தமிழக சட்டமன்றத் தேர்தல் 2021: திமுகவின் ஸ்டாலின், அதிமுகவின் எடப்பாடி பழனிசாமி அரசியல் போட்டிக்கு தயாரா?

''நட்சத்திர நாயகர்களாக அங்கீகாரம் கிடைப்பதற்காக ஸ்டாலின், பழனிசாமி காத்திருக்கவில்லை''

பட மூலாதாரம், FACEBOOK

    • எழுதியவர், பிரமிளா கிருஷ்ணன்
    • பதவி, பிபிசி தமிழ்

தமிழகத்தின் பிரதான கட்சிகளான அதிமுக, திமுக ஆகிய இரு கட்சிகளுமே சட்டமன்ற தேர்தல் பரப்புரைக்கு தயாராகிவிட்டன.

தேர்தல் தேதி அறிவிப்பு எப்போது வரும் என்பது இன்னும் தெளிவாகவில்லை. கொரோனா காலத்தில் பிகார் தேர்தலை வெற்றிகரமாக தேர்தல் ஆணையம் நடத்திவிட்டது என்பதால், தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடத்துவதில் சிரமங்கள் இருக்கபோவதில்லை என்ற கருத்து நிலவுகிறது.

வெள்ளியன்று தேர்தல் பரப்புரை நடக்கும் இடங்கள், தேதி, பரப்புரை மேற்கொள்ளும் தலைவர்கள் ஆகியவற்றுக்கான பெரிய பட்டியலை திமுக வெளியிட்டுள்ளது.

2021ல் ஜனவரி 5ம் தேதி தேர்தல் பரப்புரையை 'விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல்' என்ற தலைப்பில் சுற்றுப்பயணம் தொடங்கவுள்ளதாகவும், இதில் ஸ்டாலினின் தூதர்களாக 15 பேர் 234 தொகுதிகளில் பரப்புரை செய்வர்கள் என்றும் திமுகவின் முதன்மை செயலாளர் கே.என். நேரு அறிவித்தார்.

மேலும் அந்த தேர்தல் பரப்புரை சுற்றுப்பயணத்தில் ஈடுபட்டுள்ள ஸ்டாலினின் தூதர்கள், 75 நாட்களில் 15 ஆயிரம் கிலோமீட்டர் பயணித்து, 1500 கூட்டங்களிலும், 500 உள்ளூர் நிகழ்ச்சிகளிலும் பங்கேற்க இருப்பதாகவும் நேரு தெரிவித்தார்.

அதோடு, திமுக - காங்கிரஸ் கூட்டணி நல்ல நிலையில் உள்ளதாகவும், எந்த கலகத்தையும் கூட்டணியில் ஏற்படுத்த முடியாது என்றும் நேரடியாக சொல்லிவிட்டார்.

அதிமுக தரப்பில் எந்தவித வெளிப்படையான முடிவுகளும் சொல்லவில்லை என்றாலும், முக்கிய புதிய முடிவுகள் எதுவும் எடுக்கப்படவில்லை என மூத்த தலைவர்கள் தெரிவிக்கின்றனர். தேர்தல் பணிகள் பற்றிய கூட்டமாகவே வெள்ளியன்று நடைபெற்ற கூட்டம் அமைந்தது என்கிறார்கள்.

2021 சட்டமன்ற தேர்தல் தயாரிப்பு பணிகளை இரண்டு கட்சிகளும் தொடங்கிவிட்டதை அடுத்து, தேர்தல் களத்தில் நிகழவுள்ள மாற்றங்கள் என்னவாக இருக்கும் என நிபுணர்களிடம் பிபிசி தமிழ் பேசியது.

கொரோனா தாக்கம், நீட் தேர்வு, ஹைட்ரோகார்பன் உள்ளிட்ட சுற்றுச்சூழல் விவகாரங்கள், பொருளாதார சரிவு, தேர்தல் கூட்டணி போன்றவற்றில் தேர்தலின் மையபுள்ளியாக மாறப்போவது எது என்றும் கேட்டோம்.

திமுக-அதிமுக என இரண்டு தரப்பும் கூட்டணி விவகாரத்தில் பெரிய மாற்றங்களை செய்யப்போவதில்லை என்கிறார் பேராசிரியர் ராமஜெயம்.

''நட்சத்திர நாயகர்களாக அங்கீகாரம் கிடைப்பதற்காக ஸ்டாலின், பழனிசாமி காத்திருக்கவில்லை''

பட மூலாதாரம், FACEBOOK

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்திலுள்ள சமூக விலக்கம் மற்றும் சேர்த்தல் கோட்பாடு ஆய்வு மையத்தைச் சேர்ந்த பேராசிரியர் ராமஜெயம், தமிழக சமூக அரசியல் பிரச்சனைகள் குறித்த ஆய்வுகளை மேற்கொள்பவர்.

எழுத்தாளர் மற்றும் அரசியல் விமர்சகர் ஆழி செந்தில்நாதனிடம் பேசியபோது, கொரோனா ஊரடங்கு காரணமாக தேர்தலில் முக்கியத்துவம் பெறும் விவகாரம் என்ற ஒரு தனிப்பட்ட விவகாரம் உருவெடுக்கவில்லை என்றும், அதிமுக மற்றும் திமுகவுக்கு சமவாய்ப்பு மட்டுமல்லாது சமமான பலப்பரீட்சை நடைபெறும் என்கிறார்.

முதலில் இதுநாள்வரை நடைபெற்ற தேர்தல் பிரசாரங்களைவிட கொரோனாவுக்கு பிந்தைய பிரச்சாரம் எப்படி வித்தியாசமாக இருக்கும் என்பதை விளக்குகிறார் ராமஜெயம்.

''இரண்டு கட்சிகளும் கிராமம் முதல் பெரிய நகரங்கள் வரை பலம் கொண்ட தொண்டர்களை கொண்ட கட்சிகள். ஆனால் தொண்டர்களை திரட்டி, தேர்தல் பிரசார கூட்டங்களை நடத்துவது என்பது கொரோனா காலத்தில் பெரிய சிக்கலை தரும். சமூக வலைத்தளங்கள் மூலமாக பிரசாரம் செய்யவேண்டும் என்ற கட்டாயம் இரண்டு கட்சிகளுக்கும் இருப்பதால், ஏற்கனவே அதற்கான தீவிர ஏற்பாடுகளை தொடங்கிவிட்டார்கள்.''

''பாஜக தொடங்கிவைத்த வலைத்தளவழி பிரசார பாணியை எடுத்துசெல்வதில் அக்கறை அதிகம் இருக்கும். தொண்டர்கள், தலைவர்கள் என யாருக்கும் கொரோனா பரவல் ஏற்படாமல் இருக்கவேண்டும் என இரண்டு கட்சிகளும் உறுதியாக இருப்பது இருதரப்பிலும் பேசப்பட்டிருக்கும். அதில் சரிந்தால், அதுவே பிரசாரத்தில் எதிர் அணிக்கு வாய்ப்பாக மாறிவிடும்,''என்கிறார் ராமஜெயம்.

கூட்டணி குறித்து கேட்டபோது, ''பாஜகவை விமர்சிப்பது அல்லது மத்திய பாஜக அரசாங்கத்தின் முடிவுகளுக்கு எதிர்ப்பு தெரிவிப்பது என அதிமுக தன்னை பாஜகவில் இருந்து விலக்கி வைத்துள்ளது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தியிருந்தாலும், தேர்தல் காலத்தில், கூட்டணியாக பாஜகவை ஏற்றுக்கொள்ளவேண்டிய சூழல் உள்ளது. பாஜகவை அதிமுக நிராகரித்துவிடுமா என்பது கேள்விக்குறிதான். நாடாளுமன்ற தேர்தல், உள்ளாட்சி தேர்தலில் பாஜகவுக்கு அதிமுக வாய்பளித்துள்ளது. அதேநேரம், 2016 சட்டமன்ற தேர்தலில் பாஜக சந்தித்த இழப்பு, அவர்களுக்கு அதிமுகவின் ஆதரவை பெற்றுவிடவேண்டும் என்ற நிலையை ஏற்படுத்தியுள்ளது,'' என்றார்.

ஸ்டாலின்

பட மூலாதாரம், MK Stalin / Twitter

திமுக கூட்டணியில் பிரதான பங்கீட்டை காங்கிரஸ் பெறும் என்றும் பிற கூட்டணிக்கட்சிகள் ஒன்றிணைவது பற்றி தெளிவான பார்வை விரைவில் வெளியாகும் என்கிறார் ராமஜெயம்.

''திமுக கூட்டணி என்பதே பாஜகவுக்கு எதிரான கூட்டணியாக இருக்கும் என்பதால், கட்டாயம் காங்கிரஸ் இருக்கும். பொருளாதார சரிவு, கொரோனாவை அரசு கையாண்ட விதம், ஆட்சி நிர்வாகத்தில் ஏற்பட்ட குளறுபடிகள் பற்றி திமுக கூட்டணி பிரசாரம் செய்யும். அதேபோல திமுக ஊழல் செய்தது என்று சொல்லி பிரசாரம் செய்த பாணியை அதிமுக தொடரும் ,'' என்றும் அவர் கூறுகிறார்.

திமுக மற்றும் அதிமுக வெள்ளியன்று நடத்திய கூட்டங்களில் பெரிய மாற்றங்களை ஏற்படுத்தும் முடிவுகள் எதுவும் எடுக்கப்படவில்லை என்று கூறும் ஆழி செந்தில்நாதன், பிகார் தேர்தல் முடிவுகள் ஏற்படுத்திய மாற்றங்கள் குறித்த ஆலோசனையில் இரு கட்சிகளும் பேசுவதற்கான வாய்ப்பாகதான் அந்த கூட்டங்கள் அமைந்தன என்கிறார்.

''சுமார் இரண்டு மாதங்களுக்கு முன்னதாகவே, முதல்வர் வேட்பாளர், மூத்த தலைவர்கள் யார் என்பது குறித்த விவகாரங்கள் தெளிவாகிவிட்டன. திமுக தரப்பில் ஸ்டாலின், அதிமுக தரப்பில் எடப்பாடி பழனிசாமி ஆகியோர்தான் முதல்வர் வேட்பாளர் என்ற முக்கிய முடிவை எடுத்துவிட்டார்கள்.''

''இரண்டு கட்சிகளும் வாக்குச் சாவடி மட்டத்திலான தலைவர்கள் யார் என தேர்வு செய்துவிட்டார்கள் என்பதால் இந்த கூட்டத்தில் புதிய முடிவுகள் எடுக்கவில்லை என்று தோன்றுகிறது,'' என்றார்.

தேர்தல் கூட்டணி குறித்து கேட்டபோது, ''அமித் ஷா தமிழகம் வருவதால், அதிமுக தலைவர்களுடன் கூட்டணி குறித்த பேச்சுவார்த்தை நடைபெறும் என்ற கருத்து நிலவுகிறது. ஆனால் அதற்கான வாய்ப்புகள் தெளிவாகவில்லை. பாஜக அதிக இடங்களை எதிர்பார்த்தாலும், தமிழகத்தில் அந்த கட்சிக்கு உள்ள வாய்ப்பை பற்றி விவாதித்து அதிமுகவினர் முடிவு செய்யவிரும்புவார்கள். அதேபோல, பிகார் தேர்தல் முடிவை வைத்து பார்க்கும்போது, காங்கிரஸ் கட்சியின் பலம் மேலும் குன்றியுள்ளது என்பதால், திமுக கூட காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கீடு செய்யும் இடங்களை குறைக்க வாய்ப்புள்ளது,''என்கிறார் அழி செந்தில்நாதன்.

பெரும் தலைவர்களாக இருந்த கருணாநிதி மற்றும் ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகான சட்டமன்ற தேர்தல் என்பதால், இருகட்சிகளுக்கும் என்ன சவால் இருக்கும் என்று கேட்டபோது, ''நாடாளுமன்ற தேர்தலை இருகட்சிகளும் சந்தித்துவிட்டதால், கருணாநிதி, ஜெயலலிதா ஆகியோரின் மறைவு பற்றிய விவகாரம் பெரிய அளவில் தாக்கம் ஏற்படுத்தாது.''

''மேலும், ஸ்டாலின் தனக்கான இடத்தை நாடாளுமன்ற தேர்தலில் பெற்ற வெற்றியை கொண்டு நிரூபித்துவிட்டார். அதேபோல, அதிமுக என்ற கட்சி உடைந்துவிடும் என்று எதிர்பார்த்த நிலையில், பலமான நபராக உருவெடுத்துவிட்டார் எடப்பாடி பழனிசாமி. அதனால், நட்சத்திர நாயகர்களாக அங்கீகரம் கிடைப்பதற்காக ஸ்டாலின், பழனிசாமி காத்திருக்கவில்லை. அவர்களே நட்சத்திர நாயகர்களாக தங்களை மாற்றிக்கொண்டு விட்டார்கள்.இது ஓட்டு வங்கியில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது,'' என்றார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: