ஐ.பி.எல் 2020 திருப்புமுனை: MI அதிர்ச்சி படுதோல்வி - SRH Playoff சென்றது எப்படி?

பட மூலாதாரம், BCCI/IPL
ஐபிஎல் லீக் சுற்று நேற்றுடன் முடிவுக்கு வந்தது. ஹைதராபாத் அணி மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தியதன் மூலம் பிளே ஆஃபுக்கு தகுதி பெற்றுள்ளது. இதையடுத்து வரும் வியாழக்கிழமை நடைபெறவுள்ள போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும் டெல்லி கேபிட்டல்ஸ் அணியும் "குவாலிபயர்-1" போட்டியில் மோதுகின்றன. இதில் வெல்லும் அணி நேரடியாக இறுதிப் போட்டிக்குத் தகுதிபெறும்.
வெள்ளிக்கிழமை நடக்கவுள்ள எலிமினேட்டர் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியுடன் சன் ரைடர்ஸ் ஹைதராபாத் அணி மோதுகிறது. எலிமினேட்டர் போட்டியில் வெல்லும் அணியும் குவாலியர் 1 போட்டியில் தோற்கும் அணியும் ஞாயற்றுகிழமை நடக்கவுள்ள குவாலிபயர் 2 போட்டியில் மோதும்.
குவாலிபயர் 1 மற்றும் 2 போட்டிகளில், வெல்லும் அணிகள் செவ்வாய்க்கிழமை நடக்கவுள்ள இறுதிப்போட்டிக்குத் தகுதி பெறும்.
14 புள்ளிகளோடு பிளே ஆஃப் கனவில் இருந்த கொல்கத்தாவுக்கு நேற்று ஹைதராபாத் முடிவு கட்டியது.
மும்பை இந்தியன்ஸ் அணியை 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபாரமாக வென்றதன் மூலம் புள்ளிபட்டியலில் மூன்றாமிடம் பிடித்துள்ளது.
ஐபிஎல் லீக் சுற்றின் முடிவில், மும்பை முதலிடமும், டெல்லி இரண்டாமிடமும், ஹைதராபாத் மூன்றாமிடமும், பெங்களூரு நான்காமிடமும், கொல்கத்தா ஐந்தாமிடமும், பஞ்சாப் ஆறாமிடமும், சிஎஸ்கே ஏழாமிடமும், ராஜஸ்தான் ராயல்ஸ் கடைசி இடத்தையும் பிடித்துள்ளன.
மும்பை இந்தியன்ஸ் அணி நேற்று எந்தவொரு புள்ளியிலும் ஹைதராபாத் அணியை ஆதிக்கம் செலுத்தவில்லை. நேற்றைய தினம் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு மீண்டும் ரோகித் அணித்தலைவராகப் பொறுப்பேற்றார். பும்ரா, போல்ட் என இரு நட்சத்திர பந்துவீச்சாளர்களுக்கும் ஓய்வு அளிக்கப்பட்டிருந்தது. அவர்களுக்குப் பதிலாக தவால் குல்கர்னி, ஜேம்ஸ் பட்டின்சன் சேர்க்கப்பட்டிருந்தனர். ஏற்கனவே ஹர்திக் பாண்ட்யாவுக்கும் ஓய்வளிக்கப்பட்டிருந்தது.

பட மூலாதாரம், BCCI/IPL
மும்பை அணியின் இந்த மாற்றங்கள் மற்றும் துல்லியத்தன்மை அற்ற பந்துவீச்சு ஆகியவற்றை சாதகமாக பயன்படுத்திக்கொண்ட ஹைதராபாத் அணி, 150 ரன்கள் எனும் இலக்கை 17 பந்துகள் மீதம் வைத்து 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
முன்னதாக மும்பை இந்தியன்ஸ் அணியின் பேட்ஸ்மேன்களுக்கு ஹைதராபாத் பந்துவீச்சாளர்கள் கடும் சவால் தந்தனர். சந்தீப், நடராஜன் என பலரும் சிறப்பாகப் பந்துவீசினர், மேலும் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை வீழ்த்தினர். கடைசி கட்டத்தில் நடராஜன் ஓவரில் பொல்லார்டு ஹாட்ரிக் சிக்ஸர்கள் விளாசியதால் 20 ஓவர்கள் முடிவில் 149 ரன்கள் எடுத்தது.
எனினும் இந்த இலக்கை ஹைதராபாத் அணியின் வார்னர், சாகா இணை அனாயசமாக கடந்தது. வார்னர் 58 பந்துகளில் 85 ரன்கள் விளாசினார். சாகா 45 பந்துகளில் 58 ரன்கள் எடுத்தார்.

பட மூலாதாரம், BCCI/IPL
தனது கடைசி மூன்று போட்டிகளில் டெல்லி, பெங்களூரு, மும்பை என புள்ளிபட்டியலில் டாப் 3 இடங்களிலிருந்த மூன்று அணிகளையும் வீழ்த்தி ஹைதராபாத் பிளே ஆஃபுக்கு தகுதி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:












