தமிழகத்தில் பள்ளி, கல்லூரி, திரையரங்குகள் திறக்க அனுமதி - முதல்வர் பழனிசாமி அறிவிப்பு

தமிழகத்தில் பள்ளி, கல்லூரி, திரையரங்குகள் திறக்க அனுமதி

பட மூலாதாரம், ARUN SANKAR

கொரோனா வைரஸ் தடுப்புப் பணிகளின் ஒரு பகுதியாக தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நவம்பர் 30ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

புதிய தளர்வுகளின்படி, தமிழகத்தில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் நவம்பர் 16ம் தேதி முதல் செயல்படலாம் என்றும் நவம்பர் 10ம் தேதி முதல் திரையரங்குகள் செயல்படலாம் என்றும் முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

மேலும் பொது மக்கள் பண்டிகை காலத்தில் அதிகம் கூடுவதை தவிர்க்கவேண்டும் என்றும் கொரோனா தொற்றில் இருந்து பாதுகாத்துக்கொள்ள முகக்கவசம் அணிவது மற்றும் கைகழுவுவது போன்றவற்றைப் பின்பற்றவேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

முதல்வர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த 7 நாட்களாக நாள் ஒன்றுக்கு கொரோனா நோயால் பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை 3,000 நபர்களுக்கு கீழாகவே உள்ளது.

சிகிச்சையில் இருப்போர் எண்ணிக்கை சுமார் 50,000ல் இருந்து தற்போது 25,000 நபர்கள் என்ற அளவிற்கு குறைந்து உள்ளது. ஆய்வுக் கூட்டங்களின் அடிப்படையிலும், மூத்த இந்திய ஆட்சிப் பணி அலுவலர்களைக் கொண்டு அமைக்கப்பட்ட 12 ஒருங்கிணைப்புக் குழுக்களின் கருத்துக்களின் அடிப்படையிலும், மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் மருத்துவ நிபுணர்களின் கருத்துகளின் அடிப்படையிலும் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் பள்ளி, கல்லூரி, திரையரங்குகள் திறக்க அனுமதி - முதல்வர் பழனிசாமி அறிவிப்பு

பட மூலாதாரம், TNDIPR

தமிழ்நாடு முழுவதும் நோய் கட்டுப்பாட்டு பகுதி தவிர மற்ற பகுதிகளில் ஏற்கனவே பல்வேறு தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளன என முதல்வர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் அனைத்து டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனைக் கடைகள் நவம்பர் 1ஆம் தேதி முதல் நண்பகல் 12 மணியிலிருந்து இரவு 10 மணி வரை இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

1) பள்ளிகள் (9, 10, 11, மற்றும் 12-ஆம் வகுப்புகள் மட்டும்), அனைத்து கல்லூரிகள், ஆராய்ச்சி நிறுவனங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களும் 16.11.2020 முதல் நிலையான வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்றி செயல்படலாம் .

2)பள்ளி /கல்லூரிகள் மற்றும் பணியாளர்கள் விடுதிகள் உள்பட அனைத்து விடுதிகளும் 16.11.2020 முதல் செயல்பட அனுமதிக்கப்படுகின்றன.

3)கோயம்பேடு வணிக வளாகம்:

தற்காலிக இடத்தில் தற்போது செயல்படும் பழக்கடைகள் மொத்த வியாபாரம், 2.11.2020 முதலும், பழம் மற்றும் காய்கறி சில்லரை வியாபாரக் கடைகள் மூன்று கட்டங்களாக 16.11.2020 முதலும் கோயம்பேடு அங்காடி வளாகத்தில், நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி, செயல்படலாம்.

4)பொதுமக்களுக்கான புறநகர் மின்சார ரயில் போக்குவரத்து சேவை மத்திய அரசின் முடிவுக்கு ஏற்ப நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி செயல்பட அனுமதிக்கப்படுகிறது.

5)சின்னத்திரை , திரைப்பட தொழிலுக்கான வழிகாட்டு நெறிமுறைகளுக்கு உட்பட்டு ஒரே சமயத்தில் 150 நபர்களுக்கு மிகாமல் பணி செய்ய அனுமதி அளிக்கப்படுகிறது.

6) திரையரங்குகளை திறக்க வரப்பெற்ற கோரிக்கைகளை பரிசீலித்து, தமிழ்நாடு முழுவதும் நோய்க் கட்டுப்பாட்டு பகுதி தவிர மற்ற பகுதிகளில் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றியும், பார்வையாளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அவற்றை திரையிட்டும், ஒன்றுக்கும் மேற்பட்டு திரையரங்குகள் உள்ள திரையரங்கு வளாகங்கள், வணிக வளாகங்களில் திரையரங்குகள் உள்பட அனைத்து திரையரங்குகளும் 50 சதவீதம் இருக்கைகளை மட்டும் பயன்படுத்தி 10.11.2020 முதல் செயல்படலாம்.

7)மதம் சார்ந்த கூட்டங்கள், சமுதாய, அரசியல், பொழுதுபோக்கு, கலாச்சார நிகழ்வுகள், கல்வி சார்ந்த விழாக்கள் மற்றும் இவை தொடர்பான கூட்டங்கள் 16.11.2020 முதல் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி, 100 நபர்கள் பங்கேற்கும் வகையில், நடத்த அனுமதிக்கப்படுகிறது.

Banner image reading 'more about coronavirus'
Banner

8)பொழுதுபோக்கு பூங்காக்கள் பெரிய அரங்குகள், கூட்டு அரங்குகள், உயிரியல் பூங்காக்கள், அருங்காட்சியகங்கள் போன்ற பொதுமக்கள் கூடும் இடங்கள் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி 10.11.2020 முதல் செயல்படலாம்.

9)திருமண நிகழ்வுகளுக்கு 100 நபர்களுக்கு மிகாமலும், இறுதி ஊர்வலங்களுக்கு 100 நபர்களுக்கு மிகாமலும் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுகிறது.

10)ஏற்கனவே 50 வயது மற்றும் அதற்கு குறைவான வாடிக்கையாளர்களுடன் உடற்பயிற்சி கூடங்கள் இயங்க அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், நிலையான வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி 1.11.2020 முதல் 60 வயது மற்றும் அதற்கு குறைவான வயதுடைய வாடிக்கையாளர்களுடன் இயங்க அனுமதிக்கப்படுகின்றன.

பொது

•தமிழ்நாடு முழுவதும் நோய்க் கட்டுப்பாட்டு பகுதிகளில் தளர்வுகளுமின்றி ஊரடங்கு முழுமையாக கடைபிடிக்கப்படும். அதேபோல பொது மக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் தடைகள் தொடரும்.

•நீச்சல் குளங்கள், கடற்கரை, சுற்றுலாத் தலங்கள் போன்ற பொதுமக்கள் கூடும் இடங்கள்

•மத்திய உள் துறை அமைச்சகத்தால் அனுமதிக்கப்பட்டுள்ள வழித் தடங்களைத் தவிர சர்வதேச விமான போக்குவரத்திற்கான தடை நீடிக்கும்.

•வெளி மாநிலங்களிலிருந்து (புதுச்சேரி மாநிலம் தவிர) தமிழ்நாட்டிற்குள் வருபவர்களுக்கும், ஊட்டி, கொடைக்கானல் ஏற்காடு போன்ற சுற்றுலாத் தலங்களுக்கு செல்பவர்களுக்கும் தற்போது நடைமுறை அமல்படுத்தப்படும்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: