தாழையூத்து கிருஷ்ணவேணி: சாதிவெறியிடம் மோதி தனது மரணத்தை தொட்டுப் பார்த்த ஒரு தலித் பெண்ணின் கதை

- எழுதியவர், விக்னேஷ்.அ
- பதவி, பிபிசி தமிழ்
(பல்வேறு துறைகளில் சாதனை படைத்த தமிழகத்தைச் சேர்ந்த பெண்கள் பலரும் அந்த உச்சத்தை தொடும் முன்பு, பல தடங்கல்களையும் சவால்களையும் எதிர்கொண்டிருக்கிறார்கள். அத்தகையோரில் குறிப்பிடத்தக்கவர்கள், தங்களின் வாழ்க்கை பயணத்தை பகிர்ந்து கொள்ளும் தொடரை பிபிசி தமிழ் வழங்குகிறது. அதில் ஆறாவது கட்டுரை இது.)
தலித் ஊராட்சித் தலைவர் என்பதால் சாதிய அவதூறுகளுக்கு உள்ளானதுடன், நிசப்தம் சூழ்ந்த ஓர் இரவில் நிகழ்ந்த கொலை வெறித் தாக்குதல் ஒன்றின்போது, மரணத்தை மிக மிக நெருக்கமாகச் சென்று பார்த்தவர் தாழையூத்து கிருஷ்ணவேணி.
உள்ளாட்சிப் பிரதிநிதிகளாக இருக்கும் தலித்துகள், அதிலும் குறிப்பாகப் பெண்கள் சாதிய மற்றும் பாலின அவதூறுகளுக்கு உள்ளாகும் செய்திகள் தொடர்ச்சியாக வந்துகொண்டேதான் இருக்கின்றன.
அத்தனை பாகுபாடுகளும், கொடுமைகளும் தலித் பெண்கள் மீண்டும் தேர்தல்களில் பங்கேற்பதையும், வென்று பதவிக்கு வருவதையும் தடுக்க முடியாமல் இருக்கின்றன.
அவ்வாறு தேர்வு செய்யப்பட்டு, உள்ளாட்சிப் பதவிகளுக்கு வரும் தலித் சமூகப் பெண்கள் பலரையும் பயிற்சிப் பட்டறைகள் மூலம் நேரில் சந்தித்து தமக்கு சர்வதே அமைப்பின் பாராட்டு முதல் தமது மோசமான, ஆனால் நம்பிக்கையூட்டும் அனுபவங்கள் வரை அனைத்தையும் பகிர்ந்துகொண்டு ஊக்கமூட்டி வருகிறார் 45 வயதாகும் கிருஷ்ணவேணி.
"இயற்கையாக நமக்குக் கிடைத்த உடலுக்கும், வெட்டப்பட்டு ஒட்டப்பட்ட உடலுக்கும் வேறுபாடு இருக்கும்தானே? எனக்கும் அப்படித்தான்," என்கிறார் கிருஷ்ணவேணி.
"பல அமைப்புகள் வந்து என்னிடம் கேட்பார்கள். எனது கதையை இப்போது உள்ளாட்சிப் பொறுப்பில் இருக்கும் தலித் பெண் பிரதிநிதிகளிடம் நானே நேரடியாகப் பகிர்ந்து கொண்டால் அவர்களுக்கு ஊக்கமாக இருக்கும் என்று சொல்வார்கள். சில சமயங்களில் சென்னை, திருச்சி எனப் பயணிக்க வேண்டியிருக்கும். எல்லா நேரங்களிலும் எனக்கு உடல்நிலை ஒத்துழைக்காது. ஆனால், என்னால் எப்போதெல்லாம் பயணிக்க முடியுமோ அப்போதெல்லாம் மறுக்காமல் சென்றுவிடுவேன். என் கதையைக் கேட்கும் சில பெண் பிரதிநிதிகள் கண் கலங்குவார்கள், சிலர் துணிவு பிறப்பதாகச் சொல்வார்கள்," என்கிறார் கிருஷ்ணவேணி.
சரி. அவருடைய கதைதான் என்ன?

பட மூலாதாரம், Dalit Camera
வீட்டில் கழிவறை வசதி இல்லாததால் தாழையூத்து பெண்கள் விடியும் முன்போ, கதிரவன் மறைந்த பின்போதான் இயற்கை உபாதையைக் கழிக்க வேண்டிய கட்டாயம்.
அப்போதும், இப்போதும் இந்தியாவின் பல கிராமங்களில் நிலை இதுதான் என்றாலும் அதை மாற்ற முயற்சித்தார் அப்போதைய ஊராட்சித் தலைவர் கிருஷ்ணவேணி.
தாழையூத்து ஊராட்சியில் நூலகம், சிறுபாலங்கள், சாலை வசதி, பொதுக் குடிநீர் வசதி, சுடுகாடு, இடுகாடு என ஏற்கனவே பலவற்றையும் உருவாக்கியிருந்த கிருஷ்ணவேணி இந்த முறை பெண்களுக்காக பொது கழிவறை கட்ட முயற்சி எடுத்தார்.
அரசு அதிகாரிகளிடம் பலமுறை கோரியும் நிதி இல்லை என்ற பதிலே திரும்பத் திரும்பக் கிடைத்தது.
சாலையோரங்களில் உள்ள புதர்களுக்கு பின்னால் இயற்கை உபாதை கழிக்கும் பெண்களை நோக்கி வரும் காம வெறியர்களின் 'பைக் லைட்' வெளிச்சத்தில் இருந்தும், சங்கிலிப் பறிப்பு, பாம்புகள் உள்ளிட்டவற்றில் இருந்தும் பாதுகாப்பதற்காக, எப்படியேனும் கழிவறையை கட்டிவிட வேண்டும் எனும் நோக்கில் அரசை எதிர் பார்த்துக் கொண்டிருக்காமல் ஊர் பொதுமக்களிடம் தாமாகவே நிதி திரட்டினார் கிருஷ்ணவேணி.
அவர் புறம்போக்கு நிலத்தில் கழிவறை கட்ட முயன்றது, குடியிருப்பு பகுதிக்கு அருகே கழிவறை கட்டுவதால் உண்டான முன்விரோதம் என்று அவர் மீதான கொலை முயற்சி சுருக்கப்பட்டது. ஆனால், அதற்கு பின் பல ஆண்டுகள் தாம் அனுபவித்த சாதிய வன்கொடுமைகள் அடங்கியுள்ளன என்கிறார் கிருஷ்ணவேணி.
கிருஷ்ணவேணியின் பயணத்தின் தொடக்கம்
2006ஆம் ஆண்டு நடந்த உள்ளாட்சி தேர்தலில் திருநெல்வேலி மாவட்டம் தாழையூத்து ஊராட்சியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார் அருந்ததியர் சமூகத்தைச் சேர்ந்த தலித் பெண்ணான கிருஷ்ணவேணி.
தேர்தலுக்கு முன்னரே குடிநீர் பிரச்னைக்காக அடிக்கடி ஊராட்சி மன்றம் சென்று முறையிட்டு வந்த அவர் ஏற்கனேவே உள்ளூர்வாசிகளின் நன்மதிப்பைப் பெற்றிருந்தார்.
தலித் பெண்களுக்கு ஒதுக்கப்பட்ட ஊராட்சி தலைவர் பதவிக்கு சுயேச்சையாகப் போட்டியிட்டு வெற்றியும் பெற்றார்.
வேலைக்குச் செல்லும் கணவர், குழந்தைகள் என இருந்த அந்த கிராமத்துப் பெண் உள்ளூர் அரசியல்வாதியாக உருவெடுத்தபோது அவருக்கு வயது 30.
தலித் என்பதால் ஏற்கனவே பல மிரட்டல்களையும் அத்துமீறல்களையும் சந்தித்திருந்த கிருஷ்ணவேணிக்கு பொது கழிவறை கட்டும் முயற்சி அவரின் உயிருக்கே ஆபத்தை உண்டாக்கும் அளவுக்கு இட்டுச் செல்லும் என்று அவர் அப்போது எதிர்பார்த்திருக்கவில்லை.
தலித் பெண்கள் அனுபவிக்கும் இன்னல்களைக் குறிக்க, 'இரட்டைப் பாகுபாடு' என்று பொருள்படும் 'டபுள் டிஸ்க்ரிமினேஷன்' (Double Discrimination) எனும் ஆங்கிலப் பதம் சமூகவியலாளர்கள் மற்றும் செயல்பாட்டாளர்களால் பயன்படுத்தப்படும்.

பட மூலாதாரம், krishnaveni's family
தலித் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் சாதி ரீதியாகவும், பெண்கள் என்பதால் பாலின ரீதியாகவும் பாகுபாடு மற்றும் ஒடுக்குமுறைக்கு தலித் பெண்கள் ஒரே சமயத்தில் உள்ளாக்கப்படுபவர்கள்.
இந்த இரண்டு விதமான ஒடுக்குமுறைகளுக்கும் உள்ளானவர்தான் தாழையூத்து கிருஷ்ணவேணி.
'நீயே வந்து குப்பையை அள்ளு'
தன் பதவிக்காலம் முழுவதும் சாதிய அவதூறுகளை சந்தித்து வந்ததாகவே பிபிசி தமிழிடம் பேசிய கிருஷ்ணவேணி தெரிவித்தார்.
"சாக்கடை அடைத்திருந்தாலோ, தெருக்களில் குப்பை கிடந்தாலோ அதை முறையிட ஊராட்சி மன்ற அலுவலகத்துக்கு வருபவர்கள், வெளியிலேயே நின்று கொண்டு சாதி ரீதியாக அவதூறு பேசுவார்கள். 'நீயே வந்து குப்பையை அள்ளு' என்று தெருக்களில் நின்றுகொண்டு கத்துவார்கள்," என்கிறார் கிருஷ்ணவேணி.
"தேர்தலில் வென்ற பின் அலுவலகம் வரக்கூடாது, காசோலையில் மட்டுமே கையெழுத்து போட்டுவிட்டு வீட்டிலேயே இருந்துகொள்ள வேண்டும் என்று துணைத் தலைவர் கூறுவார். ஊராட்சி மன்ற அலுவலகத்துள் வந்தால் கை, கால்கள் வெட்டப்படும் என்றும் 'கெடுத்து கேவலப்படுத்திவிடுவோம்' என்றும் மொட்டைக் கடிதங்கள் அனுப்புவார்கள்," என்றும் தெரிவித்தார் கிருஷ்ணவேணி.
"நான் நிதி முறைகேடு செய்ததாக ஒவ்வொரு முறையும் புகார் செய்வார்கள். பின்னர் தணிக்கைக்கு வரும் அதிகாரிகள் அப்படி எதுவும் நிகழவில்லை என்று கூறிவிடுவார்கள். அலுவகத்துக்கு ஒவ்வொரு முறையும் வந்து என் மீதான புகார்கள் விசாரிக்கப்படும்போது மன உளைச்சலாக இருக்கும். ஒரு முறையாவது என் மேல் உள்ள குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரங்களைக் கண்டுபிடியுங்கள்," என்று அவர்களிடம் தெரிவித்ததாக கிருஷ்ணவேணி தெரிவிக்கிறார்.

தம் மீதான ஒடுக்குமுறைகளை எதிர்த்து அப்போது மாவட்ட ஆட்சியகராக இருந்த ஜி. பிரகாஷ் இடம் பல முறை மனு அளித்துள்ளதாகவும் அவை நிர்வாகச் சிக்கல்களுக்கு மட்டும் தற்காலிகத் தீர்வுகளையே பெற்றுத் தந்ததாகவும் கூறுகிறார் கிருஷ்ணவேணி.
சாதி ரீதியாக அவதூறு செய்யப்படுவதாகவும், கொலை மிரட்டலுக்கு உள்ளாவதாகவும் 22 முறை தாழையூத்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளேன். ஒரு முறை கூட நடவடிக்கை எடுக்கப்படவில்லை. அப்போது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அஸ்ரா கார்க் இருந்தார் என்று கிருஷ்ணவேணி தெரிவித்தார்.
இந்த மிரட்டல்களையும், இடையூறுகளையும் மீறி பணியைச் செய்தது மட்டுமல்ல, சிறந்த ஊராட்சித் தலைவர்களுக்கு தமிழக அரசு வழங்கும் விருதை வென்ற கிருஷ்ணவேணி, சர்வதேச அமைப்பின் பாராட்டையும் பெற்றார்.
சர்வதேச அமைப்பின் அங்கீகாரம்
அமெரிக்காவைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் 'தி ஹங்கர் ப்ராஜெக்ட்' எனும் பன்னாட்டுத் தொண்டூழிய நிறுவனம் 'பெண்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகள்' தொடர்பான சிறப்பான செய்திகளை வெளியிட்ட ஊடகவியலாளர்களுக்கு ஆண்டுதோறும் விருதுகளை வழங்கி கௌரவிக்கும்.
அதில் இந்திய அளவில் சிறப்பாகப் பணியாற்றும் பெண் உள்ளாட்சிப் பிரதிநிதிகளும் அந்நிகழ்வுக்கு அழைக்கப்பட்டு கௌரவிக்கப்படுவார்கள். இந்தியாவில் உள்ள பல லட்சம் ஊரக உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகளில் 30 பேர் மட்டும் 2008ஆம் ஆண்டு டெல்லியில் நடந்த அந்த நிகழ்வுக்கு அழைக்கப்பட்டனர்.
அவர்களில் ஒருவர் கிருஷ்ணவேணி. அந்த நிகழ்ச்சியில் மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதியளிப்புச் சட்டத்தை தாழையூத்து ஊராட்சியில் சிறப்பாக செயல்படுத்தியதற்காக கிருஷ்ணவேணிக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டது. அதை இவருக்கு வழங்கியவர், அப்போது ஆளும் கூட்டணியாக இருந்த ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் தலைவர் சோனியா காந்தி.

பட மூலாதாரம், The hunger project
தன் பதவிக்காலம் பாதி முடிவதற்குள்ளேயே இப்படி ஓர் அங்கீகாரத்தைப் பெற்ற கிருஷ்ணவேணி, பதவிக்காலத்தில் இறுதியில் ஒரு கொலைவெறித் தாக்குதலுக்கு உள்ளானார்.
அந்தக் கொடிய இரவு
ஜூன் 13, 2011 அன்று வழக்கமான தனது அலுவலகப் பணிகளை முடித்துவிட்டு, இரவு 9 மணிக்கு மேல் ஆட்டோவில் வீடு திரும்பிய போது, ஆயுதங்களுடன் இருந்த கும்பல் ஒன்று தான் வந்த ஆட்டோவை வழி மறித்ததாகக் கூறுகிறார் கிருஷ்ணவேணி.
அவர்கள் ஆட்டோ ஓட்டுநரைத் தாக்கவே சூழ்ந்துள்ளனர் என்று நினைத்தார் கிருஷ்ணவேணி. ஆனால், தாக்கப்பட்டது அவர்தான். அவரைத் தாக்கியது அந்தக் கும்பலின் கைகளில் இருந்த ஆயுதங்கள் மட்டுமல்ல; அவர்கள் சொற்களில் நச்சாகக் கலந்திருந்த சாதிய வசவுகளும், பெண்களைச் சிறுமைப்படுத்தவதற்கு என்றே புழக்கத்தில் உள்ள வசைச் சொற்களும்தான்.
வெட்டப்பட்ட விரல்கள், துண்டாகி கீழே விழுந்த காது, உடல் முழுவதும் காயங்கள் என்று ரத்த வெள்ளத்தில், அவரது வீட்டில் இருந்து சில நூறு மீட்டர் தூரத்தில், ஆட்டோவில் விழுந்து கிடந்த அவரை மருத்துவமனையில் கொண்டு சேர்த்துள்ளனர்.
அவர் பதவிக்காலத்தில் ஊருக்காகக் கட்டப்பட்ட நூலகம் அருகேதான் அந்தக் கும்பல் அவர் வருகைக்காகக் காத்திருந்திருக்கிறது.
மருத்துவமனை படுக்கையில் இருந்துகொண்டே, வெட்டுக் காயங்களுடன் கிருஷ்ணவேணி அளித்த பேட்டி அப்போது ஊடகங்களில் வெளியாகின.
இன்னும் முடியாத வழக்கு
கிருஷ்ணவேணி மீதான தாக்குதல் அவர் செய்த முயற்சிகளை கிராமத்தினருக்கு இன்னும் கூடுதலாகப் புரிய வைத்தது. வேறு சாதி இளைஞர்கள் தாமாக முன்வந்து அவருக்கு மருத்துவமனையில் ரத்தம் கொடுத்துள்ளனர்.
ஆனாலும், அவர் தாக்கப்பட்ட அடுத்த சில மாதங்களில் நடந்த உள்ளாட்சித் தேர்தலில் மீண்டும் போட்டியிட்ட கிருஷ்ணவேணி வெற்றி வாய்ப்பை இழந்தார்.
ஒன்பது ஆண்டுகளுக்கு முன் கிருஷ்ணவேணி மீதான கொலை முயற்சி நடந்தது. இன்னும் வழக்கு முடியவில்லை.
அதில் பெரிதாக எந்த முன்னேற்றமும் இல்லை. கொலை முயற்சியில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டவர்கள் சில நாட்களிலேயே பிணையில் வெளியே வந்து விட்டனர். உள்ளூரில்தான் அவர்களும் வசிக்கிறார்கள், அடிக்கடி நேரில் பார்க்க வேண்டிய சூழலும் ஏற்படும் என்று கூறுகிறார் கிருஷ்ணவேணி.
மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த நேரத்தில் ஒரே ஒரு முறை நீதிபதி ஒருவரிடம் சுமார் 30 நிமிட நேரம் தனது வாக்குமூலத்தை மட்டும் பதிவு செய்ததாக அவர் தெரிவித்தார்.
"எனக்கு முன்பு இருந்த அளவு உடல் நலமில்லை; உடலில் பழைய தெம்பில்லை. பல அமைப்புகள், குறிப்பாக தலித் அமைப்புகள் வந்து என்னை அவர்கள் நிகழ்ச்சிகளில் பேசச் சொல்லி அழைப்பார்கள். 'நீங்கள் அனைத்தையும் துணிவுடன் எதிர்கொண்டீர்கள் அதற்காகவே வாருங்கள்' என்று அழைப்பார்கள். நானும் உடல்நலக் கோளாறுகளை மீறி இயன்ற அளவுக்குச் செல்கிறேன். இனிமேலும் செல்வேன்," என்கிறார் எண்ணற்ற தலித் பெண்களின் மத்தியில் நம்பிக்கைய விதைத்துக் கொண்டிருக்கும் கிருஷ்ணவேணி.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:












