பிடுவதன் மூலம் தெரிய வருகிறது.

2015-ம் ஆண்டு ஹைதராபாத் மாநகராட்சி தேர்தலின் போது, தனி மாநில போராட்டம் நடத்திய உணர்வு மக்களின் நினைவில் அப்படியே இருந்தது. தேர்தலிலும் அது எதிரொலித்தது. இது டிஆர்எஸ் கட்சிக்கு உதவியது. இருப்பினும், ஹைதராபாத்தில் பாஜகவுக்கு எப்போதுமே கொஞ்சம் ஆதரவு இருந்தது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

பாஜகவைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சரும் தற்போதைய ஹிமாச்சலப் பிரதேச ஆளுநருமான பண்டாரு தத்தாத்ரேயா, தெலங்கானாவிலிருந்து தான் நாடாளுமன்றத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதே போல, பாஜக கடந்த காலத்தில் பல நாடாளுமன்ற உறுப்பினர்களை இங்கிருந்து அனுப்பி இருக்கிறது. தற்போதைய உள்துறை இணை அமைச்சர் ஜி. கிஷன் ரெட்டியும் ஹைதராபாத்திலிருந்து நாடாளுமன்றத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்தான்.

துபாகாவின் தாக்கமும், அதன் முக்கியத்துவமும்

தெலங்கானா தனி மாநிலமாக உருவான பின்னர் நடைபெற்ற அனைத்து இடைத் தேர்தல்களிலும், வெற்றி பெற்றது டி.ஆர்.எஸ் கட்சிதான். பா.ஜ.க இப்போது டி.ஆர்.எஸ் கட்சியின் வெற்றிப் பயணத்துக்கு முட்டுக்கட்டை போட்டுள்ளது.

அண்மையில் நடந்த துபாகா சட்டமன்ற இடைத் தேர்தலில், பாஜக வேட்பாளர் எம். ரகுநந்தன ராவ், 1,000 வாக்குகள் கூடுதலாகப் பெற்று வெற்றி பெற்றார். இந்த வெற்றி மூலம், பாஜக தெலங்கானாவில் தன் இரண்டாவது சட்டமன்ற உறுப்பினரைப் பெற்று இருக்கிறது.

தற்போது தெலங்கானா மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியில் ஆறு சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் பாஜகவில் இரு சட்டமன்ற உறுப்பினர்களும் உள்ளனர். டிஆர்எஸ் உடன் நெருக்கமாக இருக்கும் ஏ.ஐ.எம்.ஐ.எம் கட்சியில் 7 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர்.

துபாகாவில் வெற்றி பெற்ற பாஜக வேட்பாளர் ரகுநந்தன ராவ், ஒரு காலத்தில், தற்போதைய முதல்வர் சந்திரசேகர ராவின் நம்பிக்கைக்கு உரியவராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. அதே போல, ரகுநந்தன ராவ், சந்திர சேகர ராவின் சாதியைச் சேர்ந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

துபாகாவைச் சுற்றியுள்ள சட்டமன்றத் தொகுதிகள் பலவும் முதல்வர் மற்றும் அவரது குடும்பத்தினர் நிற்கும் தொகுதிகள்.

உங்கள் கோட்டையிலேயே நாங்கள் உங்களை தோற்கடிக்க முடியும் என, டிஆர்எஸ் கட்சிக்கு, பாஜக உரக்கச் சொல்லி இருக்கிறது. இது தெலுங்கானாவில் பாஜக தொண்டர்கள் மத்தியில் புதிய உற்சாகத்தைத் கொடுத்துள்ளது.

பாஜக மத்திய தலைமைக்கும் புதிய நம்பிக்கையைக் கொடுத்து இருக்கிறது. துபாகா தேர்தலுக்குப் பிறகு, கொஞ்ச காலத்திலேயே ஹைதராபாத் மாநகராட்சித் தேர்தல் நடைபெற்றது பாஜகவுக்கு ஒரு வகையில் உதவியது எனலாம்.

பாஜகவின் இளைய தலைவர்கள்

இதுவரை தெலங்கானாவில் இருந்த பாஜக தலைவர்களுக்கும், புதிதாக வளர்ந்து வரும் இளைய தலைமுறை பாஜக தலைவர்களுக்கும் பெரிய வேறுபாடுகள் இருக்கின்றன.

இன்று இளைய தலைமுறையினர், தினமும் பயன்படுத்துவது போல மோசமான வார்த்தைகளை, முந்தைய தலைவர்கள் பயன்படுத்தவில்லை. மத்தியில் இருக்கும் பாஜக தலைவர்கள், தற்போதைய இளைய தலைமுறையினர் பயன்படுத்தும் கடுமையான மொழிக்கு முழு சம்மதம் தெரிவித்து இருப்பதாக, சங் பரிவார் அமைப்பைச் சேர்ந்த ஒருவர் கூறுகிறார். மேலும், தற்போது காங்கிரஸில் இருந்து, ரெட்டிகளை தங்கள் பக்கம் இழுக்கும் வேலையில் பாஜக ஈடுபட்டிருப்பதாகவும் அவர் கூறுகிறார்.

நாங்கள் ஹைதராபாத் மாநகராட்சித் தேர்தலில் வெற்றி பெற்றால், சாலை போக்குவரத்து விதிமீறல்களுக்கான அபராதங்களை, பாஜக செலுத்தும் என, தெலங்கானா பாஜக தலைவர் கூறியிருந்தார். இது பரவாலாக விமர்சனங்களைக் கிளப்பியது.

இப்படி தெருச் சண்டை போல, அதிரடியாக ஆளும் அரசை தாக்கிப் பேசும் புதிய தலைமுறை அரசியல் தலைவர்களின் பாணி, பாஜகவின் மத்திய தலைமையை வெகுவாக ஈர்த்து இருக்கிறது என்பது தெளிவாகத் தெரிகிறது.

மேற்கு வங்கத்துக்குப் பிறகு தெலங்கானா

பாஜக தொடர்ந்து மேற்கு வங்கத்தில் கவனம் செலுத்தி வருகிறது. சில நேரங்களில், மேற்கு வங்கத்துக்குப் பிறகு தெலங்கானாதான், பாஜகவின் இலக்காக இருப்பதாகக் கூறப்படுகிறது.

ஹைதராபாத் மாநகராட்சித் தேர்தலில், கடந்த 2015-ல் வெறும் 4 இடங்களில் வெற்றி பெற்றது பாஜக, இந்த முறை 40-க்கும் மேற்பட்ட இடங்களில் வென்று இருக்கிறது. இதன் மூலம் பாஜக நிறுவ விரும்பிய விஷயத்தை அழுத்தமாக நிறுவி இருக்கிறது.

கர்நாடக மாநிலத்தைத் தாண்டி, தென் இந்தியாவில் வளர முடியாமல் தடுமாறிக் கொண்டிருந்த பாஜக, தற்போது தெலங்கானா மாநிலத்தில் கூடுதல் கவனம் செலுத்திக் கொண்டு இருக்கிறது. தெலங்கானாவில் பாஜக கட்சியை வலுப்படுத்த ஒரு மத்திய அமைச்சர், தெலங்கானாவுக்கே அனுப்பப்படலாம் என பாஜகவைச் சேர்ந்த ஒருவர் கூறுகிறார்.

கே.சி.ஆரின் மூன்றாவது கூட்டணி என்ன ஆனது?

மத்தியில் மூன்றாவது அணியை அமைக்கும் வேலையில் இறங்கி இருப்பதாக கே.சி.ஆர். சமீபத்தில் அறிவித்தார். டிசம்பர் மாதத்தின் இரண்டாவது வாரத்தில், பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த தலைவர்களையும், ஹைதராபாத்துக்கு அழைத்து இருப்பதாகவும் கூறினார் கே.சி.ஆர். கடந்த நாடாளுமன்ற தேர்தலின் போதும், இதே போல மூன்றாவது கூட்டணி அமைக்கும் வேலையில் இறங்கினார். மு.க.ஸ்டாலின் மற்றும் மம்தா பேனர்ஜி போன்றவர்களைச் சந்தித்தார்.

அப்போது, மத்தியில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலை வரலாம். எனவே சிறிய கட்சிகள்தான் நாடாளுமன்றம் அமைவதில் முக்கிய பங்கு வகிக்கும் என்று எதிர்பார்த்தார். ஆனால் பாஜக தனிப் பெரும்பான்மையாக வென்று ஆட்சியைத் தக்கவைத்துக் கொண்டது. கே.சி.ஆரின் திட்டம் பொய்த்துப்போனது.

தேவ கௌடா

பட மூலாதாரம், Getty Images

தேவ கெளடா பிரதமரான பின், இந்த மாதிரியான நம்பிக்கைகள், மாநில கட்சிகளுக்கு அதிகரித்தது. ஒருவேளை கே.சி.ஆர் கணித்தது போல நடந்து இருந்தால், மாநில அரசியலை, தன் மகன் தாரக ராமா ராவிடம் கொடுத்துவிட்டு, தேசிய அரசியலில் குதிக்க திட்டமிட்டு இருந்தார் கேசிஆர் எனக் கூறப்படுகிறது.

தற்போது தெலங்கானாவில் ஆட்சியைத் தக்க வைத்துக் கொள்வதற்கே அவருக்கு பாஜக சவால் விட்டு இருக்கிறது. பாஜக தனி ஒரு கட்சியாக மத்தியில் தன் பலத்தை பெருக்கிக் கொண்டு இருக்கிறது.

சமீப காலம் வரை, டி.ஆர்.எஸ் கட்சி, மற்ற கட்சியைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களை பல்வேறு முறைகளில் ஈர்த்து வந்தது. அவர்களின் அரசியல் பயணமும் நிறைவானதாகவும் நிம்மதியானதாகவும் இருந்தது. ஆனால் இனி, தெலங்கானாவின் அரசியல் சூழல் அதே போல இருக்காது என்பதைத் தான், ஹைதராபாத் மாநகராட்சித் தேர்தல் குறிப்பிடுகிறது.

ஒடிஷா மாடலில் நம்பிக்கை வைக்கும் டி.ஆர்.எஸ் கட்சி பாஜக கட்சியின் செல்வாக்கை சில நபர்கள் அடங்கிய வட்டத்துக்குள் சுருக்க முடிந்தால், ஒடிஷாவில் பிஜு ஜனதா தளம் தொடர்ந்து வெல்வதைப் போல தாங்களும் தொடர்ந்து வென்று ஆட்சியைத் தக்கவைத்துக்கொள்ளலாம் என்று நினைக்கிறது.

காங்கிரஸ், தனது செல்வாக்கை மீண்டும் பெற முடிந்தால், அது ஆட்சிக்கு எதிரான வாக்குகளைப் பிரிக்க உதவும். பாஜகவின் திட்டத்தைத் தடுக்க முடியும் என்று அரசியல் ஆய்வாளர் ஜிங்கா நாகராஜு கூறுகிறார்.

ஒடிசா மாநிலத்தில், பாஜக மற்றும் காங்கிரஸ் இரண்டையும் எதிர்த்துப் அரசியல் செய்யும் பிஜு ஜனதா தளம், மத்திய அரசுடன் நல்லுறவைப் பேணுகிறது. அதே போல டி.ஆர்.எஸ் கட்சியும் மத்திய அரசுடன் நல்லுறவைப் பேண முயற்சிக்கலாம் என்கிறார் நாகராஜு.

இது எல்லாமே காங்கிரஸ் எப்படி தனது பிரச்சனைகளை சரி செய்துகொள்கிறது என்பதையும், தெலங்கானாவில் பாஜக எவ்வளவு தூரம் முன்னேறும் என்பதையும் பொறுத்துதான் நடக்கும். மக்கள் நல நடவடிக்கைகளை செய்து தன் இடத்தை தெலங்கானா மாநிலத்தில் அழுத்தமாகப் பிடித்து இருக்கும் டி.ஆர்.எஸ் கட்சியை குறைத்து மதிப்பிட முடியாது,

ஆனால் அரசியலில் எதுவும் நடக்கலாம். உதாரணத்துக்கு, ஒய்.எஸ்.ஆர் காலத்தில் வலுவாக இருந்த காங்கிரஸின் நிலையைப் பாருங்கள்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: