விவசாயிகள் போராட்டம்: இந்தியாவில் விவசாயிகளின் நிலையை விவரிக்கும் "வைரல் படம்"

பட மூலாதாரம், PTI
- எழுதியவர், கீதா பாண்டே
- பதவி, பிபிசி செய்திகள்
இந்திய தலைநகர் டெல்லியிலும் அதன் அண்டை மாநில எல்லைகளிலும், மத்திய அரசின் மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள்புதன்கிழமை நடத்தி வரும் ஏழாம் நாள் போராட்டத்தை ஒடுக்க பல நடவடிக்கைகளை இந்திய அரசு மேற்கொண்டு வருகிறது. அதில் காவல்துறை மூலம் போராட்டத்தில் ஈடுபடும் விவசாயிகளை ஒடுக்கும் காட்சிகள் தொடர்பான பல படங்கள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வந்தாலும் இந்த ஒரு படம், பரவலான தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
இந்த படத்தை எடுத்தவர் பிடிஐ செய்தி நிறுவனத்தின் புகைப்பட செய்தியாளர் ரவி செளத்ரி. இதில் வயோதிக சீக்கிய விவசாயி ஒருவரை நோக்கி துணை ராணுவப்படை வீரர், தனது கையில் வைத்திருக்கும் லத்தியுடன் அடிக்க முற்படுவது போலவும் அதில் மாட்டிக் கொள்ளாமல் இருக்க அந்த முதியவர் தள்ளி ஓடுவது போவும் காட்சிகள் உள்ளன.
இந்த ஒரு படத்தை வைத்து, இந்திய விவசாயிகளின் நிலை குறித்த தங்களின் கவலையை வெளியிட்டு வரும் எதிர்கட்சியினர், பிரதமர் நரேந்திர மோதியையும் அவர் சார்ந்த பாரதிய ஜனதா கட்சியையும் விமர்சித்து வருகிறார்கள்.
இந்தியாவில் விவசாயிகளை ஆளும் பாரதிய ஜனதா கட்சி நடத்தும் விதத்தை விவரிக்க இந்த ஒரு படம் போதும் என்று எதிர்கட்சிகள் கூறினாலும், அந்த முதியவரை துணை ராணுவப்படை வீரர் தாக்கவேயில்லை என்று ஆளும் கட்சியினர் கூறுகிறார்கள்.
"டெல்லி சலோ" என்ற பெயரில் கடந்த சில தினங்களாக பஞ்சாப், ஹரியாணா, உத்தர பிரதேசம் ஆகிய மாநிலங்களின் விவசாயிகள் இந்த போராட்டத்தை முன்னெடுத்துள்ளார்கள்.
பிரதமரின் விளக்கத்தால் அதிருப்தி
இந்த விவகாரத்தில் விவசாயிகளின் நலன்களை கருத்தில் கொண்டே சீர்திருத்த நோக்கில் வேளாண் சட்டங்களை மத்திய அரசு கொண்டு வந்ததாக பிரதமர் நரேந்திர மோதி விளக்கம் அளித்தார்.
ஆனால், அதை ஏற்க மறுக்கும் விவசாயிகள் அதை முற்றிலுமாக திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறார்கள். இது தொடர்பாக டெல்லியில் செவ்வாய்க்கிழமை நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை. இதையடுத்து அனைத்து விவசாயிகள் சங்கங்களின் பிரதிநிதிகளுடன் வியாழக்கிழமை மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
விவசாயத்துறையில் தனியார் பங்களிப்புக்கு வழங்கப்படும் வாய்ப்பு எந்த வகையிலும் பாதிக்கப்படாது என்று மோதி அரசு கூறி வருகிறது. ஆனால், இது கார்பரேட்டுகளுக்கான சட்டம் என்றும் நாளடைவில் விவசாயிகளின் சுரண்டலுக்கே அவை வழிவகுக்கும் என்று விவசாயிகள் கூறுகிறார்கள்.

பட மூலாதாரம், Getty Images
இவர்களின் போராட்டம் கடந்த இரு தினங்களுக்கு முன்பு தீவிரமான நிலையில், டெல்லி எல்லையில் விவசாயிகளுக்கும் காவல்துறையினருக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது. இதனால், கண்ணீர் புகை குண்டுகள் வீசி கூட்டத்தைக் கலைக்க காவல்துறையினர் முயன்றனர். சில இடங்களில் தடியடியும் நடத்தப்பட்டது. இதன் பிறகே எல்லையில் போராடிய பல்லாயிரக்கணக்கான விவசாயிகளை டெல்லி புராரி மைதானத்துக்கு சென்று போராட்டத்தைத் தொடர காவல்துறையினர் அனுமதித்தது. ஆனால், அங்கு கூட்டம் அதிகரிக்கவே, மீண்டும் எல்லையில் தடுப்புகளைப் போட்டு மேற்கொண்டு விவசாயிகள் நுழையாமல் இருக்க காவல்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
வைரலான படம்
முன்னதாக, நகர எல்லையில் நடந்த போராட்டத்தில் விவசாயிகள் சிலர் மீது தடியடி நடத்தப்பட்டது. அந்த சம்பவங்களை புகைப்படம் எடுக்கவே பிடிஐ புகைப்பட செய்தியாளர் ரவி செளத்ரி சென்றிருந்தார்.
அவரது படம் வைரலானதையடுத்து, உண்மையிலேயே என்ன நடந்தது என அவரிடம் உண்மை தகவல்களை கண்டறியும் BoomLive.com குழுவினர் பேசியபோது, "காவல்துறையினருக்கும் போராட்டக்குழுவினருக்கும் இடையே மோதல் தீவிரமானது. இரு தரப்பிலும் கல்வீச்சு சம்பவம் நடந்தது, தடுப்புகள் கீழே சாய்க்கப்பட்டன. ஒரு பேருந்து சேதம் அடைந்தது," என்று கூறினார்.
உடனடியாக காவல்துறையினர் அங்கிருந்த விவசாயிகளை தாக்கத் தொடங்கினார்கள். அதில் ஒருவர்தான் அந்த சீக்கிய முதியவர் என்று ரவி செளத்ரி கூறினார்.

பட மூலாதாரம், Getty Images
இந்த படம் ட்விட்டர், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் ஆகிய சமூக ஊடக பக்கங்களில் வைரலாகி பல்லாயிரக்கணக்கான பதிவுகளையும் லைக்குகளையும் பெற்று வருகிறது. பலரும் ஜெய் ஜவான், ஜெய் கிசான் என்ற முழக்க வரிகளை இந்த படத்துடன் குறிப்பிட்டு, இதுவா நமது விவசாயிகளின் நிலை என்று கேட்டிருந்தனர்.
1965ஆம் ஆண்டில் அப்போதைய பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி, இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே போர் மூண்டபோது, இந்த முழக்க வரியை முதன் முதலாக அறிமுகப்படுத்தினார். இதன் மூலம் தேசத்தை கட்டமைப்பதில் ராணுவ வீரர்களைப் போல விவசாயிகள் முக்கியமானவர்கள் என்பதை அவர் உணர்த்த விரும்பினார்.

பட மூலாதாரம், Getty Images
தகவலை மறுக்கும் பாஜக ஐ.டி அணி
இந்த நிலையில், டெல்லி எல்லையில் நடந்த காவல்துறை நடவடிக்கையின்போது சீக்கிய விவசாயியை தாக்குவது போன்ற படத்தை பதிவிட்ட ராகுல் காந்தியின் ட்விட்டர் தகவலுக்கு பாஜக தகவல் தொழில்நுட்ப அணி எதிர்வினையாற்றியது.
"உண்மையில் அந்த சீக்கிய முதியவர் தாக்கப்படவேயில்லை. இது உண்மையை திரித்துக்கூறும் காங்கிரஸின் முயற்சி" என்று அந்த அணியின் தலைமை நிர்வாகி அமித் மாளவியா தெரிவித்தார்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு
ஆனால், அமித் மாளவியாவின் கருத்து தொடர்பாக BoomLive.com குழு சம்பந்தப்பட்ட விவசாயிடமே பேசியிருக்கிறது. அதில் அவரது பெயர் சுக்தேவ் சிங் என்பதும், தன்னை ஒரு வீரர் மட்டுமின்றி இரண்டு வீரர்கள் தாக்கியதாகவும் அந்த முதியவர் கூறியிருப்பது தெரிய வந்தது.
இந்தியாவில் விவசாயிகளுக்கு எதிரான நடவடிக்கைகள், உள்நாட்டில் மட்டுமின்றி உலக அளவிலும் பரவலான கவனத்தை ஈர்த்திருக்கிறது. கடந்த திங்கட்கிழமை இந்திய விவசாயிகளின் நிலை தொடர்பாக கனடா நாட்டுப் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கருத்து வெளியிட்டு தனது ஆதரவை வெளிப்படுத்தினார். ஆனால், இது தங்களுடைய நாட்டின் உள்விவகாரம் என்றும் அதில் கருத்து தெரிவிக்காமல் தவிர்க்குமாறும் இந்தியா கேட்டுக கொண்டது.
இத்தனை அமளிக்கு மத்தியில் ஏழாவது நாளாக புதன்கிழமை டெல்லியில் போராட்டங்கள் தொடர்கின்றன. வியாழக்கிழமை நடக்கும் பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து இது மேலும் தீவிரமாகுமா அல்லது விரைவில் முடிவு பெறுமா என்பது தெரிய வரும்.
பிற செய்திகள் :
- முன்னாள் நீதிபதி சி.எஸ். கர்ணன் சென்னையில் கைது - தொடரும் சர்ச்சை வரலாறு
- சர்வதேச கிரிக்கெட்டில் முதல் விக்கெட்டை வீழ்த்திய நடராஜன் - அசத்தும் தமிழக வீரர்
- மேட்டுப்பாளையம் 'தீண்டாமை சுவர்' விழுந்து ஓராண்டு: தெருவில் வாழும் தலித் மக்கள்
- 'அனைவருக்கும் கொரோனா தடுப்பு மருந்து வழங்கும் நோக்கமில்லை' - இந்திய அரசு
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் :
- டிவிட்டர் :
- இன்ஸ்டாகிராம் :
- யு டியூப் :












