"ஆளுநரை நியமிக்க நிபந்தனைகள்" - ஜோசப் குரியன் ஆணையம் சொல்வது என்ன?

மாநில ஆளுநர்களை சட்டமன்ற பரிந்துரையின் பேரில் நியமிக்க வேண்டுமா? ஜோசப் குரியன் ஆணையம் சொல்வது என்ன?

பட மூலாதாரம், rajbhavan_tn

  • வாசிக்கும் நேரம்: 6 நிமிடங்கள்

இந்தியாவில் மாநில ஆளுநர்களை நியமிக்கும்போது, மாநில சட்டமன்றங்களால் பரிந்துரைக்கப்படும் மூன்று பேரில் ஒருவரையே நியமிக்க வேண்டும் என்கிறது தமிழ்நாடு அரசால் மத்திய - மாநில அரசுகளுக்கு இடையிலான உறவு குறித்து ஆராய ஓய்வுபெற்ற நீதிபதி ஜோசப் குரியன் தலைமையில் அமைக்கப்பட்ட ஆணையம். மேலும், ஆளுநர்களுக்கு ஒரே ஒருமுறை மட்டுமே பதவிக்காலம் வழங்க வேண்டுமென்றும் அந்தக் குழு பரிந்துரைத்திருக்கிறது.

மத்திய - மாநில அரசுகளுக்கு இடையிலான உறவுகளைப் பற்றி ஆராய்ந்து, தேவையான பரிந்துரைகளை அளிக்க கடந்த 2025ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் உச்ச நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதிபதி ஜோசப் குரியன் தலைமையில் தமிழக அரசு ஒரு குழுவை அமைத்தது.

இந்தக் குழுவில் முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி அஷோக் வர்தன் ஷெட்டி, தமிழ்நாடு திட்டக் குழுவின் முன்னாள் துணைத் தலைவர் மு. நாகநாதன் ஆகியோர் உறுப்பினர்களாக இடம்பெற்றிருந்தனர். இந்த அறிக்கையின் முதல் பகுதி தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

இந்த ஆணையம், முதல்கட்டமாக அதிகாரங்களைப் பரவலாக்குதல் மற்றும் மாநில சுயாட்சி, அரசமைப்புச் சட்டத்தைத் திருத்துவது, ஆளுநர்கள், மொழிக் கொள்கை, தொகுதி சீரமைப்பு, தேர்தல்கள், ஜிஎஸ்டி சீர்திருத்தம் உள்ளிட்ட பத்து விவகாரங்களை எடுத்துக்கொண்டு அது தொடர்பான பரிந்துரைகளை முன்வைத்திருக்கிறது.

தி.மு.க. தலைமையிலான தற்போதைய தமிழ்நாடு அரசுக்கும் ஆளுநர் ஆர்.என். ரவிக்கும் இடையிலான உறவு மிகச் சிக்கலானதாக இருக்கும் நிலையில், ஆளுநர்கள் தொடர்பாக இந்த அறிக்கை முன்வைத்திருக்கும் பரிந்துரைகள் கூடுதல் கவனத்தைப் பெற்றுள்ளன. ஆளுநர்களின் நியமனம், அவர்களது அதிகார வரம்பு ஆகியவை உள்படப் பல்வேறு அம்சங்கள் தொடர்பான பரிந்துரைகள் இந்த அறிக்கையில் முன்வைக்கப்பட்டுள்ளன.

ஆளுநர்களை நியமிக்கும்போது, சம்பந்தப்பட்ட மாநில சட்டமன்றத்தின் பெரும்பான்மை உறுப்பினர்களால் ஒப்புதல் அளிக்கப்பட்ட மூன்று பேரில் ஒருவரையே நியமிக்கும் வகையில், அரசமைப்புச் சட்டத்தின் பிரிவு 155ஐத் திருத்த வேண்டும் என இந்த அறிக்கை பரிந்துரைக்கிறது.

மேலும், ஆளுநருக்கு ஒரேயொரு, நிலையான, புதுப்பிக்க இயலாத ஐந்து ஆண்டு பதவிக் காலத்தை மட்டுமே வழங்க வேண்டும் என்றும் அதற்குப் பிறகு அவர்கள் குடியரசு துணைத் தலைவர் அல்லது குடியரசுத் தலைவர் பதவிகளைத் தவிர வேறு அரசமைப்பு சட்டப் பதவிகளுக்கு தகுதி அற்றவர்களாக்கப்பட வேண்டும் என்றும் இந்த அறிக்கை கூறுகிறது.

ஒரு ஆளுநரின் பதவிக் காலம் முடிந்துவிட்டால், அடுத்த ஆளுநர் நியமிக்கப்படும் வரை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியே அந்தப் பதவியை வகிக்க வேண்டும் என்றும் சட்டமன்றத்தால் நிறைவேற்றப்படும் ஒரு தீர்மானத்தால் ஆளுநரை நீக்க வழிவகை செய்ய வேண்டும் என்றும் அப்படி நிறைவேற்றப்படும் தீர்மானத்தின் மீது குடியரசுத் தலைவர் 14 நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் இந்த அறிக்கை பரிந்துரைக்கிறது.

ஆளுநராக நியமிக்கப்படுபவர் முந்தைய ஐந்து ஆண்டுகளில் எந்தவொரு அரசியல் கட்சியிலும் பதவி வகித்திருக்கவோ அல்லது ஆட்சி நிர்வாகம், சட்டமன்றம் அல்லது நீதித்துறை ஆகியவற்றின் கீழ் எந்தப் பதவியையும் வகித்திருக்கவோ கூடாது என்கிறது மற்றொரு பரிந்துரை.

விருப்புரிமைகளை கட்டுப்படுத்த பரிந்துரை

மாநில ஆளுநர்களை சட்டமன்ற பரிந்துரையின் பேரில் நியமிக்க வேண்டுமா? ஜோசப் குரியன் ஆணையம் சொல்வது என்ன?

பட மூலாதாரம், TNDIPR

மேலும், ஆளுநர்களின் விருப்புரிமைகளைக் கட்டுப்படுத்தும் வகையில் வரம்புகளை ஏற்படுத்தி ஆளுநர்களுக்கான அறிவுறுத்தல்கள் ஆவணம் என்ற புதிய பதிமூன்றாவது அட்டவணையை அரசமைப்புச் சட்டத்தில் சேர்க்க வேண்டும் என்றும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

அதோடு, "ஆளுநர் அரசமைப்புச் சட்ட கண்ணியத்தைப் பேண வேண்டும். மாநில அரசாங்கத்தையோ அல்லது சட்டமன்றத்தையோ பொதுவெளியில் விமர்சனம் செய்வதைத் தவிர்க்க வேண்டும்" போன்ற விதிகளை ஆளுநர்களுக்கான வழிகாட்டுதல் ஆவணத்தில் இணைக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

'தமிழ்நாடு vs தமிழ்நாடு ஆளுநர்' வழக்கில் உச்ச நீதிமன்றம் வகுத்த வழிமுறைகளின் அடிப்படையில், மாநில மசோதாக்களின் மீது ஆளுநரும் குடியரசுத் தலைவரும் எடுக்க வேண்டிய நடவடிக்கைகளுக்கு கட்டாய காலக்கெடுவினை விதிக்கவும் காலக்கெடு முடிந்தவுடன், ஒப்புதல் அளித்ததாகக் கருதப்படும் வகையில் அரசமைப்புச் சட்டங்களைத் திருத்த வேண்டும் என்றும் மாநில பட்டியல் சார்ந்த மசோதாக்களை குடியரசுத் தலைவரின் பரிசீலனைக்கு ஒதுக்கி வைக்கக்கூடாது என்றும் இந்தப் பரிந்துரைகள் கூறுகின்றன.

இது தவிர, தொகுதி மறுசீரமைப்பு குறித்து சில சுவாரஸ்யமான பரிந்துரைகள் இந்த அறிக்கையில் இடம்பெற்றுள்ளன. அதாவது, மாநிலங்களவையில் ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒவ்வொரு எண்ணிக்கையில் மாநிலங்களவை உறுப்பினர்கள் இருக்கிறார்கள். அதை மாற்றி எல்லா மாநிலங்களுக்கும் ஒரே மாதிரி 6 உறுப்பினர்களே இருக்கும் வகையில் அரசமைப்புச் சட்டத்தைத் திருத்த வேண்டுமென்றும் மாநிலங்களவையில் நியமன உறுப்பினர் முறையை ஒழிக்க வேண்டுமென்றும் இந்த அறிக்கை கூறுகிறது.

தேர்தலை நடத்துவது யார்?

அதேபோல, தேர்தல்கள் தொடர்பாகவும் சில பரிந்துரைகளை இந்த அறிக்கை முன்வைக்கிறது. அதன்படி, மக்களவை, மாநிலங்களவை, குடியரசுத் தலைவர் தேர்தல், குடியரசு துணைத் தலைவர் தேர்தல், நாடாளுமன்றத் தேர்தல் ஆகியவற்றை மட்டுமே இந்திய தேர்தல் ஆணையம் நடத்த வேண்டும். மாநில தேர்தல்களை மாநில தேர்தல் ஆணையங்களே நடத்த வேண்டும் என்கிறது இந்த ஆணையம்.

தற்போது தேர்வு செய்யப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் கட்சி மாறும்போது, தற்போதைக்கு தங்கள் பதவியை மட்டும் இழக்கிறார்கள். மாறாக, அவர்கள் அடுத்த ஆறு ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிடத் தடை விதிக்க வேண்டுமெனவும் இந்த அறிக்கை பரிந்துரைக்கிறது.

கல்வியைப் பொறுத்தவரை, "தொழில்நுட்பக் கல்வி, மருத்துவக் கல்வி, பல்கலைக் கழகங்களை பொதுப் பட்டியலில் இருந்து மாற்ற வேண்டும். பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக் கழகங்களை மேற்பார்வை செய்வதை, மாநிலங்களிடம் ஒப்படைக்க வேண்டும். தேசியத் தேர்வு முகமை கலைக்கப்பட வேண்டும். மாநில பல்கலைக் கழகங்களின் வேந்தர் பொறுப்புகளில் இருந்து ஆளுநர்கள் விடுவிக்கப்பட வேண்டும்" என்றும் ஆணையம் பரிந்துரைத்துள்ளது.

மாநில ஆளுநர்களை சட்டமன்ற பரிந்துரையின் பேரில் நியமிக்க வேண்டுமா? ஜோசப் குரியன் ஆணையம் சொல்வது என்ன?

ஆங்கிலம் பேசுவோர் எண்ணிக்கையையும் சேர்க்க பரிந்துரை

மொழிகள் தொடர்பாக விரிவான பரிந்துரைகளை இந்த ஆணையம் அளித்துள்ளது. அதாவது, "போஜ்புரி, ராஜஸ்தானி, சத்தீஸ்கரி, மகதி போன்ற தனிமொழிகளை இந்தியின் வட்டாரக் கிளை மொழிகள் என வகைப்படுத்துவதை முடிவுக்குக் கொண்டு வந்து, மக்கள்தொகைக் கணக்கெடுப்பில் உள்ள தவறுகளை மத்திய அரசு சரிசெய்ய வேண்டும்."

மேலும், "இந்தி பேசுபவர்களின் உண்மையான சதவிகிதத்தை வெளியிட வேண்டும். பத்து லட்சத்திற்கும் மேற்பட்டோர் பேசும் அனைத்து மொழிகளையும் எட்டாவது அட்டவணையில் சேர்க்க வேண்டும். ஆங்கிலம் பேசுபவர்களின் தரவுகளைச் சரியாகச் சேகரித்து, அதையும் எட்டாவது அட்டவணையில் சேர்க்க வேண்டும். 'ஒரே மொழி, ஒரே நாடு' என்ற போக்கை இந்தியா கைவிட வேண்டும். மும்மொழிக் கொள்கையை நீக்கிவிட்டு, எந்த மொழியையும் விருப்பத் தேர்வாக கற்க ஊக்குவிக்க வேண்டும். இந்தியாவின் நிரந்தர ஆட்சி மொழியாக ஆங்கிலத்தை நிறுவும் வகையில் அரசமைப்புச் சட்டத்தைத் திருத்த வேண்டும்" என்கிறது ஆணையம்.

இந்தியாவில் மத்திய - மாநில அரசுகளுக்கு இடையிலான உறவுகளில் செய்யப்பட வேண்டிய மாற்றங்கள் குறித்து ஆராய்வதற்கு குழுக்கள் அமைத்து பரிந்துரைகள் பெறப்படுவது இது முதல் முறையல்ல. இதற்கு முன்பாகவும் பல முறை குழுக்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன.

கடந்த 1969ஆம் ஆண்டில் மு. கருணாநிதி முதலமைச்சராக இருந்தபோது மத்திய - மாநில உறவுகள் குறித்து ஆராய்வதற்காக சென்னை உயர் நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி பி.வி. ராஜமன்னார் தலைமையில் ஓர் ஆணையம் அமைக்கப்பட்டது.

இந்தக் குழுவில் சென்னை பல்கலைக் கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் ஏ. லக்ஷ்மணசாமி முதலியார், சென்னை உயர் நீதிமன்றத்தின் மற்றொரு முன்னாள் தலைமை நீதிபதி பி. சந்திர ரெட்டி ஆகியோர் இடம்பெற்றிருந்தனர். 1971இல் இந்தக் குழு தனது அறிக்கையைத் தாக்கல் செய்தது. இந்தக் குழுவின் பரிந்துரைகளை நிறைவேற்ற வேண்டுமெனக் கூறி 1974இல் தமிழ்நாடு சட்டமன்றத்தில் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதற்குப் பிறகு மத்திய - மாநில அரசுகள் இடையிலான உறவுகளை ஆராய மத்திய அரசே ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி ரஞ்சித் சிங் சர்க்காரியா தலைமையில் ஓர் ஆணையத்தை அமைத்தது. பி. சிவராமன், டாக்டர் ஆர்.எஸ். சென் ஆகியோர் இந்த ஆணையத்தின் உறுப்பினர்களாக இருந்தனர். இந்த ஆணையம் தனது பரிந்துரைகளை 1988இல் வழங்கியது. ஆனால், இந்தப் பரிந்துரைகள் செயல்படுத்தப்படவில்லை.

மாநில ஆளுநர்களை சட்டமன்ற பரிந்துரையின் பேரில் நியமிக்க வேண்டுமா? ஜோசப் குரியன் ஆணையம் சொல்வது என்ன?

பட மூலாதாரம், Nora Schuster/Getty Images

பரிந்துரைகள் தாக்கம் ஏற்படுத்துமா?

இதற்குப் பிறகு, 2007ஆம் ஆண்டு ஏப்ரலில் மத்திய - மாநில உறவுகளை ஆராய, அப்போதிருந்த மத்திய அரசு முன்னாள் இந்திய தலைமை நீதிபதி மதன் மோகன் பூஞ்சி தலைமையில் ஓர் ஆணையத்தை அமைத்தது. இந்த ஆணையத்தில் மத்திய புலனாய்வுத் துறையின் முன்னாள் இயக்குநர் விஜய் ஷங்கர் உள்ளிட்ட மேலும் நான்கு பேர் உறுப்பினர்களாக இருந்தனர். இந்த ஆணையம் 273 பரிந்துரைகளுடன் தனது அறிக்கையை 2010இல் தாக்கல் செய்தது.

இந்தப் பின்னணியில் இப்போது ஜோசப் குரியன் ஆணையத்தால் அளிக்கப்பட்டிருக்கும் பரிந்துரைகள் என்ன தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற கேள்வி எழுகிறது. அதற்கு, "நிச்சயம் தாக்கம் இருக்கும்" என்கிறார் இந்த ஆணையத்தின் உறுப்பினரான மு. நாகநாதன்.

இதுகுறித்து விரிவாகப் பேசிய அவர், "ராஜமன்னார் குழுவை அமைக்கும்போது தி.மு.க. மட்டும்தான் இந்த விஷயத்தை முன்னெடுத்தது. ஏனென்றால், அந்தக் காலகட்டத்தில் இந்தியா முழுவதும் காங்கிரஸ் ஆட்சியின் கீழ் இருந்தது. அப்போது பிரதமர் இந்திரா காந்தி மிகப்பெரும் சக்தி வாய்ந்தவராக இருந்தார். ராஜமன்னார் ஆணைய அறிக்கையின் சுருக்கமான வடிவம் சட்டமன்றத்தில் 1974இல் தீர்மானமாக நிறைவேற்றப்பட்டது. ஆனால், அடுத்த சில மாதங்களிலேயே நெருக்கடி நிலை அமலுக்கு வந்தது. இது தொடர்பாக மத்திய அரசுக்குப் பரிந்துரைகள் அனுப்பப்பட்டும், மத்திய அரசு அதைக் கண்டுகொள்ளவில்லை.

இந்த நிலையில், 1983இல் தென்னக முதல்வர்களின் மாநாடு ஒன்றை கர்நாடக மாநில முதல்வர் ராமகிருஷ்ண ஹெக்டே கூட்டினார். அந்த மாநாட்டில்தான் தென்மாநிலங்கள் நிதிக் குழுவில் புறக்கணிக்கப்படுகின்றன என்றும் அடுத்து வரும் நிதிக் குழுவிலாவது தங்களுக்கு நியாயம் வேண்டும் என்றும் பேசப்பட்டது. மத்திய - மாநில அரசுகளுக்கு இடையிலான உறவுகளில் மாற்றம் வேண்டும் என்றும் தீர்மானம் போடப்பட்டது.

இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட சில நாட்களிலேயே மத்திய அரசு சர்க்காரியா ஆணையத்தை நியமித்தது. தென்னக முதல்வர்களின் மாநாடு உருவாக்கிய அழுத்தம்தான் இதற்குக் காரணம். சா்க்காரியா ஆணையத்திடம் தி.மு.க. சார்பில் நானும் முரசொலி மாறனும் பரிந்துரைகளை அளித்தோம். அப்போதைய தமிழக அரசின் சார்பிலும் பரிந்துரைகள் அளிக்கப்பட்டன. ஆனால், சர்க்காரியா ஆணையம் அதிகாரப் பகிர்வு தொடர்பாகப் போதுமான பரிந்துரைகளை அளிக்கவில்லை. ஆளுநர் நடுநிலையானவராக இருக்க வேண்டும் என்பதுபோல சில விஷயங்களைச் சொன்னார்கள். அவ்வளவுதான்" என்று தெரிவித்தார்.

மாநில ஆளுநர்களை சட்டமன்ற பரிந்துரையின் பேரில் நியமிக்க வேண்டுமா? ஜோசப் குரியன் ஆணையம் சொல்வது என்ன?

பட மூலாதாரம், Getty Images

இதற்குப் பிறகு, "2007ஆம் ஆண்டில் மத்திய அரசு பூஞ்சி ஆணையத்தை அமைத்தது. இந்த ஆணையம் மத்திய - மாநில அரசுகளுக்கு இடையிலான உறவு தொடர்பாக 38 கேள்விகளைப் பலருக்கும் அனுப்பியது. இதற்கு பதிலளிக்க தமிழ்நாடு அரசு எனது தலைமையில் ஒரு குழுவை அமைத்தது. நாங்கள் எங்கள் பரிந்துரைகளை அளித்தோம். ராஜமன்னார் ஆணையம் தொடர்பாக அப்போதைய பிரதமர் இந்திரா காந்திக்கு அனுப்பப்பட்ட பரிந்துரைகளையும் அதில் இணைத்தோம்.

பூஞ்சி ஆணையமும் பெரிய அளவில் பரிந்துரைகளை அளித்தது என்றாலும் அதிகாரப் பகிர்வு தொடர்பாக பட்டும்படாமல் பேசியது. ஆளுநர் விவகாரத்தைப் பொறுத்தவரை, ஆளுநர் நடுநிலையாக இருக்க வேண்டும்; குடியரசுத் தலைவரைப் போலவே, ஆளுநர் மாநில அமைச்சரவைக்குக் கட்டுப்பட்டுச் செயல்பட வேண்டுமெனக் கூறியது, அவ்வளவுதான்.

பூஞ்சி ஆணையத்திற்குப் பிறகு, பல விஷயங்கள் வந்துவிட்டன. அப்போது இருந்ததைவிட இப்போது நிலைமை மேலும் மோசமாகியுள்ளது. நீட் தேர்வு, ஒரே நாடு ஒரே தேர்தல், தொகுதி மறுசீரமைப்பு போன்ற பல விஷயங்கள் வந்துவிட்டன. மாநிலங்களுக்கு எஞ்சியிருக்கும் பல உரிமைகளைப் பறிக்கும் அளவுக்கு நிலைமை வந்துவிட்டது. இப்போது மத்திய அரசிடம் அளவுக்கு மீறிய அதிகாரம் குவிந்துள்ளது.

கூட்டணி ஆட்சியே இருந்தாலும் கூட்டணிக் கட்சிகளிடம் பெரிய எதிர்ப்பு இல்லை. ஆகவேதான், ஆளுநர், கல்வி, சுகாதாரம், மாநில எல்லை சீரமைப்பு, தேர்தல்கள் என மத்திய - மாநில அரசுகளுக்கு இடையிலான உறவுகள் தொடர்பான பத்து விஷயங்களை ஆராய்ந்தோம். இந்த பத்து விஷயங்களிலும் எந்த அளவுக்கு அரசமைப்பு சட்டத்தைத் திருத்த வேண்டும், அதை எப்படிச் செய்ய வேண்டும் என பிரிந்துரைகளை வழங்கியிருக்கிறோம்" என்கிறார் மு. நாகநாதன்.

ஆனால், மத்திய அரசு இந்த ஆணையத்தின் பரிந்துரைகளை எந்த அளவுக்குப் பரிசீலிக்கும் என்பது முக்கியமான கேள்வி.

அது தொடர்பாகப் பேசியபோது, "இந்த அறிக்கையை எல்லா மாநில முதல்வர்கள், உச்ச நீதிமன்ற, உயர் நீதிமன்ற நீதிபதிகள், மத்திய அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அனுப்பவுள்ளோம். சர்க்காரியா ஆணையமும் பூஞ்சி ஆணையமும் இதைச் செய்யவில்லை. ஆகவே, இது நாடு தழுவிய அளவில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை உருவாக்கும் என நம்புகிறோம்" என்றார் மு. நாகநாதன்.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனல்
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

மத்திய அரசு பரிசீலிக்குமா?

ஆனால், இந்தியாவில் அரசமைப்புச் சட்டங்களில் செய்யப்பட்ட சீர்திருத்தங்கள் எல்லாமே நாடாளுமன்றத்தில் உள்ள பலத்தால், விவாதமாக்கப்பட்டு செய்யப்பட்ட திருத்தங்களால்தான் நடந்திருக்கின்றன என்ற நிலையில், இதுபோன்ற அறிக்கைகளை மத்திய அரசு தீவிரமாகப் பரிசீலிப்பதற்கான வாய்ப்பு சந்தேகத்திற்கு உரியது என்கிறார் மூத்த பத்திரிகையாளரான கே. வெங்கடரமணன்.

"அரசமைப்புச் சட்டத்தில் நிகழ்ந்த சீர்திருத்தங்கள் எல்லாம் நாடாளுமன்ற விவாதங்களின் மூலம் செய்யப்பட்ட திருத்தங்களால்தான் நடந்திருக்கின்றன. 356வது பிரிவைப் பயன்படுத்துவது போன்ற விவகாரங்களில் நீதிமன்றங்கள் தலையிட்டுத் திருத்தியிருக்கின்றன. மற்றபடி இதுபோன்ற அறிக்கைகளை மத்திய அரசு பெரிதாக எடுத்துக்கொள்ளாது.

ஆனால், பொதுவெளியில் விவாதம் ஏற்படலாம். அந்த விவாதத்தையே மிகப்பெரிய பலனாக எடுத்துக்கொள்ளலாம். சர்க்காரியா கமிஷன் அமைக்கப்பட்டபோது, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பல முதலமைச்சர்கள் ஆளுநர்கள் குறித்து, மாநில அதிகாரங்கள் குறித்து சர்க்காரியா கமிஷன் முன்பு பேசியிருக்கிறார்கள். அதிகாரப் பகிர்வை வலியுறுத்தினார்கள்.

ஆனால் இப்போது நிலைமை மாறியிருக்கிறது. மேலும், மத்திய அரசு அமைக்கும் ஆணையங்களின் பரிந்துரைகள் பெரிதாக கவனிக்கப்படாத நிலையில், மாநில அரசுகள் அமைக்கும் ஆணையங்களின் பரிந்துரைகளை மத்திய அரசு எந்த அளவுக்கு பரிசீலிக்கும் என்பதைப் பார்க்க வேண்டும்" என்கிறார் கே. வெங்கடரமணன்.

அடுத்தகட்டமாக இந்த ஆணையம், நிர்வாக உறவுகள், நிதி உறவுகள் பற்றி தங்களுடைய பரிந்துரைகளை அளிக்கும் என்கிறார் மு. நாகநாதன்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு