ஐபிஎல் 2020: MI, SRH அணிகள் வெற்றி, கோலியை வீழ்த்திய சந்தீப் - நாக் அவுட்டாக மாறும் லீக் போட்டிகள்

மாலையில் பும்ரா, இரவில் சந்தீப் - அசத்திய பந்துவீச்சாளர்கள், அடுத்தது என்ன?

பட மூலாதாரம், BCCI / IPL

    • எழுதியவர், சிவக்குமார் உலகநாதன்
    • பதவி, பிபிசி தமிழ்

டி20 கிரிக்கெட்டில் பேட்ஸ்மேன்கள் தான் 'கிங்'. அதிரடியாக ரன்கள் குவிப்பது, மைதானத்தின் அனைத்து திசைகளிலும் பவுண்டரிகள் வானளாவிய சிக்ஸர்கள் என பரவசப்படுத்தலாம். நிபுணர்களின் பாராட்டையும், ரசிகர்களின் கைத்தட்டலையும் ஒருசேர பெறமுடியும்.

பந்துவீச்சாளர்கள் என்ன எதிர்பார்க்கலாம்? தான் வீசிய பந்தில் பேட்ஸ்மேன்கள் பவுண்டரி அடிக்கவில்லையென்றால் மகிழலாம். பவுண்டரி அடித்தாலும், சிக்ஸர் அடிக்கவில்லையே என ஆறுதல்படலாம். ஓரிரு விக்கெட் எடுத்தால் பெருமகிழ்வு கொள்ளலாம்.

பெரும்பாலான விதிகள், தருணங்கள் பேட்ஸ்மேன்களுக்கே சாதகமாக உள்ள இவ்வகை கிரிக்கெட்டில், வெகு சில போட்டிகளில் மட்டுமே பந்துவீச்சாளர்கள் தங்களின் முத்திரையை பதிக்கமுடியும்.

ஐபிஎல் 2020 தொடரில் சனிக்கிழமையன்று துபை மற்றும் ஷார்ஜாவில் நடந்த இரு போட்டிகளிலும் பந்துவீச்சாளர்களே வெற்றியை தீர்மானித்தனர்.

ஜொலித்த போல்ட் மற்றும் பும்ரா

ஜொலித்த போல்ட் மற்றும் பும்ரா

பட மூலாதாரம், BCCI / IPL

மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெல்லி கேபிட்டல்ஸ் அணிகளுக்கு இடையே நடந்த போட்டியில், முதலில் டெல்லி அணி பேட்டிங் செய்த சூழலில், தொடக்கம் முதலே பந்துவீச்சாளர்களின் கை ஓங்கி இருந்தது.

மும்பையின் டிரெண்ட் போல்ட் மிக சிறப்பாக பந்துவீசி டெல்லியின் தொடக்க வீரர்களின் விக்கெட்டை வீழ்த்தினார்.

8 ஓவர்கள் வரை பந்து வீசாத பும்ரா, முதல் ஓவரிலேயே டெல்லி பேட்ஸ்மேன்களை திணறடித்தார்.

துல்லியமாகவும், வேகமாகவும் பந்துவீசிய பும்ரா, ஒரே ஓவரில் ஸ்டாய்னிஸ் மற்றும் ரிஷப் பந்த் விக்கெட்டுகளை வீழ்த்தினார். இந்த ஓவர்தான் போட்டியின் திருப்புமுனை ஓவராக அமைந்தது.

இதன் பின்னர் டெல்லி அணியால் ரன்கள் குவிக்கமுடியவில்லை. 111 ரன்கள் என்ற எளிதான இலக்கை 15-வது ஓவரில் இஷான் கிஷானின் அதிரடி பேட்டிங்கால் மும்பை எட்டியது.

ஆட்டநாயகனாக இஷான் அறிவிக்கப்பட்டபோதிலும், தான் வீசி 4 ஓவரில் 17 ரன்கள் மட்டுமே தந்து 3 விக்கெட்டுகளை வீழ்த்திய பும்ராதான் ஆட்டத்தில் திருப்புமுனையை ஏற்படுத்தினார். மேலும் அவர் ஒரு ரன் அவுட் செய்தார்.

கோலியை வீழ்த்திய சந்தீப்

இதேபோல் ஷார்ஜாவில் பெங்களூருவுக்கு எதிரான போட்டியில், ஹைதரபாத் அணியின் வேகப்பந்துவீச்சாளரான சந்தீப் சர்மா மிக சிறப்பாக பந்துவீசினார்.

கோலியை வீழ்த்திய சந்தீப்

பட மூலாதாரம், BCCI / IPL

தேவ்தத் படிக்கலை கிளீன் போல்டாக்கிய சந்தீப் தொடர்ந்து பேட்ஸ்மேன்களை திகைப்பில் ஆழ்த்தினார். அவர் வீசிய மிக சிறந்த பந்தில், விராட் கோலி ஆட்டமிழந்தார்.

2 விக்கெட்டுகளை வீழ்த்திய சந்தீப்பின் பந்துவீச்சில் பெரிதும் திணறிய பெங்களூரு 120 ரன்கள் மட்டுமே எடுக்க, 5 விக்கெட்டுகள் இழப்புக்கு எளிதில் இலக்கை எட்டியது ஹைதராபாத்.

இனி நடக்கப்போவது லீக் போட்டிகளா? நாக் அவுட் போட்டிகளா?

மும்பை மற்றும் ஹைதரபாத் அணிகளின் வெற்றியால் 2020 ஐபிஎல் தொடர் மேலும் சுவாரஸ்யம் பெற்றுள்ளது.

ஏற்கனவே பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ள மும்பை அணி, நேற்றைய வெற்றியால் 18 புள்ளிகள் பெற்று புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. இனி மற்ற போட்டிகளில் என்ன முடிவு ஏற்பட்டாலும் மும்பை அணியே முதலிடத்தில் நீடிக்கும்.

நவம்பர் 5-ஆம் தேதி நடக்கும் முதல் பிளே ஆஃப் போட்டியில் மும்பை விளையாடுவது உறுதியாகியுள்ள நிலையில், அந்த அணியை எதிர்த்து விளையாடும் அணியும், மற்ற இரண்டு அணிகள் எவை என்பதும் அடுத்து நடக்கும் போட்டிகளின் முடிவை வைத்து தீர்மானிக்கப்படும்.

மும்பை இந்தியன்ஸ்

பட மூலாதாரம், IPL / BCCI

அனைத்து அணிகளும் 13 போட்டிகளில் விளையாடியுள்ள நிலையில், இன்னும் ஒரு போட்டியில் அனைத்து அணிகளும் விளையாடவேண்டும்.

பெங்களூரு மற்றும் டெல்லி அணிகள் தலா 14 புள்ளிகள் பெற்றுள்ள சூழலில், இவ்விரு அணிகளும் திங்கள்கிழமையன்று நடக்கவுள்ள லீக் போட்டியில் மோதவுள்ளன. இதில் வெற்றி பெறும் அணி பிளே ஆஃப் சுற்றுக்கு உடனடியாக தகுதி பெறும். தோல்வியடையும் அணி மற்ற போட்டிகளின் முடிவுக்காக காத்திருக்க வேண்டும்.

அதேவேளையில், ஹைதராபாத், பஞ்சாப், ராஜஸ்தான் மற்றும் கொல்கத்தா ஆகிய 4 அணிகளும் தலா 12 புள்ளிகள் பெற்றுள்ளன. இதில் ஹைதராபாத் மற்றும் பஞ்சாப் அணிகளின் ரன்ரேட் விகிதம் சிறப்பாக உள்ளது.

இந்த நான்கு அணிகளுக்கும், தாங்கள் விளையாடும் இறுதி லீக் போட்டியில் நிச்சயம் வெல்ல வேண்டும், ரன்ரேட் மேம்பட்ட நிலையில் இருக்கவேண்டும் என்ற அழுத்தம் உள்ளது.

கொரோனா பொதுமுடக்கத்தால் 6 மாதங்களுக்கு பிறகு தொடங்கிய 2020 ஐபிஎல் தொடர் குறித்து ஆரம்பத்தில் பல சந்தேகங்கள் எழுப்பப்பட்டன. ஆனால், தற்போது அதிக சுவாரஸ்யம் நிறைந்த ஐபிஎல் தொடர்களில் ஒன்றாக இது மாறி வருகிறது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :