டெல்லி விவசாயிகள் போராட்டம்: தமிழ்நாடு விவசாயிகள் எங்கே? அய்யாக்கண்ணு என்ன செய்கிறார்? Farmers Protest

Farmers Protest டெல்லி விவசாயிகள் போராட்டத்தில் பங்கேற்கும் ஒரு விவசாயி முகம்.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, டெல்லி விவசாயிகள் போராட்டத்தில் பங்கேற்கும் ஒரு விவசாயி முகம்.
    • எழுதியவர், அ.தா.பாலசுப்ரமணியன்
    • பதவி, பிபிசி தமிழ்

எல்லா சாலைகளும் ரோமாபுரியை நோக்கிச் செல்கின்றன என்று ஒரு மேற்கத்திய சொல்வடை உண்டு.

நாட்டில் எங்கே கிளம்பினாலும் கடைசியில் தலைநகர் ரோமாபுரியை வந்தடையும் வகையில் அமைக்கப்பட்ட நெடுஞ்சாலைகள் பண்டைய ரோமப் பேரரசின் வலிமைக்குக் காரணமாக இருந்தன என்று சொல்வார்கள். அதிலிருந்தே இந்த சொலவடை பிறந்தது.

ஆனால், தற்போது இந்திய தலைநகர் டெல்லியை வந்தடையும் சாலைகள் பலவற்றில் போராட்ட முழக்கம் ஒலிக்கிறது. எந்த வெகுஜன போராட்டத்துக்கும் அசையாத பாஜக அரசு தற்போது இந்த சாலைகளைக் கண்டு கலங்குகிறது. ஐந்து நதிகள் பாயும் பஞ்சாபிலும், ஹரியாணாவிலும் இருந்து விவசாயிகளின் பெருவெள்ளம் தலைநகரில் பாய்ந்துவிடாமல் தடுப்பதற்காக, தலைநகரை வந்தடையும் பல சாலைகள் மூடப்பட்டுள்ளன.

இதைப்போல பெருந்திரளாக இல்லாவிட்டாலும், பாஜக ஆட்சியில் தங்கள் ஜீவாதாரக் கோரிக்கைகளை முன்வைத்து டெல்லியில் முதலில் போராடியவர்கள் தமிழ்நாட்டு விவசாயிகள்.

அய்யாக்கண்ணு தலைமையில் அமைந்த தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் என்ற அந்த அமைப்பு டெல்லி ஜந்தர் மந்தரில் தொடர்ந்து பல மாதங்கள் போராட்டங்களை நடத்தியது. எண்ணிக்கை குறைவு என்பதால் கவனத்தைக் கவர்வதற்காக அரை நிர்வாணமாக அவர்கள் போராடினார்கள், எலிக்கறி தின்று போராடினார்கள், கழிவு அருந்திப் போராட முயன்றார்கள்.

Farmers Protest டெல்லி விவசாயிகள் போராட்டம்.

பட மூலாதாரம், Getty Images

ஆனால், அவர்கள் பேச்சுவார்த்தைக்கு கூட அழைக்கப்படவில்லை. பெரிய அளவில் அவர்களுக்கு அமைப்பு வலு இல்லை என்று ஒரு புறமும், அய்யாக்கண்ணு பணக்கார விவசாயி என்று மறுபுறமும் விமர்சனங்கள் எழுந்தன.

ஆனால், விவசாய விளை பொருட்களுக்கு லாபகரமான விலை என்பது தற்போது டெல்லியை குலுங்க வைக்கும் விவசாயிகள் போராட்டத்தின் முக்கியமான பேசுபொருள்களில் ஒன்று.

மத்திய அரசு கொண்டு வந்த மூன்று வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் திரண்டிருந்தாலும், கட்டுப்படியான விலை இல்லை என்ற நீண்டகால கவலையின் தொடர்ச்சி இந்தப் போராட்டத்திலும் உள்ளது.

ஆனால், முதல் முதலில் இந்தக் கோரிக்கையை டெல்லியில் எதிரொலித்த தமிழ்நாடு விவசாயிகள் டெல்லி போராட்டத்தில் காணப்படவே இல்லையே ஏன்? பல மாதங்கள் டெல்லியில் ஊடகங்களின் கவனத்தைக் கவரும் வகையில் போராட்டங்கள் நடத்திய அய்யாக்கண்ணு என்ன ஆனார்? இந்த சட்டங்களைப் பற்றி அவரது பார்வை என்ன? தமிழ்நாட்டில் பரவலாக கிளைகளைக் கொண்டுள்ள வேறு விவசாய சங்கங்கள் என்ன செய்கின்றன என்ற கேள்விகள் மக்கள் மத்தியில் எழுகின்றன.

இந்தக் கேள்விகளுக்கு விடைகாண முயன்றோம்.

தமிழ்நாடு முழுவதும் பரவலான கிளைகளும், உறுப்பினர் வலுவும் உள்ள ஒரு விவசாயிகள் அமைப்பு தமிழ்நாடு விவசாயிகள் சங்கம். அகில இந்திய விவசாயிகள் சங்கம் என்ற அமைப்பின் தமிழகப் பிரிவு இது.

தற்போதைய டெல்லி விவசாயிகள் போராட்டத்தை நாடு தழுவிய அளவில் ஒருங்கிணைக்கும் 'ஆல் இந்தியா கிசான் சங்கர்ஷன் கோ ஆர்டினேஷன் கமிட்டி'யில் இந்த சங்கத்துக்கு முக்கிய இடம் உண்டு. இந்த சங்கத்தின் தலைவர் ஹன்னன் மொல்லா டெல்லி போராட்டத்தின் முக்கிய முகங்களில் ஒருவர்.

அப்படிப்பட்ட சங்கம் தமிழ்நாட்டில் இருந்து, டெல்லி விவசாயிகள் போராட்டத்துக்கு ஏன் விவசாயிகளைத் திரட்டிவரவில்லை? விவசாயிகள் சட்டம் பற்றி இவர்கள் பார்வை ஏதும் வேறுபட்டிருக்கிறதா என்று சங்கத்தின் மாநிலப் பொதுச் செயலாளர் பி.சண்முகத்தை கேட்டோம்.

6 மாநிலங்கள் பங்கேற்பதே திட்டம்

"டெல்லி விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவாக, பல கட்டங்களாக தமிழ்நாட்டில் போராட்டங்களை நடத்திவருகிறோம். இன்று (புதன்கிழமை) கூட தமிழ்நாட்டில் 400-500 இடங்களில் எங்கள் சங்கம் விவசாயிகளைத் திரட்டிப் போராட்டம் நடத்துகிறது.

டெல்லி போராட்டத்தில் நேரடியாக சென்று கலந்து கொள்ளாததற்கு காரணம் ஏதுமில்லை. டெல்லி போராட்டம் திட்டமிடப்பட்டபோதே, பஞ்சாப், ஹரியாணா, உத்தர பிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தான், மத்திய பிரதேசம் ஆகிய ஆறு மாநிலங்களில் இருந்து மட்டுமே விவசாயிகளைத் திரட்டுவது என்றுதான் திட்டமிடப்பட்டது. அதன்படிதான் தற்போது போராட்டம் நடக்கிறது.

இந்த 6 மாநிலங்களோடு தற்போது மகாராஷ்டிரா விவசாயிகளும் போராட்டத்தில் பங்கேற்கின்றனர். ஆனால், அரசாங்கம் என்னவோ, இது வெறும் பஞ்சாப் விவசாயிகளின் போராட்டம் என்று காட்ட முயற்சி செய்கிறது. ஆனால், விவசாயிகள் பிரதிநிதிகள் இந்தக் கருத்தை நிராகரித்த பிறகு, அடுத்த கட்ட பேச்சுவார்தைக்கு எல்லா மாநில விவசாயிகளின் பிரதிநிதிகளும் அழைக்கப்படவுள்ளனர்" என்றார்.

Farmers Protest டெல்லி விவசாயிகள் போராட்டம்.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, விவசாயிகள் போராட்டம்

தமிழ்நாட்டில் இருந்து ஏன் விவசாயிகள் செல்லவில்லை என்று கேட்டதற்கு, தற்போது டெல்லியில் நிலவும் கடுங்குளிரும் தமிழ்நாடு விவசாயிகள் பங்கேற்க முடியாமல் போனதற்கு ஒரு காரணம் என்றார் சண்முகம்.

உண்மையில் இத்தகைய கடுங்குளிரில், திறந்தவெளியில் இந்த நிலைமைகளுக்கு பழக்கமில்லாத தமிழ்நாடு விவசாயிகளால் வட இந்திய விவசாயிகளைப் போல தாக்குப்பிடிக்க முடியுமா என்பது சந்தேகம்தான்.

ஆனால், டெல்லி ஜந்தர் மந்தர் விவசாயிகள் போராட்டம் மூலம் பிரபலம் அடைந்த விவசாயிகள் தலைவர் அய்யாக்கண்ணு, வேறு சில காரணங்களையும் சொல்கிறார். தொலைவும், போதிய ரயில்கள் இல்லாததும் தமிழ்நாடு விவசாயிகள் பெரிய அளவில் டெல்லி செல்ல முடியாத நிலைக்கு காரணம் என்கிறார் அவர். அத்துடன், சிறிய குழு ஒன்று டெல்லி செல்வதற்கான முயற்சியையும் போலீஸ் முழு மூச்சுடன் தடுப்பதாக குறிப்பிடுகிறார் அவர்.

"நாங்கள் ஒரு 300 விவசாயிகள் ரயில் மூலம் பயணம் செய்து நவம்பர் 26-ம் தேதியே டெல்லியை வந்தடைவதாக திட்டமிட்டோம். 300 டிக்கெட்டுகள் முன்பதிவும் செய்தோம்.

பி.சண்முகம் - Farmers protest பற்றி பேசுகிறார்.
படக்குறிப்பு, பி.சண்முகம்

ஆனால், நாங்கள் அனைவருமே டெல்லி செல்லமுடியாதபடி போலீசால் வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டோம். தலா ரூ.970 செலவிட்டு முன்பதிவு செய்த ரயில் டிக்கெட்டுகளை இதனால் கடைசி நேரத்தில் ரத்து செய்ததால் தலா ரூ.410 தான் திரும்பக் கிடைத்தது. இந்த வகையில் மட்டுமே எங்களுக்கு ரூ.3 லட்சம் இழப்பு.

ஆனால், திருச்சியில் ஆதரவாகப் போராட்டம் நடத்தியிருக்கிறோம். ஆனால், ரயில் மூலம் டெல்லி செல்லவோ அல்லது தலைமைச் செயலகம் அருகே போராட்டம் நடத்தவோ அனுமதி அளிக்கும்படி போலீசை கேட்டுள்ளோம் என்று பிபிசியிடம் தெரிவித்தார் அய்யாக்கண்ணு.

அவர்கள் டெல்லியில் நடத்திய போராட்டத்துக்கு ஏதாவது பலன் இருந்ததா, கோரிக்கை ஏதும் நிறைவேறியதா? தற்போதைய டெல்லி விவசாயிகள் போராட்டம் குறித்த அவரது பார்வை என்ன என்று கேட்டோம்.

Farmers protest டெல்லி விவசாயிகள் போராட்டம்
படக்குறிப்பு, டெல்லியில் கடந்த காலத்தில் நடந்த போராட்டத்தின் போது செய்தியாளர்களிடம் பேசிய அய்யாக்கண்ணு

"2014ல் பாஜக ஆட்சிக்கு வரும் வரை நான் பாஜகவில் இருந்தவன். தாங்கள் ஆட்சிக்கு வந்தால், விவசாயிகள் பெரும் லாபம் இருமடங்கு அதிகரிக்கும், மான்சான்டோ போன்ற பன்னாட்டு நிறுவனங்கள் இங்கே வரமுடியாது என்றெல்லாம் 2014 பொதுத் தேர்தலில் நரேந்திர மோதி வாக்குறுதி அளித்தார். அப்போது ஒரு கிலோ நெல்லை விவசாயிகள் ரூ.14க்கு விற்றோம். மோதி சொன்னபடி இரு மடங்கு விலை அதிகரித்திருந்தால் இப்போது ஒரு கிலோ நெல்லை ரூ.42 விலைக்கு விவசாயிகளிடம் இருந்து வாங்க வேண்டும்.

அல்லது ஒரு மடங்கு விலை ஏறியிருந்தால்கூட ரூ.28க்காவது வாங்கவேண்டும். ஆனால், இந்த ஆறு ஆண்டுகளில் மத்திய அரசு நெல் கொள்முதல் விலையை வெறும் ரூ.4.88தான் அதிகரித்துள்ளது. தமிழ்நாடு அரசு மேலும் 70 பைசா சேர்த்து 19.58க்கு வாங்குகிறது.

அதைப் போல அப்போது ஒரு டன் கரும்பு ரூ.2500 விலையில் கொள்முதல் செய்யப்பட்டது. இப்போது வெறும் ரூ.250 ஏறி, 2,750 விலைக்கு கொள்முதல் செய்யப்படுகிறது. மோதி தாம் சொன்னபடி விலை ஏற்றுவதற்கு இதுவரை ஏதும் செய்யவில்லை என்பது மட்டுமல்ல, இந்த புதிய சட்டங்களிலும் அதைப்பற்றி பேச்சே இல்லை.

அதைப் போல குத்தகை விவசாயிகள் நலன்களைக் காப்பாற்றவும் இந்த சட்டத்தில் எதுவும் இல்லை.

Farmers Protest டெல்லி விவசாயிகள் போராட்டம்.

பட மூலாதாரம், RAWPIXE

அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் குறைந்தபட்ச ஆதரவு விலையில் தற்போது அரசு கொள்முதல் செய்கிறது. ஆனால், அங்கே விவசாயிகள் கொண்டு செல்லும் முழு நெல்லும் வாங்கப்படுவது இல்லை. பல நாள்கள் காத்திருக்கும் நிலையும் ஏற்படுகிறது. இதனால், ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களில் வியாபாரிகளிடம் விற்க வரும் விவசாயிகளிடம் ஓரிரண்டு ரூபாய் குறைவான விலைக்கு வாங்குகிறார்கள். ஆனால், அரசின் புதிய சட்டங்களில் இந்த குறைந்தபட்ச ஆதரவு விலை பற்றி எந்தக் குறிப்புமே இல்லை. சட்டத்தில் இல்லை என்பதால் குறைந்தபட்ச ஆதரவு விலை எதிர்காலத்தில் இருக்காது" என்று குறிப்பிட்டார் அய்யாக்கண்ணு.

"இது தவிர, தனியார் கார்ப்பரேட் நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்து சாகுபடி செய்யும்போது, தரம் குறித்து அந்த நிறுவனங்கள் மட்டுமே முடிவு செய்ய முடியும் என்கிறது இந்தச் சட்டம். எனவே, அவர்கள் தானியங்களை எடுத்துக்கொண்டபின் விலையை குறைத்தால், அதை யார் கேட்பது?" என்று கேட்கிறார் அய்யாக்கண்ணு.

இந்த விற்பனையில் எழும் தகராறுகளை சிவில் நீதிமன்றங்கள் விசாரிக்காது என்றும் இந்த சட்டங்களில் சொல்லப்பட்டிருக்கிறது. வருவாய்த் துறை அதிகாரியான கோட்டாட்சியரிடம் முறையிடலாம். அவர் தீர்ப்பு மீது மாவட்ட ஆட்சியரிடம் மேல் முறையீடு செய்யலாம்.

இது போன்ற தகராறுகளில் பாதிக்குப் பாதியாவது தீர்வு கிடைப்பது நீதிமன்றங்கள் மூலம்தான். வருவாய்த்துறை அதிகாரிகள், அரசாங்கத்தால் அதன் மூலம் ஆளுங்கட்சியால் நியமிக்கப்படுகிறவர்கள். இதனால், இவர்கள் மூலம், நிறுவனங்களுக்கு எதிரான வழக்குகளில் விவசாயிகள் நீதியைப் பெற முடியாது என்கிறார் அய்யாக்கண்ணு.

இந்த சட்டத்தின் மூலம் எங்கு வேண்டுமானாலும் கொண்டு சென்று தங்கள் விளைபொருள்களை விற்க விவசாயிகளுக்கு உரிமை கிடைக்கும் என்கிறதே அரசு, என்று கேட்டபோது, உண்மையில் தங்கள் சொற்பமான விளைபொருள்களை விவசாயிகளால் நீண்டதூரம் கொண்டு செல்ல முடியாது.

வியாபாரிகள் பெரிய அளவில் விளைபொருள்களை வாங்கிப் பதுக்கவும், மரபணு மாற்றப்பட்ட விதைகளை விவசாயிகளிடம் அளித்து சாகுபடி செய்ய கார்ப்பரேட் ஒப்பந்த சாகுபடி நிறுவனங்கள் வலியுறுத்தவுமே வழி பிறக்கும். எனவே இந்தப் புதிய சட்டங்களால், விவசாயிகளுக்கும் பலனிருக்காது. நுகர்வோருக்கும் பலனிருக்காது, இடைத்தரகர்கள்தான் பலன் பெறுவார்கள் என்கிறார் அய்யாக்கண்ணு.

கருத்தால் உடன்பட்டாலும், 2,000 கி.மீ. பயணித்து தங்கள் குரலை டெல்லியில் பதிவு செய்யும் வாய்ப்பு தமிழக விவசாயிகளுக்கு இந்த முறை இருப்பதாகத் தெரியவில்லை.

பிற செய்திகள் :

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :