நிவர் புயல்: தமிழகம், புதுச்சேரி மக்கள் என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக்கூடாது?

எடப்பாடி

பட மூலாதாரம், Edappadi Palanisami

வங்கக் கடலில் புதிதாக உருவாகியுள்ள நிவர் புயல், புதன்கிழமை காரைக்கால் அருகே கரையை கடக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்போது மணிக்கு 110 முதல் 110 கி.மீ வேகத்தில் இருந்து 120 கி.மீ வேகம் வரை புயலின் வேகம் இருக்கலாம் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

புயலின் வேகம் தொடர்பாக இலங்கை வானிலை ஆய்வு மையம் சில படங்களை வெளியிட்டிருக்கிறது. அதில், தமிழக வடமேற்கு கடலோர பகுதியை நோக்கி நகரும் நிவர் புயல், அடுத்த 48 மணி நேரத்தில் அதி தீவிர புயலாக வலுப்பெறும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் விளைவாக அதீத கன மழை, கடுமையான கடல் சீற்றம், பலத்த சூறை காற்று வீசும் என்று இலங்கை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

இலங்கை

பட மூலாதாரம், Srilanka Meteorology

இந்த நிலையில், நிவர் புயல், 25.11.2020 அன்று மாமல்லபுரம், காரைக்கால் இடையே கரையை கடக்கும் என்ற இந்திய வானிலை ஆய்வு மையத்தின் எச்சரிக்கையை தொடர்ந்து உடனடியாக மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக் கூட்டம் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று (23.11.2020) தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை தொடர்பாக அதிகாரிகளுடன் அவர் ஆலோசனை நடத்தி உத்தரவுகளை பிறப்பித்தார்.

இதையடுத்து முதல்வர் பழனிசாமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கடந்த செப்டம்பர் மாதம் 18, அக்டோபர் 12 ஆகிய தேதிகளிலும், அக்டோபர் 21ஆம் தேதி வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் தலைமையிலும் நடந்த கூட்டங்களில் விவாதிக்கப்பட்ட நடவடிக்கையை அவர் பட்டியலிட்டுள்ளார்.

அதில், பேரிடர் காலங்களில் கண்காணிக்கவும், அறிவுரைகள் வழங்கவும் 36 மாவட்டங்களுக்கும் மற்றும் பெருநகர சென்னை மாநகராட்சியில் உள்ள 15 மண்டலங்களுக்கும் மூத்த இந்திய ஆட்சிப் பணி அலுவலர்கள், கண்காணிப்பு அலுவலர்களாக நியமிக்கப்பட்டு, மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ள வடகிழக்கு பருவமழை - முன் எச்சரிக்கை நடவடிக்கைள் தொடர்பாக ஆய்வு மேற்கொண்டு வருகிறார்கள். மேலும், எனது உத்தரவின்படி, கடலூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் வருவாய் நிர்வாக ஆணையர் நேரடியாக சென்று வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை ஆய்வு செய்தார்கள் என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

நிவர் புயல் நிலைமை

புதிதாக உருவாகியுள்ள "நிவர்" காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறி, 24ம் தேதி கடலோர மாவட்டங்களில் மிக கனமழையும், 25ந்தேதி மாலை பாண்டிச்சேரி அருகில் கரையை கடக்கும்போது, மிக கனமழையுடன் 120 கிலோமீட்டர் வேகத்தில் புயல் காற்றாக வீசும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனை எதிர்கொள்வது தொடர்பாக சம்பந்தப்பட்ட துறைத் தலைவர்கள் மற்றும் மாவட்ட ஆட்சியர்களுக்கு கீழ்க்கண்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள நான் உத்தரவிட்டுள்ளேன்:-

  • வருவாய், உள்ளாட்சி, தீயணைப்பு, பொதுப்பணி, நெடுஞ்சாலை, நகராட்சி, மின்சார வாரியம், சுகாதாரம் மற்றும் பிற துறைகளைச் சார்ந்த அலுவலர்கள் அடங்கிய மீட்புக் குழுவினர், 23.11.2020 அன்று மாலையிலிருந்து போதுமான எரிபொருளுடன் ஜே.சி.பி. மற்றும் லாரி, மின்சார மரம் அறுக்கும் இயந்திரங்கள், மணல் மூட்டைகள் மற்றும் போதுமான மின் கம்பங்களுடன் பாதிப்பு உள்ளாகக் கூடிய பகுதிகளில் முகாமிட வேண்டும்.
  • புதுக்கோட்டை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் சம்பந்தப்பட்ட கண்காணிப்பு அலுவலர்களும் முகாமிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கண்காணிக்க வேண்டும்.
  • பாதிப்பு உள்ளாகக்கூடிய பகுதிகளில் உள்ள மக்களையும், பாதுகாப்பு இல்லாத வீடுகளில் வசிக்கும் குடும்பங்களையும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நிவாரண முகாம்களுக்கு உடனடியாக அழைத்துச் செல்ல வேண்டும்.
  • நிவாரண முகாம்களில் குடிநீர், சுத்தமான கழிவறை, ஜெனரேட்டர் மூலம் மின்வசதி, பொதுமக்களுக்கு உணவு தயாரிக்க போதுமான அளவில் அரிசி, பருப்பு உள்ளிட்ட மளிகைப் பொருட்கள், சமையல் பாத்திரங்கள், தேவையான எரிவாயு அடுப்புகள், சிலிண்டர்கள், உணவு தயாரிக்க சமையலர்கள், பொதுமக்களுக்கு தேவையான பாய் மற்றும் போர்வை போன்ற வசதிகள் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.
என்டிஆர்எப்

பட மூலாதாரம், NDRF

  • முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, புதுக்கோட்டை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களுக்கு இடையேயும், மாவட்டங்களுக்கு உள்ளும், 24.11.2020 மதியம் 1.00 மணி முதல் பேருந்து போக்குவரத்து மறு உத்தரவு வரும் வரை நிறுத்தி வைக்கப்படுகிறது. பொதுமக்களும், தங்கள் சொந்த வாகனங்கள் மூலம், அத்தியாவசிய தேவைகளைத் தவிர மற்ற தேவைகளுக்காக பயணங்கள் மேற்கொள்வதை தவிர்க்க கேட்டுக்கொள்கிறேன்.
  • கடலோர கிராமங்களில் மீனவர்களின் வாழ்வாதாரங்களான கட்டு மரங்கள், மின் மோட்டார் பொருத்திய படகுகள், மீன் வலைகள் ஆகியவற்றை உரிய முறையில் பாதுகாப்பாக வைத்திட வேண்டும்.
  • உள்ளாட்சி அமைப்புகள், மக்கள் வசிக்கும் தாழ்வான பகுதிகளில் ஏற்படும் நீர் தேக்கத்தை உடனுக்குடன் வெளியேற்ற, பம்பு செட்டுகள் தயார் நிலையில் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். மேலும் நோய்த் தொற்று பரவாமல் இருக்க உடனுக்குடன் திடக்கழிவுகளை அகற்றி, தேவையான கிருமி நாசினி தெளிக்க வேண்டும். அதற்கு தேவையான அளவுக்கு கிருமி நாசினி இருப்பு வைத்துக் கொள்ள வேண்டும்.
  • தடையில்லாமல் குடிநீர் வழங்குவதை உறுதி செய்ய, மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளில் நீரேற்றம் செய்து முழுமையாக தண்ணீர் நிரப்பி வைத்துக் கொள்ள வேண்டும். தேவைக்கேற்ப ஜெனரேட்டர் வசதிகளையும் உறுதிப்படுத்த வேண்டும்.
  • பெரிய ஏரிகளின் நீர் கொள்ளவு, பாதுகாப்பான அளவில் இருப்பதை உறுதி செய்வதுடன், அவற்றை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்.
  • அனைத்து ஏரிகள் மற்றும் நீர்நிலைகளையும் கள ஆய்வு மேற்கொண்டு கரை உடைப்புகள் இல்லாமல் இருப்பதை கண்காணிக்க வேண்டும். உடைப்பு ஏற்பட்டால், உடனடியாக சரிசெய்ய போதுமான மணல் மூட்டைகள் உட்பட அனைத்தும் தயார் நிலையில் வைக்கப்பட வேண்டும். மழை நீர் கால்வாய்கள் மற்றும் பாலங்கள் அடைப்புகளின்றி உள்ளதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.
  • நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் உள்ள நெல் மூட்டைகள் மழையில் நனையாதவாறு பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். கால்நடைகளுக்கு தேவையான தடுப்பூசிகள், மருந்துப் பொருட்கள், பசுந்தீவனங்கள் ஆகியவற்றை போதிய அளவு இருப்பு வைத்துக் கொள்ள வேண்டும்.
  • நடமாடும் தொலைத் தொடர்பு கருவிகளை இப்பொழுதே தயார் நிலையில் வைத்து, தொலைத் தொடர்பு பாதிக்காத வண்ணம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
  • தமிழ்நாடு மின்சார வாரியம் சார்பில், பாதிப்புக்குள்ளாகக் கூடிய பகுதிகளுக்கு கூடுதலாக 1,000 பணியாளர்களையும், கூடுதல் மின் கம்பங்கள், மின்மாற்றிகள் மற்றும் மின் கடத்திகளை பிற மாவட்டங்களிலிருந்து பெற்று தயார் நிலையில் வைக்க வேண்டும்.
என்டிஆர்எப்

பட மூலாதாரம், NDRF

  • கொரோனா தொற்று ஏற்படா வண்ணம், அனைத்து நிவாரண முகாம்களிலும் கிருமி நாசினிகள், முகக்கவசங்கள் ஆகியவற்றை தேவையான அளவு இருப்பு வைக்கவும், சுகாதாரக் குழுக்கள் அமைத்து தயார் நிலையில் வைக்க வேண்டும்.
  • வட தமிழக கடற்கரையோரம் புயல் கரையை கடக்க உள்ளதால் தேசிய பேரிடர் மீட்புப் படையின் 6 பிரிவுகள் கடலூரிலும், 2 பிரிவுகள் சென்னையிலும், தேவையான கருவிகளுடன் தங்க வைக்க வேண்டும்.
  • நீர் நிலைகளின் ஓரம் மற்றும் கடற்கரையோரங்களில் மக்கள் கூடாமல் கண்காணிக்க காவலர்கள் / வருவாய்த்துறை அலுவலர்கள் பணியில் ஈடுப்படுத்தப்பட வேண்டும்.
  • மேலும், தொலைத் தொடர்பு கருவிகள் மூலம் தொடர்பு கொண்டு, மீனவர்களை பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்ப ஏற்பாடு செய்ய வேண்டும்.
  • பெட்ரோல் மற்றும் டீசல் பங்குகளில் போதுமான அளவு இருப்பு வைத்துக் கொள்ள சம்பந்தப்பட்ட நிறுவனங்களை அறிவுறுத்த வேண்டும்.
என்டிஆர்எப்

பட மூலாதாரம், NDRF

பொதுமக்களுக்கு வேண்டுகோள்

வங்ககடலில் புதிதாக உருவாகி உள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப் பட்டுள்ளது. 24ந்தேதி முதல் 25ந்தேதி வரை பெரும் மழையும், புயலும் வீச இருப்பதால், எச்சரிக்கை விடப்பட்ட மாவட்டங்களில் மக்கள் வெளியில் செல்வதை தவிர்க்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

பொது மக்கள் ஆதார் அட்டை, ஓட்டுநர் உரிமம், வாக்காளர் அட்டை, குடும்ப அட்டை, வங்கி கணக்கு புத்தகங்கள், கல்வி சான்றிதழ்கள் மற்றும் சொத்து பத்திரங்கள் உள்ளிட்ட முக்கிய ஆவணங்களை, நீர் படாத வகையில் பாதுகாப்பாக வைத்துக் கொள்ள வேண்டும்.

அத்தியாவசிய பொருட்களான பேட்டரியில் இயக்கும் டார்ச் லைட்டுகள், போதுமான பேட்டரிகள், மெழுகுவர்த்தி, தீப்பெட்டி ஆகியவற்றை போதுமான அளவு இருப்பில் வைத்திருக்க வேண்டும்.

மின்கம்பிகள், தெரு விளக்கு கம்பங்கள், மின் மாற்றிகள் ஆகியவற்றிற்கு மிக அருகில் செல்லவோ, தொடவோ வேண்டாம் என பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றனர். மேலும், வீடுகளில் மின்சாதனப் பொருட்களை கவனமாக கையாள அறிவுறுத்தப்படுகின்றனர்.

பலத்த காற்று வீசும் போது பொருட்கள் நகரவும், மரங்கள் விழவும் வாய்ப்புள்ளதால் அச்சமயங்களில் பாதுகாப்பு கருதி பொதுமக்கள் வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும். பேட்டரி மூலம் இயங்கும் வானொலி பெட்டி மூலம் அறிவிக்கப்படும் வானிலை நிலவரங்களை கேட்டு தெரிந்து கொண்டு அதன்படி செயல்பட வேண்டும் என பொதுமக்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் என்று முதல்வர் பழனிசாமி கூறியுள்ளார்.

"தொழிலாளர்கள் பணிக்கு செல்ல வேண்டாம்" - புதுச்சேரி முதல்வர்

புதுச்சேரியில் நிவர் புயல் காரணமாக செவ்வாய்க்கிழமை மாலை முதல் தொழிலாளர்கள் பணிக்கு செல்ல வேண்டாம் என முதலமைச்சர் நாராயணசாமி அறிவுறுத்தியுள்ளார்.தெற்கு வங்கக்கடலில் உருவாகியிருக்கும் காற்றழுத்த தாழ்வு மண்டல காரணமாக வரும் 25ஆம் தேதி மகாபலிபுரம் மற்றும் காரைக்கால் இடையே நிவர் புயல் கரையை கடக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து இந்த புயலை எதிர்கொள்வது மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் நாராயணசாமி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

புதுச்சேரி முதல்வர்

இதில் அமைச்சர் ஷாஜகான், தலைமைச் செயலர் அஸ்வனி குமார், டிஜிபி பாலாஜி ஸ்ரீவத்சவா மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் நிவர் புயலை எதிர்கொள்வது குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. கூட்டத்துக்குப் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் நாராயணசாமி கூறுகையில், "அந்தமான் கடல் பகுதியில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை புயலாக மாறி புதுச்சேரியில் கரையைக் கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதைத்தொடர்ந்து புயலை எதிர்கொள்ளப் புதுச்சேரி அரசு எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து மாநில பேரிடர் மீட்பு துறை மூலம் பல்வேறு துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டது.

15 நாட்களுக்கு முன்னதாகவே பருவமழையை எதிர்கொள்வது குறித்து ஒரு கூட்டம் நடத்தி அனைத்து துறைகளும் முனைப்பாகச் செயல்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன்படி ஒவ்வொரு துறை வாரியாக கூட்டம் நடத்தி விழிப்புடன் இருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது," என்றார் அவர்.

"தற்போது 25ம் தேதி காலை 5.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை 100 முதல் 110 கிலோ மீட்டர் வேகத்தில் புதுச்சேரியில் புயல் கரையைக் கடக்கும் என தகவல் வந்துள்ளது. இதனால் பொதுப்பணி, உள்ளாட்சி, காவல், வருவாய், கடலோரக் காவல், தீயணைப்பு, விவசாயம், மீன்வளம் உள்ள துறை அதிகாரிகளுடன் கலந்து பேசி உள்ளோம். அதன்படி, ஆட்சியர் அலுவலகம் மற்றும் அனைத்து துறைகளில் கட்டுப்பாட்டு அறைகள் 24 மணி நேரம் இயங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 24ம் தேதி முதல் பாதுகாப்பு இல்லாத மரங்களை அகற்ற உத்தரவிடப்பட்டுள்ளது.பல இடங்களில் பாதுகாப்பு இல்லாத வகையில் பேனர்கள் வைக்கப்பட்டு உள்ளதால் அவற்றை அகற்றவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

குடிநீர் பிரச்சினையைச் சமாளிக்க ஜெனரேட்டர் மூலம் தண்ணீர் நிரப்பி வழங்கவும், மின்தடை ஏற்பட்டால் 12 மணி நேரத்தில் சரி செய்யவும், மீனவர்கள் யாரும் கடலுக்குச் செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்படுகிறது.

புதுவையில் கடலுக்குச் சென்ற 99 சதவீத மீனவர்கள் திரும்பி வந்துவிட்டனர். ஒரு படகு மட்டும் இன்னும் வரவில்லை. காரைக்காலில் 90 பேர் திரும்பி வர வேண்டியுள்ளது.

அவர்கள் அனைவரும் திரும்பி வரக் கடலோர காவல்துறை நடவடிக்கை எடுத்திருக்கிறது. அனைத்து பகுதிகளிலும் படகைப் பாதுகாப்பாக நிறுத்தவும், புயல் மற்றும் மழையால் தொற்று நோய்கள் வர வாய்ப்புள்ளதால் மருந்துகள் இருப்பு வைக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது," என்று கூறினார்.

புதுச்சேரி முதல்வர்

மேலும் தொடர்ந்து பேசிய, "தாழ்வான பகுதிகளில் நீர் புகுந்தால் அவற்றை எந்திரம் மூலம் அகற்றவும், மக்களைத் திருமண மண்டபங்கள், சமுதாய நலக்கூடங்கள், பள்ளிகளில் தங்க வைக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.

24ஆம் தேதி மாலை முதல் புயலின் தாக்கம் இருக்கும் என்பதால் யாருக்கும் பாதிப்பு ஏற்படாமல் இருக்க வேலைக்குச் செல்வதைத் தவிர்க்கலாம்.24ஆம் தேதி மாலை முதல் வியாபாரிகள் கடைகளை அடைத்துக் கொள்ளலாம். இந்த நாளில் மாணவர்கள் பள்ளிக்குச் செல்ல தடை விதிக்கப்படுகிறது. கஜா புயலின் போது காரைக்கால் மாவட்டத்தில் சிறப்பான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. புயலை எதிர்கொள்ளப் புதுச்சேரியில் உள்ள அனைத்து துறைகளும் 24 மணி நேரம் செயல்பட உத்தரவிடப்படுகிறது.

இதனால் புதுவை அரசு புயலை எதிர்கொள்ளத் தயார் நிலையில் உள்ளது. காரைக்காலில் அமைச்சர் கமலக்கண்ணன், புதுவையில் அமைச்சர்கள் நமச்சிவாயம், கந்தசாமி, ஷாஜகான் ஆகியோரும், ஏனாமில் மல்லாடி கிருஷ்ணாராவும் களப்பணி ஈடுபடுவார்கள்," என முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :