நிவர் புயல் தாக்கம்: மழை நீரில் வீதிகள் - ஆவேசம் அடையும் புதுச்சேரி மக்கள்

நிவர் புயல்

நிவர் புயலானது கரையைக் கடந்த நிலையில், புதுச்சேரியில் பலத்த காற்றுடன் கனமழை பெய்யாததால், நகரின் பல்வேறு இடங்களில் மழைநீர் சூழ்ந்து வெள்ளமாக காட்சியளிக்கிறது. மேலும் பலத்த காற்றின் எதிரொலியால் புதுச்சேரியின் சில பகுதிகளில் மரங்கள் விழுந்துள்ளது. குறிப்பாக இந்த நிவர் புயல் காரணமாக புதுச்சேரியில் பெரிய பாதிப்புகள், உயிர் இழப்புகள் ஏற்படவில்லை. ஆனால், குடியிருப்பு பகுதிகளில் தண்ணீர் வடிகால் பிரச்சனை காரணமாக தேங்கும் மழை நீரால் பொதுமக்கள் பெரிதும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

புதுச்சேரியை பொறுத்தவரை - தானே, நீலம், கஜா மற்றும் நிவர் என இதுபோன்ற புயலால் பாதிப்பு என்பது தொடர்ந்து கொண்டே இருக்கிறது. குறிப்பாக கன மழை காலங்களில் புதுச்சேரியில் உள்ள வெங்கட்டா நகர், ரெயின்போ நகர், வினோபா நகர், எழில் நகர், இந்திரா காந்தி சதுக்கம் உள்ளிட்ட தாழ்வான பல பகுதிகளில் மழைநீர் தேக்கத்தால் பாதிக்கப்படுவது வழக்கமாக இருந்து வருகிறது.

புதுச்சேரியில் தீர்வு காணப்படாத தண்ணீர் வடிகால் பிரச்னையால் தொடந்து பாதிப்புக்கு உள்ளாகுவதாக பிபிசியிடம் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடியிருப்புவாசிகள் தெரிவித்தனர்.

நிவர் புயல்
படக்குறிப்பு, சசிபிரபா

"இந்த புயலால் இவ்வளவு பாதிப்பு ஏற்படும் என்பதை நாங்கள் எதிர்பார்க்கவில்லை" என்றார் பாதிக்கப்பட்ட புதுச்சேரி ரெயின்போ நகரைச் சேர்ந்த சசிபிரபா.

"மழை பெய்யத் தொடங்கியதிலிருந்து சாலை மற்றும் வீட்டிற்குள் தண்ணீர் வரத் தொடங்கியது, புயவன்று இரவு தொடங்கி மறுநாள்‌ காலை வரை மழைநீரை வெளியேற்ற முடியாமல் தண்ணீரிலே நின்று கொண்டிருந்தோம். சாலையில் தேங்கி இருக்கும் மழை நீர் வடிந்தால் தான்‌ வீட்டின் உள் புகுந்து மழை நீரை வெளியேற்ற முடியும். சாலையில் நீர் தேங்கிய வடியாத காரணத்தினால் வீட்டிலிருக்கும் நீரை வெளியேற்ற முடியாமல் மிகவும் சிரமமாக இருந்தது," என்கிறார் அவர்.

நிவர் புயல்
படக்குறிப்பு, மீனாட்சி

இதுபோன்று மழை நீர்த் தேக்கத்தால் பெண்கள் மற்றும் வயதானவர்கள் கழிபிடத்திருக்கு கூட போக முடியாமல் பெரிய சிரமத்திற்கு உள்ளாகுவதாக கூறுகிறார் பாதிப்பிற்கு உள்ளான மீனாட்சி என்பவர்.

"என்னைப் போன்று வயது முதிர்ந்தவர்கள் இந்த புயலால் ஏற்பட்ட மழை வெள்ளம் மிகவும் கடினமாக இருக்கிறது. புயலன்று பாதுகாப்பாக வீட்டிலிருந்தாலும், வீட்டிற்குள் தண்ணீர் வருவதால் வீட்டிலிருந்தும் பாதுகாப்பற்ற தன்மையை உணர்கிறோம். அதிலும் புயல் கடந்த பிறகும் பாதிப்பிலிருந்து உடனடியாக மீள முடியாமல், இதுபோன்று சிரமப்படுவது எங்களைப்‌ போன்று வயதானவர்களுக்குச் சவாலாக இருக்கிறது. கன மழை பெய்யும் ஒவ்வொரு முறையும் இந்த பிரச்சினையானது தொடர்ந்து கொண்டே இருக்கின்றது. வேறு வழியே இல்லாமல் கட்டிய சொந்த வீட்டை விட்டு வேறு பகுதிகளுக்குத் தான் குடியேற வேண்டும். மீண்டும் எத்தனை ஆண்டுகள் இந்த பிரச்சினை நீடிக்கும் என்று தெரியவில்லை," என்று கூறுகிறார் மீனாட்சி.

நிவர் புயல்
படக்குறிப்பு, அமுதா

இந்த மழை, புயல் போன்ற காலங்களில் ஒவ்வொரு முறையும் நாங்கள் இயற்கை சீற்றத்தால் பாதிக்கப் படுவதை விட, இந்த தாழ்வான பகுதிகளில் தேங்கும் தண்ணீரால் மட்டுமே அதிமாக பாதிக்கப்படுவதாக கூறுகிறார் பாதிப்பிற்கு உள்ளான அமுதா.

"ஆட்சியாளர்கள் மற்றும் அதிகாரிகள் இதுபோன்ற பேரிடர் காலங்களில் தண்ணீர் தேக்கி இருக்கும் நேரங்களில் ஆய்வு செய்கின்றனர். அப்போது இந்த பிரச்சினையை உடனடியாக சரி செய்வதாக உறுதியளிக்கின்றனர். ஆனால் இன்றுவரை இதற்குத் தீர்வு காணப்படவில்லை.

நிவர் புயல்

குழந்தைகள், கால் நடக்க முடியாத ஊனமுற்றவர்களை வைத்துக் கொண்டு நாங்கள் ஒவ்வொரு‌ நாளும் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறோம். இந்த கனமழையால் விடிய விடியத் தூங்காமல் தண்ணி எப்போ வீட்டிற்குள் வந்து விடுமோ என்று பயந்து வாழ்கிறோம். சாதாரண மழை பெய்தாலே இதுபோன்ற தாழ்வான பகுதிகளில் மழைநீர் அதிகமாக தேங்கி விடும். ஆனால் இதுபோன்ற அதிக கன மழையால், நிற்கவே முடியாத அளவிற்குப் பாதிப்பு ஏற்பட்டது.

வாசல் தொடங்கி, வீட்டின் பின்புறம் உள்ள கழிவுநீர் வடிகால் வழி என இருபுறமும் தண்ணீர் வரத் தொடங்கிவிட்டது. இதுபோன்ற காரணங்களால் இந்த தாழ்வான பகுதியை மேடு ஏத்துவது அல்லது தண்ணீர் உடனடியாக வெளியேறக் கால்வாய்களைச் சரி செய்து கொடுக்க தொடர்ந்து பல்வேறு முறை வலியுறுத்தியும் இதுவரை நடவடிக்கை எடுக்காமல் இருப்பது கவலையளிக்கிறது," என்கிறார் அவர்.

நிவர் புயல்

இயற்கை சீற்றங்களால் பாதிக்கப்படுவதை விடச் சீர் செய்யப்படாத செயற்கை அமைப்புகளால் தான் பாதிப்பு ஏற்படுவதாக வேதனையுடன் கூறுகிறார் அமுதா.

"கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு எனது கணவர் விபத்து காரணமாக அவரது ஒரு காலை இழந்தார். இதனால் பாதிக்கப்பட்ட எனது ஊனமுற்ற கணவர் இதுபோன்ற பாதிப்பு காலங்களில் நகரவே முடியாமல் சிரமப்படுகிறார். இதுபோன்று சூழலில் எப்படி பாதுகாத்துக் கொள்வது. தண்ணீர்‌ வடியாமலேயே இப்படித் தேங்கி இருக்கும் போது நகரவே முடியாமல் அதிகமாக பாதிக்கப்படுகிறார். கொரோனா பயத்திலிருந்து இப்பொழுது தான் மீண்டு வருகிறோம். ஆனால், இந்த புயல் எங்களுக்கு மேலும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது," எனப் பாதிக்கப்பட்ட அமுதா தெரிவித்துள்ளார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :