வேல் யாத்திரை: பாதை மாற்றும் அரசியல் யாத்திரையா?

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், மாலன்
- பதவி, ஊடகவியலாளர்
(இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். பிபிசி தமிழின் கருத்துகள் அல்ல. - ஆசிரியர்)
வருடந்தோறும் பக்தியின் காரணமாக தமிழகத்தில் பழனி, திருச்செந்தூர், சபரிமலை, சதுரகிரி, மேல்மருவத்தூர் என பல தலங்களுக்கு யாத்திரைகள் மேற்கொள்ளப்படுவது வழக்கமான நிகழ்வுதான். ஆனால் அண்மைக்காலமாக தமிழகம் அரசியல் யாத்திரைகளுக்குத் தயாராகி வருகிறது. காரணம், அடுத்த ஆண்டு வரவிருக்கும் தமிழக சட்டமன்றத் தேர்தல்.
அரியலூரில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி, காங்கிரஸ் சார்பில் நாட்டின் வளர்ச்சி, விவசாயிகள் மேம்பாடு இவற்றை முன்னிறுத்தி, 'ஏர் கலப்பை யாத்திரை' விரைவில் நடத்தப்படும் என தெரிவித்துள்ளார்.
மற்றொரு தேசிய கட்சியான பா.ஜ.க நவம்பர் 6ஆம் தேதி முதல் டிசம்பர் 6ஆம் தேதிவரை, ஒரு மாத காலத்திற்கு வேல் யாத்திரையை மேற்கொள்ளவிருக்கிறது. வட தமிழகத்தில் உள்ள திருத்தணியில் தொடங்கி தென்தமிழ்நாட்டில் உள்ள திருச்செந்தூரில் முடிவடையவுள்ள இந்த யாத்திரை, முருகனின் அறுபடை வீடுகள் வழியாகச் செல்லும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இதனை கர்நாடகா முதலமைச்சர் எடியூரப்பா தொடங்கி வைக்கவிருக்கிறார். யாத்திரையின்போது பா.ஜ.கவின் தேசிய தலைவர்கள் கலந்து கொள்வார்கள் எனவும் யாத்திரை திருச்செந்தூரில் நிறைவடையும்போது பா.ஜ.கவின் தலைவர் ஜே.பி. நட்டா பங்கேற்கக்கூடும் என்றும் சொல்லப்படுகிறது.
பா.ஜ.கவிற்கு அரசியல் யாத்திரைகள் புதிது அல்ல. தமிழகத்திற்கும்தான்.
காந்தி உப்பெடுக்க தண்டியை நோக்கி யாத்திரை சென்றதைப்போல, ராஜாஜி 1930ஆம் ஆண்டு திருச்சியிலிருந்து 100 தொண்டர்களுடன் புறப்பட்டு வேதாரண்யம் நோக்கிச் சென்றார். இதில் பின்னாளில் இந்திய குடியரசின் தலைவராக ஆன ஆர். வெங்கட்ராமன், மத்திய அமைச்சராகப் பொறுப்பு வகித்த கே.சந்தானம், ஓ.வி. அளகேசன், கோவை தொழிலதிபர் ஜி.கே.சுந்தரம், கல்கி சதாசிவம், பத்திரிகையாளர் ஏ.என். சிவராமன் போன்றோர் பங்கேற்றனர்.

பட மூலாதாரம், Getty Images
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை பரிசோதனை அதிகாரியாக இருந்த சுப்பிரமணிய பிள்ளை, 1980ஆம் ஆண்டு நவம்பர் 26ஆம் தேதி அவர் தங்கியிருந்த அறையில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாக அரசு கூறியது. ஆனால் நீதிபதி பால் தலைமையில் அமைந்த விசாரணை கமிஷன், அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் எனக் கருதியது. கொலையாளிகள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி 1982 பிப்ரவரி 15ஆம் தேதி மதுரையில் இருந்து திருச்செந்தூர் நோக்கி கருணாநிதி யாத்திரை மேற்கொண்டார்.
தமிழக அரசியல்வாதிகளில் அதிக நடைப்பயணங்களை மேற்கொண்டவர் வைகோ. மதுவிலக்கு, சுற்றுச் சூழல் பாதுகாப்பு, காவிரிப் பிரச்னை என பல பிரச்னைகளுக்காக நீண்ட தூர நடைப்பயணங்கள் மேற்கொண்டார்.

பட மூலாதாரம், Getty Images
காவிரி மீட்பு, தீண்டாமை ஒழிப்பு என்ற கோரிக்கைகளுக்காக திருமாவளவனும் நடைப்பயணங்கள் மேற்கொண்டதுண்டு. இப்போது பா.ஜ.கவின் தமிழக தலைவர் எல்.முருகன் மேற்கொள்ளவிருக்கும் வேல் யாத்திரை, பாத யாத்திரையா, ரத யாத்திரையா எனத் தெரியவில்லை. ஆனால் அதன் நோக்கம் பக்தி மட்டுமல்ல.
தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஆறு மாதங்கள் இருக்கின்றன. எனினும் அனேகமாக எல்லா அரசியல் கட்சிகளும் இப்போதே பரப்புரைகளைத் தொடங்கி விட்டன. பாஜகவும் தனது பரப்புரை உத்திகளில் ஒன்றாக, இந்த யாத்திரையை மேற்கொள்கிறது.
இந்த யாத்திரையை அனுமதிக்கக் கூடாது என திமுக, காங்கிரஸ், வி.சி.க போன்ற எதிர்க்கட்சிகள் கோரியுள்ளன. ஆனால் இதிலுள்ள நகை முரண் என்னவென்றால், இதற்கான உந்துதல் அந்தக் கட்சிகளிடமிருந்து அல்லது அதன் ஆதரவாளர்களிடமிருந்து ஏற்பட்டது என்பதுதான்.
தமிழ்நாட்டின் எல்லா பகுதிகளிலும் எல்லா சாதியினராலும் வழிபடக் கூடிய கடவுள் முருகன். தமிழ்நாட்டில் மட்டுமின்றி தமிழர்கள் வசிக்கும் இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், ஐக்கிய ராஜ்ஜியம், அமெரிக்கா போன்ற பல அயல்நாடுகளிலும் வழிபடக்கூடிய கடவுளாகவும் முருகன் இருக்கிறார்.
இந்த வழிபாடு நெடிய பாரம்பரியம் கொண்டது. ஈராயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட சங்க இலக்கியங்களிலே முருகன் வழிபாடு பற்றிய பாடல்கள் இருக்கின்றன. ஐங்குறுநூறு என்பது சங்க இலக்கியங்களில் ஒன்று. ஐந்து வகை நிலங்களுக்கும் (திணைகள்) நூறு நூறு பாடல்கள் வீதம் ஐநூறு சிறு பாடல்கள் (அதிக பட்சமாக ஆறு வரிகள்) கொண்ட நூல். அதில் பத்துப் பாடல்கள் முருகன் வழிபாடு பற்றியது. அகநானுறு, நற்றிணை, குறுந்தொகை, திருமுருகாற்றுப்படை போன்ற நூல்களிலும் முருகன் பேசப்படுகிறார்.
தமிழ்க் கடவுள் என்றே கருதவும் வணங்கவும்படுகிற முருகன் மீதான தோத்திரங்களில் முக்கியமானதாக விளங்குவது கந்த சஷ்டிக் கவசம். அதன் மீதான அவதூறு நிரம்பிய விமர்சனங்கள், ஒரு யூ டியுப் சானலில் வெளியானது தேன் கூட்டில் கல்லெறிந்த கதையாயிற்று.
அந்தச் சானலின் நிர்வாகி ஒருவர் திமுகவின் தகவல் தொழில்நுட்பப் பிரிவோடு தொடர்புடையவர் என்று கருத்துக்கள் பரவியபோது தி.மு.க சங்கடத்திற்குள்ளாகியது. அந்த சானலுக்கும் திமுகவிற்கும் சம்பந்தம் ஏதுமில்லை என்று ஸ்டாலின் மறுத்தபோதும் அது பெருமளவில் கண்டு கொள்ளப்படவில்லை. இந்த விவகாரம் இந்துக்களிடையே ஏற்படுத்திய எழுச்சியும் தி.மு.கவின் சங்கடமும் பா.ஜ.கவின் பிரச்சாரத்திற்கு புதிய வாய்ப்புக்களை ஏற்படுத்தித்தந்தன.

பட மூலாதாரம், Getty Images
அண்மையில் தி.மு.கவின் கூட்டணிக் கட்சிகளில் ஒன்றான விடுதலைச் சிறுத்தைகளின் தலைவர் திருமாவளவனின், மநு ஸ்மிரிதி பற்றிய கருத்துக்களும் இந்து மதத்தினரிடையே சலசலப்புக்களை ஏற்படுத்தின. பண்டைச் சமூகங்கள் எல்லாவற்றிலும் பெண்கள் ஆண்களுக்குக் கட்டுப்பட்டவர்களாகவும், இரண்டாம் நிலையில் இருப்பவர்களாகவும் நடத்தபட்டவர்களாகவும் வேறுபல மதங்களின் நூல்களிலும் குறிக்கப்பட்டிருக்கிறார்கள்.
மதங்கள் சாராத தொல்காப்பியம் போன்ற பனுவல்களிலும் அதைப் பார்க்கலாம். அப்படியிருக்க அவர் இந்து மதத்தை மாத்திரம் தனிமைப்படுத்தி விமர்சித்தது சர்ச்சைக்குள்ளாகியது. இத்தனைக்கும் கிறிஸ்துவம், இஸ்லாம், சீக்கியம்போல இந்துமதம் ஒரு பிரதிசார்ந்த மதமல்ல. ஒரு இந்து இப்படித்தான் நடந்துகொள்ள வேண்டும், என ஆணைகள் மூலம் இந்து மதம் கட்டுப்படுத்துவதில்லை. இவையெல்லாம் திருமாவளவனுக்கும் தெரியும். அப்படியிருந்தும் அவர் பேசியது விவகாரமாயிற்று.
இவையெல்லாம் இந்து எதிர்ப்பு - ஆதரவு என்ற நிலைக்கு தமிழக அரசியலைத் தள்ளின. நல்ல நிர்வாகம் - நிர்வாகமின்மை, மாநில உரிமைகளைப் பாதுகாத்தல் - உரிமைகளை விட்டுக்கொடுத்தல், வாரிசு அரசியல் - தொண்டன் தலைவராக வளர்தல் ஆகிய பிரச்சனைகள், தேர்தல் பிரச்சனைகளாக இருந்திருக்க வேண்டியதை தி.மு.க ஆதரவாளர்கள் எடுத்த நிலைப்பாடுகள் திசை திருப்பிவிட்டன.
தி.மு.கவில் 90 சதவீதம் பேர் இந்துக்கள்தான் என்று ஸ்டாலின் சொல்வதும், இதுவரை இல்லாத வழக்கமாக தெய்வீகம் பேசி தேவர் குரு பூஜையில் நேரில்சென்று கலந்துகொள்வதும், "நான் இந்துதான், அதனால்தான் இந்து மதத்தை விமர்சிக்கிறேன்" என்று திருமாவளவன் சொல்ல நேர்ந்திருப்பதும் இதன் அடையாளங்கள். தேர்தல் நேரத்திலோ, அதற்கு முன்னரோ, அநேகமாக ஒவ்வொரு கட்சியும் இந்த இந்துமத ஆதரவு -எதிர்ப்பு விஷயத்தில் தங்கள் நிலைப்பாட்டை அறிவிக்க வேண்டிய சூழல் எழுந்திருக்கிறது.

பட மூலாதாரம், Facebook/மாலன்
அந்த சூழ்நிலையில் இந்து மதத்தில் நம்பிக்கையுள்ளவர்களின் சார்பாகப் பேச, அரசியலில் ஓரிடம் இயல்பாகவே ஏற்பட்டுவிட்டது. அந்த இடத்தைக் கைப்பற்றித் தக்கவைத்துக் கொள்ள பா.ஜ.க. எடுக்கும் பல முயற்சிகளில் ஒன்றுதான் இந்த வேல் யாத்திரை. இந்த யாத்திரை வேறு சில விஷயங்களுக்கும் பா.ஜ.கவிற்குக் கை கொடுக்கும். அது வடவர் கட்சி என்கிற வாதம் கூர் மங்கும். முருகன் தமிழ்க் கடவுள் என்பதால்.
பா.ஜ.க கடந்த சில ஆண்டுகளாகவே கிராமப்புறங்களின் அடித்தளத்தில் தன்னைக் கட்டமைத்துக்கொள்ள முயற்சிகளை மேற்கொண்டு ஓரளவு வெற்றியும் கண்டிருக்கிறது. அதை இந்த யாத்திரை வலுப்படுத்தும்.
தமிழக பா.ஜ.க பெரிய அளவில் இதுவரை வெகுஜன தொடர்பு (Mass outreach) நிகழ்வுகளை மேற்கொண்டதில்லை. அந்த வகையிலும் இது உதவும். அதற்கு இது முருகனை மட்டுமின்றி, ராமச்சந்திரனையும் (எம்.ஜி.ஆரை) பயன்படுத்திக் கொள்ளவிருக்கிறது.
ஒருவேளை எதிர்க்கட்சிகளின் குரலுக்கு செவிசாய்த்து அ.தி.மு.க அரசு யாத்திரையைத் தடைசெய்யுமானால் அது பா.ஜ.கவிற்கு ஊடகங்களில் கவனம் பெற்றுத்தரும். தடை செய்யவில்லையானால் அதுவே பா.ஜ.கவிற்கு ஆரம்ப வெற்றி என்ற நிலையில் சாதகமாக அமையும்
இவற்றையெல்லாம்விட கவனிக்கத்தக்க ஓர் அம்சம் உண்டு. வரும் சட்டமன்றத் தேர்தல் இரு முனைப் போட்டியாக இருக்காது என்பது ஏறத்தாழ உறுதியாகத் தெரிகிறது. தி.மு.க, அ.தி.மு.க இரண்டுமே பெரிய எண்ணிக்கையிலான தொகுதிகளில் போட்டியிடும் மனநிலையில் இருப்பதாகத் தெரிகிறது. அதன் காரணமாக மற்ற கூட்டணி கட்சிகளுக்கு குறைந்த இடங்களே கிடைக்கலாம்.
ஒருவேளை பா.ஜ.கவிற்கு அது நினைக்கும் எண்ணிக்கையில் இடங்கள் கிடைக்காமல் போனால், ஒருவேளை ஆட்சியில் பங்கு என்ற கோரிக்கையை பா.ஜ.க வைத்து அதை அ.தி.மு.க ஏற்காமல் போனால் பா.ஜ.க தனித்தோ தனியொரு கூட்டணி அமைத்தோ போட்டியிட நேரும். அதற்கு பா.ஜ.க தன் அடித்தளத்தை வலுப்படுத்திக் கொள்ள வேண்டும்.
இனியும் தமிழக அரசியல் திராவிட கட்சிகளிடையேயான அதிகாரப் போட்டியாக இராது. அது வேறு தளங்களில் பயணிக்கும் என்பதன் ஆரம்பமாக வேல் யாத்திரை அமையும்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:












