நிவர் புயலின் நிலவரம்: தமிழ்நாடு, புதுச்சேரியில் சாய்ந்த மரங்கள், வீதிகளில் வெள்ளம், தொடரும் மின்வெட்டு

பட மூலாதாரம், Jayakumar/BBC
தமிழ்நாடு புதுச்சேரியை அச்சுறுத்திவந்த நிவர் புயல் நடு இரவில் முழுமையாக கரையைக் கடந்த நிலையில், அதன் தாக்கம், பாதிப்பு, விளைவுகள் வெளியாகத் தொடங்கியுள்ளன.
காலை 6.15 மணி நிலவரப்படி, நிவர் புயல் தீவிர புயலாக வலுவிழந்து வட கடலோர தமிழகத்தில் புதுவைக்கு வட மேற்கு திசையில் 50 கி.மீ. தொலைவில் நிலை கொண்டுள்ளது. இது மேலும் வட மேற்கு திசையில் நகர்ந்து சாதாரண புயலாக அடுத்த 3 மணி நேரத்தில் வலுவிழக்கும் என்று வானிலை ஆய்வு மையத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பட மூலாதாரம், Jerin/BBC
புதுச்சேரி யூனியன் பிரதேசம் மற்றும் கடலூர் மாவட்டத்தில் நேற்றிரவு முதல் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.
புயல் கரையைக் கடந்த நிலையில் ஆங்காங்கே மரங்கள் சாலையின் குறுக்கே விழுந்துள்ளதும் தெரியவந்துள்ளது. சென்னையிலும் சாலையின் குறுக்கே மரங்கள் விழுந்துள்ளன. விழுந்த மரங்கள் அவ்வப்போது அகற்றப்பட்டு வந்தாலும் இன்னும் பல மரங்கள் சாலையின் குறுக்கே விழுந்துள்ளன.

பட மூலாதாரம், Jayakumar/BBC
இரவு முழுவதும் கடுமையாக மழை பெய்த நிலையில், பல இடங்களில் மழைநீர் தேங்கியுள்ளது.

புதுச்சேரியில் புயலால் பெரிய அளவில் பாதிப்புகள் ஏற்படவில்லை. மழை நீர் மட்டுமே நகரின் பல பகுதியில் சூழ்ந்துள்ளது என முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

ராமேஸ்வரத்தில், புயல் எச்சரிக்கைக் கூண்டு தற்போது இறக்கப்பட்டுள்ளது.
துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், சென்னையில் பாதிக்கப்பட்ட இடங்களை காலை 8 மணி முதல் பார்வையிடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பட மூலாதாரம், OPS Team
தரமணியிலும் பிறகு வேளச்சேரியிலும் அவர் பார்வையிட்டார். அம்பேத்கர் நகரில் உள்ள நிவாரண முகாமையும் அவர் பார்வையிட்டார்..



பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :













