நிவர் புயல் செம்மஞ்சேரியில் ஆடிய தாண்டவம்: தொழிலாளர் குடியிருப்புகளின் அவல நிலை

பட மூலாதாரம், Devaneyan
- எழுதியவர், பிரமிளா கிருஷ்ணன்
- பதவி, பிபிசி தமிழ்
சென்னை நகரத்தில் இருந்து அகற்றப்பட்டு கண்ணகி நகர் மற்றும் செம்மஞ்சேரி பகுதிகளில் மறுகுடியமர்வு செய்யப்பட்ட மக்கள், நிவர் புயல் உள்பட ஒவ்வொரு ஆண்டும் பாதிப்பை சந்திப்பதாக தெரிவிக்கின்றனர்.
சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்கள் பலருக்கும் பாதுகாப்பான இடமாக இருக்கும் என உறுதியளிக்கப்பட்டு மறுகுடியமர்வு செய்யப்பட்டாலும், தொடர்ந்து எல்லா வருடங்களிலும் மழை காலத்தில் அங்கே சொல்லமுடியாத துயரத்திற்கு ஆளாவதாக மக்கள் ஆதங்கப்படுகின்றனர்.
கண்ணகி நகர், செம்மஞ்சேரி, எழில் நகர் மற்றும் பெரும்பாக்கம் போன்ற இடங்களில் மழை காலம் என்றாலே முதியவர்கள் அச்சப்படும் நிலை உருவாகியுள்ளதாக குடியிருப்போர் கூறுகின்றனர்.
தற்போது நிவர் புயல் தாக்கத்தால் ஏற்பட்ட மழை பொழிவின் காரணமாக, செம்மஞ்சேரி வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. ஆரம்ப சுகாதார நிலையத்தில் வெள்ள நீர் சூழ்ந்துவிட்டதால், அது செயல்படவில்லை. தண்ணீரை வெளியேற்ற முயற்சி எடுப்பதாக சென்னை மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தாலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையின்போது மறுகுடியமர்வு செய்யப்பட்ட இடங்களுக்கு கவனம் கொடுக்கப்படுவதில்லை என்கிறார்கள்.
செம்மஞ்சேரியைச் சேர்ந்த வீட்டுவேலை தொழிலாளியான கண்ணம்மா தனது இரண்டு பெண் குழந்தைகளுடன் தோழியின் வீட்டில் தஞ்சமடைந்துள்ளார்.

பட மூலாதாரம், Devaneyan
''இங்குள்ள வீடுகள் மிகவும் சிறியவை. வெறும் 158 சதுர அடி பரப்பளவில் என் கணவர் மற்றும் இரண்டு குழந்தையோடு இங்கு வசிக்கிறோம். தரை தளத்தில் உள்ள வீடுகளில் முழுவதுமாக வெள்ளம் சூழ்ந்துவிட்டதால். தோழியின் வீட்டில் இருக்கிறோம். கட்டில் போட்டால், நான்கு பேரும் படுத்துக்கொள்ள கூட இடம் இருக்காது.
எங்கள் வீட்டில் உள்ள பொருட்களை மற்றவர் வீட்டில் வைத்துக்கொள்ள கூட இடம் இல்லை. நிவர் புயலை மட்டுமல்ல, ஒவ்வொரு ஆண்டும் மழை காலத்தில் இதே போன்ற பாதிப்பை சந்திக்கிறோம்,''என்கிறார் கண்ணம்மா.
கொரோனா ஊரடங்கு காலத்தில் பாதி சம்பளம்தான் கிடைத்தது என்றும் தற்போது ஏற்பட்ட இழப்பை ஈடுகட்ட மீண்டும் கடனாளியாகும் சூழல் ஏற்பட்டுள்ளதாக கூறி வருந்துகிறார் அவர்.
குளிர் காற்று வீசுவதால் குழந்தைகள் மற்றும் முதியவர்கள் உடல் உபாதைகளுக்கு ஆளாவதாகவும், நிவாரண பொருட்களை கொண்டு வருபவர்கள் செம்மஞ்சேரி நுழைவு பகுதியில் பொருட்களை கொடுத்துவிட்டு செல்வதாகவும் பாதிக்கப்பட்ட மக்கள் வருத்தம் தெரிவிக்கின்றனர்.

பட மூலாதாரம், Devaneyan
பிபிசிதமிழிடம் பேசிய 'தோழமை' அமைப்பைச் சேர்ந்த சமூக ஆர்வலர் தேவநேயன் செம்மஞ்சேரி குடியிருப்புவாசிகள் பலரும் இரண்டு நாட்களாக உணவு தட்டுப்பாட்டை சந்திப்பதாகவும், கொரோனா தொற்று பரவும் நிலையில் இருப்பதாகவும் கூறுகிறார்.
''புயல் பாதிப்பால் ஏற்பட்ட மழை, மழை நீர் வெளியறுவதற்கு சரியான கட்டமைப்பு இல்லை என்பதால் குடியிருப்பு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. இரண்டு நாட்களாக மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். குறிப்பாக முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் செய்வதறியாது தவிக்கிறார்கள்.
தற்போது கழிவு நீரும் வெள்ளத்தோடு கலந்து கொரோனா மற்றும் டெங்கு பாதிப்பு ஏற்படும் அபாயம் அங்கு ஏற்பட்டுள்ளது. சுமார் 6,700 குடும்பங்கள் வசிக்கும் இடத்தில் அடிப்படை உணவு தேவையை கூட அரசு கண்டுகொள்ளவில்லை. ஆனால் தமிழகத்தில் பாதிப்பை முறையாக கையாண்டதாக அரசாங்கம் சொல்வது சரியா?,'' என்கிறார்.
மேலும் அவர், கொரோனா பெருந்தொற்று காலத்தில் துரிதமாக வெள்ளநீரை வெளியேற்றாமல் போனால், கொரோனா கிளஸ்ட்டர் செம்மஞ்சேரியில் ஏற்படும் வாய்ப்பு உள்ளது என்கிறார்.

பட மூலாதாரம், Devaneyan
''2015ல் ஏற்பட்ட வெள்ளத்தில் இருந்து அரசாங்கம் பாடம் கற்கவில்லை என்று தோன்றுகிறது. சுனாமியில் பாதிக்கப்பட்டதை கூட மக்கள் மறந்துபோகும் அளவுக்கு ஒவ்வொரு ஆண்டும் ஒரு பேரிடரை இவர்கள் சந்திக்கிறார்கள். இங்குள்ள மக்கள் வாழத் தகுதியற்ற இடத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்,''என்கிறார்.
மாநகராட்சி அதிகாரிகளை தொடர்பு கொண்டபோது, வெள்ள நிவாரணப் பணிகளை மேற்கொள்வதாகவும், செம்மஞ்சேரி மற்றும் கண்ணகி நகர் மக்களுக்கு நிவாரண பொருட்கள் அளிக்கும் வேலைகளில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.
பிற செய்திகள்:
- இரான் அணு விஞ்ஞானி படுகொலை: தோட்டாக்களால் துளைத்தெடுத்த தீவிரவாதிகள் - என்ன நடந்தது?
- நிவர் புயல் தாக்கம்: மழை நீரில் வீதிகள் - ஆவேசம் அடையும் புதுச்சேரி மக்கள்
- டொனால்ட் டிரம்ப்: வெள்ளை மாளிகையை விட்டு வெளியேறுவாரா அதிபர்?
- சோனியா - ராகுல் இல்லாத காங்கிரஸ் தலைமை சாத்தியமா?
- 100 கோடிக்கும் அதிக இந்தியர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடுவது எப்படி?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :












