நிவர் புயல் நாசம் செய்த வட தமிழக வாழை பொருளாதாரம்: 1,500 மரங்களை பறிகொடுத்த குறிஞ்சிப்பாடி பெண்ணின் கதை

வாழைத் தோட்டம்

பட மூலாதாரம், NATARAJAN/BBC

படக்குறிப்பு, வாழைத்தோட்டம்.
    • எழுதியவர், நடராஜன் சுந்தர்
    • பதவி, பிபிசி தமிழுக்காக

"17 வயதில் கணவரை இழந்தேன். அடுத்து ஒரு 17 ஆண்டுகள் இந்த வாழைத் தோப்பை வைத்துதான் போராடி வாழ்ந்தேன். பெண் குழந்தையை வளர்த்து ஆளாக்கினேன். இப்போது தோட்டத்தில் விளைந்து நின்ற வாழை மரங்களை எல்லாம் நிவர் புயல் ஒட்டு மொத்தமாக சூறையாடிவிட்டது" என்று சொல்லி கலங்குகிறார் ஜெயலட்சுமி.

குறிஞ்சிப்பாடி அருகே உள்ள பச்சாரப்பாளையம் என்ற சிற்றூர்தான் இவரது ஊர். சுற்றிலும் எங்கு பார்த்தாலும் வாழைத் தோட்டங்கள் நிறைந்த பகுதி இது. இந்தத் தோட்டங்கள் எல்லாம் நிவர் புயலில் சிதைந்து போயிருக்கின்றன. நிவாரணத்தை எதிர்பார்த்துக் காத்திருக்கின்றன.

நிவர் புயல் அதிவேகமாக வந்து மோதப்போவதாக அச்சுறுத்தினாலும், வந்த சுவடே தெரியாமல் போய்விட்டது போன்ற ஒரு தோற்றம் இருக்கிறது. ஆனால், கடலூர், விழுப்புரம் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் பாதிக்கப்பட்ட வாழைத் தோட்டங்களின் நிலை, இந்த சித்திரத்தை மாற்றி எழுதும்.

கஜ புயல் டெல்டாவின் தென்னை பொருளாதாரத்தை அடியோடு அழித்தது. 2011ல் வந்த தானே புயல் இதே கடலூர் மாவட்டத்தின் பலா, முந்திரி பொருளாதாரத்தை நிர்மூலம் ஆக்கியது. அந்த அளவுக்கு விஸ்தீரனம் இல்லாவிட்டாலும், நிவர் புயல் அந்த வரிசையில் இரண்டு மாவட்டங்கள் ஒரு யூனியன் பிரதேசத்தின் கடலோரப் பகுதிகளில் வாழைப் பொருளாதாரத்தை பதம் பார்த்துவிட்டது என்றால் அது மிகையில்லை.

அந்தப் பாதிப்பின் துயரத்தை படம் பிடித்துக் காட்டுகிறது ஜெயலட்சுமியின் கதை. அவரை பிபிசி தமிழுக்காக சந்தித்தோம்.

வாழைத் தோட்டத்தில் ஒரு பெண்

பட மூலாதாரம், NATARAJAN/BBC

"எனது கணவர் இறந்து 25 ஆண்டுகள் ஆகிவிட்டது. அதன்பிறகு இன்று வரை இந்த வாழை மட்டுமே பயிரிட்டு அதன் மூலமாக சாப்பிட்டு, வாழ்ந்து வருகிறோம்.

எனக்கு 16 வயதில் திருமணம் நடந்தது, திருமணமான ஓராண்டில் எனது கணவர் இறந்துவிட்டார். கைக்குழந்தையுடன் இருந்த நான் என் அம்மா வீட்டுக்கு சென்றுவிட்டேன். எனக்கு இருந்தது ஒரு பெண் குழந்தை. நான் எங்கு வேறு திருமணம் செய்து கொள்ளப்போகிறேனோ என்று எண்ணி என் கணவருக்குச் சேர வேண்டிய பாகத்தை கணவர் வீட்டார் பிரித்துக் கொடுக்க மறுத்துவிட்டனர்.

17 வயதில் ஒரு பெண் குழந்தையுடன் என்ன செய்வதென்று புரியாமல் இருந்தேன். அப்போது எனக்கு வேறு திருமணம் செய்துகொள்ளும் எண்ணமும் இல்லை. அதன் பிறகு நீண்ட போராட்டத்துக்குப் பிறகு எனது கணவருக்கு சேரவேண்டிய பாகமான ஒன்றரை ஏக்கர் நிலம் கிடைத்தது," என்கிறார் ஜெயலட்சுமி.

"அந்த நிலம் கிடைத்த நாளிலிருந்து கடந்த 17 ஆண்டுகளாக வாழைதான் பயிரிட்டு வருகிறேன். இதில் கிடைக்கும் வருமானத்தில் தான் நானும், எனது மகளும் வாழ்ந்து வந்தோம். எனது மகளை படிக்க வைத்து, இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திருமணமும் செய்து வைத்துவிட்டேன்.

மற்றவர்கள் கொல்லைக்கு வேலைக்கு சென்றாலும் அதில் கிடைக்கும் வருமானத்தை இந்த வாழைப் பயிரில்தான் முதலீடு செய்வேன். வாழை மரங்களையும், வளர்க்கும் ஆட்டுக்குட்டிகளையும் விட்டால், எனக்கு எதுவுமே இல்லை. என் கணவரின் நினைவாக எனக்கு இருப்பவை இந்த வாழை மரங்கள் மட்டுமே," என்று கூறியவர், இந்த முறை விளைந்து நின்ற வாழை மரங்கள் மொத்தத்தையும் நிவர் புயல் நாசம் செய்துவிட்டதாக கூறுகிறார்.

"தோட்டத்தில் 1,500 மரங்கள் இருந்தன. 10 மாதத்தில் மரங்கள் குலைவிடும். 13 மாதங்கள் ஆனால், விளைச்சல் அறுவடைக்குத் தயாராகிவிடும். ஆனால், இந்த 1,500 மரங்களும், 12 மாதங்கள் ஆன பயிர்கள். குலைவிட்டு, முற்றி அடுத்த மாதம் அறுவடைக்கு தயாராகும் நிலையில் இருந்தவை. இப்போது எதற்கும் உதவாமல் போய்விட்டன" என்கிறார் அவர்.

வாழைத் தோட்டத்தில் ஒரு பெண்

பட மூலாதாரம், NATARAJAN/BBC

"களையெடுப்பது, மருந்து போடுவது, புல் அறுப்பது, தண்ணீர் பாய்ச்சுவது என அனைத்துமே கடன் வாங்கிய பணத்திலும், மற்றவர் கொல்லையில் கூலி வேலை செய்தும் சம்பாதித்த பணத்திலும்தான் செய்துவந்தேன். இப்போது ஒரு ரூபாய்க்கும் பலனில்லை. காரணம், மரம் விழாமல் இருந்தால் மட்டுமே வருமானம். விழுந்துவிட்டால், செலவுதான்" என்று கூறிய அவர், அதை விளக்கினார்.

"20 ஆயிரம் ரூபாய் செலவு செய்து பயிர் வைத்தால், அதில் 80 ஆயிரம் ரூபாய்வரை வருமானம் ஈட்ட முடியும். இப்போது மரங்கள் அனைத்தும் விழுந்துவிட்டன. இப்போது இதனை அப்புறப்படுத்த ஏக்கருக்கு 30 ஆயிரம் செலவாகும்.

விழுந்த மரங்களைக் கூலிக்கு ஆள் வைத்து தான் அகற்ற வேண்டும், அவர்களுக்குக் கூலி கொடுப்பதற்கே கையில் பணமில்லை. அதன்பிறகு மீண்டும் வாழை பயிரிடுவதற்கும் முதலீடு வேண்டும். என்ன செய்யப் போகிறேன் என்று தெரியவில்லை" என்கிறார் ஜெயலட்சுமி.

இது ஜெயலட்சுமியின் கதை மட்டுமே அல்ல. வாழை பயிரிட்ட ஒவ்வோர் விவசாயியின் குரலாகத்தான் ஜெயலட்சுமி பேசுகிறார்.

இதற்கு முன்பு வந்த புயல்களால் பெரிய இழப்பு ஏற்படவில்லை என்றும் ஜெயலட்சுமி கூறுகிறார். கஜ புயலின்போது கடலூரில் பெரிய பாதிப்புகள் ஏற்படவில்லை. 2011ல் தானே புயல் வருவதற்கு முன்பே வாழை மரங்களை அறுவடை செய்துவிட்டதால், இழப்பு ஏற்படவில்லை என்கிறார் அவர்.

முன்னதாக ஒரு வாழைத் தாருக்கு 300முதல் 400ரூபாய் வரை விலை கிடைக்கும். ஆனால் கொரோனா ஊரடங்கின் காரணமாக ஒரு தார் ரூ.100 முதல் 150 ரூபாய் வரைதான் விலை போனது. இதனால் நஷ்டம்தான் ஏற்பட்டது. இப்போது அசலில் 10 சதவீதம்கூட மிஞ்சாது என்ற நிலை வந்துவிட்டது என்கிறார் அவர்.

கண்ணெதிரே சாய்ந்த மரங்கள்

"புயல் வீசியபோது இத்தனை மாதங்கள் கஷ்டப்பட்டு வளர்த்தது அனைத்தும் வீணாவதைப் பார்க்க வேதனையாக இருந்தது. என்ன செய்வதென்று தெரியவில்லை. அந்த நேரத்தில் உதவிக்கு யாரையும் அழைக்கவும் முடியாது. உதவி என்று கேட்டாலும் செய்வதற்கு ஆளில்லை. அதிகாலை சுமார் 3 மணிக்கு புயல் வீசியபோது வாழை மரங்கள் விழுவதை நின்று பார்த்தேன்.

முறிந்த வாழை.

அந்த நேரத்தில் என்ன செய்ய முடியும்? விடிந்த பிறகு வெளியே வந்து பார்த்தபோது மொத்த வாழை மரங்களும் விழுந்து கிடந்தன. இதுவரை அதிகாரிகள் யாரும் வந்து பார்வையிடவில்லை. அவர்கள் ஆய்வு செய்து நிவாரணம் வழங்கினால் மீண்டும் பயிர் வைக்க உதவியாக இருக்கும்," என்று கூறினார் ஜெயலட்சுமி.

வாழையோடு முடியவில்லை

ஆனால், இந்தப் பாதிப்பு வாழையோடு முடியவில்லை. வட தமிழகத்தின் கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவையில் நெல், மணிலா, கரும்பு, வெற்றிலை, மர வள்ளிக்கிழங்கு உள்ளிட்டவை நீரில் மூழ்கியும், காற்றினால் சாய்ந்தும் பாதிப்பை சந்தித்துள்ளன. ஆனால், வாழை அளவுக்கு பிற பயிர்கள் மோசமாகப் பாதிக்கப்படவில்லை.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் சுமார் 100 ஹெக்டேர் (247 ஏக்கர்) வாழை மரங்கள் காற்றினால் முறிந்து விழுந்தும், இலைகளை நாசமாகியும் பாதிப்பை சந்தித்துள்ளன.

நிவர் கொண்டுவந்த கன மழையால் பெருமளவு பயிர்கள் தண்ணீரில் மூழ்கினாலும் பெரும்பாலான நிலங்களில் நீர் வடிந்து விட்டது.

இந்த புயலின் வேகம் குறைவாக இருந்த காரணத்தினாலும், மழையும் அவ்வளவு மோசமகப் பெய்யவில்லை என்பதாலும், பெரிய சேதாரத்திலிருந்து தப்பித்துவிட்டதாக நெற்பயிர் மற்றும் மணிலா விவசாயிகள் கூறுகின்றனர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :