டெல்லி விவசாயிகள் போராட்டம்: இவர்களுக்கு நிதி எங்கிருந்து வருகிறது?

டெல்லி விவசாயிகள் போராட்டம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, டெல்லி விவசாயிகள் போராட்டம்.
    • எழுதியவர், தில்நவாஸ் பாஷா
    • பதவி, பிபிசி இந்தி சேவை

ஆறு அடி உயரமுள்ள சந்தீப் சிங் ஃபதேஹ்கர் சாஹிப்பில் இருந்து இருபது பேருடன் போராட்டத்தில் கலந்து கொள்ள வந்துள்ளார். இருபது பேர் கொண்ட அவரது குழுவினர், இரண்டு ட்ராலிகளில் வந்துள்ளனர். அவரது குழுவில் இருந்து நான்கு பேர் மீண்டும் கிராமத்திற்குச் செல்கிறார்கள், அவர்களுக்குப் பதிலாக எட்டு பேர் வருகிறார்கள்.

"எனது மூன்று ஏக்கர் நிலம் கோதுமை விதைப்புக்காகக் காத்திருக்கிறது. என் கிராம மக்கள் அதைக் கவனித்துக் கொள்கிறார்கள். நாங்கள் இங்கேயே இருக்க வேண்டும் என்று அவர்கள் கூறியுள்ளனர். ஆனாலும் விவசாயம் பாதிக்கப்படாமல் அவர்கள் பார்த்துக் கொள்வார்கள்." என்று கூறுகிறார் சந்தீப்.

சந்தீப் போன்ற பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் தில்லி-ஹரியானா எல்லைகளில் முகாமிட்டுள்ளனர். அவர்கள் ட்ராலிகள் மற்றும் ட்ரக்குகளில் வந்து, சாலையிலேயே முகாமிட்டுள்ளனர்.

அவர்கள் இங்கேயே தங்கி, சமைத்துச் சாப்பிடுகிறார்கள். இந்த விவசாயிகள் மத்திய அரசின் மூன்று விவசாயச் சட்டங்களை எதிர்க்கின்றனர். இந்தச் சட்டங்கள் விவசாயத்தில் தனியார் துறைக்கு வழி திறக்கும் என்பது அவர்களது வாதம்.

இந்தச் சட்டங்கள் விவசாயிகளின் நலனுக்கானவை என்பதும் அவர்களின் வருமானத்தை அதிகரிக்கும் என்பதும் அரசாங்கத்தின் வாதம். ஆனால், விவசாயிகள் தங்கள் நிலங்களைக் கையகப்படுத்தும் அரசாங்கத்தின் திட்டத்தின் ஒரு பகுதியே இது என்று நம்புகிறார்கள்.

நிதியுதவி எங்கிருந்து வருகிறது?

விவசாயிகளின் இந்த இயக்கத்திற்கு நிதியுதவி எங்கிருந்து வருகிறது என்ற ஒரு கேள்வியும் எழுப்பபடுகிறது.

டெல்லி விவசாயிகள் போராட்டம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, லாரியில் போராட்டத்துக்கு செல்லும் விவசாயிகள்.

சந்தீப் மற்றும் அவரைப் போன்ற பலருடன் நாங்கள் பேசியதிலிருந்து எங்களுக்குக்கிடைத்த தகவல், அவர்கள் நிதி வசூல் செய்து இங்கு வந்துள்ளார்கள் என்பதே.

"நாங்கள் வந்த டிராக்டருக்கான எரிபொருள் செலவு அதிகம். போக்குவரத்துக்கு டீசல் செலவு மட்டுமே பத்தாயிரம் ரூபாய் ஆகும். இது வரை நானும் என் சித்தப்பாவும் மட்டுமே பத்தாயிரம் ரூபாய் செலவு செய்து விட்டோம்" என்று சந்தீப் கூறுகிறார்.

ஆனால் அவர் இந்தச் செலவு குறித்துக் கவலை கொள்ளவில்லை. இதைத் தனது எதிர்காலத்துக்கான முதலீடாகத் தான் அவர் பார்க்கிறார். "இப்போது பத்தாயிரம் தான் செலவாகியுள்ளது. ஒருவேளை இந்தச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டால், அதனால் ஏற்படக்கூடிய இழப்பை மதிப்பிடவே முடியாது" என்கிறார் அவர்.

நிருபேந்திர சிங் தனது குழுவுடன் லுதியானா மாவட்டத்தில் இருந்து வந்துள்ளார். அவருடன் அருகிலுள்ள மூன்று கிராமங்களைச் சேர்ந்தவர்களும் உள்ளனர். நிருபேந்திர சிங்கின் குழுவும் இங்கு வர நன்கொடை அளித்துள்ளது.

"நாங்களே பணத்தை வசூல் செய்தோம். கிராம மக்களும் நிறைய ஒத்துழைத்துள்ளனர். நான் மட்டும் இப்போது வரை இருபதாயிரம் ரூபாய் செலவிட்டேன். என்னுடன் வந்துள்ள மற்றவர்களும் அவரவர் சக்திக்குத் தக்கபடி செலவு செய்து வருகிறார்கள்." என்று அவர் கூறுகிறார்.

வெளிநாடு வாழ் இந்தியர்களின் உதவி

மேலும், வெளிநாட்டில் வசிக்கும் தனது என்.ஆர்.ஐ நண்பர் ஒருவர் உதவி செய்துள்ளதாக நிருபேந்திரசிங் கூறுகிறார்.

"என் என்ஆர்ஐ நண்பர் ஒருவர் என் கணக்கில் இருபதாயிரம் ரூபாய் அனுப்பியுள்ளார். மேலும் தேவைப்பட்டால் அனுப்புவேன் என்று கூறியுள்ளார். அதை தனது நண்பர்களிடமிருந்து சேகரித்து அனுப்புவேன் என்று கூறியுள்ளார். எங்கள் இயக்கத்தில் பணத்திற்கு பஞ்சமில்லை" என்கிறார் அவர்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பலருடன் நாங்கள் பேசியதில் பலர் தெரிவித்த கருத்து, என்.ஆர்.ஐ நண்பர்கள், இந்த இயக்கம் பற்றிய தகவல்களை அறிந்து பண உதவி அனுப்புகிறார்கள் என்பது தான்.

தனது என் ஆர் ஐ சகோதரர் நிதி பற்றிய கவலைப் பட வேண்டாம் என்றும் போராட்டத்தில் தொடர்ந்து ஈடுபடும்படியும் திரும்பிச் செல்ல வேண்டாம் என்றும் உறுதியளிப்பதாக நிருபேந்திரா கூறுகிறார்,

மேலும் அவர், "விவசாயிகள் நாங்கள் எங்கள் இயக்கத்தை நடத்த முடியாத அளவுக்கு ஏழைகள் அல்ல. லங்கர் வழங்குவது ஒன்றும் புதிதல்ல. பல நூற்றாண்டுகளாக நடந்து வருகிறது. பகிர்ந்து இணைந்து உண்பது நமது கலாச்சாரம். இந்தப் போராட்டத்தில் எந்தத் தடையும் வராது" என்று நம்பிக்கை தெரிவிக்கிறார்.

ஹரியாணாவும் பஞ்சாபும்

ஹரியானா மற்றும் பஞ்சாபிலிருந்து ஆயிரக்கணக்கான டிராக்டர்கள் மற்றும் ட்ராலிகள் சிங்கு(Singhu) எல்லையில் நிற்கின்றன. நாளுக்கு நாள் இந்த எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ட்ராலிகளில் உணவு மற்றும் குடிநீர் ஏற்றப்பட்டு விவசாயிகள் தங்குவதற்கும் தூங்குவதற்கும் தேவையான பொருட்களும் உள்ளன.

இங்கே நாள் முழுவதும் அடுப்புகள் எரிந்து கொண்டேயிருக்கின்றன. ஏதோ ஒன்று சமைக்கப்பட்டு வருகிறது. டெல்லியின் பல குருத்வாராக்களும் இங்கு முகாமிட்டுள்ளனர், இது தவிர, டெல்லி வாழ் சீக்கிய குடும்பங்களும் இங்கு வந்து மக்களுக்கு உணவளித்து வருகின்றனர்.

இந்தர்ஜீத் சிங்க் என்பவரும் தனது டிராக்டர், ட்ராலியுடன் போராட்ட களத்தை அடைந்துள்ளார். அவருடன் வந்தவர்களும் சேர்ந்து நன்கொடை அளித்துள்ளனர்.

"டிராக்டர் என்னுடையது, நான் டீசல் ஊற்றினேன். நாங்கள் மொத்தம் பதினைந்து பேர், எல்லோரும் சேர்ந்து பணம் போட்டிருக்கிறோம். ஒவ்வொரு விவசாயியும் தத்தமது வசதிக்கு ஏற்ப பணம் கொடுத்துள்ளார். அதிக நிலம் வைத்திருப்பவர் அதிகம் கொடுத்திருக்கிறார்." என்று அவர் கூறுகிறார்.

டெல்லி விவசாயிகள் போராட்டம்

பட மூலாதாரம், Getty Images

மேலும் அவர், "நாங்கள் வீட்டை விட்டுப் புறப்படும் முன்னரே போராட்டம்முடியும் வரை திரும்புவதில்லை என முடிவெடுத்து விட்டோம். ஏதாவது பொருள் தேவைப்பட்டால், அதுவும் பின்னால் வருகிறது. எங்களுக்கு அருகிலுள்ள கிராமங்களிலிருந்தும் அதிகமான மக்கள் வருகிறார்கள். அவர்கள் பொருட்களை கொண்டு வருகிறார்கள்." என்று உறுதியாகத் தெரிவிக்கிறார்.

அரசியல் கட்சிகள் நிதியுதவியா?

இந்த இயக்கத்திற்கு நிதி எங்கிருந்து வருகிறது என்று கேள்வி எழுப்பப்படுகிறது. அரசியல் கட்சிகள் நிதியளிப்பது குறித்தும் கேள்விகள் எழுந்துள்ளன.

இந்தக் கேள்விக்கு, இந்தர்ஜீத்தும் அவருடன் வந்தவர்களும், "இந்த இயக்கம் கட்சிகளிடமிருந்து நிதி பெறுகிறது என்று கூறும் மக்கள், அவர்கள் அதற்கான ஆதாரத்தை வழங்க வேண்டும். எங்கள் கிராமங்களில், இங்கு வராதவர்கள் கூட பணம் தருகிறார்கள். சிலர் நூறு ரூபாய் வரை கொடுத்துள்ளனர். " என்று கூறுகின்றனர்.

ஹோஷியார்பூரிலிருந்து மன்தீப் சிங் வந்துள்ளார். அருகிலுள்ள மூன்று கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் குழுவுடன் அவர் வந்துள்ளார். இவர்கள் இரண்டு டிராக்டர்கள், ட்ராலிகள் மற்றும் ஒரு இன்னோவா காருடன் இருந்து வந்திருக்கிறார்கள்.

அவர், "நான் 2100 ரூபாய் கொடுத்துள்ளேன், நாங்கள் அனைவரும் நிதி சேகரித்தோம். நாங்கள் இங்கு தங்குவதற்கு யாரையும் சார்ந்து இல்லை." என்று கூறுகிறார்.

நான்கு-ஐந்து நாட்களில் திரும்பி விடலாம் என்றெண்ணி வந்ததாகவும் இப்போது இது நீடிக்கும் என்பதால் இங்கேயே இருக்கப்போவதாகவும் கூறுகிறார்.

"இப்போது நாங்கள் இங்கு பல மாதங்கள் தங்க வேண்டியிருக்கலாம் என்று தோன்றுகிறது. ஆனால் எங்களுக்கு எந்த கவலையும் இல்லை, எதுவாக இருந்தாலும் எங்கள் கிராமவாசிகள் தொடர்ந்து அனுப்பி வைப்பார்கள்." என்று நம்பிக்கை தெரிவிக்கிறார் மந்தீப்.

டெல்லி விவசாயிகள் போராட்டத்தில் பங்கேற்ற ஒரு சாமானிய விவசாயி.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, போராட்டத்தில் பங்கேற்ற ஒரு சாமானிய விவசாயியின் முகம்.

மன்தீப் கோதுமை பயிர் விதைக்க வேண்டிய காலம் இது. "கிராமவாசிகள், என் விதைப்பை அவர்களே செய்வதாகக் கூறியிருக்கிறார்கள். நான் திரும்பிச் சென்றால், என் இடத்துக்கு இருவர் வருவர். இது ஒரு மிகப் பெரிய பொறுப்பு என்பதை நாங்கள் உணருகிறோம். இது வெற்றியடையாவிட்டால், எங்கள் இனமே அழிந்து விடும். இது ஒரு தனி மனிதனுக்கான போர் அல்ல. எங்கள் அனைவரின் எதிர்காலம் குறித்த கேள்வி" என்கிறார் அவர்.

மாதக்கணக்கில் நடந்த களப் பணி

பஞ்சாபின் முப்பதுக்கும் மேற்பட்ட உழவர் சங்கங்கள் இந்த இயக்கத்தைத் தொடங்கியுள்ளன. இதற்காக நான்கு மாதங்களாக அவர்கள் களப் பணியாற்றி வந்ததாக யூனியன் தலைவர்கள் கூறுகின்றனர்.

கீர்த்தி கிசான் யூனியனுடன் தொடர்புடைய இளம் உழவர் தலைவர் ராஜீந்தர் சிங் தீப் சிங்வாலா கூறுகையில், "இந்த இயக்கத்திற்கு எங்கள் தொழிற்சங்கம் இதுவரை பதினைந்து லட்சம் ரூபாய் செலவிட்டுள்ளது, இப்போது எங்களிடம் பதினைந்து லட்சம் நிதி உள்ளது. அனைத்து தொழிற்சங்கங்களையும் கணக்கில் எடுத்தால், இது வரை, இந்த இயக்கத்திற்கு பதினைந்து கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. " என்று தெரிவிக்கிறார்.

இந்த இயக்கத்தில் என்.ஆர்.ஐ.க்களும் பெரும் தொகையை அனுப்பி வருவதாகவும், அவர்கள் மேலும் நிதி அனுப்ப முன்வருவதாகவும் ராஜிந்தர் சிங் கூறுகிறார்.

"நிதியைப் பொருத்தவரை, பஞ்சாப் விவசாயிகள் தங்கள் போராட்டங்களை மேற்கொள்ள வல்லவர்கள். ஆனால் இது விவசாயிகளின் பிரச்சனை மட்டுமல்ல. இந்தச் சட்டங்கள் தொழிலாளர்கள் மற்றும் வாடிக்கையாளர்களையும் பாதிக்கும். இயக்கம் வேகம் பெறப் பெற, பொது மக்களும் தொழிலாளர்களும் இதில் ஈடுபடுவார்கள். "

கணக்கில் வைக்கப்படும் நிதி

இந்த இயக்கத்துடன் தொடர்புடைய தொழிற்சங்கங்கள் கிராமத்திலிருந்து மாவட்ட மட்டம் வரை நன்கொடைகளைச் சேகரிக்க சங்கங்களை அமைத்துள்ளன. மேலும் முழு தொகையும் கணக்கில் வைக்கப்பட்டு வருகிறது. ராஜிந்தர் சிங், "சரிபார்க்க விரும்புவோர் தொழிற்சங்கத்தில் வந்து அதைப் பார்க்கலாம்.

டெல்லி விவசாயிகள் போராட்டம்

பட மூலாதாரம், ANI

படக்குறிப்பு, இணைந்த கைகள்.

பணம் மட்டுமல்ல, போராட்டத்துக்கு வரும் மக்களைப் பற்றியும் தகவல் பராமரிக்கப்படுகிறது. ஒரு நாடகக் குழுவைச் சேர்ந்த இளைஞர்களும் நன்கொடை அளித்து இயக்கத்தில் சேர வந்துள்ளனர்." என்று கூறுகிறார்.

இதில் சம்பந்தப்பட்ட ஒரு இளைஞர், "பஞ்சாப் முழு நாட்டிற்கும் உணவளிக்க முடியும் என்பது அனைவரும் அறிந்ததே. அது பட்டினியால் வாடாது. நாங்கள் அனைவரும் எங்கள் சொந்த ஏற்பாடுகளுடன் வந்திருக்கிறோம். கிராமத்திலிருந்து கிராம தொழிற்சங்கங்கள் வரை சங்கங்கள் உள்ளன.

நாங்கள் அனைவரும் நன்கொடைகளைச் சேகரித்து வருகிறோம். ஒரு கிராமத்தைச் சேர்ந்த ஐந்து பேர் ட்ராலியில் வந்திருந்தாலும், முழு கிராமமும் பணம் சேகரித்தது. எங்கள் நல்ல பணத்துடன் இந்த இயக்கத்தை நடத்தி வருகிறோம். "மாலைக்குள் பஞ்சாபிலிருந்து பல புதிய வாகனங்கள் இங்கு வந்து சேர்ந்தன. ரொட்டி தயாரிப்பதற்கான இயந்திரங்கள் இவற்றில் வருகின்றன." என்றார். அவற்றைச் சுட்டிக்காட்டி, ஒரு விவசாயி, "தேவை ஏற்பட்டால், நாங்கள் டெல்லி முழுவதற்கும் உணவு அளித்துச் செல்வோம்" என்று கூறுகிறார்.

பிற செய்திகள் :

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :