விவசாயிகள் போராட்டம்: டிசம்பர் 8ல் பாரத் பந்த் நடத்த விவசாயிகள் சங்கங்கள் அழைப்பு

பட மூலாதாரம், Getty Images
இந்திய அரசு சமீபத்தில் அமல்படுத்திய மூன்று வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி வரும் 8ஆம் தேதி அகில இந்திய அளவில் பந்த் நடத்துவதற்கு பாரதிய கிசான் சங்கம் என்ற விவசாய சங்கம் அழைப்பு விடுத்துள்ளது.
இது தொடர்பாக அந்த அமைப்பின் பொதுச்செயலாளர் ஹெச்.எஸ். லாகோவால் டெல்லி - ஹரியாணாவை இணைக்கும் சிங்லு பகுதி எல்லையில் செய்தியாளர்களிடம் வெள்ளிக்கிழமை பேசியபோது, "ஏற்கெனவே எங்களுடைய கோரிக்கையை மத்திய அரசிடம் தெளிவுபடுத்தியிருக்கிறோம். அவற்றை ஏற்காதவரை எங்களுடைய போராட்டம் தொடரும்" என்று தெரிவித்தார்.
"எங்களுடைய போராட்டத்தை தற்போதைய நிலையில் இருந்து மேலும் வலுப்படுத்த விரும்புகிறோம். மத்திய அரசு தனது 3 சட்டங்களையும் திரும்ப்பெறும்வரை நாங்கள் பின்வாங்க மாட்டோம்," என்று அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஹன்னன் மொல்லா தெரிவித்தார்.
இதேவேளை, பாரதிய கிசான் யூனியன் தலைவர் ராகேஷ் திகாய்ட், "வரும் டிசம்பர் 5ஆம் தேதி மத்திய அரசுடன் 5ஆம் சுற்று பேச்சுவார்த்தை நடத்தவுள்ளோம். அதில் சுமூக முடிவு எட்டப்படும் என நம்புகிறோம். அது தவறும்பட்சத்தில் விவசாயிகள் கடுமையான வகையில் போராட்டத்தை தொடருவார்கள்" என்று கூறினார்.

பட மூலாதாரம், Getty Images
விவசாயிகள் சட்டங்களை திரும்ப்பெறுவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய வேளாண் துறை அமைச்சருடன் இந்தியாவில் உள்ள சுமார் 40 விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள் இதுவரை நான்கு சுற்று பேச்சுவார்த்தையை நடத்தியுள்ளனர்.
ஆனால், சட்டங்களை திரும்பப்பெற வேண்டும் என்பதில் விவசாயிகள் சங்கங்களின் பிரதிநிதிகளும், அவற்றில் உள்ள குறைபாடுகளை சுட்டிக்காட்டினால் திருத்தங்களை செய்ய தயார் என மத்திய அரசும் தொடர்ந்து அவரவர் நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளனர்.
இதனால் கருத்தொற்றுமை எட்டப்படாத நிலையில், இந்த பேச்சுவார்த்தை தள்ளிவைக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் சனிக்கிழமை நடைபெறவுள்ள கூட்டத்துக்கு முன்னதாக அரசுக்கு அழுத்தம் தரும் வகையில் தற்போது விவசாயிகள் பாரத் பந்த்துக்கு அழைப்பு விடுத்திருப்பதாக கருதப்படுகிறது.
இந்தியாவைப் பொறுத்தவரை, பாரத் பந்த் போராட்டம் நடத்துவது என்பது சட்டவிரோதமான செயல் என்று பல வழக்குகளில் ஏற்கெனவே உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் விவசாயிகளின் போராட்டங்கள், எந்த வடிவிலான பாரத் பந்த் ஆக இருக்கும் என்பது சனிக்கிழமை அரசுடன் விவசாயிகள் சங்கங்கள் நடத்தும் பேச்சுவார்த்தையின் முடிவைப் பொறுத்தே தெரிய வரும்.

பட மூலாதாரம், Getty Images
எதிர்கட்சிகள் ஆதரவு
இதற்கிடையே, விவசாயிகள் நடத்தி வரும் போராட்டத்துக்கு திமுக, இடதுசாரி கட்சிகள் உள்பட 8 எதிர்கட்சிகள் கூட்டாக ஆதரவு தெரிவித்துள்ளன. இது தொடர்பாக தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், திமுக தலைவர் டி.ஆர். பாலு, சிபிஎம் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி, சிபிஐ பொதுச்செயலாளர் டி. ராஜா, ராஷ்ட்ரிய ஜனதா தளம் எம்.பி மனோஜ் ஜா, சிபிஐ எம்.எல் பொதுச் செயலாளர் திபாங்கர் பட்டாச்சார்யா, அகில இந்திய ஃபார்வர்டு பிளாக் பொதுச்செயலாளர் தேபப்ரத பிஸ்வாஸ், புரட்சிகர சோஷலிச கட்சி பொதுச்செயலாளர் மனோஜ் பட்டாச்சார்யா ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில், விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு தங்களுடைய கட்சியின் ஆதரவு இருப்பதாக கூறியுள்ளனர்.
பிற செய்திகள் :
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












