ஆடு, மாடுகளை குறிவைக்கும் தெருநாய்கள் – இழப்பீடும் குறைப்பு என கொந்தளிக்கும் விவசாயிகள்

ஆடு, மாடுகளை குறிவைத்து கடிக்கும் தெருநாய்கள் – அரசிடம் கொந்தளிக்கும் கால்நடை விவசாயிகள்

பட மூலாதாரம், Getty Images

  • வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்

தமிழகத்தில் தெருநாய்களால் கொல்லப்படும் ஆடு, மாடு, கோழி உள்ளிட்ட கால்நடைகளின் எண்ணிக்கை, ஆண்டுதோறும் அதிகரித்து வருவதாக அரசின் தரவுகள் காட்டுகின்றன.

இதற்கு அரசு தரும் நிவாரணத்தை சந்தை மதிப்புக்கேற்ப அதிகரிக்க வேண்டுமென விவசாயிகள் கோரிவரும் நிலையில், புதிதாக வெளியாகியுள்ள அரசாணையில், குட்டி, கன்று மற்றும் குஞ்சுகளுக்கு ஏற்கெனவே வழங்கப்பட்டு வந்த நிவாரணம் பாதியாகக் குறைக்கப்பட்டுள்ளது.

தெருநாய்களைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்காமல், இழப்பீட்டையும் குறைத்திருப்பதாக விவசாயிகள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவலின்படி, மாநிலத்திலேயே திருப்பூர் மாவட்ட விவசாயிகள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில், இந்த மாவட்டத்தை சேர்ந்த அமைச்சர் சாமிநாதனிடம் இதுபற்றி கருத்து கேட்க முயன்றபோது அவரிடம் பதில் பெற முடியவில்லை.

தெருநாய்களைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதுடன், கால்நடைகளுக்கு காப்பீடு செய்துகொள்ள விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருவதாகவும் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் நாரணவரே மனீஷ் ஷங்கர் பிபிசியிடம் தெரிவித்தார்.

தமிழகத்திலேயே திருப்பூர் மாவட்டத்தில்தான் அதிக பாதிப்பு

தாங்கள் வளர்க்கும் கால்நடைகள் தெருநாய்களால் பலியாவது ஆண்டுதோறும் அதிகரித்துக் கொண்டிருப்பதாக மேற்கு மண்டல விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர்.

மேற்கு மண்டலத்தைச் சேர்ந்த திருப்பூர், ஈரோடு ஆகிய மாவட்டங்கள் இதில் அதிகம் பாதிக்கப்பட்டிருப்பது அரசின் புள்ளிவிவரங்களிலேயே தெரிய வந்துள்ளது.

கால்நடைகளுக்கு இழப்பீடு வழங்குவது தொடர்பாக தமிழக அரசின் கால்நடை பராமரிப்புத்துறை வெளியிட்டுள்ள அரசாணையில், கடந்த ஆண்டில் தெருநாய்களால் கொல்லப்பட்ட கால்நடைகளின் எண்ணிக்கை மற்றும் இழப்பீடு விவரம் வெளியிடப்பட்டுள்ளது.

அதிலுள்ள தகவலின்படி, திண்டுக்கல், ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, திருவண்ணாமலை, விழுப்புரம், பெரம்பலூர், ஈரோடு மற்றும் திருப்பூர் மாவட்டங்களில், கடந்த ஆண்டில் மட்டும் 498 விவசாயிகளுக்குச் சொந்தமான 2,311 கால்நடைகள் தெருநாய்களால் கொல்லப்பட்டுள்ளன.

இதில் முதலிடத்திலுள்ள திருப்பூர் மாவட்டத்தில் மட்டும் 1,389 கால்நடைகளும், ஈரோட்டில் 564 கால்நடைகளும் தெருநாய்க்கடியால் உயிரிழந்துள்ளன.

திருப்பூர் மாவட்டத்தில் மட்டும் கடந்த 2 ஆண்டுகளில் தெருநாய்களைக் கட்டுப்படுத்தக் கோரி, விவசாயிகளால் 20க்கும் மேற்பட்ட போராட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன.

கடந்த ஜனவரி 26-ஆம் தேதியன்று குடியரசு தினத்தன்று நடந்த கிராம சபையின்போது, திருப்பூர் காங்கேயம் வட்டத்துக்குட்பட்ட சிவன்மலை, ஆலாம்பாடி, வீராணம்பாளையம், தம்புரெட்டிபாளையம், உள்ளிட்ட 22 கிராம ஊராட்சிகளில், இந்தப் பிரச்னைக்குத் தீர்வு காண வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

ஆடு, மாடுகளை குறிவைத்து கடிக்கும் தெருநாய்கள் – அரசிடம் கொந்தளிக்கும் கால்நடை விவசாயிகள்

பட மூலாதாரம், Getty Images

கிராம சபைக் கூட்டங்கள் முடிந்து ஒரு மாதமாவதற்குள் மேலும் பல கால்நடை உயிரிழப்பு சம்பவங்கள் நடந்துள்ளன. காங்கேயம் அருகேயுள்ள பட்டக்காரன்புதூரைச் சேர்ந்த சண்முகசேதுராமசாமி என்ற விவசாயி தோட்டத்தில் பிப்ரவரி 25-ஆம் தேதியன்று இரவு, பட்டிக்குள் புகுந்து 9 ஆடுகளை தெருநாய்கள் கடித்துக் கொன்றுள்ளன. 5 ஆடுகள் காயமடைந்துள்ளன. அதே இரவில் உத்தாம்பாளையம் என்ற கிராமத்தில் முத்துக்குமார் என்ற விவசாயி தோட்டத்தில் 5 ஆடுகள் தெருநாய்கள் கடித்து உயிரிழந்துள்ளன. இரு ஆடுகள் படுகாயமடைந்துள்ளன.

கடந்த பிப்ரவரி 5-ஆம் தேதியன்று, தாராபுரம் அருகேயுள்ள மூலனூர் பட்டத்திபாளையம் கிராமத்தில் மணிவேல் என்ற விவசாயிக்குச் சொந்தமான 25 ஆடுகளை தெருநாய்கள் கடித்துக் கொன்றன. அதே நாளில் சேனாதிபாளையம் என்ற கிராமத்தில் 7 வெள்ளாடுகள், தெருநாய்க் கடிக்குப் பலியாகின.

பாதிக்கப்பட்ட விவசாயிகள் மற்றும் மக்கள், இறந்த ஆடுகளுடன் மூலனூர் காவல் நிலையத்தை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தினர். இதேபோல காங்கேயம் வட்டாட்சியர் அலுவலகம், தாராபுரம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகங்கள் முன்பாகவும் இதே காரணத்துக்காக விவசாயிகள் பல போராட்டங்களை நடத்தியுள்ளனர்.

கடந்த ஆண்டு மே மாதத்தில் ஒரே நாளில் 32 ஆடுகளை தெருநாய்கள் கடித்துக் கொன்றதைத் தொடர்ந்து, திட்டுப்பட்டி என்ற கிராம விவசாயிகள், இறந்த ஆடுகளை ஈரோடு–பழனி பிரதான சாலையில் போட்டு பல மணிநேரம் சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.

ஆடு, மாடுகளை குறிவைத்து கடிக்கும் தெருநாய்கள் – அரசிடம் கொந்தளிக்கும் கால்நடை விவசாயிகள்

பட மூலாதாரம், Getty Images

இதே பிரச்னை கடந்த சில ஆண்டுகளாகத் தொடர்ந்து வரும் நிலையில், இதற்கு அரசு சரியான நடவடிக்கைகளை எடுக்கவில்லை என கண்டித்து, கடந்த 2024 நவம்பர் 23ஆம் தேதியன்று, திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கால்நடைகளுடன் குடியேறும் போராட்டமும் விவசாயிகள் அமைப்புகளால் அறிவிக்கப்பட்டது. பின்பு பேச்சுவார்த்தை நடத்தி போராட்டம் தடுக்கப்பட்டது.

பிபிசி தமிழிடம் பேசிய பிஏபி வீராணம்பாளையம் நீரினை பயன்படுத்துவோர் சங்கத்தின் தலைவர் வேலுசாமி, ''தமிழகத்தில் கால்நடைகள் வளர்ப்புக்கான வாய்ப்பும், மேய்ச்சல் நிலமும் இருப்பதே திருப்பூர், ஈரோடு, கரூர் போன்ற சில மாவட்டங்களில்தான். திருப்பூரில் மட்டுமே 5 முதல் 7 லட்சம் கால்நடைகள் வளர்க்கப்படுவதாக கால்நடை பராமரிப்புத்துறையினரே தகவல் கொடுத்துள்ளனர். ஆனால் இந்த கால்நடை வளர்ப்பைக் காப்பாற்ற அரசு போதிய அக்கறை காட்டுவதில்லை. அதில் தெருநாய்கள்தான் பெரும் அச்சுறுத்தலாகவுள்ளன'' என்றார்.

பிஏபி பாசனத் திட்டம், கால்நடை பராமரிப்புத் துறை சார்ந்த அரசாணைகள், அதிகாரிகளின் கடிதங்கள், விவசாயிகளின் கோரிக்கைகள் எனப் பல ஆயிரக்கணக்கான பக்கங்களையும், புகைப்படங்களையும், காணொளிகளையும் இவர் ஆவணப்படுத்தி வைத்துள்ளார். அமெரிக்காவில் பணியாற்றி வந்த இவர், தற்போது முழு நேர விவசாயியாக மாறி, விவசாயிகளின் பல்வேறு பிரச்னைகளுக்காகப் போராடி வருகிறார்.

ஆடு, மாடுகளை குறிவைத்து கடிக்கும் தெருநாய்கள் – அரசிடம் கொந்தளிக்கும் கால்நடை விவசாயிகள்

பட மூலாதாரம், Getty Images

இறைச்சி விலை அதிகரிப்பு, இழப்பீட்டு தொகை குறைப்பு

சமீப காலமாக பட்டிக்குள் மட்டுமின்றி, தோட்டங்களில் மேயும் ஆடுகளையும், வீட்டுக்கு வெளியே கட்டி வைத்துள்ள ஆடுகளையும் தெருநாய்கள் கடித்துக் கொன்று விடுவதாகக் குற்றம்சாட்டுகிறார் திருப்பூர் மாவட்டம் சிவன்மலை அருகேயுள்ள ஆனைக்குழிமேட்டைச் சேர்ந்த பிஏபி வெள்ளகோவில் கிளை வாய்க்கால் சங்கத்தைச் சேர்ந்த விஸ்வநாதன்.

''இந்த தெருநாய்களால் சமீபகாலமாக ஆடு, மாடுகளை மேய்க்க தனியாக சம்பளம் கொடுத்து ஆட்களை நியமிக்க வேண்டியுள்ளது. இளம் ஆடு, சினை ஆடு (40–45 கிலோ வரை எடையுள்ளது) ரூ.15 ஆயிரம் வரை விலை கிடைக்கும். ஒரு குட்டியை 3 மாதங்கள் வரை மேய்த்தால் 16–20 கிலோ வரை எடை வரும். அது ரூ.7 ஆயிரம்–ரூ.8 ஆயிரம் வரை போகும். இதில் சம்பளம் கொடுத்தால் கட்டுப்படியாகாது'' என்கிறார் விஸ்வநாதன்.

ஈரோடு மாவட்டத்திலும் சத்தியமங்கலம், கோபிச்செட்டிபாளையம், முத்தூர், கவுந்தப்பாடி ஆகிய பகுதிகளில் இந்த பாதிப்பு மிக அதிகமாக இருக்கிறது என்கிறார் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் ஈரோடு மற்றும் கோவை மாவட்டங்களின் ஒருங்கிணைப்பாளர் புளியம்பட்டி விஸ்வநாதன்.

பிபிசி தமிழிடம் பேசிய அவர், ''ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களில் இதுதொடர்பாக எக்கச்சக்கமான போராட்டங்களைப் பல்வேறு விவசாய அமைப்புகளும் இணைந்து நடத்திவிட்டோம். அமைச்சர்கள் சாமிநாதன், முத்துசாமி வீடுகளை முற்றுகையிட்டும் போராடினோம். அவர்களும் விவசாயிகளின் பிரச்னைகளுக்குத் தீர்வு காண்பதாகக் கூறுகின்றனர். ஆனால் தெருநாய் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வே கிடைப்பதில்லை'' என்றார்.

ஆடு, மாடுகளை குறிவைத்து கடிக்கும் தெருநாய்கள் – அரசிடம் கொந்தளிக்கும் கால்நடை விவசாயிகள்

பட மூலாதாரம், Getty Images

தெருநாய்களின் கடிக்கு பெரிய மாடுகளைவிட கன்றுக்குட்டிகள் அதிகம் பலியாவது தெரிய வந்துள்ளது. கன்றுக்குட்டிகளின் தொப்புள் கொடி, பால்வாசம் ஆகிய காரணங்களால் அவற்றை மோப்பம் பிடித்து வரும் தெருநாய்கள், அவற்றின் இறப்புக்குக் காரணமாகி விடுவதாக விவசாயிகள் தகவல் பகிர்கின்றனர்.

''தெருநாய்கள் எண்ணிக்கையை கட்டுப்படுத்தும் இனப்பெருக்கக் கட்டுப்பாடு (ABC-Animal Birth Control) முறையாக நடப்பதில்லை. அதற்குரிய மருத்துவ வசதி, கட்டமைப்பு, நிதி இல்லை. அதனால் தெருநாய்களின் உணவு முறையையாவது கட்டுப்படுத்த வேண்டும். இந்த தெருநாய்கள் பெரும்பாலும் சிக்கன், மட்டன் மற்றும் மீன் கடைகளில் கொட்டப்படும் இறைச்சிக் கழிவுகளை தின்று பழகியே கால்நடைகளைக் குறி வைக்கின்றன'' என்றார் பிஏபி வீராணம்பாளையம் வாய்க்கால் நீரினை பயன்படுத்துவோர் சங்கத் தலைவர் வேலுசாமி.

இறைச்சியின் விலையும், தெருநாய்க் கடிக்குப் பலியாகும் கால்நடைகளின் எண்ணிக்கையும் ஆண்டுக்கு ஆண்டு அதிகமாக வரும் நிலையில், இவற்றுக்கு அரசு தரும் நிவாரணம் மிகக் குறைவு என்பது விவசாயிகளின் குற்றச்சாட்டாக உள்ளது.

இந்த நிலையில் கால்நடைகளின் வயதைக் கணக்கிட்டு, ஏற்கெனவே கொடுத்து வரும் நிவாரணத் தொகையையும் குறைத்து புதிய அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

கால்நடை பராமரிப்புத் துறையின் முந்தைய அரசாணைகளின்படி, வெள்ளாடு அல்லது செம்மறியாடு எதுவாயிருப்பினும் ஒரு ஆட்டுக்கு ரூ.6 ஆயிரம், ஒரு மாட்டுக்கு ரூ.37,500, ஒரு கோழிக்கு ரூ.200 என்ற மதிப்பில் நிவாரணம் நிர்ணயிக்கப்பட்டிருந்தது.

கடந்த ஆண்டு வரையிலும் இந்த மதிப்பின் அடிப்படையில்தான் நிவாரணம் வழங்கப்பட்டு வந்தது. கடந்த செப்டெம்பரில் திருப்பூர் மாவட்டத்தில் 803 ஆடுகளுக்கும், 15 மாடுகளுக்கும், 566 கோழிகளுக்கும் இந்த மதிப்பின் அடிப்படையில் நிவாரணம் தரப்பட்டது.

ஆனால் கடந்த பிப்ரவரி 17-ஆம் தேதியன்று, 11 மாவட்டங்களில் இறந்த கால்நடைகளுக்கு நிவாரண நிதி ஒதுக்கும் கால்நடை பராமரிப்புத் துறையின் அரசாணையில் இணைப்பாக ஒரு தகவல் குறிப்பிடப்பட்டுள்ளது. அதில் ஆறு மாதங்களுக்கும் குறைவான ஆடு/செம்மறிக்கு ₹3,000, இரண்டு வயதுக்கு உட்பட்ட மாட்டுக்கு ₹6,000, ஆறு வாரங்களுக்கும் குறைவான கோழிக்கு ரூ.100 மட்டுமே வழங்க வேண்டுமென்று குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆடு, மாடுகளை குறிவைத்து கடிக்கும் தெருநாய்கள் – அரசிடம் கொந்தளிக்கும் கால்நடை விவசாயிகள்

பட மூலாதாரம், Getty Images

காப்பீட்டு திட்டங்களை பயன்படுத்த ஆட்சியர் அறிவுறுத்தல்

தமிழகத்தில் தற்போது ஒரு கிலோ ஆட்டிறைச்சி ரூ.800 முதல் ரூ.1000 வரை விற்கப்படுகிறது. அதேபோன்று மாட்டுக்கு பால் கறக்கும் அளவைப் பொருத்து ரூ.50 ஆயிரத்திலிருந்து லட்சம் வரையும், அதற்கும் அதிகமாகவும் விலை இருப்பதாகக் கூறும் விவசாயிகள், இதுவரை தமிழக அரசு கொடுத்து வந்த நிவாரணம் சந்தை மதிப்புக்கு எந்த வகையிலும் பொருத்தமானதில்லை என்கின்றனர்.

'' ஏற்கெனவே அரசு கொடுத்து வரும் இழப்பீட்டை அதிகப்படுத்த வேண்டுமென்று விவசாயிகள் கோரி வந்த நிலையில், இதுவரை கொடுத்து வந்த தொகையையும் பாதியாக குறைப்பது, கால்நடை வளர்ப்பையே விவசாயிகள் கைவிட வைத்துவிடும்'' என்றார் விவசாயி புளியம்பட்டி விஸ்வநாதன்.

தெருநாய்கள் கடித்து இறக்கும் கால்நடைகளுக்கு, தற்போது முதல்வர் பொது நிவாரண நிதியிலிருந்தே நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. ஒவ்வொரு முறையும் அதற்காக மாவட்ட ஆட்சியர்கள், பரிந்துரைக் கடிதம் எழுதி நிதி பெற வேண்டியுள்ளது. இதுதொடர்பாக திருப்பூர் மற்றும் ஈரோடு மாவட்ட ஆட்சியர்கள், நிதி கேட்டு எழுதியுள்ள கடிதங்களிலேயே இதனால் சட்டம்–ஒழுங்கு பிரச்னை ஏற்படுகிறது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனல்
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

பிபிசி தமிழிடம் பேசிய திருப்பூர் மாவட்ட கால்நடை பராமரிப்புத் துறை உதவி இயக்குநர் சந்திரன், ''ஆட்கள் பாதுகாப்புள்ள பட்டிகளில் இத்தகைய உயிரிழப்புகள் ஏற்படுவதில்லை. எனவே பட்டிகளின் பாதுகாப்பை பலப்படுத்த விவசாயிகளை வலியுறுத்தி வருகிறோம். இழப்பீட்டை பாதியாகக் குறைத்ததை மறுபரிசீலனை செய்து பழைய அளவிலேயே தொடரவும் அரசுக்குப் பரிந்துரைத்துள்ளோம்'' என்றார்.

தமிழகத்திலேயே காங்கேயம் பகுதி விவசாயிகள்தான், தெருநாய்கள் கடித்து கால்நடைகள் உயிரிழப்பதால் அதிகளவில் பாதிக்கப்படும் நிலையில், அதுகுறித்து கருத்து கேட்பதற்காக காங்கேயம் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரும், தமிழக செய்தி மக்கள் தொடர்புத் துறை அமைச்சருமான சாமிநாதனை தொடர்பு கொண்டபோது, அவரிடம் பதில் பெற முடியவில்லை.

ஆனால் இந்த கோரிக்கையை அவர் அரசுக்குப் பரிந்துரைத்து இருப்பதாக அவருடைய உதவியாளர் ஒருவர் தெரிவித்தார். அதுதொடர்பான அவரின் கடிதமும் பிபிசிக்கு கிடைத்தது.

பிபிசி தமிழிடம் பேசிய திருப்பூர் மாவட்ட ஆட்சியர் நாரணவரே மனீஷ் ஷங்கர், ''உள்ளாட்சி அமைப்புகளின் அதிகாரிகளை அழைத்து, இறைச்சிக் கழிவுகளை முறையாக அகற்றவும், தெருநாய்களைக் கட்டுப்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இழப்பீடு குறித்து அரசுக்கும் உரிய கருத்துரு அனுப்பப்பட்டுள்ளது. தெருநாய்களால் கால்நடைகள் உயிரிழக்கும்போது ஏற்படும் இழப்பை ஈடு செய்ய, காப்பீடு திட்டங்களைப் பயன்படுத்திக் கொள்ள விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம்'' என்றார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு