தமிழக அரசியல்: முருகனின் யாத்திரை பாஜக - அதிமுக கூட்டணி திமுகவை வீழ்த்த உதவுமா?

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், ப்ரியன்
- பதவி, பிபிசி தமிழுக்காக
(இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். பிபிசி தமிழின் கருத்துகள் அல்ல. - ஆசிரியர்)
"கொரோனா தொற்று பரவல் காரணமாக தமிழக பா.ஜ.க தலைவர் முருகன் நடத்தவிருந்த வேல் யாத்திரைக்கு அனுமதி கிடையாது" என்று உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு சொல்லிவிட்டது. இதை ஏற்றுக்கொண்டு "யாத்திரைக்கு தடைகேட்டு போடப்பட்ட வழக்குகளை" முடித்து வைத்துவிட்டது உயர்நீதிமன்றம்.
கொரோனா பரவல் ஒரு பக்கம் இருக்க, பா.ஜ.கவின் யாத்திரை, சட்டம் - ஒழுங்குக்கு சவால்விடும் வகையில் அமைந்துவிடும் என்ற பதற்றம் இருந்தது. யாத்திரைக்கு அனுமதி கிடைக்காதது பா.ஜ.கவுக்கு ஏமாற்றத்தைத் தரலாம்; எல். முருகன் அவர்களுக்கு எடப்பாடி மீது கோபம் கூட வரலாம். ஆனால் ஆத்திரத்தில் அ.இ.அ.தி.மு.கவை பற்றி எல். முருகன் கடுமையான விமர்சனம் வைப்பதற்கு வாய்ப்பில்லை.
சட்டம் - ஒழுங்கை காப்பாற்றுவது தவிர, நாடாளுமன்றத் தேர்தலில் இழந்துவிட்ட சிறுபான்மையோர் வாக்கு வங்கியை குறிவைக்கும் நோக்கமும் ஆளும் கட்சிக்கு இருக்கிறது. யாத்திரைக்கு அனுமதி கொடுத்தால் அதிகாரத்தில் இருப்போர் மீது சிறுபான்மையோருக்கு இன்னமும் அதிருப்தி கூடும். கூட்டணி கட்சியான பா.ஜ.கவுக்கு இது புரியாததல்ல. எனவே அரசுத் தரப்பில் எடுக்கப்பட்ட இந்த முடிவு, இரு கட்சிகளுக்கும் இடையேவுள்ள புரிதலின் அடிப்படையில் எடுக்கப்பட்ட முடிவாகவும் இருக்கலாம்.
ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவது உறுதியாக இல்லாத நிலையில், தி.மு.க. அணியை தோற்கடிக்க அ.தி.மு.க. வாக்குவங்கியை நம்பிக்கொண்டிருக்கும் பா.ஜ.க., அந்த வாக்கு வங்கி பலவீனமாவதை விரும்பாது. இனி எல். முருகன் என்ன செய்வார்? அவர் பங்குக்கு "தடையை மீறி யாத்திரை போவோம்" என்பார் கைதாகி ஒரு நாள் பரபரப்பு செய்தியோடு அமைதியாவார்.
யாத்திரைகள் மூலம் வாக்கு வங்கியை விஸ்தரிக்கும் யுக்திகள் பா.ஜ.கவுக்கு புதியதல்ல. அதன் தலைவர்களாக இருந்த அத்வானியும் முரளி மனோகர் ஜோஷியும் அகில இந்திய அளவில் பல யாத்திரைகளை நடத்தியவர்கள்தான்.
இன்று பா.ஜ.க. மத்தியில் தனிப் பெரும்பான்மையுடனும், பதினைந்துக்கும் மேற்பட்ட மாநிலங்களை கைவசம் வைத்திருப்பதற்கும் காரணம் அது போன்ற யாத்திரைகளால் உருவான இந்துத்வா வாக்கு வங்கிதான். எனவே தமிழகத்தலும் செல்வாக்கை உயர்த்திக்கொள்ள இது போன்ற யாத்திரை கைகொடுக்கும் என்று மாநிலத் தலைவர் எல். முருகன் கருதியதில் அரசியல் ரீதியாக தவறு ஏதும் கிடையாது.
அதற்கேற்பத்தான் அவர் களத்தை தயார் செய்து வந்தார். குறிப்பாக கறுப்பர் கூட்டம் - கந்த சஷ்டி விவகாரம், திமுகவை கடவுளுக்கும் இந்து மக்களுக்கும் எதிரான கட்சி என்ற பிரசாரத்தை முன்னெடுக்க வசதியாக இருந்தது. சமூக வலைத்தளங்களில் பலமாக இருப்பதாலும் மத்தியில் ஆட்சிப் பொறுப்பில் இருப்பதால் இயல்பாக கிடைக்கும் மீடியா வீச்சையும் நன்றாகவே பயன் படுத்திக்கொள்கிறது பா.ஜ.க. அதன் இந்துத்வா பிரசாரத்திற்கு இன்னமும் வலுசேர்க்கும் வகையில் வந்தமைந்தது "திருமாவளவன்-மனுதர்மம்" விவகாரம்.

பட மூலாதாரம், THIRUMAOFFICIAL
இந்த விவகாரத்திலும் திருமாவளவனைவிட தி.மு.க. மற்றும் ஸ்டாலினை நோக்கி வீசப்பட்ட கற்களே நிறைய. காரணம் ஒன்றே ஒன்றுதான். கடந்த இருபது வருடங்களாக சட்டமன்றத் தேர்தல்களில் தனது வாக்கு வங்கியை மூன்று சதத்திற்கு மேல் வளர்த்துக்கொள்ள முடியாத பா.ஜ.க., முப்பத்தி மூன்று சதம் வாக்கு வங்கி வைத்திருக்கும் தி.முக.வை தோற்கடிக்க முடியாது.
அதனால், தி.மு.கவை இந்துக்களுக்கு விரோதமான கட்சியென்றும் கடவுளுக்கு எதிரான கட்சியென்றும் கட்டமைக்க முயல்கிறது. எனவேதான் தேர்லில் இந்துத்வா வாக்கு வங்கியை விஸ்தரிக்கும் நோக்கில், கடந்த சில மாதங்களாக செய்துவந்த பிரசாரத்தின் உச்சகட்டமாக வேல் யாத்திரையை அரங்கேற்ற முயற்சி செய்தது. இந்த முயற்சிக்கு இப்போது தற்காலிகமாக பின்னடைவு வந்திருக்கிறது.
பா.ஜ.க. எகிறி அடிக்கும் இந்த பிரசார வீச்சிற்கு திமுகவின் எதிர்வினை பலமான அளவில் இல்லையென்பதை விட சரியான விகிதத்தில் இல்லையென்று சொல்லலாம். மதம், கடவுள் போன்ற உணர்வுப்பூர்வமான விஷயங்களில் எதிரடி கொடுக்கும்போது எக்குதப்பாக வேறேதும் சர்ச்சையில் சிக்கிக்கொள்ள நேரிடுமோ என்ற தயக்கம்கூட இதற்குக் காரணமாக இருக்கலாம்.
கருணாநிதி பல சந்தர்ப்பங்களில் சர்ச்சைக்குரிய வகையில் பேசினாலும், வாக்கு வங்கியை இழக்காத சாணக்யம் அவரிடம் இருந்தது. அப்போது, இந்துத்வா அமைப்புகள் அதிகார பின்புலம் மற்றும் மக்கள் செல்வாக்கு இல்லாமல் இருந்ததையும் குறிப்பிட வேண்டும். ஆனால் தற்போது நிலைமை மாறியிருக்கிறது. "ஸ்டாலின் வெளியே நடமாட முடியாது" என்கிறார் முருகன். இதற்கு தி.மு.கவிடமிருந்து மௌனமே பதிலாக இருக்கிறது. கருணாநிதி இருந்திருந்தால் எப்படிப்பட்ட பதிலடி கொடுக்கப்பட்டிருக்கும் என்பதை நம்மால் ஊகிக்க முடியும்.
வாக்கு வங்கியை மதமயமாக்க பாஜக செய்யும் யுக்திகளில் மாட்டிக்கொண்டு தங்கள் வாக்கு வங்கியை இழந்துவிடக்கூடாது என்ற எச்சரிக்கை உணர்வும், பா.ஜ.கவின் தமிழக தலைமையாக முன்னிறுத்தும் தலித் முகமும் திமுகவின் போர் குணத்தை மழுங்க வைத்துவிட்டதோ என்ற சந்தேகமும் எழுகிறது.

இந்த சூழலில், பிற கட்சிகளிலிருந்து பிரமுகர்கள், நடிகர் - நடிகைகள், அரசு அதிகாரிகள், ஏன் கிரிமினல்களையும்கூட கட்சியில் சேர்த்து பலமாக தாங்கள் உருவாகி வருவது போன்ற தோற்றத்தை கொடுக்கிறது தமிழக பா.ஜ.க. சரியாகச் சொல்வதென்றால் திராவிடக் கட்சிகளுக்கு சமமாக அரசியல் செய்யும் வகையில் தகவமைத்துக்கொள்ள முயற்சி செய்கிறது.
"கூட்டணி ஆடசியில் பங்கு, அறுபது இடங்களில் வெற்றி பெறும் வாய்ப்பு, நாங்கள் கை காட்டுபவரே முதல்வர்" என்றெல்லாம் பா.ஜ.கவிலிருந்து குரல்கள் எழுந்தது, அ.தி.மு.கவை ரொம்பவே சங்கடப்படுத்தியது. அ.தி.மு.க. விரும்பாவிட்டாலும் அக்கட்சியுடனேயே கூட்டணி அமைப்பதைத் தவிர வேறு வழியில்லாத சூழல் உருவாகும் நிலையில், பழனிசாமியை முதல்வர் வேட்பாளராக ஏற்றுக்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது.
ஆனால், அதற்காக தொகுதிகளைப் பெறும் விஷயத்தில் பா.ஜ.க. சமரசம் செய்துகொள்ளாமல் கண்டிப்பாக இருக்கும் என எதிர்பார்க்கலாம். சரியாக சொல்வதென்றால் 2011ல் தி.மு.க. -காங்கிரஸ் உறவு எப்படியிருந்ததோ அது போன்ற உறவுதான் அ.தி.மு.கவுக்கும் பா.ஜ.கவுக்கும் இடையில் தற்போது இருக்கிறது. அப்போது காங்கிரஸ், தி.மு.கவிடம் 63 தொகுதிகளைப் பெற்றது என்பது குறிப்பிடதக்கது.
"தி.மு.க. கூட்டணி, தமிழ்நாட்டில் ஆட்சியை பிடித்துவிடக்கூடாது" என்ற ஒற்றை நோக்கத்தில் காய்களை நகர்த்தி வருகிறது பா.ஜ.க. மத்தியில் ஆட்சியில் இருப்பதால், தேர்தலுக்கு பின்னும் சூழ்நிலைக்கேற்ப களத்தை தங்கள் வசமாக்க பா.ஜ.க. யுக்திகளை வகுக்கும்.
வாக்கு வங்கியை வளர்க்கும் முயற்சியில் பா.ஜ.க. எந்த அளவு வெற்றிபெறும் என்பதை தற்போதைய நிலையில் கணிப்பது கடினம். வடமாநிலங்களில் இஸ்லாமியர்களை காட்டி செல்வாக்கை உயர்த்தியதைப் போல தமிழகத்தில் செய்ய முடியாது. சாதியால் பிரிந்து கிடக்கும் மக்களை மதத்தால் ஒருங்கிணைப்பது சாத்தியமா என்பது கேள்விக்குறிதான்.
அ.தி.மு.கவுடன் கூட்டணியில் இருக்கும் நிலையில் மனுதர்ம விவகாரத்தில் திருமாவளவனை கடுமையாக விமர்சித்தால், அந்தக் கூட்டணி தலித் ஒட்டுக்களை இழக்கும் வாய்ப்பும் உண்டு. தேர்தல் நெருங்க நெருங்க பா.ஜ.கவின் இந்துத்வா பிரசார வீச்சின் உஷ்ணம் இன்னும் பல மடங்கு எகிறும் என்பது மட்டும் நிச்சயம்
பிற செய்திகள்:
- அமெரிக்க தேர்தல் குழப்பத்திலும் சில நன்மைகள்: பட்டியலிடும் அமெரிக்க தமிழர்கள்
- ஒட்டக பாலில் டீ கேட்டு கடை ஊழியர்களைத் தாக்கிய இளைஞர்கள் கைது
- கொரோனா வைரஸ்: உலகெங்கும் பாதிப்பு, பலி எண்ணிக்கை எவ்வளவு?
- "தமிழக சட்டமன்ற தேர்தலில் பாஜகவுடன் கூட்டணியா?" - கமல் ஹாசன் விளக்கம்
- அர்னாப் கோஸ்வாமிக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல் - நீதிமன்றத்தில் என்ன நடந்தது?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:












